1 சாமுவேல் 19:1-10

1 சாமுவேல் 19:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தாவீதைக் கொலை செய்யுங்கள் என்று சவுல் யோனத்தானுக்கும், தன் எல்லா பணியாட்களுக்கும் சொன்னான். ஆனால் யோனத்தான் தாவீதை அதிகம் விரும்பினான். அதனால் யோனத்தான் அவனை எச்சரித்துச் சொன்னதாவது: “எனது தகப்பன் சவுல் உன்னைக் கொலைசெய்யச் சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆகையால் நாளை காலை எச்சரிக்கையாயிருந்து, இரகசியமான ஒரு இடத்தில் ஒளிந்து மறைந்திரு. நான் வெளியே போய் நீ ஒளிந்திருக்கும் வயல்வெளியில் என் தகப்பனாருடன் உனக்காக பேசுவேன். அதன்பின் நான் அறிந்ததை உனக்குச் சொல்வேன்” என்றான். இவ்விதமாய் யோனத்தான் தன் தகப்பன் சவுலிடம் தாவீதைப் பற்றி நன்றாய்ப் பேசி அவனிடம், “அரசன் தமது ஊழியன் தாவீதுக்கு ஒரு தீமையும் செய்யாமல் இருக்கவேண்டும். அவன் உங்களுக்குத் தீமை செய்யவில்லை. அவன் செய்திருப்பது உங்களுக்கு அதிக நன்மையே கொடுத்திருக்கிறது. அவன் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனைக் கொன்றானே. இதனால் யெகோவா இஸ்ரயேலருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். நீங்களும் அதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தீர்கள். அப்படியிருக்க ஏன் தாவீதைப்போல் குற்றமற்ற ஒருவனைக் காரணமில்லாமல் கொலைசெய்து ஒரு தீமையை செய்யவேண்டும்” என்றான். சவுல் யோனத்தான் சொன்னதைக் கேட்டு, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், தாவீதும் கொல்லப்படுவதில்லை என்பதும் நிச்சயம்” என்று ஆணையிட்டான். அதன்பின் யோனத்தான் தாவீதை அழைத்து, தான் தனது தகப்பனுடன் பேசிய எல்லாவற்றையும் சொல்லி, அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். அவன் முன்போலவே சவுலுடன் இருந்தான். மறுபடியும் யுத்தம் மூண்டது. தாவீது போய் பெலிஸ்தியருடன் சண்டையிட்டு அவன் அதிக பெலத்துடன் அவர்களைத் தாக்கினான். அவர்கள் அவனுக்கு முன் நிற்காது தப்பி ஓடினார்கள். ஒரு நாள் சவுல் தன் வீட்டில் இருந்தபோது, யெகோவாவிடமிருந்து வந்த பொல்லாத ஆவி அவன்மேல் இறங்கியது. அப்பொழுது தாவீது தன் யாழை வாசித்துக்கொண்டிருந்தான். அவ்வேளையில் சவுல் தன் கையிலிருந்த ஈட்டியால் தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றான். ஆனால் தாவீது விலகிக்கொண்டதால், ஈட்டி சுவரில் பாய்ந்தது. தாவீது அன்றிரவு தப்பி ஓடிவிட்டான்.

