1 சாமுவேல் 4:1-11

1 சாமுவேல் 4:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாமுயேல் இஸ்ரயேலருக்கு அவற்றை அறிவித்தான். அந்நாட்களில் இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராக யுத்தம்செய்யப் புறப்பட்டார்கள். இஸ்ரயேலர் எபெனேசர் என்னும் இடத்திலும், பெலிஸ்தியர் ஆப்பெக்கிலும் முகாமிட்டார்கள். பெலிஸ்தியர் இஸ்ரயேலரை எதிர்கொள்ளும்படி தங்கள் படையை அணிவகுத்தார்கள். யுத்தம் பெருத்தபோது இஸ்ரயேலர் பெலிஸ்தியரால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தகளத்தில் ஏறக்குறைய நாலாயிரம் இஸ்ரயேலரை பெலிஸ்தியர் கொன்றார்கள். இராணுவவீரர் முகாம்களுக்குத் திரும்பியபோது இஸ்ரயேலின் முதியவர்கள், “ஏன் இன்று யெகோவா பெலிஸ்தியருக்குமுன் எங்களைத் தோல்வியடைச் செய்தார்? யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீலோவிலிருந்து கொண்டுவருவோம். அது எங்களுடன் இருந்தால் பகைவரிடமிருந்து அது நம்மைத் தப்புவிக்கும்” என்றார்கள். எனவே மக்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் கேருபீன்களுக்கு நடுவில் அரியணையில் அமர்ந்திருக்கும் சேனைகளின் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். அங்கே ஏலியின் இரு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியோடு வந்தார்கள். யெகோவாவினுடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமுக்குள் வந்தவுடன் நிலம் அதிரத்தக்கதாக இஸ்ரயேல் மக்கள் பெரிய சத்தமிட்டு ஆர்ப்பரித்தார்கள். இந்தச் சத்தத்தைக் கேட்ட பெலிஸ்தியர், “எபிரெயருடைய முகாமுக்குள் கேட்கும் இந்தக் கூக்குரலுக்குக் காரணமென்ன?” என்று கேட்டார்கள். யெகோவாவினுடைய பெட்டி முகாமுக்குள் கொண்டுவரப்பட்டதை அறிந்தபோது, பெலிஸ்தியர் பயமடைந்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியர், “கடவுள் முகாமுக்குள் வந்துவிட்டார். ஐயோ நமக்கு ஆபத்து! இதற்கு முன்பு ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. ஐயோ நமக்கு கேடு! இந்த வல்லமையுள்ள கடவுளின் கையிலிருந்து நம்மை விடுவிப்பவர் யார்? இந்த கடவுள் எகிப்தியரை பாலைவனத்தில் எல்லாவித வாதைகளினாலும் தாக்கினார் அல்லவா! பெலிஸ்தியரே, திடன்கொண்டு ஆண்மையுடன் முன்னேறுங்கள். எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாவீர்கள். ஆண்மையுடன் போரிடுங்கள்” என்றார்கள். அப்படியே பெலிஸ்தியர் போரிட்டார்கள். இஸ்ரயேலர் முறியடிக்கப்பட்டு அனைவரும் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது; இஸ்ரயேலர் காலாட்படையினரில் முப்பதாயிரம்பேரை இழந்தார்கள். இறைவனின் பெட்டி பெலிஸ்தியரால் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறந்தார்கள்.

1 சாமுவேல் 4:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர்கள்: பெலிஸ்தர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்கு அருகில் முகாமிட்டார்கள்; பெலிஸ்தர்களோ ஆப்பெக்கிலே முகாமிட்டிருந்தார்கள். பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்கள்; அவர்கள் படையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நான்காயிரம்பேர் வெட்டப்பட்டு இறந்தார்கள். மக்கள் திரும்ப முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று யெகோவா பெலிஸ்தர்களுக்கு முன்பாக நம்மை முறியடித்ததென்ன? சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய எதிரியின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவில் வரவேண்டும் என்றார்கள். அப்படியே கேருபீன்களின் மத்தியில் இருக்கிற சேனைகளின் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, மக்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகில் இருந்தார்கள். யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமிலே வருகிறபோது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பூமி அதிரத்தக்கதாக அதிக சத்தமாக ஆர்ப்பரித்தார்கள். அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர்கள் கேட்டபோது: எபிரெயர்களுடைய முகாமில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு யெகோவாவின் பெட்டி முகாமில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள். தேவன் முகாமில் வந்தார் என்று சொல்லப்பட்டதினால், பெலிஸ்தர்கள் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன்பு ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்திரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே. பெலிஸ்தர்களே, திடன் கொண்டு ஆண்களைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்ததுபோல நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடி ஆண்களாக இருந்து யுத்தம்செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது பெலிஸ்தர்கள் யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் விழுந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய அழிவு உண்டானது; இஸ்ரவேலிலே 30,000 காலாட்படையினர் மடிந்தார்கள். தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் இறந்தார்கள்.

