1 சாமுவேல் 17:45-47

1 சாமுவேல் 17:45-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

1 சாமுவேல் 17:45-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதற்குத் தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நானோ, நீ எதிர்த்த இஸ்ரயேல் படைகளின் இறைவனான சேனைகளின் யெகோவாவின் பெயரிலேயே உன்னை எதிர்த்து வருகிறேன். இன்று யெகோவா உன்னை என் கையில் ஒப்படைப்பார். நான் உன்னை அடித்து வீழ்த்தி, உன் தலையை வெட்டிப்போடுவேன். இன்று பெலிஸ்திய படைகளின் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன். இதனால் இஸ்ரயேலில் ஒரு இறைவன் இருக்கிறாரென்பதை முழு உலகமும் அறிந்துகொள்ளும். அத்துடன், யெகோவா வாளாலும், ஈட்டியாலும் விடுவிப்பவரல்ல என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டமும் அறிந்துகொள்வார்கள். இந்த யுத்தம் யெகோவாவினுடையது. எனவே உங்கள் அனைவரையும் அவர் எங்கள் கைகளில் ஒப்படைப்பார்” என்றான்.

1 சாமுவேல் 17:45-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் யெகோவா உன்னை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன்னுடைய தலையை உன்னை விட்டு எடுத்து, பெலிஸ்தர்களுடைய முகாமின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளுவார்கள். யெகோவா பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த மக்கள்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் யெகோவாவுடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

1 சாமுவேல் 17:45-47 பரிசுத்த பைபிள் (TAERV)

தாவீது அவனிடம், “நீ உனது பட்டயம், ஈட்டியைப் பிடித்துகொண்டு வந்துள்ளாய். நானோ இஸ்ரவேல் சேனைகளின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் வந்துள்ளேன். அவரைத் தூஷித்து நீ நிந்தித்தாய். இன்று உன்னைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார். இன்று உன் தலையை வெட்டி உன் உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாக்குவேன். மற்ற பெலிஸ்தரையும் இவ்வாறே செய்வோம்! அப்போது இஸ்ரவேலில் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று உலகம் அறிந்துக்கொள்ளும்! ஜனங்களை மீட்கும்படி கர்த்தருக்குப் பட்டயமும் ஈட்டியும் தேவையில்லை என்பதை இங்குள்ளவர்களும் அறிவார்கள். யுத்தம் கர்த்தருடையது! பெலிஸ்தியர்களாகிய உங்களெல்லாரையும் வெல்ல கர்த்தர் உதவுவார்” என்றான்.