1 சாமுவேல் 16:1-23

1 சாமுவேல் 16:1-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா சாமுயேலிடம், “இஸ்ரயேலர்மேல் அரசனாயிராதபடி நான் புறக்கணித்த சவுலுக்காக நீ எவ்வளவு காலம் துக்கப்படுவாய். கொம்பில் எண்ணெய் நிரப்பிக்கொண்டு புறப்பட்டு வா. நான் உன்னைப் பெத்லெகேமியனான ஈசாயிடம் அனுப்பப்போகிறேன். அவனுடைய மகன்களில் ஒருவனை அரசனாக நான் தெரிவுசெய்திருக்கிறேன்” என்றார். அதற்கு சாமுயேல், “நான் எப்படிப்போவேன்? சவுல் இதைக் கேள்விப்பட்டால் என்னைக் கொன்றுவிடுவானே?” என்றான். அதற்கு யெகோவா, “நான் யெகோவாவுக்குப் பலியிட வந்தேன் என்று சொல்லி இளம்பசுவை ஒன்றை உன்னுடன் கொண்டுபோ. அவ்வாறு பலி செலுத்தும்போது நீ ஈசாவுக்கு அழைப்பு கொடு. அப்பொழுது நீ செய்யவேண்டியதை உனக்கு நான் காண்பிப்பேன். நான் குறிப்பிடுபவனை நீ அபிஷேகம் செய்யவேண்டும்” என்றார். யெகோவா சொன்னபடியே சாமுயேல் செய்தான். பின்பு சாமுயேல் பெத்லெகேமுக்கு வந்தபோது அப்பட்டணத்தின் முதியவர்கள் நடுக்கத்துடன் அவனைச் சந்திக்க வந்தார்கள். “நீர் சமாதானத்துடன் தான் வருகிறீரா?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்குச் சாமுயேல், “ஆம் சமாதானத்துடன் தான் வந்திருக்கிறேன். நான் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்திருக்கிறேன். நீங்களும் உங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு என்னுடன் பலிசெலுத்த வாருங்கள்” என்றான். பின்பு ஈசாயையும் அவன் மகன்களையும் பரிசுத்தப்படுத்தி அவர்களையும் பலிக்கு அழைத்தான். அவர்கள் அங்கே வந்தபோது, சாமுயேல் எலியாபைக் கண்டவுடன், “உண்மையாகவே யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவன் என்முன் நிற்கிறான்” என நினைத்தான். ஆனால் யெகோவா சாமுயேலிடம், “இவனுடைய தோற்றத்தையும், உயரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டாம். நான் இவனைப் புறக்கணித்து விட்டேன். ஏனெனில் மனிதர் பார்ப்பதைப் போல் யெகோவா பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்ப்பான். யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்று சொன்னார். அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்துச் சாமுயேலுக்கு முன்னால் போகச்செய்தான். சாமுயேலோ, “யெகோவா இவனைத் தெரிந்துகொள்ளவில்லை” என்றான். அப்பொழுது ஈசாய் சம்மாவைச் சாமுயேல் முன்னால் போகும்படி செய்தான். “இவனையும் யெகோவா தெரிந்துகொள்ளவில்லை” என்று சாமுயேல் சொன்னான். இவ்வாறு ஈசாய் தன் ஏழு மகன்களையும் சாமுயேல் முன் கொண்டுவந்தான். ஆனால், “இவர்களை யெகோவா தெரிந்துகொள்ளவில்லை” என்று சாமுயேல் சொன்னான். மேலும் சாமுயேல் ஈசாயிடம், “உன்னுடைய மகன்கள் இவர்கள் மட்டும்தானா?” என்று கேட்டான். அதற்கு அவன், “இன்னும் எல்லோருக்கும் இளையமகன் ஒருவன் இருக்கிறான். அவன் இப்பொழுது செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்றான். அப்பொழுது சாமுயேல் ஈசாயிடம், “அவனை அழைத்துவர ஆளனுப்பு. அவன் இங்கு வருமட்டும் நாம் பந்தியிருக்க மாட்டோம்” என்றான். எனவே ஈசாய் ஆளனுப்பி அவனை வரவழைத்தான். அவன் சிவந்த உடலும், அழகிய முகமும், வசீகரத் தோற்றமும் உடையவனாயிருந்தான். அப்பொழுது யெகோவா சாமுயேலிடம், “நான் சொன்னவன் இவன்தான். நீ எழுந்து இவனை அபிஷேகம் செய்” என்றார். உடனே சாமுயேல் எண்ணெய்க் கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனை அபிஷேகம் பண்ணினான். அந்த நாள் தொடக்கம் யெகோவாவின் ஆவியானவர் தாவீதின்மேல் வல்லமையுடன் இறங்கியிருந்தார். அதன்பின் சாமுயேல் எழுந்து ராமாவுக்கு திரும்பிப்போனான். யெகோவாவின் ஆவியானவர் சவுலை விட்டு நீங்கிப்போனார். யெகோவாவினால் அனுப்பப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனை வதைத்தது. சவுலின் ஏவலாட்கள் அவனிடம், “இறைவன் அனுப்பிய ஒரு பொல்லாத ஆவி உம்மைத் துன்பப்படுத்துகிறது. யாழ் வாசிக்கக்கூடிய ஒருவனைத் தேடிக் கொண்டுவரும்படி உமது வேலையாட்களிடம் ஆண்டவன் கட்டளையிடட்டும். இறைவனால் அனுப்பப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் வரும்போது அவன் தன் கையால் யாழை வாசித்தால் நீர் சுகமடையலாம்” என்று சொன்னார்கள். சவுல் தன் வேலையாட்களிடம், “நீங்கள் போய் நன்றாய் யாழ் வாசிக்கும் ஒருவனைத் தேடி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். அப்பொழுது வேலையாட்களில் ஒருவன், “பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை நான் கண்டிருக்கிறேன். அவன் யாழ் வாசிப்பதில் சிறந்தவன். அவன் வலிமைமிக்க போர்வீரன்; பேச்சில் சமர்த்தன். வசீகர தோற்றமுடையவன். யெகோவா அவனோடுகூட இருக்கிறார்” என்றான். எனவே சவுல் ஈசாயிடம் தூதுவரை அனுப்பி, “செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பு” என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது ஈசாய் அப்பங்களையும், ஒரு தோற்குடுவையில் திராட்சை இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், ஒரு கழுதையின்மேல் ஏற்றி தாவீதின் மூலமாய்ச் சவுலுக்கு அனுப்பினான். அவ்வாறே தாவீது சவுலிடம் வந்து அவனுடைய வேலையில் சேர்ந்தான். சவுல் அவனை அதிகம் விரும்பினான். தாவீது அவனுடைய ஆயுதம் சுமப்பவர்களில் ஒருவனானான். சவுல் ஈசாயிடம் ஆளனுப்பி, “தாவீதை நான் விரும்புகிறேன். அதனால் அவன் என் பணியில் இருக்கும்படி அவனை அனுமதி” என்று சொல்லி அனுப்பினான். அதன்பின் இறைவனால் அனுப்பப்படும் பொல்லாத ஆவி சவுலின்மேல் வரும்போதெல்லாம் தாவீது தன் யாழை வாசிப்பான். அப்போது சவுலுக்கு விடுதலை கிடைக்கும். அவன் சுகமடைவான். அந்த பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்கிவிடும்.

1 சாமுவேல் 16:1-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா சாமுவேலைப் பார்த்து: இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எதுவரை துக்கப்பட்டுக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்திற்கு உன்னை அனுப்புவேன்; அவனுடைய மகன்களில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது யெகோவா: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், யெகோவாவுக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி, ஈசாயைப் பலிவிருந்திற்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்கிறவனை எனக்காக அபிஷேகம்செய்வாயாக என்றார். யெகோவா சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அந்த ஊரின் மூப்பர்கள் நடுக்கத்தோடு அவனுக்கு எதிராக வந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். அதற்கு அவன்: சமாதானம் தான்; யெகோவாவுக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டு, என்னோடு பலிவிருந்திற்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தம்செய்து, அவர்களைப் பலிவிருந்திற்கு அழைத்தான். அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: யெகோவாவால் அபிஷேகம் செய்யப்படுபவன் இவன்தானோ என்றான். யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; அவன்: இவனையும் யெகோவா தெரிந்து கொள்ளவில்லை என்றான். ஈசாய் சம்மாவையும் கடந்துபோகச்செய்தான்; அவன்: இவனையும் யெகோவா தெரிந்துகொள்ளவில்லை என்றான். இப்படி ஈசாய் தன்னுடைய மகன்களில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: யெகோவா இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி; உன்னுடைய பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லோருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயைப் பார்த்து: ஆள் அனுப்பி அவனை அழைத்து வா; அவன் இங்கே வரும்வரை நான் சாப்பிடாமல் இருப்பேன் என்றான். ஆள் அனுப்பி அவனை வரவழைத்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல அழகுள்ளவனாக இருந்தான்; அப்பொழுது யெகோவா இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்செய் என்றார். அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர்கள் நடுவிலே அபிஷேகம்செய்தான்; அந்த நாள் முதற்கொண்டு, யெகோவாவுடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான். யெகோவாவுடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு தீய ஆவி அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அப்பொழுது சவுலின் ஊழியக்காரர்கள் அவனை பார்த்து: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு தீய ஆவி உம்மை அலைக்கழிக்கிறதே. சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட தீய ஆவி உம்மேல் இறங்கும்போது, அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சுகமுண்டாகும் என்றார்கள். சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: நன்றாக வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பதிலாக: இதோ, பெத்லெகேமியனான ஈசாயின் மகன் ஒருவனை பார்த்திருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பலசாலி, யுத்தவீரன், பேச்சு திறமை உள்ளவன், அழகானவன்; யெகோவா அவனோடு இருக்கிறார் என்றான். அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் மகனான தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் மகனான தாவீதின் மூலமாக சவுலுக்கு அனுப்பினான். அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் நேசித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான். சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என்னுடைய கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான். அப்படியே தேவனால் விடப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன்னுடைய கையினால் வாசிப்பான்; அதினாலே தீய ஆவி சவுலை விட்டு நீங்கி, ஆறுதலடைந்து, சுகமடைவான்.

