1 சாமுவேல் 17:1-58

1 சாமுவேல் 17:1-58 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பெலிஸ்தியர் யுத்தத்திற்காக படை திரட்டிக்கொண்டு யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒன்றுகூடினார்கள். சோக்கோவுக்கும், அசேக்காவுக்கும் நடுவேயுள்ள எபேஸ் தம்மீமிலே அவர்கள் முகாமிட்டார்கள். சவுலும் இஸ்ரயேலரும் ஒன்றுகூடி ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு பெலிஸ்தியருக்கு எதிராகப் போரிடும்படி அணிவகுத்து நின்றார்கள். அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருக்கத்தக்கதாக பெலிஸ்தியர் ஒரு மலையிலும், இஸ்ரயேலர் மற்றொரு மலையிலும் நின்றார்கள். அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் மாவீரன் பெலிஸ்தியரின் முகாமிலிருந்து வெளியே வந்து நின்றான். அவன் ஒன்பது அடிக்கும் அதிகமான உயரமுள்ளவனாய் இருந்தான். அவன் தலையில் வெண்கலக் கவசம் போட்டுக்கொண்டு, ஐயாயிரம் சேக்கல் நிறையுள்ள வெண்கல செதில்களாலான ஒரு போர் கவசமும் அணிந்திருந்தான். அவன் தன் கால்களில் வெண்கல கவசங்களையும் போட்டிருந்தான். அவனுடைய முதுகிலே ஒரு வெண்கல கேடகம் தொங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய ஈட்டியின் பிடி நெசவுதறி மரம்போல் இருந்தது. அதன் இரும்பு முனை அறுநூறு சேக்கல் எடையுள்ளதாயிருந்தது. கேடகம் பிடித்தவன் அவன் முன்னே நடந்தான். கோலியாத் இஸ்ரயேலின் போர்ப்படைக்கு முன் வந்துநின்று உரத்த சத்தமாய், “நீங்கள் ஏன் போருக்கு அணிவகுத்து நிற்கிறீர்கள்? நான் பெலிஸ்தியன் அல்லவா? நீங்கள் சவுலின் வேலையாட்கள் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்தெடுத்து என்னிடம் அனுப்புங்கள். அவன் என்னோடு போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்கள் அடிமைகளாவோம். நான் அவனோடு போர்செய்து அவனைக் கொன்றால் நீங்கள் எங்கள் அடிமைகளாய் எங்களுக்குப் பணிசெய்வீர்கள்” என்றான். பின்னும் அந்தப் பெலிஸ்தியன், “நான் இன்று இஸ்ரயேல் படையைப் போருக்கு வரும்படி அறைகூவல் விடுக்கிறேன். ஒருவனை அனுப்புங்கள். நாங்கள் இருவரும் ஒருவரோடொருவர் சண்டையிடுவோம்” என்றான். சவுலும் இஸ்ரயேல் மக்களும் அந்த பெலிஸ்தியனின் வார்த்தைகளைக் கேட்டபோது, சோர்வுற்று திகிலடைந்தார்கள். தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த, எப்பிராத்தியனான ஈசாயின் மகனாயிருந்தான். ஈசாய் என்பவனுக்கு எட்டு மகன்களிருந்தார்கள். அவன் சவுலின் காலத்தில் முதியவனும் வயது சென்றவனுமாயிருந்தான். ஈசாயின் மூத்த மகன்கள் மூவரும் யுத்தம் செய்ய சவுலைப் பின்பற்றி சென்றிருந்தார்கள். முதல்பேறானவன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், மூன்றாவது மகன் சம்மா என்பவர்கள் ஆவர். தாவீது எல்லோரிலும் இளையவன். மூத்தவர்கள் மூன்றுபேரும் சவுலைப் பின்பற்றிப் போயிருந்தார்கள். ஆனால் தாவீது தன் தகப்பனின் செம்மறியாடுகளை மேய்ப்பதற்காக இடையிடையே சவுலிடமிருந்து பெத்லெகேமுக்குப் போவதும் வருவதுமாய் இருந்தான். அந்நாட்களில் நாற்பது நாட்களாக அந்தப் பெலிஸ்தியன், ஒவ்வொரு காலையும், மாலையும் இவ்வாறு முன்னேவந்து, அங்கு நின்று சவால் விட்டான். ஒரு நாள் ஈசாய் தன் மகன் தாவீதிடம், “இந்த எப்பா அளவு வறுத்த தானியத்தையும், இந்த பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கும் உன் சகோதரரிடம் விரைவாகப் போ. அத்துடன் இந்தப் பத்துப் பால்கட்டிகளையும் அவர்களுடைய படைத் தலைவனிடம் கொடுத்து, உன் சகோதரர் நலமாய் இருக்கிறார்களா என விசாரித்து வா. அவர்கள் சவுலுடனும், இஸ்ரயேல் மனிதர்களுடனும் சேர்ந்து ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தியரோடு யுத்தம்செய்து கொண்டிருக்கிறார்கள்” என்றான். தாவீது அதிகாலையில் எழுந்து மந்தையை ஒரு மேய்ப்பனின் பாதுகாப்பில் விட்டு, ஈசாய் தனக்கு அறிவுறுத்தியபடியே, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனான். படைகள் போர் ஒலி எழுப்பிக்கொண்டு யுத்த நிலைகளுக்கு அணிவகுத்துப் போகையில் அவன் முகாமுக்கு