1 சாமுவேல் 15:1-31

1 சாமுவேல் 15:1-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாமுயேல் சவுலிடம், “தம் மக்களான இஸ்ரயேலர்மேல் உன்னை அரசனாக அபிஷேகம் பண்ணும்படி யெகோவாவினால் அனுப்பப்பட்டவன் நானே. எனவே இப்பொழுது யெகோவாவிடமிருந்து வந்த செய்தியைக் கேள். சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை அமலேக்கியர் வழிமறித்த செயலுக்காக நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். இப்பொழுது நீ போய் அமலேக்கியரைத் தாக்கி அவர்களின் உடைமைகள் அனைத்தையும் முழுவதும் அழித்துவிடு. அவர்களைத் தப்பவிடாதே. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், மாடுகள், செம்மறியாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடு” என்று சொன்னான். சவுல் மனிதர்களை அழைப்பித்து தெலாயிமிலே அவர்களைக் கணக்கெடுத்தான். அப்பொழுது இரண்டு இலட்சம் காலாட்படையினரும், யூதாவிலிருந்து பத்தாயிரம் மனிதரும் இருந்தார்கள். சவுல் அமலேக்கியருடைய பட்டணத்துக்கு வந்து, அவர்களைத் தாக்குவதற்காகக் பள்ளத்தாக்கிலே பதுங்கியிருந்தான். அப்பொழுது சவுல் கேனியரிடம், “நான் அமலேக்கியருடன் உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்களைவிட்டுப் போய்விடுங்கள். ஏனெனில் இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது நீங்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டினீர்கள்” என்றான். அதைக் கேட்டவுடன் கேனியர் அமலேக்கியரை விட்டு அப்பால் போய்விட்டார்கள். பின்பு சவுல் ஆவிலா தொடங்கி எகிப்திற்குக் கிழக்கேயுள்ள சூர் வரைக்கும் இருந்த அமலேக்கியரைத் தாக்கினான். அத்துடன் அமலேக்கியரின் அரசனான ஆகாகை உயிரோடே பிடித்தான். அங்குள்ள மக்கள் அனைவரையும் வாளால் அழித்தான். ஆனால் சவுலும், இராணுவப் படையினரும் ஆகாக் அரசனையும், முதற்தரமான செம்மறியாடுகள், ஆடுமாடுகள், கொழுத்த கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் ஆகிய தரமான எல்லாவற்றையும் தப்பவிட்டார்கள். அவற்றை முழுவதும் அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் தரமற்றதும், பலவீனமுமானவற்றை முழுவதும் அழித்தார்கள். அதன்பின் யெகோவாவினுடைய வார்த்தை சாமுயேலுக்கு வந்தது. “சவுலை அரசனாக்கியதை முன்னிட்டு நான் மனம் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் என்னைவிட்டு விலகிவிட்டான். என் அறிவுறுத்தல்களை நிறைவேற்றவுமில்லை” என்றார். இது சாமுயேலுக்கு மனவேதனையைக் கொடுத்தது. இதனால் சாமுயேல் அன்றிரவு முழுவதும் யெகோவாவிடம் அழுதான். மறுநாள் அதிகாலையில் சாமுயேல் எழுந்து சவுலைச் சந்திப்பதற்காகப் போனபோது, அங்குள்ளவர்கள் அவனிடம், “சவுல் கர்மேலுக்குப் போய்விட்டான். அங்கே அவன் தன்னைக் கனம்பண்ணும்படி ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டிவிட்டு பின் திரும்பி கில்காலுக்குப் போய்விட்டான்” என்றார்கள். அப்பொழுது சாமுயேல் சவுலிடம் போனபோது, சவுல் சாமுயேலிடம், “யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் யெகோவாவினுடைய அறிவுறுத்தல்களை நிறைவேற்றிவிட்டேன்” என்றான். அதற்குச் சாமுயேல் அவனிடம், “அப்படியானால் என் காதுகளில் விழுகின்ற செம்மறியாடுகள் கத்தும் சத்தம் என்ன? நான் கேட்கின்ற ஆடுமாடுகள் கதறும் சத்தம் என்ன?” என்று கேட்டான். அதற்கு சவுல், “அவற்றை அமலேக்கியரிடமிருந்து இராணுவவீரர்கள் கொண்டுவந்தார்கள். உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு பலி செலுத்துவதற்காக ஆடு மாடுகளில் சிறந்தவற்றைத் தப்பவிட்டார்கள். மற்றவைகளை