1 சாமுவேல் 17:40-47
1 சாமுவேல் 17:40-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு தாவீது கையில் தன் மேய்ப்பனின் கோலை எடுத்துக்கொண்டு நீரோடையிலிருந்த ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து மேய்ப்பருக்குரிய பையில் போட்டு, கவணையும் கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனை அணுகினான். அப்பொழுது அந்த பெலிஸ்தியன் தாவீதை நோக்கி வந்துகொண்டிருந்தான். கேடயம் பிடிப்பவன் அவனுக்கு முன்னால் நடந்து வந்தான். அந்தப் பெலிஸ்தியன் தாவீதை நன்றாகப் பார்த்து, அவன் ஒரு சிறுவன் மட்டுமே என்றும், சிவந்த உடலுடையவனும், அழகுள்ளவனும் என்று கண்டு அவனை அலட்சியம் செய்தான். அவன் தாவீதிடம், “நீ தடிகளுடன் என்னிடம் வருவதற்கு நான் என்ன ஒரு நாயா?” என்று கேட்டுத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லித் தாவீதைச் சபித்தான். மேலும் அவன் தாவீதிடம், “என்னிடத்தில் இங்கே வா; உன் மாமிசத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும், வெளியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன்” என்றான். அதற்குத் தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நானோ, நீ எதிர்த்த இஸ்ரயேல் படைகளின் இறைவனான சேனைகளின் யெகோவாவின் பெயரிலேயே உன்னை எதிர்த்து வருகிறேன். இன்று யெகோவா உன்னை என் கையில் ஒப்படைப்பார். நான் உன்னை அடித்து வீழ்த்தி, உன் தலையை வெட்டிப்போடுவேன். இன்று பெலிஸ்திய படைகளின் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன். இதனால் இஸ்ரயேலில் ஒரு இறைவன் இருக்கிறாரென்பதை முழு உலகமும் அறிந்துகொள்ளும். அத்துடன், யெகோவா வாளாலும், ஈட்டியாலும் விடுவிப்பவரல்ல என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டமும் அறிந்துகொள்வார்கள். இந்த யுத்தம் யெகோவாவினுடையது. எனவே உங்கள் அனைவரையும் அவர் எங்கள் கைகளில் ஒப்படைப்பார்” என்றான்.
1 சாமுவேல் 17:40-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பர்களுக்குரிய தன்னுடைய பையிலே போட்டு, தன்னுடைய கவணைத் தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனின் அருகில் போனான். பெலிஸ்தனும் நடந்து, தாவீதின் அருகில் வந்தான்; கேடகத்தை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான். பெலிஸ்தியன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் அழகுமான சிவந்த மேனியுள்ளவனுமாக இருந்தபடியால், அவனை இழிவாகக் கருதினான். பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன்னுடைய தெய்வங்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான். பின்னும் அந்தப் பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன்னுடைய மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான். அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் யெகோவா உன்னை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன்னுடைய தலையை உன்னை விட்டு எடுத்து, பெலிஸ்தர்களுடைய முகாமின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளுவார்கள். யெகோவா பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த மக்கள்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் யெகோவாவுடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
1 சாமுவேல் 17:40-47 பரிசுத்த பைபிள் (TAERV)
தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு 5 கூழங்கற்கள் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான். தேடியெடுத்த 5 கூழாங்கற்களையும் தான் வைத்திருந்த இடையர் தோல் பையில் போட்டுக் கொண்டான். கையில் வில் கவணை வைத்துக்கொண்டான். பிறகு கோலியாத்தை நோக்கி நடந்தான். கோலியாத் மெதுவாக நடந்து தாவீதை நெருங்கினான். கேடயத்தை ஏந்திய உதவியாள் முன்னே நடந்தான். கோலியாத் தாவீதைப் பார்த்து, அவன் யுத்த பயிற்சி இல்லாத சிவந்த முகத்தையுடைய இளைஞன் என்று கண்டு நகைத்தான். “ஏன் இந்த கைத்தடி? ஒரு நாயை விரட்டுவது போல் நீ என்னை விரட்டப் போகிறாயா?” என்று கோலியாத் கேட்டான். அதற்கு பின் கோலியாத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லி தாவீதை நிந்தித்தான். கோலியாத் தாவீதிடம் “இங்கே வா, உனது உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுகிறேன்!” என்றான். தாவீது அவனிடம், “நீ உனது பட்டயம், ஈட்டியைப் பிடித்துகொண்டு வந்துள்ளாய். நானோ இஸ்ரவேல் சேனைகளின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் வந்துள்ளேன். அவரைத் தூஷித்து நீ நிந்தித்தாய். இன்று உன்னைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார். இன்று உன் தலையை வெட்டி உன் உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாக்குவேன். மற்ற பெலிஸ்தரையும் இவ்வாறே செய்வோம்! அப்போது இஸ்ரவேலில் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று உலகம் அறிந்துக்கொள்ளும்! ஜனங்களை மீட்கும்படி கர்த்தருக்குப் பட்டயமும் ஈட்டியும் தேவையில்லை என்பதை இங்குள்ளவர்களும் அறிவார்கள். யுத்தம் கர்த்தருடையது! பெலிஸ்தியர்களாகிய உங்களெல்லாரையும் வெல்ல கர்த்தர் உதவுவார்” என்றான்.
1 சாமுவேல் 17:40-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான். பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்குக் கிட்டி வந்தான்; பரிசையைப் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான். பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டைபண்ணினான். பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான். பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான். அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.