1 சாமுவேல் 16:1-23 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் சாமுவேலிடம், “நீ எவ்வளவு காலம் சவுலுக்காக வருந்துவாய்? நான் ராஜ பதவியிலிருந்து புறக்கணித்த பின்னும் வருந்துகிறாயே. உனது கொம்பை எண்ணெயால் நிரப்பு. பெத்லேகேமிற்குச் செல். உன்னை ஈசாயினிடம் அனுப்புகிறேன். அவன் அங்கே இருக்கிறான். அவனது குமாரர்களில் ஒருவனையே புதிய ராஜாவாக நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்” என்றார். சாமுவேலோ, “நான் போனால், அதனை சவுல் அறிவான். என்னைக் கொல்ல முயல்வான்” என்றான். கர்த்தர், “பெத்லேகேமிற்கு ஒரு இளம் கன்றுக்குட்டியை எடுத்துக்கொண்டு போ, ‘கர்த்தருக்கு பலி கொடுக்க வந்திருக்கிறேன்’ என்று சொல். ஈசாயையும் பலிக்கு அழைத்தனுப்பு. பிறகு செய்ய வேண்டியது என்ன என்பதைக் காட்டுவேன். நான் காட்டுகிறவனை ராஜாவாக அபிஷேகம் செய்” என்றார். சாமுவேல் கர்த்தர் சொன்னபடி செய்தான். சாமுவேல் பெத்லேகேம் சென்றதும் அங்குள்ள மூப்பர்கள் நடுங்கினார்கள். அவர்கள் சாமுவேலை சந்தித்து, “சமாதானத்தோடு வந்துள்ளீரா?” என்று கேட்டனர். அதற்கு சாமுவேல், “ஆமாம், நான் சமாதானத்தோடு வருகிறேன். நான் கர்த்தருக்கு பலிகொடுக்க வந்துள்ளேன். உங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு என்னோடு பலி செலுத்த வாருங்கள்” என்றான். சாமுவேல் ஈசாயையும் அவனது குமாரர்களையும் ஆயத்தம் செய்துப் பலியில் பங்குகொள்ள அழைத்தான். அவர்கள் சாமுவேலிடம் வந்து சேர்ந்ததும் எலியாபைப் பார்த்தான். சாமுவேல் “நிச்சயமாக இவன்தான் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்!” என எண்ணினான். ஆனால் கர்த்தர் சாமுவேலிடம், “எலியாப் உயரமானவன், அழகானவன். ஆனால் அப்படி சிந்திக்க வேண்டாம். ஜனங்கள் பார்க்கிறபடி தேவன் கவனிக்கிறதில்லை. ஜனங்கள் ஒருவனின் வெளித் தோற்றத்தைப் பார்க்கிறார்கள். கர்த்தரோ அவன் இருதயத்தைப் பார்க்கிறார். எலியாப் சரியானவன் அல்ல” என்றார். பிறகு ஈசாய் இரண்டாவது குமாரனான, அபினதாபை அழைத்தான். அவன் சாமுவேலினருகில் நடந்து வந்தபோது சாமுவேல் பார்த்து, “இல்லை, கர்த்தர் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை” எனக் கூறினான். பிறகு ஈசாய் இன்னொரு குமாரனான சம்மாவை அழைத்தான். அவனைப் பார்த்து, “கர்த்தர் இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான். ஈசாய் 7 குமாரர்களையும் காட்டினான். சாமுவேல் ஈசாயிடம், “இவர்களில் யாரையும் கர்த்தர் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான். சாமுவேல், “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” எனக் கேட்டான். அதற்கு ஈசாய், “இல்லை கடைசி குமாரன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்” என்றான். சாமுவேலோ, “அவனை அழைத்து வா, அவன் வரும்வரை நாம் சாப்பிடக்கூடாது” என்றான். ஈசாய் ஒருவனை அனுப்பி தன் இளைய குமாரனை அழைப்பித்தான். இந்த குமாரன் அழகாய் சிவந்த மயிரோடு நல்ல சொளந்தரிய தோற்றமுடையவனாக இருந்தான். கர்த்தர் சாமுவேலிடம், “எழுந்து அவனை அபிஷேகம் செய், இவன்தான்” என்றார். சாமுவேல் எண்ணெய் நிரம்பிய கொம்பை எடுத்து சிறப்பு எண்ணெயை ஈசாயின் கடைசி குமாரன் மேல் அவனுடைய சகோதரரின் முன்னிலையில் ஊற்றினான். கர்த்தருடைய ஆவியானவர் அன்று முதல் தாவீது மீது பெரும் வல்லமையோடு வந்தார். சாமுவேல் ராமாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினான். கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டு