1 சாமுவேல் 3:1-14

1 சாமுவேல் 3:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப்படுத்துக்கொண்டான். மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன் என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. கர்த்தர் மறுபடியும் மூன்றாம் விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன். அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.

1 சாமுவேல் 3:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சிறுவனாகிய சாமுயேல் ஏலியின் மேற்பார்வையின்கீழ் யெகோவாவுக்குப் பணிசெய்தான். அந்நாட்களில் யெகோவாவின் வார்த்தை அரிதாயிருந்தது; தரிசனங்களும் அரிதாகவேயிருந்தன. பார்க்க முடியாதபடி கண்கள் மங்கிய நிலையிலிருந்த ஏலி, ஒரு இரவில் தான் வழக்கமாகப் படுக்கும் இடத்தில் படுத்திருந்தான். இறைவனுடைய விளக்கு இன்னும் அணையாதிருக்கும்போதே, சாமுயேல் யெகோவாவினுடைய பெட்டி இருந்த இடமான இறைவனின் ஆலயத்தில் படுத்திருந்தான். அவ்வேளையில் யெகோவா சாமுயேலைக் கூப்பிட்டார். அதற்கு சாமுயேல், “இதோ, நான் இங்கே இருக்கிறேன்” என்று சொல்லி, ஏலியிடம் ஓடிப்போய், “என்னைக் கூப்பிட்டீரே. இதோ இருக்கிறேன்” என்றான். அதற்கு ஏலி, “நான் உன்னைக் கூப்பிடவில்லை. நீ திரும்பிப்போய் படுத்துக்கொள்” என்றான். எனவே அவன் போய் படுத்துக்கொண்டான். யெகோவா மறுபடியும், “சாமுயேல்” எனக் கூப்பிட்டார். சாமுயேல் எழுந்து ஏலியிடம் போய், “என்னைக் கூப்பிட்டீரே? இதோ இருக்கிறேன்” என்றான். அதற்கு ஏலி, “என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. திரும்பிப் போய்ப் படுத்துக்கொள்” என்றான். சாமுயேல் இன்னும் யெகோவாவை அறியவில்லை. இதுவரை யெகோவாவின் வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. யெகோவா மூன்றாம் முறையும் சாமுயேலைக் கூப்பிட்டார்; அவன் எழுந்து மறுபடியும் ஏலியிடம் வந்து அவனிடம், “என்னைக் கூப்பிட்டீரே; இதோ இருக்கிறேன்” என்றான். அப்பொழுது யெகோவாவே சிறுவனைக் கூப்பிடுகிறார் என ஏலி அறிந்துகொண்டான். எனவே ஏலி சாமுயேலிடம், “நீ போய் படுத்துக்கொள். அவர் உன்னைக் கூப்பிட்டால், ‘யெகோவாவே பேசும், உமது அடியேன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான். அப்படியே சாமுயேல் போய் தன் இடத்தில் படுத்துக்கொண்டான். அப்பொழுது யெகோவா வந்து அங்கு நின்று, முன் கூப்பிட்டதுபோல், “சாமுயேல், சாமுயேல்” என்று கூப்பிட்டார். அதற்கு சாமுயேல், “பேசும்; அடியேன் கேட்கிறேன்” என்றான். யெகோவா சாமுயேலிடம்: “நான் இஸ்ரயேலில் ஒரு செயலைச் செய்யப்போகிறேன். அதைக் கேட்கும் ஒவ்வொருவருடைய செவிகளிலும் அது ஒலித்துக்கொண்டேயிருக்கும். அக்காலத்தில் ஏலியின் குடும்பத்திற்கு எதிராக நான் சொன்னவைகள் எல்லாவற்றையும் தொடக்கமுதல் இறுதிவரை அவனுக்கு எதிராகச் செய்து முடிப்பேன். அவனறிந்த அவன் மகன்களின் பாவத்தின் காரணமாகவே, அவனுடைய குடும்பத்தை எப்பொழுதும் நான் நியாயந்தீர்பேன் என்று நான் அவனுக்குச் சொல்லியிருந்தும், அவனுடைய மகன்கள் தங்களை இறைவன் வெறுக்கத்தக்கவர்களாக்கிக் கொண்டபோதும், அவன் அவர்களை தடுக்கத் தவறிவிட்டான். ஆகையால் ஏலி குடும்பத்தாரின் குற்றம், ‘பலியினாலோ அல்லது காணிக்கையினாலோ ஒருபோதும் நிவிர்த்தியாக்கப்பட முடியாது’ என்று ஏலியின் குடும்பத்துக்கு ஆணையிட்டிருக்கிறேன்” என்றார்.