நாங்கள் முற்றிலும் அழித்துவிட்டோம்” என்றான். அப்பொழுது சாமுயேல், “உன் பேச்சை நிறுத்து. நேற்றிரவு யெகோவா எனக்குச் சொன்னவற்றை நான் உனக்குச் சொல்லுகிறேன்” என்றான். அதற்குச் சவுல், “சொல்லும்” என்றான். எனவே சாமுயேல் சவுலிடம், “நீ உன்னுடைய பார்வையில் சிறியவனாயிருந்தபோதும் நீ இஸ்ரயேல் கோத்திரங்களுக்குத் தலைவனாகவில்லையா? யெகோவாவே உன்னை இஸ்ரயேலருக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார். யெகோவாவே உன்னை, ‘நீ போய்க் கொடியவர்களாகிய அமலேக்கியரை முழுவதும் அழித்துவிடு. அவர்களை முழுவதும் அழிக்கும்வரை அவர்களுடன் யுத்தம் செய்’ என்று உன்னை அனுப்பினார். ஆனால் நீ ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. நீ ஏன் அந்த கொள்ளைப்பொருட்களை பாய்ந்து எடுத்து யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தாய்?” என்று கேட்டான். அதற்குச் சவுல் சாமுயேலை நோக்கி, “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். யெகோவா செய்யச் சொன்ன பணியைச் செய்து, அமலேக்கியரை முற்றிலும் அழித்து, அவர்கள் அரசனான ஆகாகையும் சிறைபிடித்து வந்தேன். இராணுவவீரர்களோ இறைவனுக்கு அழிக்கப்பட ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளிலிருந்து சிறந்த செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு கில்காலிலே பலியிடுவதற்காகவே கொண்டுவந்தார்கள்” என்றான். அதற்கு சாமுயேல் பதிலாகச் சொன்னதாவது: “யெகோவா தனது குரலுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், தகன காணிக்கைகளிலும் பலிகளிலும் மகிழ்ச்சியடைவாரோ? கீழ்ப்படிதலே, பலி செலுத்துவதிலும் மேலானது; அவருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதே, ஆட்டுக்கடாக்களின் கொழுப்பிலும் மேலானது. கலகம் பண்ணுவது, குறிசொல்லும் பாவத்தைப் போன்றது. அகங்காரம், விக்கிரக வழிபாட்டைப்போல் தீமையானது. நீ யெகோவாவின் வார்த்தையைத் தள்ளிவிட்டபடியால், அவரும் நீ அரசனாய் இராதபடி உன்னைப் புறக்கணித்துவிட்டார்.” அப்பொழுது சவுல் சாமுயேலிடம், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் யெகோவாவினுடைய கட்டளையையும், உம்முடைய அறிவுறுத்தல்களையும் மீறினேன். நான் மக்களுக்குப் பயந்ததினால் அவர்களின் விருப்பத்திற்கு இடங்கொடுத்தேன். எனவே இப்போது நான் யெகோவாவை வழிபடும்படி என் பாவத்தை மன்னித்து, என்னுடன் திரும்பிவரும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்” என்று கேட்டான். அதற்கு சாமுயேல் சவுலிடம், “நான் உன்னோடு திரும்பிவரமாட்டேன். நீ யெகோவாவின் வார்த்தையை புறக்கணித்ததால், நீ இஸ்ரயேல்மீது அரசனாய் இராதபடி யெகோவாவும் உன்னைப் புறக்கணித்துவிட்டார்” என்றான். பின்பு சாமுயேல் போகும்படி திரும்பவே, சவுல் அவன் மேலாடையின் ஓரத்தைப் பிடித்தபோது, அது கிழிந்து போயிற்று. அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “இன்றே யெகோவா இஸ்ரயேலின் அரசை உன்னிடமிருந்து கிழித்தெடுத்து, உன் அயலவர்களுக்குள் உன்னிலும் சிறந்த ஒருவனுக்குக் கொடுத்திருக்கிறார். இஸ்ரயேலின் மகிமையான இறைவன் பொய் சொல்வதுமில்லை, மனம் மாறுவதுமில்லை. ஏனெனில் மனம் மாறுவதற்கு அவர் ஒரு மனிதனல்ல” என்று சொன்னான். அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். ஆயினும் என் மக்களின் முதியவர் முன்பாகவும், இஸ்ரயேலர் முன்பாகவும் என்னைத் தயவுசெய்து கனம்பண்ணும். நான் உம்முடைய இறைவனாகிய யெகோவாவை வழிபடும்படி என்னோடு திரும்பி வாரும்” என்று கேட்டான். எனவே சாமுயேல் திரும்பிச் சவுலுடன் சென்றான். சவுல் யெகோவாவை வழிபட்டான்.

