1 சாமுவேல் 26:5-25

1 சாமுவேல் 26:5-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு தாவீது புறப்பட்டு, சவுல் முகாமிட்டிருந்த இடத்திற்குப் போனான். அவன் சவுலும், நேரின் மகன் படைத்தளபதி அப்னேரும் படுத்திருந்த இடத்தைக் கண்டான். அங்கே சவுல் முகாமுக்குள்ளே போர்வீரருக்கு மத்தியில் படுத்திருந்தான். அப்பொழுது தாவீது ஏத்தியனான அகிமெலேக்கிடமும், செருயாவின் மகன் யோவாபின் சகோதரன் அபியாசிடமும், “என்னோடுகூட சவுலின் முகாமுக்கு இறங்கி வருகிறவன் யார்?” என்று கேட்டான். அதற்கு அபிசாய், “நான் உம்மோடுகூட வருவேன்” என்றான். எனவே தாவீதும் அபிசாயும் அன்றிரவு அங்கே போனார்கள். அங்கே முகாமுக்குள் சவுல் நித்திரையாயிருப்பதைக் கண்டார்கள். அவனுடைய தலைமாட்டில் நிலத்தில் அவனுடைய ஈட்டி குத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்னேரும் மற்ற வீரரும் சவுலைச் சுற்றிலும் படுத்திருந்தார்கள். அப்பொழுது அபிசாய் தாவீதிடம், “இன்று இறைவன் உமது பகைவனை உம்முடைய கைகளில் கொடுத்திருக்கிறார். இப்பொழுது நான் ஈட்டியால் ஒரே குத்தாக நிலத்துடன் சேர்த்துக் குத்துவதற்கு எனக்கு அனுமதிகொடும். நான் அவனை இருமுறை குத்தமாட்டேன்” என்றான். அதற்கு தாவீது அபிசாயிடம், “அவரை அழிக்கவேண்டாம்; யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர்மேல் கையை ஓங்கி, குற்றமற்றவனாய் யாரால் இருக்கமுடியும்? மேலும் தாவீது, யெகோவா இருப்பது நிச்சயமெனில், யெகோவாவே அவரை அடிப்பார், அல்லது அவருடைய காலம் வரும்போது அவர் சாவார், அல்லது யுத்தத்தில் அழிவார் என்பதும் நிச்சயம். ஆனால் யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவர்மேல் என் கை ஓங்குவதை யெகோவா தடைசெய்வாராக. இப்பொழுது நாம் அவருடைய தலையருகிலுள்ள ஈட்டியையும், தண்ணீர்க் குடுவையையும் எடுத்துக்கொண்டு போவோம்” என்றான். அவ்வாறே தாவீது சவுலின் ஈட்டியையும், தலையருகிலிருந்த தண்ணீர்க் குடுவையையும் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். ஆனால் அவர்கள் அவற்றை எடுத்ததை யாரும் காணவோ, அறியவோ இல்லை. ஒருவரும் விழித்தெழவும் இல்லை. ஏனெனில் யெகோவா அவர்களுக்கு ஆழ்ந்த நித்திரையை வரச்செய்திருந்ததால், அவர்களெல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். தாவீதோ மறுபக்கத்துக்குக் கடந்து போய்ச் சிறிது தூரத்திலுள்ள குன்றின்மேல் நின்றான். அவர்களுக்கிடையில் அகன்ற இடைவெளி இருந்தது. அப்பொழுது தாவீது படையினரையும், நேரின் மகன் அப்னேரையும் கூப்பிட்டு, “அப்னேரே! நீ எனக்குப் பதில்கூற மாட்டாயா?” என்றான். அதற்கு அப்னேர், “அரசனைக் கூப்பிடும் நீ யார்?” என்றான். அதற்குத் தாவீது, “நீ ஒரு ஆண்மகன் அல்லவா? இஸ்ரயேலில் உன்னைப்போல் யார் இருக்கிறார்கள்? நீ ஏன் உன் தலைவனாகிய அரசனைக் காவல் காக்காமல். அரசனாகிய