வந்துசேர்ந்தான். இஸ்ரயேலரும், பெலிஸ்தியரும் போருக்கு ஆயத்தமாக நேருக்குநேர் நின்றார்கள். தாவீது தான் கொண்டுவந்த பொருட்களை உணவுவிநியோக பொறுப்பாளனிடம் கொடுத்துவிட்டு, படை அணிவகுத்து நின்ற இடத்திற்கு ஓடித் தன் சகோதரரை வாழ்த்தினான். அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் அந்த பெலிஸ்திய மாவீரன் தன் அணியிலிருந்து வெளியே வந்து வலிமையான அறைகூவலைச் சொன்னான். தாவீது அதைக் கேட்டான். இஸ்ரயேலர் அனைவரும் அந்த மனிதனைக் கண்டவுடன் மிகவும் பயந்து ஓடினார்கள். அவ்வேளையில் இஸ்ரயேலர், “இந்த மனிதன் தொடர்ந்து எப்படி வெளியே வருகிறான் என்று பார்த்தீர்களா? அவன் இஸ்ரயேலருக்கு அறைகூவல் விடுக்கவே வருகிறான். இவனைக் கொல்பவனுக்கு அரசன் பெரும் செல்வத்தைக் கொடுப்பான். தன் மகளையும் திருமணம் செய்துகொடுத்து இஸ்ரயேலில் அவனுடைய தகப்பனின் குடும்பத்திற்கு வரிவிலக்கையும் கொடுப்பான்” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அதைக்கேட்ட தாவீது அருகில் நின்ற வீரரிடம், “இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலருக்கு நேரிட்ட அவமானத்தை நீக்குபவனுக்கு என்ன செய்யப்படும்? வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தியன் யார்?” என்று கேட்டான். அதற்கு அந்த வீரர்கள் அவனிடம், “அவனைக் கொல்பவனுக்கு இவ்விதமாகவே செய்யப்படும்” என்று சொல்லி, முன்பு சொன்னவற்றையே மறுபடியும் சொன்னார்கள். தாவீது அந்த வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அவனுடைய மூத்த சகோதரனான எலியாப் கேட்டபோது கோபமடைந்து, “நீ ஏன் இங்கே வந்தாய்? அந்தக் கொஞ்ச செம்மறியாடுகளை காட்டிலே யார் பொறுப்பில் விட்டுவந்தாய்? நீ எவ்வளவு இறுமாப்புடையவன் என்றும், உன் இருதயம் எவ்வளவு கொடுமையானது என்றும் நான் அறிவேன். நீ யுத்தத்தைப் பார்ப்பதற்காகவே இங்கு வந்தாய்” என்றான். அதற்கு தாவீது, “இப்பொழுது நான் என்ன செய்துவிட்டேன்? நான் பேசவும் கூடாதா?” என்று கேட்டான். பின்பு தாவீது அவனைவிட்டுச் சென்று வேறொருவனிடம் அதே கேள்வியைக் கேட்டான். முன் சொல்லப்பட்ட பதிலையே அவனும் சொன்னான். தாவீது சொன்னவற்றைக் கேட்டவர்கள் சவுலுக்கு அதை அறிவித்தார்கள். சவுல் தாவீதை அழைத்தான். அப்பொழுது தாவீது சவுலிடம், “அந்தப் பெலிஸ்தியனான கோலியாத்தைக் கண்டு ஒருவரும் கலங்கவேண்டாம். உமது அடியவனாகிய நான் போய் அவனோடு சண்டையிடுவேன்” என்றான். அதற்கு சவுல், “அந்தப் பெலிஸ்தியனுக்கு எதிராய் போய், சண்டையிட உன்னால் முடியாது. நீயோ ஒரு சிறுவன். அவனோ இளமை முதல் போர் வீரனாய் இருக்கிறான்” என்றான். அதற்கு தாவீது சவுலிடம், “உமது ஊழியன் என் தகப்பனின் செம்மறியாட்டு மந்தையை மேய்ப்பவன். ஒரு சிங்கமோ, கரடியோ வந்து மந்தையிலிலுள்ள ஒரு செம்மறியாட்டைப் பிடித்துக்கொண்டு போகும்போதெல்லாம், நான் அவற்றைப் பின்தொடர்ந்து போய் அதை அடித்து அதன் வாய்க்குள் இருந்த செம்மறியாட்டை விடுவித்திருக்கிறேன். அது என்மேல் பாய்ந்தபோதும் அதன் தாடியைப் பிடித்து அடித்துக் கொன்றிருக்கிறேன். இவ்வாறு உமது அடியவனாகிய நான் சிங்கத்தையும், கரடியையும் கொன்றிருக்கிறேன். இந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியனும் அவற்றின் ஒன்றைப்போல் எனக்கிருப்பான். ஏனெனில் அவன் வாழும் இறைவனின் படைகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறான்” என்றான். மேலும் தாவீது, “சிங்கத்தின் பிடியிலிருந்தும், கரடியின் பிடியிலிருந்தும் என்னை விடுவித்த யெகோவா, இந்தப் பெலிஸ்தியனின் கையிலிருந்தும் என்னை விடுவிப்பார்” என்றான். எனவே சவுல், “நீ போ. யெகோவா உன்னோடுகூட இருப்பாராக” என்று தாவீதுக்குச் சொன்னான். பின்பு சவுல் தன் இராணுவ சீருடைகளை தாவீதுக்கு உடுத்துவித்தான். தன் போர்கவசத்தையும், வெண்கல தலைக்கவசத்தையும் அணிவித்தான். தாவீதோ சவுலின் வாளைத் தன் யுத்த உடையின்மேல் கட்டிக்கொண்டு, ஆயுதம் தரித்துப் பழக்கமில்லாதபடியால் சுத்தி நடக்க முயன்றான். அதனால் அவன் சவுலிடம், “இவற்றுடன் என்னால் போகமுடியாது. ஏனெனில் எனக்கு இவை பழக்கமில்லை” என்று