1 சாமுவேல் 25:28-31

1 சாமுவேல் 25:28-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“தயவுசெய்து அடியாளுடைய பிழையை மன்னியும். எனது எஜமான் யெகோவாவின் யுத்தத்தை நடத்துவதனால் யெகோவா நிச்சயமாக எனது எஜமானுக்கு நிலைத்து நிற்கும் சந்ததியைக் கொடுப்பார். உமது வாழ்நாள் முழுவதும் உம்மேல் ஒரு பிழையும் காணப்படாதிருக்கட்டும். ஒருவன் உமது உயிரை வாங்குவதற்கு உம்மைத் தொடர்ந்தபோதிலும், என் ஆண்டவனுடைய உயிர் உமது இறைவனாகிய யெகோவாவினால் உயிருள்ளோர் தொகையில் பத்திரப்படுத்தப்படும். ஆனாலும் உம்முடைய பகைவரின் உயிர்களையோ கவணில் வைத்து வீசப்படும் கல்லைப்போல் அவர் வீசி விடுவார். யெகோவா உம்மைக் குறித்து வாக்குப்பண்ணிய எல்லா நன்மைகளையும் செய்துமுடித்து, உம்மை இஸ்ரயேலரின் தலைவனாக நியமிப்பார். அப்பொழுது தேவையில்லாத இரத்தம் சிந்திய குற்றமோ, உமக்காகப் பழிவாங்கிய குற்றமோ பாரமாக ஆண்டவனுடைய மனசாட்சியை அழுத்தாதிருக்கட்டும். இப்படியாக யெகோவா என் ஆண்டவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்போது உம்முடைய அடியாளையும் நினைத்துக்கொள்ளும்” என்றாள்.

1 சாமுவேல் 25:28-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உமது அடியாளின் மீறுதலை மன்னியும், யெகோவா என்னுடைய ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என்னுடைய ஆண்டவன் யெகோவாவுடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு தீங்கும் உம்மிலே காணப்படாமலிருப்பதாக. உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வழிதேடவும், ஒரு மனிதன் எழுந்தாலும் என்னுடைய ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய யெகோவாவின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய எதிரிகளின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்படும். யெகோவா உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என்னுடைய ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நியமிக்கும்போது, நீர் காரணமில்லாமல் இரத்தம் சிந்தாமலும், என்னுடைய ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என்னுடைய ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இருக்காது, மனவருத்தமும் இருக்காது; யெகோவா என்னுடைய ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.

1 சாமுவேல் 25:28-31 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் தவறு செய்தால் மன்னித்துவிடும். உங்கள் குடும்பத்தை கர்த்தர் பெலப்படுத்துவார் என்று எனக்குத் தெரியும். உங்கள் குடும்பத்தில் இருந்து பல ராஜாக்கள் புறப்படுவார்கள். நீங்கள் கர்த்தருக்காகப் போர் செய்து வருவதால் அவர் இதனை உமக்காகச் செய்வார்! நீங்கள் வாழ்கின்ற காலம் வரை ஜனங்கள் உங்களிடம் எந்தக் குறையும் காணமாட்டார்கள். எவராவது உங்களைக் கொல்வதற்குத் தொடர்ந்து வந்தால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார்! ஆனால் உங்கள் பகைவர்களை கர்த்தர் கவணில் உள்ள கல்லைப் போன்று தூர எறிவார்! உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்யப்போவதாக கர்த்தர் வாக்கு செய்துள்ளார். கர்த்தர் தமது வாக்கைக் காப்பாற்றுவார்! தேவன் உம்மை இஸ்ரவேலரின் தலைவராக்குவார். அப்பாவிகளைக் கொன்றப்பழி உங்களுக்கு வரக்கூடாது. நீங்கள் அந்த வலையில் விழக்கூடாது. கர்த்தர் உமக்கு வெற்றிகளைத் தரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.

1 சாமுவேல் 25:28-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக. உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போகும். கர்த்தர் உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும்போது, நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மனஇடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.