1 சாமுவேல் 16:8-13

1 சாமுவேல் 16:8-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான். ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான். இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி; உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான். ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

1 சாமுவேல் 16:8-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்துச் சாமுயேலுக்கு முன்னால் போகச்செய்தான். சாமுயேலோ, “யெகோவா இவனைத் தெரிந்துகொள்ளவில்லை” என்றான். அப்பொழுது ஈசாய் சம்மாவைச் சாமுயேல் முன்னால் போகும்படி செய்தான். “இவனையும் யெகோவா தெரிந்துகொள்ளவில்லை” என்று சாமுயேல் சொன்னான். இவ்வாறு ஈசாய் தன் ஏழு மகன்களையும் சாமுயேல் முன் கொண்டுவந்தான். ஆனால், “இவர்களை யெகோவா தெரிந்துகொள்ளவில்லை” என்று சாமுயேல் சொன்னான். மேலும் சாமுயேல் ஈசாயிடம், “உன்னுடைய மகன்கள் இவர்கள் மட்டும்தானா?” என்று கேட்டான். அதற்கு அவன், “இன்னும் எல்லோருக்கும் இளையமகன் ஒருவன் இருக்கிறான். அவன் இப்பொழுது செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்றான். அப்பொழுது சாமுயேல் ஈசாயிடம், “அவனை அழைத்துவர ஆளனுப்பு. அவன் இங்கு வருமட்டும் நாம் பந்தியிருக்க மாட்டோம்” என்றான். எனவே ஈசாய் ஆளனுப்பி அவனை வரவழைத்தான். அவன் சிவந்த உடலும், அழகிய முகமும், வசீகரத் தோற்றமும் உடையவனாயிருந்தான். அப்பொழுது யெகோவா சாமுயேலிடம், “நான் சொன்னவன் இவன்தான். நீ எழுந்து இவனை அபிஷேகம் செய்” என்றார். உடனே சாமுயேல் எண்ணெய்க் கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனை அபிஷேகம் பண்ணினான். அந்த நாள் தொடக்கம் யெகோவாவின் ஆவியானவர் தாவீதின்மேல் வல்லமையுடன் இறங்கியிருந்தார். அதன்பின் சாமுயேல் எழுந்து ராமாவுக்கு திரும்பிப்போனான்.

1 சாமுவேல் 16:8-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; அவன்: இவனையும் யெகோவா தெரிந்து கொள்ளவில்லை என்றான். ஈசாய் சம்மாவையும் கடந்துபோகச்செய்தான்; அவன்: இவனையும் யெகோவா தெரிந்துகொள்ளவில்லை என்றான். இப்படி ஈசாய் தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: யெகோவா இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி; உன்னுடைய பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லோருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயைப் பார்த்து: ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; அவன் இங்கே வரும்வரை நான் சாப்பிடாமல் இருப்பேன் என்றான். ஆள் அனுப்பி அவனை வரவழைத்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல அழகுள்ளவனாக இருந்தான்; அப்பொழுது யெகோவா இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்செய் என்றார். அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர்கள் நடுவிலே அபிஷேகம்செய்தான்; அந்த நாள் முதற்கொண்டு, யெகோவாவுடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

1 சாமுவேல் 16:8-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு ஈசாய் இரண்டாவது குமாரனான, அபினதாபை அழைத்தான். அவன் சாமுவேலினருகில் நடந்து வந்தபோது சாமுவேல் பார்த்து, “இல்லை, கர்த்தர் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை” எனக் கூறினான். பிறகு ஈசாய் இன்னொரு குமாரனான சம்மாவை அழைத்தான். அவனைப் பார்த்து, “கர்த்தர் இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான். ஈசாய் 7 குமாரர்களையும் காட்டினான். சாமுவேல் ஈசாயிடம், “இவர்களில் யாரையும் கர்த்தர் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான். சாமுவேல், “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” எனக் கேட்டான். அதற்கு ஈசாய், “இல்லை கடைசி குமாரன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்” என்றான். சாமுவேலோ, “அவனை அழைத்து வா, அவன் வரும்வரை நாம் சாப்பிடக்கூடாது” என்றான். ஈசாய் ஒருவனை அனுப்பி தன் இளைய குமாரனை அழைப்பித்தான். இந்த குமாரன் அழகாய் சிவந்த மயிரோடு நல்ல சொளந்தரிய தோற்றமுடையவனாக இருந்தான். கர்த்தர் சாமுவேலிடம், “எழுந்து அவனை அபிஷேகம் செய், இவன்தான்” என்றார். சாமுவேல் எண்ணெய் நிரம்பிய கொம்பை எடுத்து சிறப்பு எண்ணெயை ஈசாயின் கடைசி குமாரன் மேல் அவனுடைய சகோதரரின் முன்னிலையில் ஊற்றினான். கர்த்தருடைய ஆவியானவர் அன்று முதல் தாவீது மீது பெரும் வல்லமையோடு வந்தார். சாமுவேல் ராமாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினான்.