சொல்லி அவற்றைக் கழற்றினான். பின்பு தாவீது கையில் தன் மேய்ப்பனின் கோலை எடுத்துக்கொண்டு நீரோடையிலிருந்த ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து மேய்ப்பருக்குரிய பையில் போட்டு, கவணையும் கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனை அணுகினான். அப்பொழுது அந்த பெலிஸ்தியன் தாவீதை நோக்கி வந்துகொண்டிருந்தான். கேடயம் பிடிப்பவன் அவனுக்கு முன்னால் நடந்து வந்தான். அந்தப் பெலிஸ்தியன் தாவீதை நன்றாகப் பார்த்து, அவன் ஒரு சிறுவன் மட்டுமே என்றும், சிவந்த உடலுடையவனும், அழகுள்ளவனும் என்று கண்டு அவனை அலட்சியம் செய்தான். அவன் தாவீதிடம், “நீ தடிகளுடன் என்னிடம் வருவதற்கு நான் என்ன ஒரு நாயா?” என்று கேட்டுத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லித் தாவீதைச் சபித்தான். மேலும் அவன் தாவீதிடம், “என்னிடத்தில் இங்கே வா; உன் மாமிசத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும், வெளியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன்” என்றான். அதற்குத் தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நானோ, நீ எதிர்த்த இஸ்ரயேல் படைகளின் இறைவனான சேனைகளின் யெகோவாவின் பெயரிலேயே உன்னை எதிர்த்து வருகிறேன். இன்று யெகோவா உன்னை என் கையில் ஒப்படைப்பார். நான் உன்னை அடித்து வீழ்த்தி, உன் தலையை வெட்டிப்போடுவேன். இன்று பெலிஸ்திய படைகளின் பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் கொடுப்பேன். இதனால் இஸ்ரயேலில் ஒரு இறைவன் இருக்கிறாரென்பதை முழு உலகமும் அறிந்துகொள்ளும். அத்துடன், யெகோவா வாளாலும், ஈட்டியாலும் விடுவிப்பவரல்ல என்பதை இங்கு கூடியிருக்கும் கூட்டமும் அறிந்துகொள்வார்கள். இந்த யுத்தம் யெகோவாவினுடையது. எனவே உங்கள் அனைவரையும் அவர் எங்கள் கைகளில் ஒப்படைப்பார்” என்றான். அந்த பெலிஸ்தியன் அவனைத் தாக்குவதற்கு நெருங்கி வருகையில், தாவீது அவனை எதிர்கொள்ள போர்முனைக்கு விரைந்தோடினான். தாவீது தன் பைக்குள் தன் கையை விட்டு ஒரு கல்லை எடுத்து அதை கவணில் வைத்து, அதை வீசி பெலிஸ்தியனின் நெற்றியில் அடித்தான். அந்தக் கல் பெலிஸ்தியனின் நெற்றியில் பதிந்ததால், அவன் முகங்குப்புற நிலத்தில் விழுந்தான். இவ்வாறு தாவீது ஒரு கவணினாலும், ஒரு கல்லினாலும் அந்தப் பெலிஸ்தியனை வெற்றிகொண்டான். கையில் வாள் இல்லாமலே தாவீது பெலிஸ்தியனை அடித்து வீழ்த்தி அவனைக் கொன்றான். உடனே தாவீது ஓடிப்போய் பெலிஸ்தியனின் மேலாக நின்றான். பெலிஸ்தியனின் வாளை உறையிலிருந்து உருவி எடுத்து, தான் கொன்றவனின் தலையை வெட்டிப்போட்டான். தங்கள் வீரன் இறந்ததைக் கண்ட பெலிஸ்தியர் திரும்பி ஓடினார்கள். அப்பொழுது யூதா, இஸ்ரயேல் மனிதர்களும் திரண்டு ஆர்ப்பரித்து அவர்களைத் துரத்திச் சென்றார்கள். இவ்வாறு காத்தின் நுழைவாசல் வரையும், எக்ரோனின் வாசல்கள் வரையும் பெலிஸ்தியரைத் துரத்திச் சென்றார்கள். அவர்களின் இறந்தவர்களின் உடல்கள் சாராயீமின் வழியில் காத், எக்ரோன் மட்டும் பரவிக்கிடந்தன. இஸ்ரயேலர் பெலிஸ்தியரைத் துரத்திச் சென்றபின், திரும்பிவந்து அவர்களுடைய முகாம்களைக் கொள்ளையிட்டார்கள். பின்பு தாவீது பெலிஸ்தியனின் தலையை எடுத்துக்கொண்டு எருசலேமுக்கு வந்தான். ஆனால் அவனுடைய ஆயுதங்களைத் தன் சொந்த கூடாரத்தில் வைத்தான். தாவீது பெலிஸ்தியனுக்கு எதிராகப் புறப்பட்டு போகிறதை பார்த்துக்கொண்டிருந்த சவுல் தனது படைத்தலைவனான அப்னேரிடம், “இந்த வாலிபன் யாருடைய மகன்?” என்று கேட்டான். அதற்கு அப்னேர், “அரசே! நீர் வாழ்வது நிச்சயம்போல அவன் யாரென்று எனக்குத் தெரியாது” என்றான். அப்பொழுது அரசன், “அந்த வாலிபன் யாருடைய மகனென்று விசாரித்து அறிந்து வா” என்றான். தாவீது பெலிஸ்தியனைக் கொன்றபின் திரும்பி வந்தவுடனே அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்து வந்தான். தாவீதின் கையில் இன்னும் பெலிஸ்தியனின் தலை இருந்தது. சவுல் அவனிடம், “வாலிபனே, நீ யாருடைய மகன்?” என்று கேட்டான். அதற்குத் தாவீது, “நான் பெத்லெகேம் ஊரானான உமது ஊழியன் ஈசாயின் மகன்” என்றான்.

