1 சாமுவேல் 13:8-23

1 சாமுவேல் 13:8-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாமுயேல் குறிப்பிட்ட காலமான அந்த ஏழுநாள்வரை சாமுயேலுக்காக சவுல் காத்திருந்தான். சாமுயேலோ கில்காலுக்கு வரவில்லை, சவுலின் மனிதர் சிதறுண்டு போகத் தொடங்கினார்கள். எனவே சவுல், “தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். சவுல் தகன காணிக்கையைச் செலுத்தினான். அவன் தகன காணிக்கையைச் செலுத்தி முடியும்வேளையில் சாமுயேல் அங்கே வந்துசேர்ந்தான். அப்பொழுது சவுல் அவனை வாழ்த்துவதற்காக வெளியே போனான். அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “நீ என்ன செய்துவிட்டாய்!” என்று கேட்டான். அதற்கு சவுல், “மனிதர் என்னை விட்டுச் சிதறிப்போனதையும், நீர் குறிப்பிட்ட நாளில் இங்கு வராததையும், பெலிஸ்தியர் மிக்மாசிலே கூடிவந்திருப்பதையும் நான் கண்டேன். அப்போது, ‘பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு வரப்போகிறார்களே. நானோ இன்னும் யெகோவாவினுடைய தயவைத் தேடவில்லை’ என்று எண்ணியே தகன காணிக்கையைச் செலுத்தத் துணிந்தேன்” என்றான். அதற்குச் சாமுயேல், “நீ புத்தியீனமாய் நடந்துவிட்டாயே! உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த கட்டளையை நீ கைக்கொள்ளவில்லை. நீ அப்படிக் கைக்கொண்டிருந்தால் யெகோவா உன் அரசாட்சியை இஸ்ரயேலின்மேல் என்றென்றும் உறுதிப்படுத்தியிருப்பார். ஆனால் இப்பொழுது உன்னுடைய அரசாட்சியோ நிலைநிற்காது. யெகோவாவினுடைய கட்டளையை நீ கைக்கொள்ளாது மீறியதால், யெகோவா தன் இருதயத்திற்கு உகந்த மனிதனைத் தெரிந்து அவனைத் தன் மக்களுக்குத் தலைவனாக நியமித்திருக்கிறார்” என்றான். சாமுயேல் கில்காலிலிருந்து புறப்பட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான். சவுல் தன்னோடு இருந்தவர்களைக் கணக்கிட்டுப் பார்த்தபோது கிட்டத்தட்ட அறுநூறு பேரிருந்தார்கள். பெலிஸ்தியர் மிக்மாசிலே முகாமிட்டிருந்தபோது சவுலும், அவன் மகன் யோனத்தானும், அவனோடிருந்த மனிதரும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் தங்கியிருந்தார்கள். பெலிஸ்தியரின் முகாமிலிருந்து திடீர் தாக்குதல் செய்யும் குழுக்கள் மூன்று படைப் பிரிவுகளாகப் போயினர். முதற்படை சூவாவின் சுற்றுப்புறத்திலுள்ள ஒப்ராவை நோக்கிப் போனது. வேறோரு பிரிவு பெத் ஓரோனை நோக்கிப் போனது. மூன்றாவது பிரிவு பாலைவனப் பக்கமாய் உள்ள செபோயீம் பள்ளத்தாக்கின் மேலாக இருக்கும் எல்லை நாட்டை நோக்கிப் போனது. இஸ்ரயேல் நாடு முழுவதிலும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை. ஏனெனில் எபிரெயர் வாள்களையும், ஈட்டிகளையும் செய்யாதபடி பெலிஸ்தியர் பார்த்துக்கொண்டார்கள். எனவே இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் கலப்பைகளின் இரும்புகள், மண்வெட்டிகள், கோடரிகள், அரிவாள்கள் முதலியவற்றைத் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு பெலிஸ்தியரிடம் போகவேண்டியிருந்தது. கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும் கூர்மையாக்குவதற்கு மூன்றில் இரண்டு சேக்கல் வெள்ளியும், முள் ஆயுதங்களையும், கோடரிகளையும் கூர்மையாக்குவதற்கும், தாற்றுக்கோல்களுக்கு முனை தீட்டுவதற்கும் மூன்றில் ஒரு சேக்கல் வெள்ளியும் கட்டணமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே யுத்தநாளன்று சவுலுடனும், யோனத்தானுடனும் இருந்த வீரர்களில் ஒருவரது கையிலேனும் வாளோ, ஈட்டியோ இருக்கவில்லை. சவுலும், அவன் மகன் யோனத்தானுமே ஆயுதங்களை வைத்திருந்தார்கள். பெலிஸ்தியரின் ஒரு படைப் பிரிவு மிக்மாசிக்கு வெளியே கணவாய் மட்டும் வந்தது.

