1 சாமுவேல் 30:1-24
1 சாமுவேல் 30:1-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள். தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள் ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான். தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள். தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள். ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்று நாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான். தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான். நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான். தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான். இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை. அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள். விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான். அப்பொழுது தாவீதோடே நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரும்: அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள். அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இந்தக் காரியத்தில் உங்கள் சொற் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
1 சாமுவேல் 30:1-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தாவீதும் அவன் மனிதரும் மூன்றாவது நாள் சிக்லாக்கை அடைந்தார்கள். அமலேக்கியர் பெலிஸ்திய நாட்டின் நெகேப் பகுதியையும், சிக்லாகையும் சூறையாடியிருந்தார்கள். அவர்கள் சிக்லாக்கைத் தாக்கி அதை எரித்து, அங்குள்ள பெண்கள், சிறியவர், முதியவர் உட்பட அனைவரையும் சிறைப்பிடித்துக் கொண்டுபோயிருந்தார்கள். போகும்போது ஒருவரையும் கொலைசெய்யாமல், எல்லோரையும் தங்களுடன் கொண்டுபோய்விட்டார்கள். தாவீதும் அவன் ஆட்களும் சிக்லாகுக்கு வந்தபோது, அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியரும், மகன்களும், மகள்களும் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டிருப்பதையும் கண்டார்கள். எனவே தாவீதும் அவனுடனிருந்த மனிதரும் அழுவதற்குப் பெலனற்றுப் போகுமட்டும் கதறி அழுதார்கள். அவர்களோடு யெஸ்ரயேல் ஊராளான அகினோவாம், கர்மேல் ஊராளான நாபாலின் விதவையாயிருந்த அபிகாயில் ஆகிய தாவீதின் மனைவியர் இருவரும்கூட கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டிருந்தார்கள். தங்கள் மகன்களையும், மகள்களையும் இழந்த ஒவ்வொருவரும் மனங்கசந்ததினால் தாவீதைக் கல்லால் அடிக்க வேண்டுமெனப் பேசிக்கொண்டார்கள். அதை அறிந்த தாவீது மிகவும் மனவேதனையடைந்தான். தாவீதோ தன் இறைவனாகிய யெகோவாவுக்குள் பெலன் கொண்டான். அதன்பின் தாவீது அகிமெலேக்கின் மகனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனிடம், “ஏபோத்தை என்னிடம் கொண்டுவா” என்றான். அபியத்தார் ஏபோத்தைத் தாவீதிடம் கொண்டுவந்தான். அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “நான் அந்த கொள்ளைக்காரரை துரத்திப் போகட்டுமா? என்னால் அவர்களைப் பிடிக்க முடியுமா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “அவர்களைத் துரத்திப்போ. நிச்சயமாக அவர்களைப் பிடித்து, கைதிகளைத் தப்புவிப்பாய்” என்றார். எனவே தாவீதும், அவனுடனிருந்த அறுநூறு மனிதரும் பேசோர் கணவாய்க்கு வந்தபோது சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள். ஏனெனில் இருநூறுபேர் அதிக களைப்படைந்திருந்ததால் அவர்களாலே கணவாய்க்கு கடந்துபோக முடியவில்லை. ஆனால் தாவீதும் நானூறுபேரும் அவர்களைத் தொடர்ந்து துரத்திச் சென்றார்கள். இவ்வாறு அவர்கள் போகும் வழியில் எகிப்தியன் ஒருவன் வயலில் கிடப்பதைக் கண்டு