1 சாமுவேல் 14:1-46

1 சாமுவேல் 14:1-46 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஒரு நாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள். சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும், அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள். யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர், மற்றொன்றுக்குச் சேனே என்று பேர். அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது. யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக்கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக்கொண்டாகிலும், இரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான். அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான். அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம். நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம். எங்களிடத்துக்கு ஏறி வாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான். அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்குமுன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்: இதோ, எபிரெயர் ஒளித்துக்கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி, தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா, கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்; அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான். யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள். அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாகி, தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது. பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள். அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம் பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள். அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது. இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான். சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று. இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்துவந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள். எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள். இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை இரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன் மட்டும் நடந்தது. இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்கவேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள். தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது. ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள். யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது. அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான். அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்: நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள். இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான். அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள். அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள். அப்பொழுது, இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள். நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள். பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம். அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான். அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை. அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள். அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை இரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை. அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப்பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள். அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள். எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது. அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான். அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான். ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலை செய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள். சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்.

1 சாமுவேல் 14:1-46 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஒரு நாள் சவுலின் மகன் யோனத்தான் தன் ஆயுதங்களைச் சுமக்கும் வாலிபனிடம், “எதிர்ப்பக்கமாக இருக்கும் பெலிஸ்தியரின் தடைமுகாமுக்குப் போவோம் வா” என்றான். அதை அவன் தன் தகப்பனுக்குத் தெரிவிக்கவில்லை. சவுல் கிபியாவின் சுற்றுப்புறத்திலே மிக்ரோனிலுள்ள ஒரு மாதுளை மரத்தின்கீழ் இருந்தான். அவனுடன் ஏறக்குறைய அறுநூறு பேர் இருந்தார்கள். அவர்களில் ஏபோத்தை அணிந்திருந்த அகியாவும் இருந்தான். அவன் இக்கபோத்தின் சகோதரனான அகிதூபின் மகன். அகிதூப் பினெகாசின் மகன். பினெகாஸ் சீலோவிலே யெகோவாவின் ஆசாரியனாயிருந்த ஏலியின் மகன். யோனத்தான் புறப்பட்டுப் போனதை யாரும் அறியவில்லை. யோனத்தான் பெலிஸ்தியரின் தடைமுகாமுக்குப் போவதற்கு கடந்துபோக முயன்ற அந்த கணவாயின் இரு பக்கங்களிலும், செங்குத்தான கற்பாறைகள் இருந்தன. அதில் ஒன்று போசேஸ் என்றும், மற்றது சேனே என்றும் அழைக்கப்பட்டது. அந்த கற்பாறையிலொன்று மிக்மாசை நோக்கி வடக்கு பக்கமாகவும், மற்றது கிபியாவை நோக்கி தெற்கு பக்கமாகவும் இருந்தது. அப்பொழுது யோனத்தான் தன் ஆயுதம் சுமக்கும் வாலிபனிடம், “விருத்தசேதனம் செய்யாதவர்களின் தடைமுகாமுக்குப் போவோம் வா, ஒருவேளை யெகோவா, நம் சார்பாகச் செயலாற்றுவார். சிலர் மூலமோ, பலர் மூலமோ மீட்க, யெகோவாவிற்கு யாதொன்றும் தடையாயிராது” என்றான். அதற்கு ஆயுதம் சுமப்போன், “உம்முடைய மனவிருப்பப்படியே செய்யும். முன்செல்லும் நீர் செய்வது எல்லாவற்றிலும் நானும் உம்மோடுகூட மனப்பூர்வமாய் இருப்பேன்” என்றான். அப்பொழுது யோனத்தான் அவனிடம், “அப்படியானால் வா. நாம் கடந்து அந்த மனிதரை நோக்கிப் போவோம். அவர்கள் நம்மைக் காணட்டும். அப்பொழுது அவர்கள், ‘நாங்கள் உங்களிடம் வரும்வரையும் அங்கேயே நில்லுங்கள்’ என்று சொல்வார்களேயானால் நாங்கள் அவர்களிடம் போகாமல் நின்ற இடத்திலேயே நிற்போம். ஆனால், ‘எங்களிடம் ஏறி வாருங்கள்’ என்று சொல்வார்களேயானால், நாங்கள் அவர்களிடம் ஏறிப்போவோம். யெகோவா அவர்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதற்கு அதுவே நமக்கு அடையாளம்” என்றான். அப்படியே அவர்கள் இருவரும் தடைமுகாமிலிருந்த பெலிஸ்தியருக்கு தங்களைக் காண்பித்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியர், “பாருங்கள்! எபிரெயர் தாங்கள் ஒளித்திருந்த கிடங்குகளிலிருந்து தவழ்ந்து வெளியே வருகிறார்கள்” எனத் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். அப்பொழுது தடைமுகாமிலிருந்தவர்கள் யோனத்தானையும், அவனுடைய ஆயுதங்கள் சுமப்பவனையும் கூப்பிட்டு, “இங்கே ஏறி வாருங்கள். உங்களுக்கு ஒரு பாடம் படிப்பிப்போம்” என்றார்கள். அதைகேட்ட யோனத்தான் ஆயுதம் சுமப்பவனிடம், “யெகோவா அவர்களை இஸ்ரயேலரின் கைகளில் கொடுத்துவிட்டார். என்னைப் பின்தொடர்ந்து ஏறி வா” என்றான். யோனத்தான் கைகளாலும், கால்களாலும் ஊர்ந்து ஏறினான். அவனுடைய ஆயுதம் சுமப்பவனும் அவனுக்குப் பின்னால் ஏறினான். யோனத்தானால் தாக்கப்பட்டு பெலிஸ்தியர் விழுந்தார்கள். அவனைத் தொடர்ந்து வந்த ஆயுதம் சுமப்பவனும் அவர்களை வெட்டிக்கொன்றான். அந்த முதல் தாக்குதலின்போது யோனத்தானும், ஆயுதம் சுமப்பவனும் அரை ஏக்கர் நிலப்பகுதியில் ஏறக்குறைய இருபதுபேரைக் கொன்றார்கள். அப்பொழுது முகாமுக்குள்ளும், வெளியிலும், தடைமுகாமிலும், திடீரெனத் தாக்கும் குழுவிலுள்ள எல்லாப் படைவீரர்களுக்குமே பீதி ஏற்பட்டது. அவ்வேளையில் நிலம் அதிர்ந்தது. இது இறைவனால் அனுப்பப்பட்ட பயங்கரம். பெலிஸ்தியப் படை எல்லாப் பக்கங்களிலும் சிதறி ஓடிக் குறைந்து போவதை பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்த சவுலின் காவற்காரர் கண்டனர். அப்பொழுது சவுல் தன்னுடன் இருந்த வீரர்களிடம், “நம்மிடமிருந்தவர்களில் யார் எங்களைவிட்டுப் போய்விட்டார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள்” என்றான். அப்படியே அவர்கள் கணக்கிட்டுப் பார்த்தபோது, யோனத்தானும் அவனுடைய ஆயுதம் சுமப்பவனும் இல்லையென்று கண்டார்கள். எனவே சவுல் அகியாவிடம், “இறைவனுடைய பெட்டியை இங்கே கொண்டுவா” என்றான். அந்நாட்களில் அது இஸ்ரயேலரிடமே இருந்தது. இவ்வாறு சவுல் ஆசாரியனோடு பேசிக்கொண்டிருக்கையில் பெலிஸ்தியரின் முகாமிலிருந்து வந்த அமளி சத்தம் மென்மேலும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. எனவே சவுல் ஆசாரியனிடம், “உன் கையை எடுத்துவிடு” என்றான். எனவே சவுலும் அவனோடிருந்த எல்லா மனிதரும் ஒன்றுகூடி யுத்தத்திற்குச் சென்றார்கள். பெலிஸ்தியர் முற்றுமாய் குழப்பமடைந்து ஒருவரையொருவர் தாங்களே வாள்களினால் தாக்கிக்கொள்வதை இஸ்ரயேலர் கண்டார்கள். இவ்வேளையில் முன்பு பெலிஸ்தியருடன் வாழ்ந்த எபிரெயர், அவர்களுடன் அவர்களின் முகாமுக்குச் சென்றிருந்தார்கள். ஆனால் இப்பொழுதோ எபிரெயர் மாறி சவுலோடும் யோனத்தானோடுமிருந்த இஸ்ரயேலருடன் போய் சேர்ந்துகொண்டார்கள். அதோடு பெலிஸ்தியருக்குப் பயந்து எப்பிராயீம் மலைநாட்டில் ஒளித்திருந்த இஸ்ரயேலர் யாவரும், பெலிஸ்தியர் சிதறி ஓடுகிறார்களென்று கேள்விப்பட்டதும் யுத்தத்தில் இணைந்து பெலிஸ்தியரைப் பிடிக்க பின்தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்கினார்கள். இவ்விதமாய் அன்றையதினம் யெகோவா இஸ்ரயேலரை மீட்டுக்கொண்டார். இந்த யுத்தமோ பெத் ஆவெனுக்கு அப்பாலும் நகர்ந்தது. அன்றையதினம் இஸ்ரயேலரை உபவாசம் இருக்கும்படி சவுல் கட்டளையிட்டதினால், அவர்கள் கஷ்டத்துக்குள்ளானார்கள். அப்பொழுது சவுல் அவர்களிடம், “நான் என் பகைவரைப் பழிவாங்க முன்பு எவன் மாலைவரை பொறுத்திராமல் சாப்பிடுகிறானோ அவன் சபிக்கப்படுவான்” என்று ஆணையிட்டுக் கட்டளையிட்டிருந்தான். எனவே வீரர்களில் யாரும் உணவைச் சாப்பிடவில்லை. போர்வீரர்கள் அனைவரும் காட்டுக்குப் போனபோது, அங்கே தரையில் தேன் இருந்ததைக் கண்டார்கள். அவர்கள் காட்டுக்குள் வந்தபோது தேன் ஒழுகிக்கொண்டிருந்தும் சவுலின் ஆணைக்குப் பயந்ததினால் ஒருவரும் தங்கள் கைகளால் தேனைத் தொட்டு வாய்க்குள் வைக்கவில்லை. யோனத்தானோ தன் தகப்பன் யுத்த வீரருக்கு ஆணையிட்டு மக்களைக் கட்டுப்படுத்தியிருந்ததை அறியவில்லை. அதனால் அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டித் தேனில் தோய்த்து அதிலிருந்து வழிந்த தேனைத் தன் கையில் எடுத்து வாய்க்குள் வைத்தான். உடனே அவன் பெலனடைந்தான். அப்பொழுது போர்வீரரில் ஒருவன் அவனிடம், “இன்று உணவு சாப்பிடும் மனிதன் சபிக்கப்பட்டவன் என உம் தகப்பன் ஒரு கடும் ஆணையிட்டு வீரர்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறார். இதனால்தான் போர்வீரர் பசியினால் சோர்ந்து இருக்கிறார்கள்” என்றான். இதைக் கேட்ட யோனத்தான் அவனிடம், “என் தகப்பனார் நாட்டிற்கு எப்படிப்பட்ட கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சிறிது தேனை சாப்பிட்டதால் நான் எவ்வளவு பெலனடைந்திருக்கிறேன். இன்றைய தினம் தங்களுக்கு அகப்பட்ட பகைவர்களின் கொள்ளைப்பொருட்களில் சிலவற்றைச் சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். பெலிஸ்தியரில் கொலையுண்டோர் இன்னும் அதிகமானோராய் இருந்திருப்பார்களே” என்றான். அன்று இஸ்ரயேலர் மிக்மாசிலிருந்து ஆயலோன் மட்டும் பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியபின் அவர்கள் களைப்படைந்திருந்தார்கள். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களின்மேல் பாய்ந்து, செம்மறியாடுகளையும், எருதுகளையும், கன்றுக்குட்டிகளையும் தரையின்மேல் போட்டுக் கொன்று, இரத்தத்துடன் அவற்றைச் சாப்பிட்டார்கள். அப்பொழுது, “இதோ போர்வீரர் இரத்தத்துடன் இறைச்சியைச் சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம் செய்கிறார்கள்” என்று ஒருவன் சவுலுக்குச் சொன்னான். அதற்கு சவுல் அவர்களிடம், “நீங்கள் யெகோவாவுக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்தீர்கள். எனவே இப்பொழுதே உடனே ஒரு பெரிய கல்லை என்னிடம் உருட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான். பின்பு சவுல், “நீங்கள் மனிதர் மத்தியில் சென்று அவர்களிடம், ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மாடுகளையும், செம்மறியாடுகளையும் இங்கு கொண்டுவந்து அவற்றை இங்கே கொன்று சாப்பிடவேண்டும். நீங்கள் இரத்தத்தோடு இறைச்சியைச் சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம் செய்யவேண்டாம் என்று சொல்லுங்கள்’ ” என்றான். அவ்வாறே இஸ்ரயேலர் ஒவ்வொருவரும் அன்றிரவே தங்கள் மாடுகளைக் கொண்டுவந்து அங்கே வெட்டினார்கள். அதன்பின் சவுல் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அவன் இவ்விதம் செய்தது இதுவே முதல் முறையாகும். அதன்பின் சவுல் மக்களிடம், “நாம் இன்றிரவே பெலிஸ்தியரைத் தொடர்ந்துபோய் விடியும்வரை அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் உயிருடன் தப்பவிடாமல் தாக்குவோம்” என்றான். அதற்கு அவர்கள், “உமக்கு எது நல்லதாய்த் தோன்றுகிறதோ அதன்படி செய்யும்” என்றார்கள். ஆனால் ஆசாரியனோ சவுலிடம், “நாம் இங்கே முதலில் இறைவனிடம் போய் விசாரிப்போம்” என்றான். அப்பொழுது சவுல் இறைவனிடம், “நான் பெலிஸ்தியரைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரயேலரின் கையில் ஒப்புக்கொடுப்பீரா?” என்று கேட்டான். ஆனால் இறைவன் அன்று அவனுக்கு பதிலளிக்கவில்லை. அதனால் சவுல் தன் படைத் தலைவர்களிடம், “நீங்கள் அனைவரும் இங்கே வாருங்கள். இன்று என்ன பாவம் இங்கு செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிப்போம். அந்த பாவத்தைச் செய்தவன் என் மகன் யோனத்தானாயிருந்தாலும் அவனும் சாகவேண்டும். இஸ்ரயேலரை தப்புவிக்கிற யெகோவா இருப்பது நிச்சயமெனில், அவன் சாகவேண்டும் என்பதும் நிச்சயம்” என்றான். ஆனால் மனிதரில் ஒருவனும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அப்பொழுது சவுல் இஸ்ரயேலர் எல்லோரிடமும், “நீங்கள் அங்கே நில்லுங்கள். நானும் என் மகன் யோனத்தானும் இங்கே நிற்போம்” என்றான். அதற்கு அவர்கள் சவுலிடம், “நீர் சரியென்று நினைப்பதைச் செய்யும்” என்றார்கள். எனவே சவுல் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவாவிடம், “யெகோவாவே சரியான பதிலை எனக்குத் தாரும்” என்று மன்றாடினான். சீட்டு சவுலின்மேலும், யோனத்தான்மேலும் விழுந்தது. மக்கள் நீங்கலாக்கப்பட்டார்கள். அப்பொழுது சவுல் மக்களிடம், “எனக்கும் என் மகன் யோனத்தானுக்குமிடையே சீட்டுப் போடுங்கள்” என்றான். யோனத்தானே குறிப்பிடப்பட்டான். எனவே சவுல் யோனத்தானிடம், “நீ என்ன குற்றம் செய்தாய்? எனக்குச் சொல்” என்று கேட்டான். அதற்கு யோனத்தான், “என்னுடைய கையிலிருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்துச் சுவைத்துப் பார்த்தேன். இப்பொழுது