1 சாமுவேல் 17:1-58 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பெலிஸ்தர்கள் யுத்தம் செய்வதற்குத் தங்கள் இராணுவங்களைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒன்றாகக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே முகாமிட்டார்கள். சவுலும் இஸ்ரவேல் மனிதர்களும் ஒன்றாகக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு, பெலிஸ்தர்களுக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள். பெலிஸ்தர்கள் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர்கள் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது. அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து புறப்பட்டு வந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம். அவன் தன்னுடைய தலையின்மேல் வெண்கல கவசத்தைப் போட்டு, ஒரு போர்க்கவசம் அணிந்திருப்பான்; அந்தக் கவசத்தின் எடை ஐயாயிரம் சேக்கல் வெண்கலமாக இருக்கும். அவன் தன்னுடைய கால்களிலே வெண்கலக் கவசத்தையும் தன்னுடைய தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் அணிந்திருப்பான். அவனுடைய ஈட்டியின் தாங்குக்கோல் நெசவுக்காரர்களின் தறிமரத்தின் அடர்த்தியாகவும் அவன் ஈட்டியின் முனை அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்; கேடகம் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான். அவன் வந்து நின்று, இஸ்ரவேல் இராணுவங்களைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தியன் அல்லவா? நீங்கள் சவுலின் ஊழியக்காரர்கள் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்து கொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும். அவன் என்னோடே யுத்தம்செய்யவும் என்னைக் கொல்லவும் திறமையுள்ளவனாக இருந்தால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரர்களாக இருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரர்களாக இருந்து, எங்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்று சொல்லி, பின்னும் அந்தப் பெலிஸ்தியன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய இராணுவங்களுக்கு சவால் விட்டேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்செய்ய ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான். சவுலும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள். தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானான ஈசாய் என்னும் பெயருள்ள எப்பிராத்திய மனிதனுடைய மகனாக இருந்தான்; ஈசாய்க்கு எட்டு மகன்கள் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற மக்களுக்குள்ளே வயது முதிர்ந்த கிழவனாக மதிக்கப்பட்டான். ஈசாயினுடைய மூன்று மூத்த மகன்கள் சவுலோடு யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று மகன்களில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாம் மகனுக்கு அபினதாப் என்றும், மூன்றாம் மகனுக்கு சம்மா என்றும் பெயர். தாவீது எல்லோருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடுப் போயிருந்தார்கள். தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப்போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். அந்தப் பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் 40 நாட்கள் வந்துவந்து நிற்பான். ஈசாய் தன்னுடைய மகனான தாவீதை பார்த்து: உன்னுடைய சகோதரர்களுக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, முகாமிலிருக்கிற உன்னுடைய சகோதரர்களிடத்தில் ஓட்டமாகப் போய், இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர்கள் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான். அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர்கள் எல்லோரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தர்களோடு யுத்தம்செய்துக்கொண்டிருந்தார்கள். தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளியிடம் ஒப்படைத்துவிட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; இராணுவங்கள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள். இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்களும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, பொருட்களை காக்கிறவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, இராணுவங்களுக்குள் ஓடி, தன் சகோதரர்களைப்பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான். அவன் இவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்திய வீரன் பெலிஸ்தர்களின் இராணுவங்களிலிருந்து எழும்பிவந்து நின்று, முன்பு சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான். இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்த மனிதனைப் பார்க்கும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்திற்கு விலகி ஓடிப்போவார்கள். அந்தநேரத்தில் இஸ்ரவேலர்கள்: வந்து நிற்கிற அந்த மனிதனைப் பார்த்தீர்களா?, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்கிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய மகளைத் தந்து, அவனுடைய தகப்பன் வீட்டாரை இஸ்ரவேலிலே வரியில்லாமல் வாழச் செய்வார் என்றார்கள். அப்பொழுது