அவனைத் தாவீதிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவனுக்குக் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட உணவும் கொடுத்தார்கள். அவனுக்கு அத்திப்பழ அடையில் ஒரு துண்டையும், இரண்டு திராட்சைப்பழ அடைகளையும் கொடுத்தார்கள். அவன் மூன்று நாட்களாக இரவும் பகலும் தண்ணீர் குடியாமலும், உணவு சாப்பிடாமலும் இருந்தான். எனவே அவர்கள் கொடுத்த உணவைச் சாப்பிட்டவுடன் களைப்பு நீங்கிப் பெலனடைந்தான். அதன்பின் தாவீது அவனிடம், “நீ யாரைச் சேர்ந்தவன்? நீ எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான். அதற்கு அவன், “நான் ஒரு அமலேக்கியனுடைய அடிமையான எகிப்தியன். மூன்று நாட்களுக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் தலைவன் என்னை கைவிட்டுவிட்டார். நாங்கள் கிரேத்தியருடைய நெகேப் பகுதியையும், யூதாவுக்குச் சொந்தமான பிரதேசத்தையும், காலேப்பின் நெகேப் பகுதியையும் முற்றுகையிட்டு, சிக்லாக்கைத் தீக்கிரையாக்கினோம்” என்றான். அப்பொழுது தாவீது அவனிடம், “நீ எங்களைச் சூறையாடிய கூட்டத்திடம் போக வழிகாட்டுவாயா?” என்று கேட்டான். அதற்கு அவன், “நீர் என்னைக் கொல்வதில்லையென்றும், என் தலைவனிடம் ஒப்படைப்பதில்லை என்றும் இறைவன் பேரில் ஆணையிட்டால், நான் உம்மை அவர்களிடம் கூட்டிக்கொண்டு போவேன்” என்றான். அவ்வாறே அவன் தாவீதைக் கூட்டிக்கொண்டு அவர்களிடம் போனான். அங்கே அவர்கள், நாட்டுப்புறமெங்கும் சிதறுண்டு சாப்பிட்டு, குடித்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் பெலிஸ்திய நாடுகளிலிருந்தும் யூதா நாட்டிலிருந்தும் பெருந்தொகையான பொருட்களைக் கொள்ளையடித்து வந்த மகிழ்ச்சியிலே, இப்படிச் செய்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது தாவீது அன்று இரவு நேரம் தொடங்கி மறுநாள் மாலைவரை அவர்களுடன் சண்டையிட்டான். ஒட்டகங்களில் ஏறித் தப்பி ஓடிப்போன நானூறு வாலிபரைத் தவிர வேறு ஒருவனும் தப்பவில்லை. தாவீது அமலேக்கியர் கொள்ளையிட்டுக் கொண்டுபோன தன் இரு மனைவியர் உட்பட அனைத்தையும் திரும்பவும் பெற்றுக்கொண்டான். அவர்கள் சிறைப்பிடித்தவர்களில் வாலிபரோ, முதியவரோ, ஆண் பிள்ளைகளோ, பெண் பிள்ளைகளோ ஒருவருமே தவறவில்லை. கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தையும், ஒன்றுமே குறையாமல் தாவீது மீட்டுக்கொண்டு போனான். தாவீது அங்குள்ள ஆடு மாடுகளனைத்தையும் கைப்பற்றினான். அவற்றை அவன் மனிதர் மற்ற மந்தைகளுக்கு முன்னாக ஒட்டிச்சென்று, “இது தாவீதின் கொள்ளைப்பொருள்” என்று சொன்னார்கள். அதன்பின் தாவீது பேசோர் கணவாய்க்கு வந்தான். அங்கே அதிக களைப்பினால் அவனுடன் போகமுடியாமல் இருந்த இருநூறு பேரும் இருந்தார்கள். அந்த மனிதர், தாவீதையும் அவனுடன் வந்த மனிதரையும் சந்திப்பதற்காக எதிர்கொண்டு வந்தார்கள். தாவீது அவர்களின் சுகசெய்தியை விசாரித்தான். அப்பொழுது தாவீதைப் பின்பற்றியவர்களில் குழப்பக்காரரும், தீய குணங்கள் கொண்டவர்களும் இருந்தார்கள். அவர்கள் தாவீதிடம், “அவர்கள் எங்களுடன் வராதபடியால் நாங்கள் மீட்டுக் கொண்டுவந்த கொள்ளைப்பொருட்களில் ஒரு பங்கையேனும் அவர்களுக்குக் கொடுக்கமாட்டோம். அவர்கள் ஒவ்வொருவரும் தன்தன் மனைவிகளையும், பிள்ளைகளையும் மட்டும் அழைத்துக் கொண்டுபோகட்டும்” என்றார்கள். அதற்குத் தாவீது, “என் சகோதரரே யெகோவா நமக்குத் தந்தவற்றை அப்படிச் செய்யக்கூடாது. யெகோவா நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்த கூட்டத்தை எங்களிடம் ஒப்படைத்தாரே. நீங்கள் சொல்வதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள். யுத்த களத்துக்கு வந்தவர்களுக்கு எவ்வளவு பங்கு கிடைக்குமோ, அதே அளவே யுத்தத்துக்குரிய பொருட்களுடன் தங்கியிருக்கிறவர்களுக்கும் கிடைக்கவேண்டும். எனவே எல்லோருக்கும் சமமான பங்கே கிடைக்கவேண்டும்” என்றான்.