1 சாமுவேல் 13:8-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் தனக்குச் சாமுவேல் குறித்தகாலத்தின்படி ஏழுநாள்வரை காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, மக்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிக்கிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வரவேற்க அவனுக்கு எதிராக போனான். நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: மக்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாளில் நீர் வராததையும், பெலிஸ்தர்கள் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் பார்த்ததினால், கில்காலில் பெலிஸ்தர்கள் எனக்கு விரோதமாக வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் யெகோவாவுடைய இரக்கத்தைத் தேடவில்லை என்றும் நினைத்துத் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: முட்டாள் தனமாக செய்தீர்; உம்முடைய தேவனாகிய யெகோவா உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; கைக்கொண்டிருந்தால் யெகோவா இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்ஜியத்தை என்றென்றும் உறுதிப்படுத்துவார். இப்போதோ உம்முடைய ஆட்சி நிலைநிற்காது; யெகோவா தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனைத் தமக்குத் தேடி, அவனைக் யெகோவா தம்முடைய மக்கள்மேல் தலைவனாக இருக்கக் கட்டளையிட்டார்; யெகோவா உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான். சாமுவேல் எழுந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடு இருக்கிற மக்களைக் கணக்கெடுக்கிறபோது, ஏறக்குறைய 600 பேர் இருந்தார்கள். சவுலும் அவனுடைய மகனான யோனத்தானும் அவர்களோடு இருக்கிற மக்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தர்களோ மிக்மாசிலே முகாமிட்டிருந்தார்கள். கொள்ளைக்காரர்கள் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து மூன்று படைகளாகப் புறப்பட்டு வந்தார்கள்; ஒரு படை ஒப்ரா வழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப்போனது. வேறொரு படை பெத்தொரோன் வழியாகப் போனது; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாகப் போனது. எபிரெயர்கள் பட்டயங்களையும் ஈட்டிகளையும் உண்டாக்காதபடிப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர்கள் சொல்லியிருந்ததால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை. இஸ்ரவேலர்கள் அனைவரும் அவரவர் தங்கள் கலப்பைகளின் இரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு, பெலிஸ்தர்களிடத்திற்குப் போகவேண்டியதாக இருந்தது. கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், மூன்று கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், கதிர் அரிவாளையும் கூர்மையாக்குவதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது. யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவனுடைய மகனான யோனத்தானையும் தவிர, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற மக்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாமல் இருந்தது. பெலிஸ்தர்களின் முகாம் மிக்மாசிலிருந்து போகிற வழிவரை பரவியிருந்தது.

1 சாமுவேல் 13:8-23 பரிசுத்த பைபிள் (TAERV)