1 சாமுவேல் 19:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாவீதைக் கொன்றுபோடும்படி, சவுல் தன்னுடைய மகனான யோனத்தானோடும் தன்னுடைய ஊழியக்காரர்கள் எல்லோரோடும் பேசினான். சவுலின் மகனான யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என்னுடைய தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகை தேடுகிறார்; இப்போதும் நாளைக்காலை நீர் எச்சரிக்கையாக இருந்து, மறைவான இடத்தில் ஒளிந்துகொண்டிரும். நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என்னுடைய தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என்னுடைய தகப்பனோடு பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான். அப்படியே யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலோடு தாவீதுக்காக நலமாகப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாகப் பாவம் செய்யாமல் இருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவம் செய்யவில்லை; அவனுடைய செய்கைகள் உமக்கு அதிக உபயோகமாக இருக்கிறதே. அவன் தன்னுடைய உயிரைத் தன்னுடைய கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினால், யெகோவா இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் காரணமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் ஏன் பாவம் செய்கிறீர் என்றான். சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான். பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலினிடத்தில் கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்புபோலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான். மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்து, அவர்களை பயங்கரமாக வெட்டியதால் அவர்கள் அவனுக்கு முன்பாக சிதறி ஓடிப்போனார்கள். யெகோவாவால் விடப்பட்ட தீய ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன்னுடைய வீட்டில் உட்கார்ந்து, தன்னுடைய ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன்னுடைய கையினாலே சுரமண்டலம் வாசித்தான். அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இரவு ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.

1 சாமுவேல் 19:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

சவுல் தன் அதிகாரிகளிடமும் யோனத்தானிடமும் தாவீதைக் கொல்லுமாறு கூறினான். ஆனால் யோனத்தான் தாவீதை அதிகமாக விரும்பினான். எனவே யோனத்தான் தாவீதை எச்சரித்து, “கவனமாக இரு, சவுல் உன்னைக் கொல்லப் பார்க்கிறார். இன்று காலை, வயலில் ஒளிந்துக்கொள், நான் என் தந்தையோடு அங்கு வந்து பேசுவதை கேட்டுக்கொள்” என்றான். யோனத்தான் தனது தந்தை சவுலிடம் சம்பாஷித்தான். தாவீதைப் பற்றி நல்லவற்றை அவன் எடுத்துக் கூறினான். அவன், “நீங்கள் ஒரு ராஜா, தாவீது ஒரு சேவகன், அவன் உங்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டான். எனவே அவனுக்கு எதிராக எதுவும் செய்யாதீர்கள், அவன் உங்களுக்கு நன்மையே செய்வான். அவன் கோலியாத்தைக் கொல்ல தன் உயிரையே பணயம் வைத்தான். கர்த்தர் இஸ்ரவேலுக்காக பெரிய வெற்றியைத் தந்தார். நீங்கள் பார்த்து மகிழ்ந்தீர்கள். அவன் அப்பாவி! அவனைக் கொல்ல காரணமே இல்லை” என்றான். யோனத்தான் சொல்வதை சவுல் கேட்டு, “கர்த்தர் ஜீவிப்பது உண்மை, தாவீது கொல்லப்படமாட்டான்” என்றான். எனவே, யோனத்தான் தாவீதை அழைத்து நடந்த எல்லாவற்றையும் சொன்னான். பிறகு தாவீதை சவுலிடம் அழைத்து வந்தான். ஆகையால் முன்பு போலவே தாவீதை சவுலோடேயே இருக்கச் செய்தான். மறுபடியும் போர் தொடங்கியது. தாவீது புறப்பட்டு சென்று பெலிஸ்தியரோடு போர் செய்தான். பெலிஸ்தியரை தாவீது தோற்கடித்தான். அங்கிருந்து அவர்கள் ஓடிப் போனார்கள். சவுல் வீட்டில் இருக்கும் போது, கர்த்தரிடமிருந்து ஒரு தீய ஆவி அவன் மீது வந்தது. அவன் தனது கையில் ஈட்டி ஒன்றை வைத்திருந்தான். தாவீது சுரமண்டலம் வாசித்துக்கொண்டிருதான். சவுல் ஈட்டியால் அவனைச் சுவரோடு சேர்த்து குத்திக் கொல்லப் பார்த்தான். ஆனால் தாவீது அப்புறம் குதித்துத் தப்பினான். சவுல் தன் ஈட்டியைச் சுவரில் பதிய குத்தினான். தாவீது அன்றிரவு தப்பிவிட்டான்.

1 சாமுவேல் 19:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான். சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகை தேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும். நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான். அப்படியே யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே. அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான். சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான். பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான். மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப் போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள். கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான். அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.