1 சாமுவேல் 5:1-10
1 சாமுவேல் 5:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனின் பெட்டியைப் பெலிஸ்தியர் கைப்பற்றியபின் அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்துக்குக் கொண்டுபோனார்கள். அவர்கள் இறைவனின் பெட்டியை தாகோனின் கோவிலுக்கு எடுத்துச்சென்று தாகோனுக்கு அருகில் வைத்தார்கள். அஸ்தோத்திலுள்ள மக்கள் மறுநாள் அதிகாலை எழுந்தபோது, இதோ யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக தாகோன் முகங்குப்புற விழுந்துகிடக்கக் கண்டார்கள். எனவே அவர்கள் தாகோனை மறுபடியும் அதன் இடத்தில் தூக்கிவைத்தார்கள். மறுநாளும் அவர்கள் அதிகாலையில் எழுந்தபோது தாகோன் யெகோவாவின் பெட்டிக்கு முன்பாக முகங்குப்புற விழுந்துகிடக்கக் கண்டார்கள். அதன் தலையும், கைகளும் உடைந்து வாயிற்படியில் கிடந்தன. தாகோனின் உடல் மட்டும் மீதியாயிருந்தது. அதனால்தான் இன்றுவரை தாகோனின் பூசாரிகளோ, அல்லது தாகோனின் கோவிலுக்கு வருபவர்களோ அஸ்தோத்திலிருக்கும் தாகோனின் வாசற்படியை மிதிப்பதில்லை. அஸ்தோத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் இருந்த மக்களின்மேல் யெகோவாவின் கரம் மிகவும் பாரமாயிருந்தது. அவர் அவர்களைக் கட்டிகளினால் வாதித்தார். இவ்வாறு நடப்பதை அஸ்தோத்தின் மக்கள் கண்டபோது அவர்கள், “இஸ்ரயேலின் இறைவனின் பெட்டி எங்களுடன் இங்கே இருக்கக்கூடாது. ஏனெனில் அவருடைய கை நம்மேலும், நம்முடைய தெய்வமாகிய தாகோனின்மேலும் பாரமாய் இருக்கிறது” என்றார்கள். எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், “இஸ்ரயேலின் தெய்வத்தின் பெட்டியை என்ன செய்யலாம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இஸ்ரயேலின் தெய்வத்தின் பெட்டியை காத்துக்கு அனுப்பி வையுங்கள்” என்றார்கள். அப்படியே இஸ்ரயேலரின் இறைவனின் பெட்டி கொண்டுபோகப்பட்டது. ஆனால் அவர்கள் பெட்டியைக் கொண்டுபோன பின்பு, யெகோவாவின் கரம் அப்பட்டணத்திலுள்ளவர்களுக்கு எதிராக வந்ததினால் அங்கு பெரும்பீதி உண்டானது. அவர் அப்பட்டணத்திலுள்ள இளவயதினர் முதல், முதியவர்கள்வரை கட்டியினால் வாதித்தார். இதனால் அவர்கள் இறைவனது பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். இறைவனது பெட்டி எக்ரோனுக்குள் போனபோது எக்ரோன் மக்கள் சத்தமிட்டு, “எங்களையும் எங்கள் மக்களையும் கொல்வதற்காகவே இஸ்ரயேலரின் தெய்வத்தின் பெட்டியை எங்களிடம் கொண்டுவந்திருக்கிறார்கள்” என்றார்கள்.
1 சாமுவேல் 5:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள். பெலிஸ்தர்கள் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனின் அருகில் வைத்தார்கள். அஸ்தோத் ஊர்க்காரர்கள் மறுநாள் காலையில் எழுந்து வந்தபோது, இதோ, தாகோன் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் இடத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள். அவர்கள் மறுநாள் அதிகாலையில் எழுந்து வந்தபோது, இதோ, தாகோன் யெகோவாவுடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைந்து கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாக இருந்தது. ஆதலால் இந்த நாள்வரைக்கும் தாகோனின் ஆசாரியர்களும் தாகோனின் கோவிலுக்குள் போகிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை. அஸ்தோத் ஊர்க்காரர்களை வாதிக்கும்படி யெகோவாவுடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் மக்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார். இப்படி நடந்ததை அஸ்தோத்தின் மக்கள் பார்த்தபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாக இருந்ததால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்ககூடாது என்று சொல்லி; பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் அழைத்து, தங்களின் அருகிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணம்வரை எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனார்கள். அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, யெகோவாவுடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் கடுங்கோபமாக இறங்கினது; அந்தப் பட்டணத்தின் மனிதருக்குள் சிறியவர் துவங்கிப் பெரியவர்வரை மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார். அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊர்க்காரர்கள்: எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்கள் அருகில் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.