1 சாமுவேல் 15:1-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் யெகோவா என்னை அனுப்பினாரே; இப்போதும் யெகோவாவுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான். அப்பொழுது சவுல்: இதை மக்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களை கணக்கெடுத்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா மக்கள் பத்தாயிரம்பேருமாக இருந்தார்கள். சவுல் அமலேக்குடைய பட்டணம் வரை வந்து, பள்ளத்தாக்கிலே காத்திருந்தான். சவுல் கேனியரை பார்த்து: நான் அமலேக்கியர்களோடு உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் தயைசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர்கள் அமலேக்கியர்களின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள். அப்பொழுது சவுல்: ஆவிலா துவங்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லை வரை இருந்த அமலேக்கியர்களை முறியடித்து, அமலேக்கியர்களின் ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தான்; மக்கள் அனைவரையும் கூர்மையான பட்டயத்தாலே படுகொலை செய்தான். சவுலும் மக்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் சிறந்தவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனமில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான அனைத்தையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான். மறுநாள் அதிகாலையில் சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு வெற்றிதூண் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது. சாமுவேல் சவுலினிடத்திற்கு போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். அதற்குச் சவுல்: அமலேக்கியர்களிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; மக்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான். அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், யெகோவா இந்த இரவில் எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான். அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராக இருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; யெகோவா உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தாரே. இப்போதும் யெகோவா: நீ போய் அமலேக்கியர்களாகிய அந்தப் பாவிகளைக் கொன்று, அவர்களை முழுவதுமாக அழிக்கும்வரை, அவர்களோடு யுத்தம்செய் என்று சொல்லி, உம்மை அந்த வழியாக அனுப்பினார். இப்படியிருக்க, நீர் யெகோவாவுடைய சொல்லைக்கேட்காமல், கொள்ளைப்பொருட்களின் மேல் ஆசைவைத்து, யெகோவாவுடைய பார்வைக்குப் தீங்கானதை செய்தது என்ன என்றான். சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய சொல்லைக் கேட்டு, யெகோவா என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவான ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியர்களைக் கொலை செய்தேன். மக்களோ உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குக் கில்காலிலே பலியிடுவதற்காக, கொள்ளைப்பொருட்களிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே முதன்மையானவகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான். அதற்குச் சாமுவேல்: “யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைவிட, சர்வாங்க தகனங்களும் பலிகளும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைவிட கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பைவிட செவிகொடுத்தலும் உத்தமம். கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும், பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது; நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே, அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார்” என்றான். அப் பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதால் பாவம் செய்தேன்; நான் மக்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன். இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் யெகோவாவை தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடு திரும்பிவருவதில்லை; யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடி, யெகோவா உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவனுடைய சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று. அப்பொழுது சாமுவேல் அவனை பார்த்து: யெகோவா இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைவிட உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். இஸ்ரவேலின் பெலனாக இருப்பவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதிலிருந்து மனம் மாறுவதும் இல்லை; மனம் மாற அவர் மனிதன் அல்ல என்றான். அதற்கு அவன்: நான் பாவம் செய்தேன்; இப்போது என் மக்களின் மூப்பர்களுக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனப்படுத்தி, நான் உம்முடைய தேவனாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான். அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் யெகோவாவைத் தொழுதுகொண்டான்.