உன் தலைவனைக் கொல்வதற்கு ஒருவன் வந்தானே. நீ செய்தது நல்லதல்ல. யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீயும் உன்னோடிருக்கும் மனிதர்களும் சாவதற்குத் தகுந்தவர்கள் என்பதும் நிச்சயம். ஏனெனில் யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட உங்கள் தலைவனை நீங்கள் பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள். சுற்றிப்பாருங்கள். அரசனின் தலைமாட்டிலிருந்த ஈட்டியும், தண்ணீர்க் குடுவையும் எங்கே?” என்றான். அப்பொழுது சவுல் தாவீதின் குரலைக் கேட்டு இனங்கண்டு, “என் மகனே, தாவீதே! இது உன் குரல்தானா?” என்று கேட்டான். அதற்குத் தாவீது, “ஆம் என் தலைவனே, அரசே!” என்றான். மேலும் அவன், “என் தலைவன் உம்முடைய அடியவனைப் பின்தொடர்வது ஏன்? நான் என்ன செய்தேன்? நான் குற்றவாளியாகும்படி நான் செய்த பிழை என்ன? இப்பொழுதும் என் தலைவனான அரசே! உமது ஊழியன் சொல்வதைக் கேளும். யெகோவா உம்மை எனக்கு விரோதமாய்த் தூண்டிவிட்டிருந்தால், அவர் ஒரு காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக. ஆயினும் இதை மனிதர்கள் செய்திருந்தால், யெகோவா முன்னிலையில் அவர்கள் சபிக்கப்படுவார்களாக. ஏனெனில் இன்று அவர்கள் என்னை யெகோவாவின் உரிமைச்சொத்தில் எனக்குள்ள பங்கிலிருந்து துரத்திவிட்டு, ‘நீ போய் அந்நிய தெய்வங்களை வழிபடு’ என்று சொன்னார்கள். எனவே இப்பொழுதும் யெகோவாவின் முன்னிருந்து தூரமான இந்த இடத்தில் என்னுடைய இரத்தத்தைச் சிந்தவேண்டாம். மலையில் கவுதாரியை ஒருவன் வேட்டையாடுவதுபோல் இஸ்ரயேலின் அரசன் ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடி வந்திருக்கிறாரே” என்றான். அதற்குச் சவுல், “நான் பாவம் செய்தேன். தாவீதே, என் மகனே! திரும்பி வா. நீ இன்று என் உயிரை அருமையாய் மதித்தபடியால், நான் இனி ஒருபோதும் உனக்கு ஒரு தீங்கும் செய்ய முற்படமாட்டேன். நிச்சயமாய் நான் மூடனைப்போல் நடந்து, பெரும் பிழை செய்துவிட்டேன்” என்றான். அப்பொழுது தாவீது, “இதோ அரசனின் ஈட்டி இருக்கிறது; அரசனின் வாலிபர்களில் ஒருவன் வந்து அதை எடுத்துக்கொள்ளட்டும். யெகோவா ஒவ்வொரு மனிதனுடைய நேர்மைக்கும், உண்மைத் தன்மைக்கும் தக்கதாய் ஒவ்வொருவனுக்கும் பலனளிப்பார். யெகோவா உம்மை இன்று என் கையில் கொடுத்தார். ஆனாலும் யெகோவா அபிஷேகம் செய்தவர்மேல் என் கையை நான் ஓங்கவில்லை. இன்று நான் உம்முடைய உயிரை மதித்தது நிச்சயம்போலவே, யெகோவா என் உயிரை மதித்து, என்னை எல்லாத் துன்பத்திலிருந்தும் விடுவிப்பதும் நிச்சயமாயிருப்பதாக” என்றான். அப்பொழுது சவுல் தாவீதிடம், “தாவீதே, என் மகனே, நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக. நீ பெரிய செயல்களைச் செய்து நிச்சயமாய் வெற்றியடைவாய்” என்றான். ஆகவே தாவீது தன் வழியே போனான். சவுலும் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.