1 சாமுவேல் 5:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுப் போனார்கள். பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்த பெட்டியை தாகோனின் கோவிலுக்குள் கொண்டுப் போய் தாகோனின் சிலைக்கு அருகில் வைத்தனர். மறுநாள் காலை, அஸ்தோத் ஜனங்கள் எழுந்ததும் தாகோனின் சிலை முகம்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டனர். தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்னால் விழுந்துகிடந்தது. அஸ்தோத் ஜனங்கள் தாகோனின் சிலையைப் பழைய இடத்தில் வைத்தனர். ஆனால் மறுநாள் காலையில், மீண்டும் தாகோனின் சிலை முகம்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டனர்! கர்த்தருடைய பரிசுத்த பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை விழுந்துகிடந்தது. இந்தமுறை தாகோனின் தலையும், கைகளும் உடைந்து கோவில் வாசற்படியிலேகிடந்தன. தாகோனின் உடல் மாத்திரம் அப்படியே கிடந்தது. அதனால்தான் இன்றும் கூட, தாகோனின் பூசாரிகளும், அஸ்தோத்தில் உள்ள தாகோனின் கோவிலுக்குள் நுழைகிற ஒருவனும் கோவில் வாசற்படியை மிதிப்பதில்லை. அஸ்தோத்து ஜனங்களுக்கும், அவர்களது அக்கம் பக்கத்தினருக்கும் வாழ்க்கைச் சிரமமாகும்படி கர்த்தர் செய்தார். கர்த்தர் அவர்களுக்கு பல துன்பங்களைத் தந்தார். அவர்களை தோல் கட்டிகளினால் வாதித்தார். அவர்களுக்கு சுண்டெலிகளையும் அனுப்பினார். அவை அவர்களின் கப்பல்களுக்கும், நிலப்பகுதிகளுக்கும் பரவியது. நகர ஜனங்கள் அஞ்சினார்கள். அஸ்தோத் ஜனங்கள் நடப்பதை எல்லாம் கண்டனர். அவர்கள், “இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியானது இங்கே இருக்கக் கூடாது! அவர் நம்மையும் நமது தெய்வமான தாகோனையும் தண்டித்திருக்கிறார்” என்றனர். அஸ்தோத் ஜனங்கள் பெலிஸ்தியரின் 5 ஆளுனர்களையும் வரவழைத்தனர். அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை நாம் என்னச் செய்யவேண்டும்?” என்று கேட்டனர். ஆளுனர்களோ, “இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை இங்கிருந்து காத் பட்டணத்திற்கு எடுத்துப்போக வேண்டும்” என்றனர். ஆகவே பெலிஸ்தர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். ஆனால் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை காத் நகரம் வரைக்கும் பெலிஸ்தர்கள் எடுத்துச் சென்றதும், காத் நகரை கர்த்தர் தண்டித்தார். ஜனங்கள் மிகவும் கலக்கமுற்றனர். இளைஞர் முதியவர் என அனைவருக்கும் தேவன் தொல்லைகளை ஏற்படுத்தினார். தேவன் அங்குள்ளவர்களுக்கும் தோல் கட்டிகளை தந்தார். எனவே, பெலிஸ்தியர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினர். ஆனால் அங்குள்ள ஜனங்கள் தேனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கண்டதும், முறையிட்டார்கள். “எங்களது எக்ரோன் நகரத்திற்கு இஸ்ரவேலருடைய தேவனின் பரிசுத்தப் பெட்டியை ஏன் கொண்டு வந்தீர்கள்? நீங்கள் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொல்ல விரும்புகிறீர்களா?” எனக் கேட்டனர்.
1 சாமுவேல் 5:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள். பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள். அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள். அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது. ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை. அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார். இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி; பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனார்கள். அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர் துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார். அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.