நான் சாகவேண்டுமோ?” என்று கேட்டான். அதற்கு சவுல், “யோனத்தானே, நீ சாகாவிட்டால் இறைவன் என்னை எவ்வளவு கடுமையாகவும் தண்டிக்கட்டும்” என்றான். ஆனால் மனிதர் சவுலிடம், “யோனத்தான் சாகவேண்டுமோ? அவனல்லவோ இஸ்ரயேலருக்கு இப்பெரிய விடுதலையைக் கொண்டுவந்தான். வேண்டாம்! யெகோவா இருப்பது நிச்சயமெனில் அவன் தலையிலுள்ள ஒரு மயிரும் கீழே விழக்கூடாது. ஏனெனில் அவன் இறைவனின் உதவியுடனே இதை இன்று செய்தான்” என்றார்கள். இவ்விதம் மனிதர் யோனத்தானை விடுவித்ததினால் அவன் கொல்லப்படவில்லை. அதன்பின் சவுல் பெலிஸ்தியரைத் தொடராமல் திரும்பிவிட்டான். பெலிஸ்தியரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிப் போனார்கள்.

1 சாமுவேல் 14:1-46 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஒரு நாள் சவுலின் மகனான யோனத்தான் தன்னுடைய ஆயுததாரியான வாலிபனைப் பார்த்து: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தர்களின் முகாமிற்கு போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன்னுடைய தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. சவுல் கிபியாவின் கடைசி முனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதுளைமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடு இருந்த மக்கள் ஏறக்குறைய 600 பேராக இருந்தார்கள். சீலோவிலே யெகோவாவுடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் மகனான பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும், அகிதூபின் மகனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தை அணிந்திருந்தான்; யோனத்தான் போனதை மக்கள் அறியாமல் இருந்தார்கள். யோனத்தான் பெலிஸ்தர்களின் முகாமிற்கு போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப் பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பெயர், மற்றொன்றுக்குச் சேனே என்று பெயர். அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது. யோனத்தான் தன் ஆயுததாரியான வாலிபனை பார்த்து: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்த முகாமிற்குப் போவோம் வா; ஒருவேளை யெகோவா நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம் பேரைக்கொண்டோ, கொஞ்சம்பேரைக்கொண்டோ, இரட்சிக்கக் யெகோவாவுக்குத் தடையில்லை என்றான். அப்பொழுது அவனுடைய ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போங்கள்; இதோ, உம்முடைய மனதிற்கு ஏற்றபடி நானும் உம்மோடு வருகிறேன் என்றான். அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனிதரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம். நாங்கள் உங்களிடத்திற்கு வரும் வரை நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்திற்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம். எங்களிடத்திற்கு ஏறி வாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; யெகோவா அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான். அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தர்களின் முகாமிற்குமுன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள்: இதோ, எபிரெயர்கள் ஒளிந்துகொண்டிருந்த குழிகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி, முகாமில் இருக்கிற மனிதர்கள் யோனத்தானையும் அவனுடைய ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்திற்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியைப் பார்த்து: என் பின்னாலே ஏறி வா, யெகோவா அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்; அவனுடைய ஆயுததாரி அவனுக்குப் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவனுடைய ஆயுததாரியும் அவனுக்குப் பின்னாலே வெட்டிக்கொண்டேபோனான். யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய 20 பேர் அரை ஏர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள். அப்பொழுது முகாமிலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், திகில் உண்டாகி, முகாமில் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன கூட்டத்திலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான திகிலாயிருந்தது. பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த இரவுக்காவலர்கள் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, அங்கும் இங்கும் ஓடுவதைக் கண்டார்கள். அப்பொழுது சவுல் தன்னோடு இருக்கிற மக்களைப் பார்த்து: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று கணக்கெடுங்கள் என்றான்; அவர்கள் கணக்கெடுக்கிறபோது, இதோ, யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள். அப்பொழுது சவுல் அகியாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்த நாட்களில் இஸ்ரவேல் மக்களிடத்தில் இருந்தது. இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசும்போது, பெலிஸ்தர்களின் முகாமில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான். சவுலும் அவனோடிருந்த