1 சாமுவேல் 30:1-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தாவீதும் அவனுடைய மனிதர்களும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருவதற்குள்ளே, அமலேக்கியர்கள் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த பெண்களையும், சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்களுடைய வழியே போய்விட்டார்கள். தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்களுடைய மனைவிகளும் தங்களுடைய மகன்களும் தங்களுடைய மகள்களும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகும் வரை சத்தமிட்டு அழுதார்கள். தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாக இருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; எல்லா மக்களும் தங்கள் மகன்கள், மகள்களினிமித்தம் மனவருத்தமானதால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். தாவீது அகிமெலேக்கின் மகனான அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான். தாவீது யெகோவாவை நோக்கி: நான் அந்தப் படையைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்ந்து போ; அதை நீ பிடித்து, எல்லாவற்றையும் திருப்பிக்கொள்வாய் என்றார். அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த 600 பேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றின் அருகில் வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள். தாவீதோ, 400 பேரோடுத் தொடர்ந்து போனான்; 200 பேர் களைத்துப்போனபடியால் பேசோர் ஆற்றைக் கடக்கமுடியாமல் நின்றுபோனார்கள். ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, சாப்பிட அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், உலர்ந்த இரண்டு திராட்சைப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இரவு பகல் மூன்று நாளாக அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தான். தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எந்த இடத்தை சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் வாலிபன்; மூன்று நாளைக்குமுன்பு நான் வியாதிப்பட்டபோது, என்னுடைய எஜமான் என்னைக் கைவிட்டான். நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவைச்சார்ந்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான். தாவீது அவனை பார்த்து: நீ என்னை அந்த படையினிடத்திற்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என்னுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் படையினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான். இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, சாப்பிட்டுக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர்கள் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாவீது அன்று மாலைதொடங்கி மறுநாள் மாலை வரை முறியடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன 400 வாலிபர்கள் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை. அமலேக்கியர்கள் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், மகன்களிலும், மகள்களிலும், ஒன்றும் குறையாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள். களைத்துப்போனதால் தாவீதுக்குப் பின்னே செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த 