1 சாமுவேல் 26:5-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு தாவீது எழுந்து, சவுல் முகாமிட்ட இடத்திற்குப் போய், சவுலும் நேரின் மகனான அப்னேர் என்னும் அவனுடைய படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; மக்கள் அவனைச் சுற்றிலும் முகாமிட்டிருந்தார்கள். தாவீது ஏத்தியனான அகிமெலேக்கையும், செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடு சவுலின் முகாமிற்கு இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடு வருகிறேன் என்றான். அப்படியே தாவீதும் அபிசாயும் இரவிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து தூங்கிக்கொண்டிருந்தான்; அவனுடைய தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் மக்களும் படுத்திருந்தார்கள். அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய எதிரியை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் பாயக் குத்தட்டுமா என்றான். தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; யெகோவா அபிஷேகம்செய்தவர்மேல் தன்னுடைய கையைப் போட்டு, குற்றமில்லாமல் போகிறவன் யார்? என்று சொன்னான். பின்னும் தாவீது: யெகோவா அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் இறந்தாலொழிய, நான் என்னுடைய கையைக் யெகோவா அபிஷேகம்செய்தவர்மேல் போடாதபடி, யெகோவா என்னைக் காப்பாராக என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான். தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; யெகோவா அவர்களுக்கு அயர்ந்த தூக்கத்தை வரச்செய்ததால், அவர்கள் எல்லாரும் தூங்கினார்கள். தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போதிய இடைவெளி உண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் உச்சியிலே, மக்களுக்கும் நேரின் மகனான அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, பதில் சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான். அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னே நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமல் போனதென்ன? மக்களில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே. நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; யெகோவா அபிஷேகம்செய்த உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமல் போனபடியால், நீங்கள் மரணத்திற்கு ஏதுவானவர்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச்செம்பும் எங்கே என்று பாரும் என்றான். அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, இது என்னுடைய சத்தந்தான் என்று சொல்லி, பின்னும்: என்னுடைய ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன தீங்கு இருக்கிறது? இப்பொழுது ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; யெகோவா உம்மை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டது உண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனிதர்கள் அதைச் செய்தார்களென்றால், அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகச் சபிக்கப்பட்டவர்கள்; அவர்கள்: நீ போய்; அந்நிய தேவர்களைத் தொழுதுகொள் என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் யெகோவாவுடைய சுதந்தரத்தில் சேரமுடியாதபடி துரத்திவிட்டார்களே. இப்போதும் யெகோவாவுடைய சமுகத்தில் என்னுடைய இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான். அப்பொழுது சவுல்: நான் பாவம் செய்தேன்; என்னுடைய மகனான தாவீதே, திரும்பி வா; என்னுடைய ஜீவன் இன்றையதினம் உன்னுடைய பார்வைக்கு அருமையாக இருந்தபடியால், இனி உனக்கு ஒரு தீங்கும் செய்யமாட்டேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தவறு செய்தேன் என்றான். அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபர்களில் ஒருவன் இந்த இடத்திற்கு வந்து, அதை வாங்கிக்கொண்டு போகட்டும். யெகோவா அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தகுந்த பலன் அளிப்பாராக; இன்று யெகோவா உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், யெகோவா அபிஷேகம்செய்தவர்மேல், என்னுடைய கையை நீட்ட மனதில்லாதிருந்தேன். இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என்னுடைய பார்வைக்கு எப்படி அருமையாக இருந்ததோ, அப்படியே என்னுடைய ஜீவனும் யெகோவாவின் பார்வைக்கு அருமையாக இருப்பதால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் விடுவிப்பாராக என்றான். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என்னுடைய மகனான தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பெலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியில் போனான்; சவுலும் தன்னுடைய இடத்திற்கு திரும்பினான்.