1 சாமுவேல் 3:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சிறுவனாகிய சாமுவேல் ஏலியுடன் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்த நாட்களிலே யெகோவாவுடைய வசனம் அரிதாக இருந்தது; வெளிப்படையான தரிசனம் இருந்ததில்லை. ஒருநாள் ஏலி தன்னுடைய படுக்கையிலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. தேவனுடைய பெட்டி இருக்கிற யெகோவாவுடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோவதற்கு முன்பு சாமுவேல் படுத்திருந்தான். அப்பொழுது யெகோவா, சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, ஏலியினிடம் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப் படுத்துக்கொண்டான். மறுபடியும் யெகோவா சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன் என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். சாமுவேல் யெகோவாவை இன்னும் அறியாமல் இருந்தான்; யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. யெகோவா மறுபடியும் மூன்றாம்முறை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது யெகோவா பிள்ளையைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, சாமுவேலை நோக்கி: நீ போய்ப் படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: யெகோவாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய இடத்திலே படுத்துக்கொண்டான். அப்பொழுது யெகோவா வந்து நின்று, முன்புபோல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். யெகோவா சாமுவேலை நோக்கி: இதோ. நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது ஒலித்துக்கொண்டிருக்கும். நான் ஏலியின் குடும்பத்திற்கு எதிராகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்த நாளிலே வரச்செய்வேன்; அதைத் துவங்கவும் அதை முடிக்கவும் போகிறேன். அவனுடைய மகன்கள் தங்கள்மேல் சாபத்தை வரச்செய்வதை அவன் அறிந்தும், அவர்களை அடக்காமல்போன பாவத்தினால், நான் அவனுடைய குடும்பத்திற்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். அதினால் ஏலியின் குடும்பத்தினர் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியிலோ காணிக்கையிலோ நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.

1 சாமுவேல் 3:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

சிறுவனான சாமுவேல், ஏலியின் கீழே கர்த்தருக்கு சேவை செய்து வந்தான். அந்த நாட்களில் கர்த்தர் ஜனங்களோடு நேரடியாக அடிக்கடி பேசுவதில்லை. அங்கே மிகக் குறைந்த தரிசனங்களே இருந்தன. ஏலியின் கண்கள் பலவீனமாகி ஏறக்குறைய அவன் குருடாகிவிட்டான். ஒரு நாள் அவன் படுக்கையில் கிடந்தான். சாமுவேல் தேவனுடைய பரிசுத்தப் பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் படுத்திருந்தான். கர்த்தருடைய விளக்கானது இன்னும் எரிந்துக்கொண்டிருந்தது. கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான். ஏலி தன்னை அழைப்பதாக சாமுவேல் நினைத்துக்கொண்டான். எனவே சாமுவேல் ஏலியின் அருகில் ஓடிச் சென்றான். “நான் இங்கே இருக்கிறேன். ஏன் என்னை அழைத்தீர்கள்” என்று கேட்டான். ஆனால் ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான். சாமுவேல் படுக்கைக்குத் திரும்பி போனான். மீண்டும் கர்த்தர், “சாமுவேலே!” என்று கூப்பிட்டார். மீண்டும் சாமுவேல் ஏலியிடம் ஓடிப் போனான். அவனிடம், “நான் இங்கே இருக்கிறேன். என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டான். ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான். சாமுவேல் அதுவரை கர்த்தரைப்பற்றி அறியாமல் இருந்தான். கர்த்தர் அதுவரை அவனிடம் நேரடியாகப் பேசினதில்லை. கர்த்தர் சாமுவேலை மூன்றாவது முறையாக அழைத்தார். மீண்டும் சாமுவேல் எழுந்து ஏலியிடம் ஓடிப்போனான். “நான் இங்கே இருக்கிறேன், என்னை ஏன் அழைத்தீர்கள்” என்றான். பின்னர் ஏலி, சாமுவேலை அழைத்தது கர்த்தர் என்பதை அறிந்துக் கொண்டான். ஏலி சாமுவேலிடம், “படுக்கைக்குப் போ, அவர் உன்னை மீண்டும் அழைத்தால், ‘கர்த்தாவே, பேசும். நான் உமது தாசன். நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான். எனவே சாமுவேல் மீண்டும் படுக்கைக்குத் திரும்பிப்போனான். கர்த்தர் வந்து அங்கே நின்றார். அவர் முன்பு போலவே செய்தார். அவர், “சாமுவேலே, சாமுவேலே!” என்று அழைத்தார். சாமுவேலோ, “கர்த்தாவே பேசும், நான் உமது தாசன், நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றான். கர்த்தர் சாமுவேலிடம், “நான் இஸ்ரவேலில் சில காரியங்களை விரைவில் செய்வேன். அதைப்பற்றி கேள்விப்படுகிற ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். நான் ஏலிக்கும் அவன் குடும்பத்திற்கும் எதிராகச் செய்வேன் என்று சொன்னப்படியே ஒவ்வொன்றையும் தொடக்கம் முதல் இறுதிவரை செய்வேன். நான் ஏலியிடம் அவனது குடும்பத்தை என்றென்றைக்கும் தண்டிக்கப் போவதாகக் கூறியிருக்கிறேன். அவன் குமாரர்கள் அவர்களாகவே சாபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் தேவனுக்கு விரோதமாகக் கெட்டவற்றைப் பேசியும் செய்தும் வந்தனர் என்பதை ஏலி அறிந்திருந்தும், ஏலி அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டான். அதனால் தான் ஏலியின் குடும்பத்தார் செய்த பாவங்கள் ஒருபோதும், பலிகளாலோ, தானியக் காணிக்கையாலோ தீர்வதில்லை என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்” என்றார்.