1 சாமுவேல் 15:1-31 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு நாள் சாமுவேல் சவுலிடம், “உன்னை அபிஷேகித்து அவருடைய ஜனங்கள் இஸ்ரவேலருக்கு ராஜாவாக்கும்படி கர்த்தர் என்னை அனுப்பினார். இப்போது கர்த்தருடைய செய்தியைக் கேள். சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வரும்போது கானானுக்குப் போகாமல் அமலேக்கியர்கள் தடுத்தனர். அவர்கள் செய்தவற்றை நான் பார்த்தேன். இப்போது அவர்களோடு போரிடு, அவர்களையும் அவர்கள் உடமையையும் முழுவதுமாக அழி, எதையும் உயிரோடு விடாதே. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள், பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் எதையும் விடாதே என்கிறார்’” என்றான். சவுல் தன் படையை தெலாயிமில் கூட்டினான். 2,00,000 காலாட்படையும் யூதாவிலுள்ள 10,000 சேனையாட்களும் இருந்தனர். பிறகு சவுல் அமலேக்கு நகருக்குப் போய் பள்ளத்தாக்கில் காத்திருந்தான். அங்கு கேனியரிடம், “அமலேக்கியரை விட்டுப் போங்கள், நான் உங்களை அழிக்கமாட்டேன். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறும்போது நீங்கள் கருணை காட்டினீர்கள்” என்றான். எனவே கேனியர் அமலேக்கியரை விட்டு வெளியேறினார்கள். சவுல் அமலேக்கியரைத் தோற்கடித்தான். அவர்களை, ஆவிலாவில் இருந்து சூர் வரை துரத்தியடித்தான். ஆகாக் அமலேக்கியரின் ராஜா. சவுல், அவனை உயிருடன் பிடித்தான். மற்றவர்களைக் கொன்றான். எல்லாவற்றையும் அழிக்க சவுலும் வீரர்களும் தயங்கினார்கள். ஆகாக் என்பவனை உயிருடன்விட்டனர். மேலும் கொழுத்த பசுக்களையும் நல்ல ஆடுகளையும் சிறந்த பொருட்களையும் கூட அழிக்காமல் விட்டுவிட்டனர். பயனுள்ள எல்லாவற்றையும் வைத்துக் கொண்டனர். அவற்றை அழிக்க அவர்கள் விரும்பவில்லை, பயனற்றவற்றையே அவர்கள் அழித்தார்கள். பிறகு சாமுவேல், கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். அதற்கு கர்த்தர், “சவுல் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டான், அவனை ராஜாவாக்கியதற்காக வருந்துகிறேன். நான் சொல்வதை அவன் செய்வதில்லை” என்றார். சாமுவேலும் கோபங்கொண்டு இரவு முழுவதும் அழுது கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான். சாமுவேல் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து சவுலை சந்திக்க சென்றான். ஆனால் ஜனங்கள் அவனிடம், “கர்மேல் என்ற பேருள்ள யூதேயாவின் நகருக்கு சவுல் போயிருக்கிறான். அங்கே தன்னை பெருமைப்படுத்தும் நினைவு கல்லை எழுப்புகிறான். அவன் பல இடங்களை சுற்றிவிட்டு கில்காலுக்கு வருவான்” என்றனர். எனவே சாமுவேல் அவனிருக்கும் இடத்துக்கே சென்று சவுலைத் தேடிப் பிடித்தான். சவுல் அப்போதுதான் கர்த்தருக்கு அமலேக்கியரிடம் இருந்து எடுத்த முதல் பாகங்களை தகனபலி செலுத்திக்கொண்டிருந்தான். சவுல் சாமுவேலை வரவேற்றான், “கர்த்தர் உம்மை ஆசீர்வதிக்கிறார்! கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்றினேன்” என்றான். ஆனால் சாமுவேலோ, “அப்படியானால் நான் கேட்ட சத்தம் எத்தகையது? ஆடுகளின் சத்தத்தையும், மாடுகளின் சத்தத்தையும் நான் எதற்காகக் கேட்டேன்?” என்று கேட்டான். அதற்கு சவுல், “இவை அமலேக்கியரிடமிருந்து வீரர்கள் எடுத்தவை. உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும் பொருட்டு சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் பிடித்து வந்தனர். மற்றபடி நாங்கள் அனைத்தையும் அழித்துவிட்டோம்” என்றான். சாமுவேலோ, “நிறுத்து! நேற்று இரவு கர்த்தர் சொன்னதை நான் சொல்லட்டுமா” என சவுலிடம் கேட்டான். சவுல், “நல்லது சொல்லுங்கள்” என்றான். சாமுவேல், “முக்கியமானவன் இல்லை என்று கடந்த காலத்தில் நீ உன்னை நினைத்திருந்தாய். பின்பு இஸ்ரவேல் ஜனங்களின் தலைவன் ஆனாய். கர்த்தர் உன்னை ராஜாவாக்கினார். கர்த்தருக்கு உன்னை சிறப்பான கடமை நிறைவேற்ற அனுப்பினார். கர்த்தர் சொன்னார், ‘போய் அமலேக்கியரை முழுமையாக அழி! அவர்கள் தீயவர்கள். எல்லோரும் கொல்லப்படும்வரை போரிடு!’ என்றார். ஆனால் நீ கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை! ஏன்? தீயவை என்று கர்த்தர் எதை ஒதுக்கினாரோ அவற்றை சேகரித்துக்கொள்ள நீ விரும்பிவிட்டாய்!” என்றான். சவுலோ, “கர்த்தருக்கு நான் கீழ்ப்படிந்தேன். அவர் சொன்ன இடத்திற்குப் போனேன். அமலேக்கியரை எல்லாம் அழித்தேன்! அவர்களின் ராஜா ஆகாக்கை மட்டுமே கொண்டுவந்தேன். வீரர்கள் நல்ல ஆட்டையும், மாட்டையும் கொண்டு வந்தனர். அவை கில்காலில் உள்ள உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிட காத்திருக்கின்றன!” என்றான். ஆனால் சாமுவேல், “கர்த்தருக்குப் பிடித்தமானது எது? தகனபலியா? அன்பளிப்பா? அல்லது கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதா? கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுதான் அனைத்திலும் சிறந்தது. கீழ்ப்படிய மறுப்பது தவறு, அது பில்லிசூனியத்திற்கு இணையான பெரும் பாவம். நீ கீழ்ப்படிய மறுப்பது பிடிவாதமாக பிற விக்கிரகங்களை தொழுதுகொள்வதற்கு சமம் ஆகும். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தாய். அதனால் கர்த்தர் உன்னை ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான். அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. நீர் சொன்னதையும் செய்யவில்லை. ஜனங்களுக்கு பயந்தேன். அவர்கள் சொன்னபடி செய்தேன். இப்போது கெஞ்சுகிறேன். என் பாவத்தை மன்னியுங்கள். என்னுடன் மீண்டும் வாருங்கள் எனவே கர்த்தரை நான் தொழுதுக்கொள்வேன்” என்றான். ஆனால் சாமுவேலோ, “நான் உன்னோடு வரமாட்டேன். நீ கர்த்தருடைய கட்டளையை ஒதுக்கிவிட்டாய். இப்போது கர்த்தர் உன்னை ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான். சாமுவேல் திரும்பியபோது சவுல் அவரது சால்வை நுனியைப் பிடித்தான். அது கிழிந்தது. சாமுவேலோ, “என் சால்வையைக் கிழித்துவிட்டாய். இதுபோல் இன்று கர்த்தர் உன்னிடமிருந்து இஸ்ரவேலின் இராஜ்யத்தைக் கிழிப்பார். உன் நண்பன் ஒருவனுக்கு கர்த்தர் அரசைக் கொடுப்பார். அவன் உன்னைவிட நல்லவனாக இருப்பான். கர்த்தரே இஸ்ரவேலரின் தேவன். கர்த்தர் என்றென்றும் ஜீவிப்பவர். கர்த்தர் பொய் சொல்லவோ மனதை மாற்றவோமாட்டார். அவர் மனிதனைப் போன்று மனதை மாற்றுபவர் அல்ல” என்றான். சவுலோ, “சரி நான் பாவம் செய்தேன்! எனினும் என்னுடன் திரும்பி வாருங்கள். இஸ்ரவேலின் தலைவர்கள் மற்றும் ஜனங்களின் முன்னால் எனக்கு மரியாதைக் காட்டுங்கள். என்னுடன் திரும்பி வாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நான் தொழுதுகொள்வேன்” என்றான். சாமுவேல் சவுலோடு திரும்பிப் போனான். சவுல் கர்த்தரை தொழுதுகொண்டான்.

1 சாமுவேல் 15:1-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகை பார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள். சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான். சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள். அப்பொழுது சவுல்: ஆவிலாதுவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து, அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான். சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது. சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான். அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான். அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே. இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார். இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான். சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான். அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன். இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று. அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான்.