மக்களும் கூட்டம் கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு எதிராக இருந்தபடியால் மகா குழப்பம் உண்டானது. இதற்குமுன்பு பெலிஸ்தர்களுடன் கூடி அவர்களோடு முகாமிலே திரிந்துவந்த எபிரெயர்களும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலர்களோடு சேர்ந்துகொண்டார்கள். எப்பிராயீம் மலைகளில் ஒளிந்துகொண்டிருந்த எல்லா இஸ்ரவேலர்களும் பெலிஸ்தர்கள் தப்பியோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள். இப்படிக் யெகோவா அன்றையதினம் இஸ்ரவேலை இரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன் வரை நடந்தது. இஸ்ரவேலர்கள் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் எதிரிகளை பழிவாங்கவேண்டும், மாலைவரைக்கும் பொறுக்காமல் எவன் சாப்பிடுகிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் மக்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், மக்களில் ஒருவரும் கொஞ்சம்கூட சாப்பிடாதிருந்தார்கள். எல்லா இராணுவ மக்கள் எல்லோரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே நிலத்திலே தேன் கூடு கட்டியிருந்தது. மக்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; மக்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள். யோனத்தான் தன் தகப்பன் மக்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டான்; அதினால் அவனுடைய கண்கள் தெளிந்தது. அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் மக்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகவே மக்கள் களைத்திருக்கிறார்கள் என்றான். அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் மக்களைக் கலங்கச்செய்தார்: நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததில், என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள். இன்றையதினம் மக்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் எதிரிகளின் கொள்ளையிலே ஏதாவது சாப்பிட்டிருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான படுகொலை மிகவும் அதிகமாயிருக்குமே என்றான். அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன் வரை பெலிஸ்தர்களை முறியடித்தபோது, மக்கள் மிகவும் களைத்திருந்தார்கள். அப்பொழுது மக்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் சாப்பிட்டார்கள். அப்பொழுது, இதோ, இரத்தத்தோடு இருக்கிறதை சாப்பிட்டதால் மக்கள் யெகோவாவுக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்செய்தீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடம் உருட்டிக்கொண்டுவாருங்கள். நீங்கள் மக்களுக்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுவதால், யெகோவாவுக்கு எதிராக பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகவே, மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இரவு தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள். பின்பு சவுல் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் யெகோவாவுக்குக் கட்டின முதலாவது பலிபீடம். அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இரவிலே பெலிஸ்தர்களைத் தொடர்ந்துபோய், காலை வெளிச்சமாகும் வரை அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவனிடத்தில் சேர்வோம் என்றான். அப்படியே: பெலிஸ்தர்களைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு பதில் சொல்லவில்லை. அப்பொழுது சவுல்: மக்களின் தலைவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்து அறியுங்கள். அது என் மகனான யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் நிச்சயமாக சாகவேண்டும் என்று இஸ்ரவேலை இரட்சிக்கிற யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அதற்குப்பின்பு அவன் இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் மகனான யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; மக்கள் சவுலைப்பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள். அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா வை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு உண்மையை விளங்கச்செய்யும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, மக்களோ தப்பினார்கள். எனக்கும் என் மகனான யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது. அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான். அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான். மக்களோ சவுலை பார்த்து: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலை செய்யப்படலாமா? அது கூடாது; அவனுடைய தலையில் இருக்கிற ஒரு முடியும் தரையிலே விழப்போகிறதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடி, மக்கள் அவனைத் தப்புவித்தார்கள். சவுல் பெலிஸ்தர்களை பின்தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தர்களும் தங்கள் இடத்திற்குப் போய்விட்டார்கள்.