தாவீது தன்னுடன் நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்திப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தியன் எம்மாத்திரம் என்றான். அதற்கு மக்கள்: அவனைக் கொல்கிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள். அந்த மனிதர்களோடு அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபம் கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யாரிடம் ஒப்படைத்தாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் பெருமையையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு காரணம் இல்லையா என்று சொல்லி, அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்படியே கேட்டான்; மக்கள் முன்போலவே பதில் சொன்னார்கள். தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலினிடம் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைத்தான். தாவீது சவுலை பார்த்து: இவனால் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்செய்வேன் என்றான். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்செய்ய உன்னால் முடியாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான். தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு முறை ஒரு சிங்கமும் ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைப் பின்தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடையைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய இராணுவங்களை நிந்தித்தானே என்றான். பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த யெகோவா இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, யெகோவா உன்னுடன் இருப்பாராக என்றான். சவுல் தாவீதுக்குத் தன் உடைகளை அணிவித்து வெண்கலமான ஒரு கவசத்தை அவனுடைய தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் அணிவித்தான். அவனுடைய பட்டயத்தை தாவீது தன் உடைகளின்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகமுடியாது; இந்த பழக்கம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு, தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பர்களுக்குரிய தன்னுடைய பையிலே போட்டு, தன்னுடைய கவணைத் தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனின் அருகில் போனான். பெலிஸ்தனும் நடந்து, தாவீதின் அருகில் வந்தான்; கேடகத்தை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான். பெலிஸ்தியன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் அழகுமான சிவந்த மேனியுள்ளவனுமாக இருந்தபடியால், அவனை இழிவாகக் கருதினான். பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன்னுடைய தெய்வங்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான். பின்னும் அந்தப் பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன்னுடைய மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான். அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் யெகோவா உன்னை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன்னுடைய தலையை உன்னை விட்டு எடுத்து, பெலிஸ்தர்களுடைய முகாமின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொள்ளுவார்கள். யெகோவா பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த மக்கள்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் யெகோவாவுடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். அப்பொழுது அந்தப் பெலிஸ்தியன் எழும்பி, தாவீதுக்கு எதிராக நெருங்கி வரும்போது, தாவீது விரைவாக அந்த இராணுவத்திற்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி, தன்னுடைய கையை பையிலே விட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான். இப்படியாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனைத் தோற்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லை. எனவே, தாவீது பெலிஸ்தியனின் அருகே ஓடி அவன்மேல் நின்று, அவனுடைய பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக்கொன்று அதினாலே அவனுடைய தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர்கள் கண்டு, ஓடிப்போனார்கள். அப்பொழுது இஸ்ரவேலர்களும் யூதா மனிதர்களும் எழுந்து, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைவரை, எக்ரோனின் வாசல்கள்வரை, பெலிஸ்தர்களைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணம் வரை, எக்ரோன் பட்டணம் வரை, பெலிஸ்தர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். இஸ்ரவேல் மக்கள் பெலிஸ்தர்களை துரத்தின பின்பு, திரும்பி வந்து, அவர்களுடைய முகாம்களைக் கொள்ளையிட்டார்கள். தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன்னுடைய கூடாரத்திலே வைத்தான். தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போகிறதை சவுல் கண்டபோது, அவன் சேனாதிபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளை யாருடைய மகன் என்று கேள் என்றான். தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பும்போது, அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவனுடைய கையில் இருந்தது. அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாக இருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.