விலகினார். கர்த்தர் ஒரு கெட்ட ஆவியை சவுலுக்கு அனுப்பினார். அது மிகத் தொல்லை கொடுத்தது. சவுலின் வேலைக்காரர்களோ, “தேவனிடமிருந்து கெட்ட ஆவி ஒன்று உங்களைத் தொந்தரவு செய்கிறது. ஆணையிடுங்கள், நாங்கள் சுரமண்டலம் வாசிக்கும் ஒருவனைத் தேடிப்பிடிப்போம். ஒருவேளை கர்த்தரிடமிருந்து கெட்ட ஆவி உங்கள் மீது வருமானால், உமக்காக அவன் இசை மீட்டுவான். அப்போது நீங்கள் நலம் பெறுவீர்கள்” என்றனர். எனவே சவுல், “நன்றாக இசை மீட்டுபவனைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்றான். ஒரு வேலையாள், “ஈசாய் என்று ஒருவன் பெத்லேகேமில் இருக்கிறான். அவனது குமாரனுக்கு நன்றாக சுரமண்டலம் வாசிக்கத் தெரியும், தைரியமாக நன்றாக சண்டை இடுவான். அழகானவனும் சுறுசுறுப்பானவனும் கூட, மேலும் கர்த்தர் அவனுடன் இருக்கிறார்” என்றான். எனவே சவுலின் ஆட்கள் ஈசாயிடம் சென்றனர். அவர்கள் ஈசாயிடம், “ஆட்டைக் காக்கிற உன் குமாரன் தாவீதை என்னிடம் அனுப்புங்கள்” என்று சொன்னார்கள். எனவே ஈசாய் சில அன்பளிப்புகளாக கழுதை, அப்பம், திராட்சைரசம், இளம் வெள்ளாட்டுக்குட்டி ஆகியவற்றை தாவீதுக்கு கொடுத்து சவுலிடம் அனுப்பினான். தாவீது சவுல் முன்பு போய் நின்றான். சவுலுக்கு தாவீதை மிகவும் பிடித்தது. அவன் சவுலின் ஆயுதங்களைச் சுமக்கும் உதவியாளனானான். அவன் ஈசாய்க்கு, “நான் தாவீதை மிகவும் விரும்புகிறேன். அவன் என்னோடு இருந்து எனக்குச் சேவை புரியட்டும்” என்ற செய்தி சொல்லி அனுப்பினான். எப்பொழுதாவது தேவனிடத்திலிருந்து சவுல் மேல் கெட்ட ஆவி வந்தால், தாவீது தன் சுரமண்டலத்தை மீட்டுவான். அப்போது அந்த கெட்ட ஆவி சவுலை விட்டு போய்விடும், சவுலும் நலம் பெறுவான்.

1 சாமுவேல் 16:1-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை, தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப்போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி, ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார். கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான். அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான். கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை என்றான். ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான். இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழு பேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி; உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான். ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்த மேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான். கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே. சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள். சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான். அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான். அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின் மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான். அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான். சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான். அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனை விட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்