1 சாமுவேல் 7:3-14

1 சாமுவேல் 7:3-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள். பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான். அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான். இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு, சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள். அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச்செய்தார். சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தரைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறிய அடித்தார்கள். அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது. பெலிஸ்தர் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவக்கிக் காத்மட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையில் இராதபடிக்கு, விடுவித்துக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

1 சாமுவேல் 7:3-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது சாமுயேல், “நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவிடம் வரவேண்டுமானால் உங்களிடத்திலிருக்கும் அந்நிய தெய்வங்களையும், அஸ்தரோத் தெய்வங்களையும் அகற்றிவிடுங்கள் என்று இஸ்ரயேல் குடும்பத்தார் அனைவரிடமும் சொன்னான். உங்களை யெகோவாவுக்கு ஒப்படைத்து அவரை மட்டும் வழிபடுங்கள். அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தியரிடமிருந்து விடுவிப்பார்” என்றான். எனவே இஸ்ரயேலர் அனைவரும் பாகால்களையும், அஸ்தரோத் தெய்வங்களையும் விலக்கி யெகோவாவுக்கே பணிசெய்தார்கள். அதன்பின் சாமுயேல் அவர்களிடம், “இஸ்ரயேலர் எல்லோரையும், மிஸ்பாவில் ஒன்றுகூடச் செய்யுங்கள். நான் உங்களுக்காக யெகோவாவிடம் பரிந்துபேசுவேன்” என்றான். அதன்படியே அவர்கள் மிஸ்பாவிலே ஒன்றுகூடித் தண்ணீரை அள்ளி யெகோவாவுக்குமுன் ஊற்றினார்கள். அன்றையதினம் அவர்கள் உபவாசித்து, “யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம்செய்தோம்” என்று பாவ அறிக்கை செய்தார்கள். சாமுயேல் மிஸ்பாவிலே இஸ்ரயேலருக்குத் தலைவனாக இருந்தான். அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மிஸ்பாவிலே ஒன்றுகூடி இருக்கிறார்களென்று பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தியரின் ஆளுநர்கள் அவர்களைத் தாக்குவதற்கு வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்குப் பயந்தார்கள். இதனால் இஸ்ரயேலர் சாமுயேலிடம், “பெலிஸ்தியரின் கையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி இறைவனாகிய எங்கள் யெகோவாவிடம் மன்றாடுவதை நிறுத்தவேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது சாமுயேல் பால்குடிக்கிற ஒரு செம்மறியாட்டை முழுமையான தகன காணிக்கையாக யெகோவாவுக்குச் செலுத்தினான். அவன் இஸ்ரயேலருக்காக யெகோவாவிடம் அழுது மன்றாடினான். யெகோவா அவனுக்குப் பதிலளித்தார். சாமுயேல் தகன காணிக்கையைப் பலியிட்டுக் கொண்டிருந்தபோது, பெலிஸ்தியர்கள் இஸ்ரயேலர்களைத் தாக்குவதற்கு வந்தார்கள். எனவே யெகோவா பெலிஸ்தியருக்கு எதிராக மகா பெரிய இடிமுழக்கத்துடன் முழங்கி அவர்களைப் பீதியடையச் செய்தார். அதனால் பெலிஸ்தியர் இஸ்ரயேலர் முன்பாக முறியடிக்கப்பட்டார்கள். இஸ்ரயேலர் மிஸ்பாவிலிருந்து விரைவாக ஓடி பெலிஸ்தியரைத் துரத்திச்சென்று பெத் கார் பள்ளத்தாக்கு போகும் வழியிலே அவர்களைக் கொலைசெய்தார்கள். அதன்பின் சாமுயேல் ஒரு கல்லை எடுத்து மிஸ்பாவுக்கும், சேணுக்கும் இடையே நிறுத்தி, “சென்றகாலம் தொடங்கி இம்மட்டும் யெகோவா நமக்கு உதவி செய்தார்” என்று சொல்லி அதற்கு, “எபெனேசர்” என்று பெயரிட்டான். இவ்வாறு பெலிஸ்தியர் கீழ்ப்படுத்தப்பட்டார்கள். அதன்பின் அவர்கள் இஸ்ரயேலரின் எல்லைக்குள்ளே மீண்டும் படையெடுக்கவில்லை. சாமுயேலின் வாழ்நாள் முழுவதும் யெகோவாவினுடைய கை பெலிஸ்தியருக்கு விரோதமாக இருந்தது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரிடமிருந்து கைப்பற்றியிருந்த எக்ரோன் தொடங்கி காத் மட்டுமுள்ள பட்டணங்கள் இஸ்ரயேலருக்கு மறுபடியும் கிடைத்தன. அயலிலுள்ள இடங்களையும் பெலிஸ்தியரின் அதிகாரத்திலிருந்து இஸ்ரயேலர் விடுவித்தார்கள். இஸ்ரயேலருக்கும், எமோரியருக்குமிடையில் சமாதானம் நிலவியது.