1 சாமுவேல் 26:5-25 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு தாவீது சவுலின் முகாமிற்குச் சென்றான். அங்கே சவுலும் அப்னேரும் தூங்குவதைக் கண்டான். (அப்னேர் சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரன்) சவுல் முகாமின் மையத்தில் தூங்கிக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் படைவீரர்கள் இருந்தனர். ஏத்தியனாகிய அகிமெலேக்கிடமும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயிடமும் தாவீது பேசினான். “நான் சவுலின் முகாமிற்குப் போகிறேன். என்னோடு யார் வருகிறீர்கள்?” என்று கேட்டான். அபிசாயோ, “நான் உங்களுடன் வருகிறேன்” என்று பதிலுரைத்தான். இரவில் அவர்கள் அங்குச் சென்றார்கள். முகாமின் மையத்தில் சவுல் தூங்க, அவனது தலைமாட்டில் அவனது ஈட்டி தரையில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்னேரும் மற்ற வீரர்களும் சவுலைச் சுற்றிலும் தூங்கிக்கொண்டிருந்தனர். அபிசாய் தாவீதிடம், “உங்கள் எதிரியைத் தோல்வியுறச் செய்ய தேவன் இன்று வாய்ப்பு அளித்துள்ளார். தரையோடு இவனை ஈட்டியால் ஒரே குத்தாக குத்திவிடட்டுமா? ஒரே தடவையில் அதைச் சாதிக்க என்னால் முடியும்!” என்றான். ஆனால் தாவீது அபிசாயிடம், “சவுலைக் கொல்லவேண்டாம்! கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவுக்கு யார் கேடு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! ஜீவிக்கின்ற கர்த்தர் தாமே இவரைத் தண்டிப்பார். இவர் இயற்கையாகவும் மரிக்கலாம், அல்லது போரில் கொல்லப்படலாம். ஆனால், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவுக்கு என்னால் மரணம் வரும்படி கர்த்தர் செய்யக் கூடாது! இப்போது ஈட்டியையும் தண்ணீர் செம்பையும் எடுத்துக்கொண்டுபோவோம்” என்றான். சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக் கொண்டு தாவீது கிளம்பினான். பிறகு தாவீதும், அபிசாயும் முகாமை விட்டு வெளியேறினார்கள். நடந்தது என்னதென்று யாருக்கும் தெரியவில்லை! யாரும் இதைப் பார்க்கவுமில்லை, எழும்பவுமில்லை. கர்த்தரால் சவுலும் மற்ற வீரர்களும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். பள்ளத்தாக்கின் மறு பக்கத்திற்கு தாவீது கடந்து போனான். மலையின் உச்சியில் நின்று கொண்டான். அப்னேரிடமும், சவுலின் வீரர்களிடமும் சத்தமான குரலில், “அப்னேர்! எனக்குப் பதில் சொல்” என்றான். அப்னேரும், “நீ யார்? ஏன் ராஜாவை அழைக்கிறாய்?” என்று கேட்டான். தாவீது, “நீ ஒரு மனிதன் தானே? இஸ்ரவேலில் உள்ள பிற மனிதர்களைவிட நீ சிறந்தவன் அல்லவா? நான் சொல்வது சரி என்றால் பின் ஏன் உன் ராஜாவைக் காக்கவில்லை? உன் ராஜாவைக் கொல்ல ஒரு சாதாரண மனிதன் உன் கூடாரத்திற்கு வந்தான். நீ பெரிய தவறுச் செய்துவிட்டாய்! நீயும் உன் ஆட்களும் மரித்திருக்க வேண்டும். கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவைப் பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள். உன் ராஜாவின் தலைமாட்டில் உள்ள ஈட்டியும் தண்ணீர் செம்பும் எங்கே என்று பாருங்கள்?” என்றான். சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்துகொண்டான். “என் மகனே! தாவீது, இது உனது குரலா?” என்று கேட்டான். அதற்கு தாவீது, “ஆமாம், என் ராஜாவாகிய எஜமானே, என் குரலேதான்” என்றான். தாவீது மேலும், “ஐயா என்னை ஏன் தேடுகிறீர்கள்? நான் என்ன தவறு செய்தேன்? நான் என்ன குற்றவாளியா? எனது எஜமானனாகிய ராஜாவே! நான் சொல்வதைக் கவனியும்! என் மீது உமக்கு கோபம் வரும்படி, கர்த்தர் செய்திருந்தால் அதற்கு தகுந்த காணிக்கையை அவர் ஏற்றுக்கொள்வாராக, மனிதர்கள் செய்திருந்தால், அதற்கு கர்த்தர் அவர்களுக்குத் தண்டனை அளிக்கட்டும். கர்த்தர் எனக்குக் கொடுத்த நாட்டைவிட்டுப் போகும்படி மனிதர்கள் செய்துவிட்டார்களே. ‘போய் அந்நியரோடு வாழு, அவர்களின் தெய்வங்களுக்கு சேவைசெய்’ என்று