1 சாமுவேல் 17:1-58 பரிசுத்த பைபிள் (TAERV)

பெலிஸ்தர் போரிடும் பொருட்டு படையாட்களைக் கூட்டினார்கள். அவர்கள் யூதாவிலுள்ள சோக்கோவில் கூடினார்கள். அவர்கள் கூடிய எபேஸ்தம்மீம் எனும் இடம் சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் இடையில் இருந்தது. சவுலும், இஸ்ரவேல் வீரர்களும் ஒன்று கூடினார்கள். இவர்களின் முகாம் ஏலாவிலிருந்தது. வீரர்கள் சண்டையிடத் தயாராக இருந்தனர். பெலிஸ்தியர் மலையின் மேல் இருந்தனர். அடுத்த மலையில் இஸ்ரவேலர் இருந்தனர். இடையில் பள்ளத்தாக்கு இருந்தது. பெலிஸ்தியரிடம் கோலியாத் என்னும் வீரன் இருந்தான். அவன் காத் என்னும் ஊரினன். 9 அடி உயரமாக இருந்தான். ஒரு வெண்கல கிரீடமும், போர்க் கவசமும் தரித்திருந்தான். அது 5,000 சேக்கல் வெண்கலம் எடையுள்ளதாயிருந்தது. அவன் கால்களில் வெண்கல கவசத்தையும், தோள்களில் வெண்கல கேடகத்தையும் அணிந்திருந்தான். அவனது ஈட்டியின் பிடி நெசவுக்காரரின் படைமரம் போல் இருக்கும். ஈட்டியின் அலகு 600 சேக்கல் இரும்பு எடையுள்ளதாக இருந்தது. கோலியாத்தின் கேடயம் சுமந்த வீரன், அவனுக்கு முன்னால் நடப்பான். தினந்தோறும் அவன் வெளியே வந்து இஸ்ரவேலரைப் பார்த்து, சத்தமாக சண்டைக்கு சவால்விடுவான். அவன், “உங்களுடைய எல்லா வீரர்களும் போருக்குத் தயாராக ஏன் அணிவகுத்து நிற்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் சவுலின் வேலைக்காரர்கள். நான் பெலிஸ்தன். யாரேனும் ஒருவனைத் தேர்தெடுத்து என்னோடு சண்டையிட அனுப்புங்கள். அவன் என்னைக் கொன்றுவிட்டால் நாங்கள் (பெலிஸ்தர்) அனைவரும் உங்களது அடிமை. நான் அவனைக் கொன்றுவிட்டால் நீங்கள் எங்கள் அடிமை! நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வேண்டும்” என்றான். மேலும் அவன், “நான் இன்று இஸ்ரவேல் சேனையை கேலிச்செய்தேன்! உங்களில் ஒருவனுக்குத் தைரியமிருந்தால் என்னிடம் அனுப்பி சண்டையிட்டுப் பாருங்கள்!” என்றான். சவுலும் அவனது வீரர்களும் கோலியாத் சொன்னதைக் கேட்டு மிகவும் நடுங்கினார்கள். தாவீது ஈசாயின் குமாரன், யூதாவிலுள்ள பெத்லேகேமில் எப்பிராத்தா குடும்பத்தைச் சேர்ந்தவன். ஈசாயிக்கு 8 குமாரர்கள். சவுலின் காலத்தில் ஈசாய் முதிர் வயதாக இருந்தான். ஈசாயின் 3 பெரிய குமாரர்கள் சவுலுடன் போருக்குச் சென்றிருந்தனர். எலியாப் முதல் குமாரன். அபினதாப் இரண்டாவது குமாரன். சம்மா மூன்றவாது குமாரன். தாவீது கடைசி குமாரன். பெரிய மூன்று குமாரர்களும் சவுலின் படையில் இருந்தனர். தாவீது சவுலை விட்டு விலகி அவ்வப்போது பெத்லேகேமில் தன் தந்தையின் ஆடுகளைக் மேய்க்கப் போவான். கோலியாத் தினமும் காலையில் வந்து இவ்வாறு 40 நாட்கள் இஸ்ரவேல் சேனையைக் கேலிச் செய்தான். ஒருநாள் ஈசாய் தாவீதிடம், “கூடையில் வறுத்த பயிரையும், 10 அப்பங்களையும் கொண்டு போய் முகாமில் உள்ள உன் சகோதரர்களுக்கு கொடு. இந்த 10 பாலாடைக் கட்டிகளையும் உன் சகோதரர் குழுவின் 1,000 வீரருக்கு அதிபதியினிடம் கொடு. உன் சகோதரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் பார். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ஏதேனும் வாங்கி வா! ஏலா பள்ளத்தாக்கில் உன் சகோதரர்கள் சவுலின் சேனையில் பெலிஸ்தருக்கு எதிராகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்” என்றான். அதிகாலையில் தாவீது வேறு ஒரு மேய்ப்பவனிடம் ஆடுகளை ஒப்படைத்தான். தாவீது உணவை எடுத்துக்கொண்டு ஈசாய் சொன்னபடி புறப்பட்டான். தாவீது தனது வண்டியை முகாமுக்குச் செலுத்தினான். தாவீது வந்து சேர்ந்தபோது வீரர்கள் தங்கள் போர்புரியும் நிலைக்குச் சென்று கொண்டிருந்தனர். வீரர்கள் தங்கள் போர் முழக்கங்களை எழுப்ப துவங்கினார்கள். இஸ்ரவேலரும் பெலிஸ்தியரும் அணிவகுத்து போருக்குத் தயாரானார்கள். தாவீது தான் கொண்டு போனதை, பொருட்களின் காப்பாளனிடம் கொடுத்தான். பின் இஸ்ரவேல் வீரர்களின் அணிக்கு ஓடி, தன் சகோதரர்களைக் குறித்து விசாரித்தான். தன் சகோதரர்களோடு பேச ஆரம்பித்தான். அப்போது, கோலியாத் பெலிஸ்தர் முகாமிலிருந்து வெளியே வந்து, வழக்கம்போல கேலிச் செய்தான். அவன் சொன்னதையெல்லாம் தாவீது கேட்டான். அவனைக் கண்டு இஸ்ரவேலர் பயந்து ஓடிப்போனார்கள். அவர்களுக்கு அவன் மீது பெரிய பயமிருந்தது. இஸ்ரவேலர், “கோலியாத் வெளியில் வந்து இஸ்ரவேலரை மீண்டும், மீண்டும் கேலிக்குள்ளாக்கினதைப் பார்த்தீர்களா! அவனை யார் கொன்றாலும் சவுல் ராஜா அவனுக்கு நிறையப் பணம் கொடுத்து, தனது குமாரத்தியை அவனுக்கு மணம் செய்து கொடுப்பான். சவுல் அவனது குடும்பத்திற்கு இஸ்ரவேலின் மத்தியில் சுதந்திரம் அளிப்பான்” என்றார்கள். தாவீதோ அவர்களிடம், “அவன் என்ன சொல்லுவது? அவனைக் கொன்று இஸ்ரவேலில் இருந்து அவமானத்தை களைபவனுக்கு விருது என்ன வேண்டிக்கிடக்கிறது? இஸ்ரவேலர் இந்த நிந்தையைச் சுமக்க வேண்டுமா? இத்தனைக்கும் யார் இந்த கோலியாத்? இவன் யாரோ அந்நியன் சாதாரண பெலிஸ்தியன். ஜீவனுள்ள தேவனுடைய சேனைக்கு எதிராகப் பேச அவன் எப்படி நினைக்கலாம்?” என்று கேட்டான். அதற்கு இஸ்ரவேலன், கோலியாத்தைக் கொன்றால் கிடைக்கும் மேன்மையைப் பற்றி சொன்னான். தாவீதின் மூத்த அண்ணனான எலியாப் தனது தம்பி, வீரர்களிடம் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, “இங்கு