1 சாமுவேல் 17:17-20

1 சாமுவேல் 17:17-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் ஈசாய் தன் மகன் தாவீதிடம், “இந்த எப்பா அளவு வறுத்த தானியத்தையும், இந்த பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கும் உன் சகோதரரிடம் விரைவாகப் போ. அத்துடன் இந்தப் பத்துப் பால்கட்டிகளையும் அவர்களுடைய படைத் தலைவனிடம் கொடுத்து, உன் சகோதரர் நலமாய் இருக்கிறார்களா என விசாரித்து வா. அவர்கள் சவுலுடனும், இஸ்ரயேல் மனிதர்களுடனும் சேர்ந்து ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தியரோடு யுத்தம்செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றான். தாவீது அதிகாலையில் எழுந்து மந்தையை ஒரு மேய்ப்பனின் பாதுகாப்பில் விட்டு, ஈசாய் தனக்கு அறிவுறுத்தியபடியே, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனான். படைகள் போர் ஒலி எழுப்பிக்கொண்டு யுத்த நிலைகளுக்கு அணிவகுத்துப் போகையில் அவன் முகாமுக்கு வந்துசேர்ந்தான்.

1 சாமுவேல் 17:17-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஈசாய் தன்னுடைய மகனான தாவீதை பார்த்து: உன்னுடைய சகோதரர்களுக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கிற உன்னுடைய சகோதரர்களிடத்தில் ஓட்டமாகப் போய், இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர்கள் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான். அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர்கள் எல்லோரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்துக்கொண்டிருந்தார்கள். தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; இராணுவங்கள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.

1 சாமுவேல் 17:17-20 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருநாள் ஈசாய் தாவீதிடம், “கூடையில் வறுத்த பயிரையும், 10 அப்பங்களையும் கொண்டு போய் முகாமில் உள்ள உன் சகோதரர்களுக்கு கொடு. இந்த 10 பாலாடைக் கட்டிகளையும் உன் சகோதரர் குழுவின் 1,000 வீரருக்கு அதிபதியினிடம் கொடு. உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் பார். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ஏதேனும் வாங்கி வா! ஏலா பள்ளத்தாக்கில் உன் சகோதரர்கள் சவுலின் சேனையில் பெலிஸ்தருக்கு எதிராகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்” என்றான். அதிகாலையில் தாவீது வேறு ஒரு மேய்ப்பவனிடம் ஆடுகளை ஒப்படைத்தான். தாவீது உணவை எடுத்துக்கொண்டு ஈசாய் சொன்னபடி புறப்பட்டான். தாவீது தனது வண்டியை முகாமுக்குச் செலுத்தினான். தாவீது வந்து சேர்ந்தபோது வீரர்கள் தங்கள் போர்புரியும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தனர். வீரர்கள் தங்கள் போர் முழக்கங்களை எழுப்ப துவங்கினார்கள்.

1 சாமுவேல் 17:17-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய், இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான். அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள்.