1 சாமுவேல் 7:3-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார்கள் அனைவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்பினால், அந்நிய தெய்வங்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் யெகோவாவிடம் திருப்பி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தர்களுடைய கைகளுக்கு விடுவிப்பார் என்றான். அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, யெகோவா ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள். பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் யெகோவாவிடம் மன்றாடும்படி, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் மிஸ்பாவிலே கூடிவரச்செய்யுங்கள் என்றான். அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, யெகோவாவுடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்செய்து, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான். இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் இஸ்ரவேலுக்கு எதிராக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் மக்கள் கேட்டு, பெலிஸ்தர்களினிமித்தம் பயந்து, சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களைப் பெலிஸ்தர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படி, எங்களுக்காக அவரை நோக்கி இடைவிடாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள். அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் யெகோவாவை நோக்கி வேண்டிக்கொண்டான்; யெகோவா அவனுக்கு பதில் அருளினார். சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்தும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; யெகோவா மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்கள்மேல் அந்த நாளிலே முழங்கச்செய்து, அவர்களைக் கலங்கடித்ததால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டு மடிந்தார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குவரை அவர்களை முறியடித்தார்கள். அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இதுவரை யெகோவா எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பெயரிட்டான். இப்படியாக பெலிஸ்தர்கள் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடித் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் யெகோவாவுடைய கை பெலிஸ்தர்களுக்கு எதிராக இருந்தது. பெலிஸ்தர்கள் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவங்கிக் காத்வரை உள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்கள் கையில் இல்லாதபடி, திருப்பிக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியர்களுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

1 சாமுவேல் 7:3-14 பரிசுத்த பைபிள் (TAERV)

சாமுவேல் அவர்களிடம், “நீங்கள் உண்மையிலேயே கர்த்தரிடம் மனப்பூர்வமாக திரும்புவீர்கள் என்றால் உங்களிடம் உள்ள அந்நிய தெய்வங்களை தூர எறியுங்கள். அஸ்தரோத் விக்கிரகங்களைத் தூக்கி எறியுங்கள். நீங்கள் உங்களை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக் கொடுங்கள். நீங்கள் கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்! பின்னரே கர்த்தர் உங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுவார்” என்றான். எனவே இஸ்ரவேலர் தமது பாகால் மற்றும் அஸ்தரோத் சிலைகளைத் தூர எறிந்தனர். கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்தனர். சாமுவேல் “இஸ்ரவேலர் அனைவரும் மிஸ்பாவில் கூடுங்கள். நான் உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்” என்றான். இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடினார்கள். அவர்கள் தண்ணீரை கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றினார்கள். இவ்விதமாக உபவாசம் இருந்தனர். அன்றைய நாளில் எந்த வகை உணவும் உண்ணாமல், தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அதை அறிக்கையிட்டனர். “நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்” என்றனர், எனவே சாமுவேல் இஸ்ரவேலர்களின் நீதிபதியாக மிஸ்பாவில் இருந்தான். பெலிஸ்தர், இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடுகின்றதைப்பற்றி அறிந்துகொண்டனர். பெலிஸ்தியர்களின் ராஜாக்கள் இஸ்ரவேலருக்கு எதிராகப் போர் செய்யச் சென்றனர். இதையறிந்து இஸ்ரவேலர் பயந்தார்கள். அவர்கள் சாமுவேலிடம், “எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்வதை நிறுத்தவேண்டாம்! எங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுமாறு கர்த்தரிடம் கேளுங்கள்!” என்றனர். சாமுவேல் ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதனை முழுமையாக கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியாகச் செலுத்தினான். சாமுவேல் இஸ்ரவேலர்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு பதில் சொன்னார். சாமுவேல் தகனபலியைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுடன் போரிட வந்தனர். ஆனால் கர்த்தர் பெலிஸ்தியர்கள் பக்கம் பெரிய இடிமுழங்குமாறு செய்தார். இது பெலிஸ்தரைக் அச்சப்படுத்தியது, மேலும் குழப்பியது. தலைவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே இஸ்ரவேலர்கள் அவர்களைப் போரில் தோற்கடித்தனர். இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களை பெத்கார் வரை துரத்தினார்கள். வழியெல்லாம் பெலிஸ்தர்களைக் கொன்றனர். இதற்குப்பின், சாமுவேல் ஒரு சிறப்பான கல்லை நிறுவினான். அது தேவனுடைய உதவியை ஜனங்கள் நினைவு கூரும்படி இருந்தது. இந்த கல் மிஸ்பாவிற்கும் சேணுக்கும் இடையில் இருந்தது. அதற்கு “எபெனேசர்” (உதவியின் கல்) என்று பேரிட்டான். “இந்த இடம் வரும்வரை கர்த்தர் நமக்கு உதவிச் செய்தார்” என்றான். பெலிஸ்தர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் இஸ்ரவேலுக்குள் நுழையவில்லை. சாமுவேலின் மீதியான வாழ்வு முடியுமட்டும் கர்த்தர் பெலிஸ்தியர்களுக்கு எதிராக இருந்தார். பெலிஸ்தர் ஏற்கெனவே இஸ்ரவேலர்களிடம் இருந்து எக்ரோன் முதல் காத் வரை பல நகரங்களைக் கைப்பற்றி இருந்தனர். அவற்றை இஸ்ரவேலர் திரும்பப் பெற்றனர். அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டனர். இஸ்ரவேலர்களுக்கும் எமோரியருக்கும் இடையில் சமாதானம் நிலவியது.