200 பேரிடம் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த மக்களிடத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த மக்களிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான். அப்பொழுது தாவீதோடு நடந்து வந்த மனிதர்களில் துன்மார்க்கர்களும், பயனற்ற மக்களுமான எல்லோரும்: அவர்கள் எங்களோடே வராதபடியால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள். அதற்குத் தாவீது: என்னுடைய சகோதரர்களே, யெகோவா நமக்கு கொடுத்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; யெகோவா நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாக வந்திருந்த அந்தப் படையை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். இந்தக் காரியத்தில் உங்கள் சொல் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அந்த அளவில் பொருட்களின் அருகே இருந்தவர்களுக்கும் பங்கு கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
1 சாமுவேல் 30:1-24 பரிசுத்த பைபிள் (TAERV)
மூன்றாவது நாள், தாவீதும் அவனது ஆட்களும் சிக்லாகை அடைந்தனர். அங்கே அமலேக்கியர்கள் அந்நகரைத் தாக்குவதைக் கண்டனர். அவர்கள் நெகேவ் பகுதியில் நுழைந்து சிக்லாகைத் தாக்கித் தீ மூட்டினர். சிக்லாகில் உள்ள பெண்களைச் சிறைப்பிடித்தனர். இளைஞர் முதல் முதியோர்வரை அனைவரையும் பிடித்தனர். ஆனால் யாரையும் கொல்லவில்லை. அவர்களைப் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள். தாவீதும் அவனது ஆட்களும் சிக்லாகை அடைந்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது. அவர்களின் மனைவியர், ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் அனைவரும் அமலேக்கியர்களால் சிறைகொண்டு போகப்பட்டனர். அவர்கள் இதனைக் கண்டு கதறி அழுதனர். மீறி அழுது அழ முடியாத அளவிற்கு பலவீனம் அடைந்தனர். அமலேக்கியர்கள் தாவீதின் இரு மனைவியரான யெஸ்ரேலின் அகினோவாளையும், கர்மேலிலுள்ள நாபாலின் விதவையான அபிகாயிலையும் பிடித்துச் சென்றிருந்தார்கள். படையில் உள்ள அனைவரும் தமது குமாரர்களையும் குமாரத்திகளையும் பறிகொடுத்ததால், கடுங்கோபமும் வருத்தமும் கொண்டனர். அவர்கள் தாவீதைக் கல்லெறிந்து கொல்ல எண்ணினார்கள். இந்த செய்தி தாவீதைத் தளரச் செய்தது. எனினும் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்தினான். தாவீது ஆசாரியனும் அகிமலேக்கின் மகனுமான அபியத்தாரிடம், “ஏபோத்தைக் கொண்டு வா” என்றான். அபியத்தார் அவனிடம் ஏபோத்தைக் கொண்டு போனான். பிறகு தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். “எங்கள் குடும்பத்தை பிடித்துக் கொண்டு போனவர்களைத் துரத்தட்டுமா? அவர்களைப் பிடிப்போமா?” என்று கேட்டான். அதற்கு கர்த்தர், “அவர்களைத் துரத்து, நீ பிடிப்பாய், நீ உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவாய்” என்றார். தாவீது தன்னோடு 600 வீரர்களை அழைத்துக் கொண்டு பேசோர் ஆற்றருகே வந்தான். அங்கு 200 பேர்த் தங்கிவிட்டனர். காரணம் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். அமலேக்கியரைத் துரத்திக் கொண்டு தாவீது 400 பேரோடு கிளம்பினான். வயலில் ஒரு எகிப்திய அடிமையை தாவீதின் ஆட்கள் கண்டனர். அவனை தாவீதிடம் அழைத்து வந்தனர். அவனுக்கு உண்ண உணவும் குடிக்க தண்ணீரும் கொடுத்தனர். அவர்கள் அவனுக்கு