1 சாமுவேல் 14:1-46 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்று தன் ஆயுதங்களைத் தூக்கி வந்த இளைஞனோடு சவுலின் குமாரனாகிய யோனத்தான், பேசினான், “பள்ளத்தாக்கின் இன்னொரு பக்கத்தில் உள்ள பெலிஸ்தர்களின் முகாமிற்கு போவோம்” என்றான். தந்தையிடம் சொல்லாமல் போனான். சவுல் மலையோரத்தில் மிக்ரோனில் ஒரு மாதுளை மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தான். அதனருகில் போரடிக்கிற களம் இருந்தது. அவனோடு 600 பேர் இருந்தனர். அந்நாட்களில் அகியா என்ற ஒருவன் இருந்தான். இப்போது அகியா ஆசாரியனாயிருந்தான். அகியா ஏபோத்தைத் தரித்து ஆசாரிய ஊழியம் செய்துவந்தான். அகியா என்பவன் இக்கபோத்தின் சகோதரனான அகிதூபின் குமாரன். இக்கபோத் பினெகாசின் குமாரன். பினெகாசு ஏலியின் குமாரன். சீலோவில் முன்பு ஏலி ஆசாரியனாக இருந்தான். யோனத்தான் தனியாக விட்டுப் போயிருந்ததை யாரும் அறியவில்லை. அவன் சென்ற வழியில் இரு பக்கமும் போசே, சேனே எனும் இரு பெரும் பாறைகள் இருந்தன. இந்தக் கணவாய் வழியாகச் செல்ல யோனத்தான் திட்டமிட்டான். இந்தப் பாறைகளில் ஒன்று மிக்மாசை நோக்கியும் இன்னொன்று கிபியாவை நோக்கியும் இருந்தன. யோனத்தான் தன்னுடைய ஆயுதங்களைச் சுமந்து வந்த இளம் உதவியாளனிடம், “வா, நாம் அந்நியரின் முகாமுக்குப் போவோம், அவர்களைத் தோற்கடிக்க ஒருவேளை கர்த்தர் நமக்கு உதவலாம்! கர்த்தரை யாராலும் தடுக்க முடியாது. நமது எண்ணிக்கை அதிகமோ அல்லது குறைவோ அது காரியமல்ல” என்றான். அதற்கு ஆயுதங்களை சுமந்து வந்த இளம் உதவியாளன் “உங்களுக்குச் சரியென்று தோன்றுவதைச் செய்யுங்கள், நான் எப்போதும் உங்களோடு இருப்பேன்” என்றான். அப்பொழுது யோனத்தான், “சரி போவோம், பள்ளத்தாக்கைக் கடந்து பெலிஸ்தர்களின் எல்லைக்குள் செல்வோம். நம்மை அவர்கள் பார்க்கும்படி செய்வோம். அவர்கள், ‘நாங்கள் வரும்வரை அங்கேயே நில்லுங்கள்’ என்றால் நாம் அங்கேயே நிற்போம். மேலே செல்லமாட்டோம். ஆனால் அவர்கள், ‘இங்கே வாருங்கள்’ என்றால் போவோம். ஏனென்றால் கர்த்தர் நாம் அவர்களைத் தோற்கடிக்க அனுமதிக்கிறார் என்பதற்கு இது தேவனுடைய அடையாளமாகும்” என்றான். பெலிஸ்தர் பார்வையில் படுமாறு யோனத்தானும், இளம் உதவியாளனும் நடந்தனர். அவர்களோ, “பார்! இஸ்ரவேலர்கள் துவாரங்களில் ஒளிந்திருந்து வெளியே வருகிறார்கள்” என்றனர். கோட்டைக்குமேலிருந்த பெலிஸ்தர், “இங்கே வாருங்கள், உங்களுக்குப் பாடம் கற்பிக்கிறோம்!” என அவர்களை நோக்கிக் கூவினர். யோனத்தான் தன் உதவியாளரிடம், “மலைக்கு என்னைப் பின்தொடர்ந்து வா, கர்த்தர் பெலிஸ்தர்களை தோற்கடிக்க அடையாளம் காட்டினார்!” என்றான். யோனத்தான் தன் கைகளாலும், கால்களாலும் பற்றியபடி மலைமீது ஏறினான். உதவியாளன் பின்னால் ஏறினான். அவர்கள் இருவரும் பெலிஸ்தர்களைத் தாக்கி, முதலில் 20 பேரை கொன்றனர். முன்னால் வருகின்றவர்களை யோனத்தானும், பின்னால் வருகிறவரை உதவியாளனும் கொன்றனர். வயலிலும், கோட்டையிலும், முகாமிலும் உள்ள வீரர்கள் இவர்களைக் கண்டு பயந்தனர்! பூமி அதிர்ந்தது. இதைக் கண்டு மிகுந்த தைரியமுள்ள வீரர்களும் மென்மேலும் பயந்தனர். பென்யமீன் நாட்டில் கிபியாவிலே சவுலின் காவல்காரர்கள், பெலிஸ்தர் பல்வேறு திசைகளில் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். சவுல், “நம்மவர்களை எண்ணிக் கணக்கிடுங்கள். முகாமிற்கு வெளியே யார் போனது என்று