மனிதர்கள் சொல்லியிருக்கிறார்கள். இப்போது கர்த்தருடைய சந்நிதிவிட்டு வெகு தூரத்தில் நான் மரிக்கும்படி நீர் செய்யவேண்டாம். மலையில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோன்று இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியை வேட்டையாட வந்தாரோ?” என்று கேட்டான். பிறகு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். திரும்பி வா மகனே, என் உயிர் உனக்கு முக்கியமானது என்பதை எனக்குக் காட்டிவிட்டாய். இனிமேல் உனக்குக் கேடுசெய்ய முயலமாட்டேன். நான் அறிவீனமாக நடந்துகொண்டேன். நான் பெருந்தவறு செய்துவிட்டேன்” என்றான். தாவீதோ, “இதோ, ராஜாவின் ஈட்டி என்னிடம் உள்ளது, யாராவது ஒரு இளைஞன் வந்து பெற்றுக்கொள்ளட்டும். கர்த்தர் ஒவ்வொரு மனிதருக்கும், அவரவரின் செயலுக்குதக்க பலன் அளிக்கிறார். நீதியான காரியங்களை செய்பவர்களுக்கு நன்மை தருகிறார். தீமை செய்பவர்களுக்கு தண்டனையை தருகிறார். கர்த்தர் எனக்கு இன்று உங்களைத் தோற்கடிக்க வாய்பளித்தார். ஆனால் நான் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவுக்கு கேடு செய்யவில்லை. இன்று உங்கள் வாழ்க்கை எனக்கு முக்கியமானது என்பதைக் காட்டினேன்! அதேபோல் கர்த்தரும் என் வாழ்க்கை அவருக்கு முக்கியமானது என்று காட்டுவார்! கர்த்தர் என்னை அனைத்து துன்பங்களில் இருந்தும் காப்பார்” என்றான். பின் சவுல் தாவீதிடம், “தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், என் மகனே, நீ பெரியக் காரியங்களைச் செய்து, வாழ்வில் பெரும் வெற்றியைப் பெறுவாய்” என்றான். தாவீது தன் வழியே போனான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பிப் போனான்.

1 சாமுவேல் 26:5-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு தாவீது எழுந்து, சவுல் பாளயமிறங்கின இடத்திற்குப் போய், சவுலும் நேரின் குமாரனாகிய அப்னேர் என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள். தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான். அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான். தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான். பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் மாண்டாலொழிய, நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான். தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள். தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போந்த இடமுண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் கொடுமுடியிலே, ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான். அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன? ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே. நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச்செம்பும் எங்கே என்று பாரும் என்றான். அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி, பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது? இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டதுண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனுப்புத்திரர் அதைச் செய்தார்களேயாகில், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டவர்கள்; அவர்கள்: நீ போய்; அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு துரத்திவிட்டார்களே. இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான். அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பி வா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ் செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான். அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக்கொண்டு போகட்டும். கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன். இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.