1 சாமுவேல் 4:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

சாமுவேலைப் பற்றியச் செய்தி அனைத்து இஸ்ரவேலருக்கும் பரவியது. ஏலி முதியவனானான். அவனது குமாரர்கள் தொடர்ந்து கர்த்தருக்கு எதிராக தீய செயல்களைச் செய்து வந்தனர். அந்த காலத்தில், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு எதிராகப் போர் செய்யப் போனார்கள். இஸ்ரவேலர் எபெனேசர் என்ற இடத்தில் முகாமிட்டனர். பெலிஸ்தர் தங்கள் முகாம்களை ஆப்பெக்கில் அமைத்தனர். பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தாக்கும் பொருட்டுத் தயாரானார்கள். போர்த் துவங்கியது. பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தனர். இஸ்ரவேல் சேனையில் உள்ள 4,000 வீரர்களைப் பெலிஸ்தர் கொன்றனர். இஸ்ரவேல் வீரர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்பி வந்தனர். மூப்பர்கள், “கர்த்தர் ஏன் பெலிஸ்தர் நம்மைத் தோற்கடிக்கும்படிச் செய்தார்? சீலோவில் உள்ள நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம். அதன்படி தேவன் நம்மோடு கூட போர்க்களத்துக்கு வருவார். அவர் நம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார்” என்றனர். எனவே ஜனங்கள் சீலோவிற்குச் சிலரை அனுப்பினார்கள். அவர்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தனர். அப்பெட்டியின் மேல் கேருபீன்கள் இருந்தார்கள். அவை கர்த்தர் உட்காரும் சிங்காசனம் போல இருந்தது. ஏலியின் இரண்டு குமாரர்களான ஓப்னியும் பினெகாசும் அப்பெட்டியோடு வந்தனர். கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியானது முகாமுக்குள்ளே வந்ததும், இஸ்ரவேல் ஜனங்கள் பலமாகச் சத்தமிட்டனர். அச்சத்தம் பூமியையே அதிரச் செய்தது. பெலிஸ்தர் இஸ்ரவேலர்களின் சத்தத்தைக் கேட்டு, “ஏன் இஸ்ரவேல் முகாமில் இவ்வாறு சத்தமிடுகிறார்கள்?” என்று கேட்டனர். பின்னர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி முகாமிற்கு கொண்டு வரப்பட்டதை அறிந்துக்கொண்டனர். பெலிஸ்தர் அதனால் அஞ்சினர். அவர்களோ, “தேவன் அவர்களின் முகாமிற்கு வந்திருக்கிறார்கள். நாம் இக்கட்டில் இருக்கிறோம். இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை! நாங்கள் கவலைப்படுகிறோம். வல்லமையான இந்தத் தெய்வங்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள்? இந்தத் தெய்வங்கள் ஏற்கெனவே எகிப்தியர்களுக்கு நோயையும் துன்பங்களையும் கொடுத்தவர்கள். பெலிஸ்தியர்களே, தைரியமாக இருங்கள், ஆண்களைப்போன்றுப் போரிடுங்கள். முற்காலத்தில் இஸ்ரவேலர்கள் நமக்கு அடிமைகளாக இருந்தனர். நீங்கள் ஆண்களைப் போன்று சண்டையிடாவிட்டால் அவர்களுக்கு அடிமையாகிவிடுவீர்கள்!” என்றனர். எனவே பெலிஸ்தர்கள் கடுமையாகச் சண்டையிட்டு இஸ்ரவேலர்களைத் தோற்கடித்தனர். ஒவ்வொரு இஸ்ரவேல் வீரனும் தங்கள் முகாமிற்கு ஓடினார்கள். இது இஸ்ரவேலுக்குப் படுதோல்வியாயிருந்தது. 30,000 இஸ்ரவேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஓப்னியையும் பினெகாசையும் கொன்றுவிட்டனர்.

1 சாமுவேல் 4:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர்: பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள். பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம்பேர் வெட்டுண்டுபோனார்கள். ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள். அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள். அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள். தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே. பெலிஸ்தரே, திடங்கொண்டு புருஷரைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து, யுத்தம்பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள். தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள்.