தெரியவேண்டும்” என்றான். அவர்கள் ஆட்களின் தொகையைக் கணக்கிட்டனர். யோனத்தானும் அவனது உதவியாளனும் காணவில்லை. சவுல் அகியாவிடம், “கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை கொண்டுவா!” என்றான். (அப்போது கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி அவர்களோடுதான் இருந்தது.) சவுல் ஆசாரியனாகிய அகியாவிடம் பேசிக்கொண்டே தேவனுடைய ஆலோசனைக்குக் காத்திருந்தான். பெலிஸ்தர்களின் முகாமில் கூச்சலும் குழப்பமும் மிகுந்தன. இதனால் சவுல் பொறுமையை இழந்து, ஆசாரியனாகிய அகியாவிடம், “இது போதும்! உன் கைகளைத் தளர்த்தி ஜெபத்தை நிறுத்து!” என்றான். சவுல் தன் படையைச் சேர்த்துக்கொண்டு சண்டையிடச் சென்றான். பெலிஸ்தர்கள் குழப்பமுற்று தங்களுக்குள் வாளால் மோதிக்கொண்டனர். ஏற்கெனவே சில எபிரெயர் பெலிஸ்தருக்கு அடிமைவேலை செய்து கொண்டிருந்தனர்! அவர்களும் இப்போது இஸ்ரவேல் மற்றும் சவுல் யோனத்தானோடு சேர்ந்தனர். எப்பிராயீம் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த இஸ்ரவேலர் பெலிஸ்தரின் தோல்வியைக் கேள்விப்பட்டு அவர்களும் சேர்ந்து துரத்தினார்கள். எனவே, கர்த்தர் அன்று இஸ்ரவேலரை காப்பாற்றினார். அச்சண்டை பெத்தாவேனைக் கடந்தது. சவுலிடம் இப்போது 10,000 வீரர்களும் முழுபடையும் இருந்தனர். மலைநாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் இந்தப் போர் பரவியது. அன்று சவுல் ஒரு பெரிய தவறு செய்தான். இஸ்ரவேலர் களைப்பாகவும் பசியோடும் இருந்தனர். அவர்களிடம், “மாலைக்கு முன் யாராவது உண்டாலோ, பகைவரை வெல்லுமுன் யாராவது உண்டாலோ தண்டிக்கப்படுவார்கள்!” என்று ஆணையிட்டிருந்தான். எனவே யாரும் அன்று உண்ணாமல் இருந்தனர். சிலர் போர் செய்த வண்ணம் காட்டுப் பகுதிக்குப் போனபோது தேன் கூடுகளைக் கண்டும் ஆணைக்குப் பயந்து உண்ணவில்லை. ஆனால் யோனத்தானுக்கு அவற்றைப்பற்றி எந்த விஷயமும் தெரியாது. உண்ணாமலிருக்க ஜனங்கள் நிர்பந்திக்கப்பட்டதைப்பற்றி அவன் எதுவும் அறிந்திருக்கவில்லை. யோனத்தானின் கையில் ஒரு கோல் இருந்தது. கோலின் ஒரு முனையைத்தேன் கூட்டில் நுழைத்து வெளியே எடுத்து, அத்தேனைப் பருகினான். பருகி முடிந்ததும் மிகவும் தெம்பாக இருப்பதாக உணர்ந்தான். ஒரு வீரன், “உமது தந்தை ஒரு சிறப்பான ஆணைச் செய்யும்படி எல்லா வீரர்களையும் நிர்பந்தித்திருக்கிறார். யாரேனும் ஒருவர் இன்றைய தினம் உண்டால் தண்டிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்! எவரும் உண்ணவில்லை அதனால்தான் எல்லாரும் சோர்வாக உள்ளனர்” என்றான். யோனத்தானோ, “என் தந்தை ஏராளமான துன்பங்களை நாட்டுக்குத் தந்துள்ளார்! கொஞ்சம் தேன் உண்டதும் எனக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது என்பதை நீயே பார்! பகைவரிடமிருந்து எடுத்த உணவை உண்டிருந்தால் நாம் மேலும் உற்சாகமாக இருந்திருக்க முடியும். நாம் இன்னும் அதிக பெலிஸ்தர்களைக் கொன்றிருக்கலாம்!” என்றான். அன்று இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களைத் தோற்கடித்து, அவர்களை மிக்மாஸ் முதல் ஆயலோன் வரை துரத்தினபடியால் களைப்பாகவும், பசியாகவும் இருந்தனர். அவர்கள் ஆடுகளையும், கன்றுகுட்டிகளையும் பெலிஸ்தர்களிடமிருந்து கைப்பற்றி கொன்று தின்றனர். அம்மிருகங்களின் இரத்தம் இன்னும் உறையாதிருந்தது! ஒருவன் சவுலிடம், “பாருங்கள்! ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டனர். அவர்கள் இறைச்சியை அதில் இரத்தம் இருக்கும்போது தின்று கொண்டிருக்கின்றனர்!” என்றான். சவுலோ, “நீங்கள் பாவம் செய்திருக்கிறீர்கள்! இப்போது இங்கே பெரிய கல்லை உருட்டிக் கொண்டு வாருங்கள்” என்றான். மேலும், “ஜனங்களிடம் போங்கள், இரத்தத்தோடு இருப்பதைச் சாப்பிடுவதால் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டீர்கள். தங்கள் மாட்டையும் ஆட்டையும் என் முன் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லுங்கள். இங்குதான் அவர்கள் ஆடுகளையும், மாடுகளையும் கொல்லவேண்டும். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யவேண்டாம். இரத்தம் உறையாதிருக்கிற இறைச்சியை உண்ணவேண்டாம்” என்றான். அன்று இரவு ஒவ்வொருவனும் தங்கள் மிருகங்களைக் கொண்டு வந்து அங்கே கொன்றனர். பின் சவுல் அங்கே கர்த்தருக்காக பலிபீடம் கட்டினான். சவுல் தானாகவே கர்த்தருக்காக அப்பலிபீடத்தைக் கட்டத் தொடங்கினான்! சவுல், “இன்று இரவு பெலிஸ்தர்களுக்கும் பின்னால்போய் அவர்களைக் கொன்று அவர்களுடையதை எடுத்து வருவோம்!” என்று சொன்னான். படையினர், “உங்களுக்குச் சரி என்று படுவதைச் செய்யுங்கள்” என்று சொன்னார்கள். ஆனால் ஆசாரியனோ, “தேவனைக் கேட்போம்” என்றான். எனவே சவுல் தேவனிடம், “பெலிஸ்தர்களைத் துரத்திப் போகலாமா? அவர்களைத் தோற்கடிக்கவிடுவீரா?” என்று கேட்டான். ஆனால் தேவன் அன்று சவுலுக்கு பதில் சொல்லவில்லை. எனவே, “எல்லாத் தலைவர்களையும் கூப்பிடுங்கள்! இன்று பாவம் செய்தது யாரெனப் பார்ப்போம். நான் இஸ்ரவேலை காக்கும் கர்த்தருடைய பேரில் சத்தியம் செய்திருக்கிறேன். என் மகனே பாவம் செய்தாலும் சாகடிக்கப்படுவான்” என்றான். யாரும் பதில் சொல்லவில்லை. பின் அவன், “நீங்கள் அந்தப் பக்கம் நில்லுங்கள், நானும் என் குமாரனும் இந்தப் பக்கம் நிற்போம்” என்றான். வீரர்களும், “உங்கள் விருப்பம் ஐயா!” என்றனர். அப்பொழுது சவுல், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, உமது தொண்டனுக்கு இன்று ஏன் பதில் சொல்லவில்லை? நானோ அல்லது என் மகனோ பாவம் செய்திருந்தால், ஊரீம்மைத் தாரும். உம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்திருந்தால் தும்மீம்மைத் தாரும்” என்று ஜெபித்தான். சவுலும் யோனத்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனங்கள் தப்பினார்கள். சவுல் “மீண்டும் சீட்டைப் போட்டு, பாவி நானா என் குமாரனா” என்று கேட்டான். யோனத்தான் மேல் சீட்டு விழுந்தது. சவுல் மகனிடம், “சொல் என்ன பாவம் செய்தாய்?” என்று கேட்டான். அதற்கு யோனத்தான், “நான் என் கோலின் நுனியில் இருந்த கொஞ்சம் தேனை சுவைத்தேன். அதற்காக நான் மரிக்க வேண்டுமா?” என்று கேட்டான். ஆனால் சவுல், “என் சத்தியத்தை நான் காப்பாற்றாவிட்டால் தேவன் என்னைத் தண்டிப்பார்! நீ மரிக்கத்தான் வேண்டும்” என்றான். ஆனால் வீரர்களோ, “இன்று யோனத்தான் இஸ்ரவேலருக்குப் பெரிய வெற்றியைத் தந்தான். அவன் மரிக்கக்கூடாது! ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தில் நாங்களும் சத்தியம் செய்கிறோம். யோனத்தானின் தலையிலிருந்து யாரும் ஒரு மயிரையேனும் அகற்ற முடியாது! தேவன் இன்று அவனுக்குப் பெலிஸ்தர்களை வெல்ல உதவினார்!” என்றனர். எனவே யோனத்தானை ஜனங்கள் காப்பாற்றினார்கள். அவன் கொல்லப்படவில்லை. சவுல் பெலிஸ்தர்களைத் துரத்தாததால் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குப் போனார்கள்.