அத்திப் பழ அடையின் ஒரு துண்டையும் வற்றலான இரண்டு திராட்சைக் குலைகளையும் தின்ன கொடுத்தனர். அதை உண்டு அவன் சிறிது பெலன் பெற்றான். அவன் மூன்று நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் இருந்தப்படியால் மிகவும் பலவீனமாக இருந்தான். தாவீது அந்த அடிமையிடம், “உனது எஜமானன் யார்? நீ எங்கேயிருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். அதற்கு அவன், “நான் ஒரு எகிப்தியன், நான் அமலேக்கியனின் அடிமை. மூன்று நாட்களுக்கு முன் நான் சுகமில்லாமல் போனதால் என்னை இங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டனர். நாங்கள் கிரேத்தியர்கள் வாழும் நெகேவ் பகுதியைத் தாக்கினோம். யூதா நாட்டையும் காலேப் பகுதியையும் தாக்கினோம். சிக்லாகையும் தீ மூட்டி எரித்தோம்” என்று பதிலுரைத்தான். தாவீது அவனிடம், “எங்கள் குடும்பத்தைப் பிடித்துப் போனவர்கள் இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துப் போவாயா?” எனக் கேட்டான். அதற்கு அந்த எகிப்தியன், “தேவன் முன்னிலையில் சிறப்பு ஆணை செய்து தந்தால் நான் உங்களுக்கு உதவுவேன். அதன்படி நீங்கள் என்னைக் கொல்லக் கூடாது, அதோடு என் எஜமானனிடமும் என்னைத் திரும்ப அனுப்பக் கூடாது” என்றான். அந்த எகிப்தியன் அமலேக்கியர் இருக்கும் இடத்திற்கு தாவீதை அழைத்துப் போனான். அங்கே அவர்கள் தரையில் புரண்டு, குடித்து வெறித்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருந்தனர். பெலிஸ்தர்களின் நகரங்களில் இருந்தும் யூதாவிலிருந்தும் கொண்டு வந்த பொருட்களால் மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருந்தனர். தாவீது அவர்களை தாக்கிக் கொன்றான். அவர்கள் காலை முதல் மறுநாள் மாலைவரை சண்டையிட்டனர். அமலேக்கியரில் 400 இளைஞர்கள் மட்டும் ஒட்டகத்தின் மூலம் தப்பித்துப்போனார்கள், மற்றவர் எவரும் பிழைக்கவில்லை. அமலேக்கியர்கள் கைப்பற்றிய அனைத்தையும் தாவீது திரும்பப்பெற்றான். இரண்டு மனைவியரையும் பெற்றுக்கொண்டான். எதுவும் தவறவில்லை. சிறுவர்களும், முதியவர்களும் கிடைத்தனர். குமாரர்களையும், குமாரத்திகளையும் திரும்பப் பெற்றனர். விலை மதிப்புள்ள பொருட்களையும் பெற்றனர். அனைத்து ஆடுகளையும், வெள்ளாடுகளையும் தாவீது கைப்பற்றினான். அவைகளை தங்களுக்கு முன்னால் ஓட்டினார்கள். தாவீதின் ஆட்கள், “அவை தாவீதின் பரிசுகள்” என்றனர். தனது 200 ஆட்கள் இருக்கும் பேசோர் ஆற்றங்கரைக்கு தாவீது வந்துச் சேர்ந்தான். அங்கு களைப்பாகவும் பலவீனமாகவும் இருந்தவர்கள் தாவீதைக் கண்டதும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர். தாவீதைப் பின்தொடந்தவர்களில் சிலர் கெட்டவர்களாகவும், குழப்பம் செய்வபவர்களாகவும் இருந்தனர். அவர்கள், “இந்த 200 பேரும் எங்களோடு வரவில்லை. எனவே நாங்கள் கைப்பற்றியவற்றில் இவர்களுக்குப் பங்கு கொடுக்கமாட்டோம். இவர்களுக்கு இவர்களது மனைவி ஜனங்கள் மட்டுமே உரியவராவார்கள்” என்றனர். தாவீதோ, “அவ்வாறில்லை, என் சகோதரரே அப்படிச் செய்யக்கூடாது! நாம் மீட்டதை, கர்த்தர் நமக்குக் கொடுத்ததைப் பாருங்கள்! நம்மை தாக்கியவர்களை கர்த்தர் தான் தோல்வியுறச் செய்தார். உங்கள் பேச்சுக்கு யாரும் சம்மதம் தெரிவிக்க முடியாது! இங்கே தங்கியவர்களாயினும் சரி, சண்டைக்கு போனவர்களாயினும் சரி, அனைவருக்கும் சமபங்கு உண்டு” என்று பதில் சொன்னான்.