ஏன் வந்தாய்? ஆடுகளைக் காட்டில் யாரிடம் விட்டு வந்தாய்? நீ எதற்காக இங்கு வந்தாய் என்று எனக்குத் தெரியும்! உனக்கு சொல்லப்பட்டதைச் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. யுத்தத்தை வேடிக்கை பார்க்கவே நீ இங்கு வந்தாய்!” என்றான். அதற்கு தாவீது, “நான் இப்போது என்ன செய்துவிட்டேன்? நான் ஒரு தவறும் செய்யவில்லை! வெறுமனே பேசிக்கொண்டிருந்தேன்” என்றான். தாவீது வேறு சிலரிடம் அதே கேள்விகளைத் திரும்ப கேட்டான். அவர்களும் அதே பதில் சொன்னார்கள். தாவீது சொல்வதைச் சிலர் கேட்டு அவனைச் சவுலிடம் அழைத்துச் சென்றார்கள். தாவீது சவுலிடம், “கோலியாத்துக்காக யாரும் நடுங்க வேண்டாம். நான் உங்கள் சேவகன். நான் போய் அவனோடு போரிடுகிறேன்!” என்றான். “உன்னால் வெளியே போய் அந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்துடன் சண்டைபோட முடியாது. நீ ஒரு படைவீரன் அல்ல! அவனோ சிறுவயது முதல் போரிட்டு வருகிறான்” என்றான். ஆனால் தாவீது சவுலிடம், “நான் ஒரு இடையன், ஆடுகளை மேய்த்து வருபவன். இரு தடவை ஒரு சிங்கமும், மற்றொரு தடவை கரடியும் ஆடுகளைத் தூக்கியபோது, அவற்றைக் கொன்று அவற்றின் வாயிலிருந்து ஆட்டை மீட்டேன். அவை என் மேல் பாய்ந்தன. எனினும் அவற்றின் வாயின் அடிப்பகுதியைப் பிடித்து கிழித்துக் கொன்றேன். சிங்கத்தையும் கரடியையும் கொன்ற என்னால், இந்த அந்நியனையும் விலங்குகளைப்போல் கொல்லமுடியும்! அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனையைக் கேலி செய்ததால் அவன் கொல்லப்படுவான். கர்த்தர் என்னை சிங்கம் மற்றும் கரடியிடமிருந்து காப்பாற்றியது போலவே பெலிஸ்தனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவார்” என்றான். சவுல் தாவீதிடம், “கர்த்தர் உன்னோடு இருப்பாராக, நீ போ” என்றான். சவுல் தன் சொந்த ஆடையை தாவீதுக்கு அணிவித்தான். தலையில் வெண்கல தலைச் சீராவை, பிற யுத்த சீருடையும் போடுவித்தான். தாவீது வாளை எடுத்துக்கட்டிக் கொண்டு நடந்து பார்த்தான். சவுலின் சீருடையை அணிந்து பார்த்தான். ஆனால் அவ்வளவு பாரமான யுத்த சீருடை அணிந்து கொள்ளும் பயிற்சி அவனுக்கு இருக்கவில்லை. தாவீது சவுலிடம், “இவற்றை அணிந்து என்னால் சண்டை போட முடியாது. அணிந்து பழக்கமில்லை” என்றான். எனவே தாவீது எல்லாவற்றையும் கழற்றினான். தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு 5 கூழங்கற்கள் கிடைக்குமா என்று பார்க்கச் சென்றான். தேடியெடுத்த 5 கூழாங்கற்களையும் தான் வைத்திருந்த இடையர் தோல் பையில் போட்டுக் கொண்டான். கையில் வில் கவணை வைத்துக்கொண்டான். பிறகு கோலியாத்தை நோக்கி நடந்தான். கோலியாத் மெதுவாக நடந்து தாவீதை நெருங்கினான். கேடயத்தை ஏந்திய உதவியாள் முன்னே நடந்தான். கோலியாத் தாவீதைப் பார்த்து, அவன் யுத்த பயிற்சி இல்லாத சிவந்த முகத்தையுடைய இளைஞன் என்று கண்டு நகைத்தான். “ஏன் இந்த கைத்தடி? ஒரு நாயை விரட்டுவது போல் நீ என்னை விரட்டப் போகிறாயா?” என்று கோலியாத் கேட்டான். அதற்கு பின் கோலியாத் தன் தெய்வங்களின் பெயரைச் சொல்லி தாவீதை நிந்தித்தான். கோலியாத் தாவீதிடம் “இங்கே வா, உனது உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுகிறேன்!” என்றான். தாவீது அவனிடம், “நீ உனது பட்டயம், ஈட்டியைப் பிடித்துகொண்டு வந்துள்ளாய். நானோ இஸ்ரவேல் சேனைகளின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் வந்துள்ளேன். அவரைத் தூஷித்து நீ நிந்தித்தாய். இன்று உன்னைத் தோற்கடிக்க கர்த்தர் எனக்கு உதவுவார். இன்று உன் தலையை வெட்டி உன் உடலை பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் இரையாக்குவேன். மற்ற பெலிஸ்தரையும் இவ்வாறே செய்வோம்! அப்போது இஸ்ரவேலில் தேவன் ஒருவர் இருக்கிறார் என்று உலகம் அறிந்துக்கொள்ளும்! ஜனங்களை மீட்கும்படி கர்த்தருக்குப் பட்டயமும் ஈட்டியும் தேவையில்லை என்பதை இங்குள்ளவர்களும் அறிவார்கள். யுத்தம் கர்த்தருடையது! பெலிஸ்தியர்களாகிய உங்களெல்லாரையும் வெல்ல கர்த்தர் உதவுவார்” என்றான். கோலியாத் தாவீதை தாக்கும்படி சீறி எழுந்து நெருங்கி வந்தான். தாவீதும் நெருங்கி ஓடி, தனது தோல் பையிலிருந்து கூழாங்கல்லை எடுத்து கவணில் வைத்து சுழற்றி வீசினான். அது கோலியாத்தின் நெற்றியில் இரு கண்களுக்கும் நடுவில்பட்டது. அவன் நெற்றிக்குள் அது புகவே அவன் முகங்குப்புற விழுந்தான். இவ்வாறு தாவீது கோலியாத்தை ஒரே கவண் கல்லால் சாகடித்தான். தாவீதிடம் பட்டயம் இருக்கவில்லை. அதனால் ஓடிப்போய் அந்த பெலிஸ்தியன் அருகில் நின்று, கோலியாத்தின் பட்டயத்தை அவனது உறையில் இருந்து உருவி அதைக் கொண்டே அவனது தலையை சீவினான். இவ்விதமாகத்தான் தாவீது பெலிஸ்தியனான கோலியாத்தை கொன்றான். மற்ற பெலிஸ்தியர் தங்களது மாவீரன் மரித்ததைப் பார்த்து பின்வாங்கி ஓடினார்கள். இஸ்ரவேல் வீரர் அவர்களைத் துரத்தி, காத் மற்றும் எக்ரோன் எல்லைவரை விரட்டினார்கள். சாராயீமின் சாலையோரங்களில் காத் மற்றும் எக்ரோன்வரை பலரைக் கொன்று குவித்தனர். பின்னர் பெலிஸ்தியரின் முகாமிற்குள் சென்று பொருட்களை எடுத்து வந்தனர். தாவீது கோவியாத்தின் தலையை எருசலேமிற்கு எடுத்துச் சென்றான். கோலியாத்தின் ஆயுதங்களை தன் சொந்த கூடாரத்தில் வைத்தான். தாவீது சண்டைக்குப் போவதைப் பார்த்தான். சவுல் தன் தளபதியான அப்னேரிடம், “இவனது தந்தை யார்?” எனக் கேட்டான். அப்னேரும், “எனக்குத் தெரியாது ஐயா” என்றான். சவுலோ, “இவனது தந்தையைப்பற்றி தெரிந்து வா” என்றான். தாவீது கோலியாத்தைக் கொன்றுவிட்டு திரும்பும்போது அப்னேர் அவனைச் சவுலிடம் அழைத்து வந்தான். தாவீது இன்னும் கோலியாத்தின் தலையைப் பிடித்துக் கொண்டிருந்தான். சவுல் அவனிடம், “உன் தந்தை யார்?” எனக் கேட்டான். அதற்கு தாவீது, “நான் உங்கள் வேலைக்காரனான, பெத்லேகேமில் உள்ள ஈசாயின் குமாரன்” என்றான்.