சாமுவேல் சவுலை கில்காலில் சந்திப்பதாகக் கூறியிருந்தான். சவுல் 7 நாட்கள் காத்திருந்தான். ஆனால், சாமுவேல் இன்னும் கில்காலுக்கு வரவில்லை, வீரர்கள் சவுலை விட்டு விலக ஆரம்பித்தனர். ஆகையால் சவுல், “தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொண்டு வாருங்கள்” என்று கூறி தகன பலிகளைச் செலுத்தினான். அதைச் செய்து முடிக்கும் தருவாயில் சாமுவேல் வந்தான். சவுல் அவனை சந்திக்க முன் சென்றான். சாமுவேல் “என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்று கேட்டான். அதற்கு சவுல் “வீரர்கள் என்னை விட்டு விலகுவதைப் பார்த்தேன். நீங்களும் சரியான நேரத்தில் வரவில்லை. பெலிஸ்தர்கள் மிக்மாசில் கூடிக்கொண்டிருந்தனர். நான், ‘அவர்கள் வந்து கில்காலில் என்னைத் தாக்குவார்கள்’ என எண்ணினேன். நான் இதுவரை கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை! எனவே தகனபலி செலுத்த என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன்” என்றான். சாமுவேலோ, “நீ முட்டாள்தனமாக இதைச் செய்தாய்! நீ உனது தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீ தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவர் உன் குடும்பத்தை என்றென்றைக்கும் இஸ்ரவேலை ஆளச் செய்திருப்பார். இப்போது உனது அரசு தொடராது. கர்த்தர் தனக்குக் கீழ்ப்படிகிறவனையே தேடிக்கொண்டிருக்கிறார்! எனவே கர்த்தர் அந்த மனிதனைத் தெரிந்துக்கொண்டார். கர்த்தர் தம் ஜனங்களுக்காக அவனை தேர்ந்தெடுப்பார். கர்த்தருடைய கட்டளைகளுக்கு நீ கீழ்ப்படியவில்லை. எனவே புதிய தலைவரை தேர்ந்தெடுத்தார்” என்றான். பின் சாமுவேல் எழுந்து கில்காலை விட்டு விலகினான். சவுலும், மீதியாக இருந்த அவனது சேனையும் கில்காலை விட்டு பென்யமீனில் உள்ள கிபியாவிற்கு சென்றனர். தன்னிடம் உள்ளவர்களை எண்ணினான். அவர்கள் 600 பேர், சவுல், அவனது குமாரன் யோனத்தான், வீரர்கள் அனைவரும் கிபியாவிற்குச் சென்றனர். பெலிஸ்தர்கள் மிக்மாசில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் அப்பகுதியில் வசித்து வந்த இஸ்ரவேலரைத் தண்டிக்கத் தீர்மானித்தனர். எனவே, அவர்களது சிறந்த வீரர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கினார்கள். அவர்கள் மூன்றாகப் பிரிந்து ஒரு குழு வடக்கே சூகாலின் அருகிலுள்ள ஒப்ரா வழியிலும் இரண்டாவது குழு தென் கிழக்கே பெத்தொரோன் சாலையிலும் சென்றது. மூன்றாவது படை வனாந்தரத்தை நோக்கிப் போகும் செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான வழியில் சென்றது. இஸ்ரவேலர்கள் யாருக்கும் இரும்பு ஆயுதங்களைச் செய்யத் தெரியாது. இஸ்ரவேலில் இரும்புக் கொல்லர்கள் யாரும் இல்லை. பெலிஸ்தர்கள் அவர்களுக்கு ஆயுதம் செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. அவர்கள் கத்தி, வாள், ஈட்டிகளை செய்துவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள். பெலிஸ்தர் மட்டுமே தங்கள் ஆயுதங்களைக் கூர்படுத்த அறிந்திருந்தனர். இஸ்ரவேலர் தங்கள் கடப்பாரை, மண் வெட்டி, முக்கூருள்ள வேலாயுதங்கள், கோடரி, தாற்றுக்கோல் போன்றவற்றை கூர்மையாக்க பெலிஸ்தரிடம் சென்றனர். பெலிஸ்தர்களின் கொல்லர்கள் கடப்பாரை, மண்வெட்டியை கூர்மைப்படுத்த 1/3, 1/6 சேக்கல் வெள்ளியை வசூலித்தனர். எனவே, போரிடும் நாளில் சவுலோடு சென்ற இஸ்ரவேலர்களின் கையில் வாளோ அல்லது கேடயமோ எதுவும் இல்லை. சவுலிடமும் அவன் குமாரன் யோனத்தானிடமும் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன. ஒரு பெலிஸ்தர் சேனை மிக்மாசியிலிருந்து போகிற மலைப்பாதை மட்டும் காத்துக் கொண்டிருந்தது.

1 சாமுவேல் 13:8-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் தனக்குச் சாமுவேல் குறித்தகாலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். அப்பொழுது சவுல்: சர்வாங்கதகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்கதகனபலியைச் செலுத்தினான். அவன் சர்வாங்கதகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டு போனான். நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே, கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றபடி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான். சாமுவேல் எழுந்திருந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகை பார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள். சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள். கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டு வந்தார்கள்; ஒரு படை ஒப்ரா வழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப்போயிற்று. வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று. எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை. இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது. கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது. யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது. பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.