1 சாமுவேல் 17:1-58 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பெலிஸ்தர் யுத்தம் பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள். சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள். பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது. அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டு வந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம். அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும். அவன் தன் கால்களிலே வெண்கலக்கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான். அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறு சேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான். அவன் வந்து நின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்து கொள்ளுங்கள், அவன் என்னிடத்தில் வரட்டும். அவன் என்னோடே யுத்தம்பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து, எங்களைச் சேவிக்கவேண்டும் என்று சொல்லி, பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான். சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள். தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக் குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயது சென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான். ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர். தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்று பேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள். தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பது நாள் வந்துவந்து நிற்பான். ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய், இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான். அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள். இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான். அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்த பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான். இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள். அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள். அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான். அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள். அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி, அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள். தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான். தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான். தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு விசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன். அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான். பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான். சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான். அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்து பார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு, தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான். பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்குக் கிட்டி வந்தான்; பரிசையைப் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான். பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டைபண்ணினான். பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான். பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான். அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டி வருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி, தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான். இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்று போட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது. ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக்கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள். அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத் பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய்த் துரத்தின பிற்பாடு, திரும்பி வந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள். தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான். தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான். தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது. அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்