1 சாமுவேல் 13:16-23
1 சாமுவேல் 13:16-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பெலிஸ்தியர் மிக்மாசிலே முகாமிட்டிருந்தபோது சவுலும், அவன் மகன் யோனத்தானும், அவனோடிருந்த மனிதரும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் தங்கியிருந்தார்கள். பெலிஸ்தியரின் முகாமிலிருந்து திடீர் தாக்குதல் செய்யும் குழுக்கள் மூன்று படைப் பிரிவுகளாகப் போயினர். முதற்படை சூவாவின் சுற்றுப்புறத்திலுள்ள ஒப்ராவை நோக்கிப் போனது. வேறோரு பிரிவு பெத் ஓரோனை நோக்கிப் போனது. மூன்றாவது பிரிவு பாலைவனப் பக்கமாய் உள்ள செபோயீம் பள்ளத்தாக்கின் மேலாக இருக்கும் எல்லை நாட்டை நோக்கிப் போனது. இஸ்ரயேல் நாடு முழுவதிலும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை. ஏனெனில் எபிரெயர் வாள்களையும், ஈட்டிகளையும் செய்யாதபடி பெலிஸ்தியர் பார்த்துக்கொண்டார்கள். எனவே இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் கலப்பைகளின் இரும்புகள், மண்வெட்டிகள், கோடரிகள், அரிவாள்கள் முதலியவற்றைத் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு பெலிஸ்தியரிடம் போகவேண்டியிருந்தது. கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும் கூர்மையாக்குவதற்கு மூன்றில் இரண்டு சேக்கல் வெள்ளியும், முள் ஆயுதங்களையும், கோடரிகளையும் கூர்மையாக்குவதற்கும், தாற்றுக்கோல்களுக்கு முனை தீட்டுவதற்கும் மூன்றில் ஒரு சேக்கல் வெள்ளியும் கட்டணமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே யுத்தநாளன்று சவுலுடனும், யோனத்தானுடனும் இருந்த வீரர்களில் ஒருவரது கையிலேனும் வாளோ, ஈட்டியோ இருக்கவில்லை. சவுலும், அவன் மகன் யோனத்தானுமே ஆயுதங்களை வைத்திருந்தார்கள். பெலிஸ்தியரின் ஒரு படைப் பிரிவு மிக்மாசிக்கு வெளியே கணவாய் மட்டும் வந்தது.
1 சாமுவேல் 13:16-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சவுலும் அவனுடைய மகனான யோனத்தானும் அவர்களோடு இருக்கிற மக்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தர்களோ மிக்மாசிலே முகாமிட்டிருந்தார்கள். கொள்ளைக்காரர்கள் பெலிஸ்தர்களின் முகாமிலிருந்து மூன்று படைகளாகப் புறப்பட்டு வந்தார்கள்; ஒரு படை ஒப்ரா வழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப்போனது. வேறொரு படை பெத்தொரோன் வழியாகப் போனது; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாகப் போனது. எபிரெயர்கள் பட்டயங்களையும் ஈட்டிகளையும் உண்டாக்காதபடிப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர்கள் சொல்லியிருந்ததால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லனும் காணப்படவில்லை. இஸ்ரவேலர்கள் அனைவரும் அவரவர் தங்கள் கலப்பைகளின் இரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குவதற்கு, பெலிஸ்தர்களிடத்திற்குப் போகவேண்டியதாக இருந்தது. கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், மூன்று கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், கதிர் அரிவாளையும் கூர்மையாக்குவதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது. யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவனுடைய மகனான யோனத்தானையும் தவிர, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற மக்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாமல் இருந்தது. பெலிஸ்தர்களின் முகாம் மிக்மாசிலிருந்து போகிற வழிவரை பரவியிருந்தது.
1 சாமுவேல் 13:16-23 பரிசுத்த பைபிள் (TAERV)
சவுல், அவனது குமாரன் யோனத்தான், வீரர்கள் அனைவரும் கிபியாவிற்குச் சென்றனர். பெலிஸ்தர்கள் மிக்மாசில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் அப்பகுதியில் வசித்து வந்த இஸ்ரவேலரைத் தண்டிக்கத் தீர்மானித்தனர். எனவே, அவர்களது சிறந்த வீரர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கினார்கள். அவர்கள் மூன்றாகப் பிரிந்து ஒரு குழு வடக்கே சூகாலின் அருகிலுள்ள ஒப்ரா வழியிலும் இரண்டாவது குழு தென் கிழக்கே பெத்தொரோன் சாலையிலும் சென்றது. மூன்றாவது படை வனாந்தரத்தை நோக்கிப் போகும் செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான வழியில் சென்றது. இஸ்ரவேலர்கள் யாருக்கும் இரும்பு ஆயுதங்களைச் செய்யத் தெரியாது. இஸ்ரவேலில் இரும்புக் கொல்லர்கள் யாரும் இல்லை. பெலிஸ்தர்கள் அவர்களுக்கு ஆயுதம் செய்யக் கற்றுக்கொடுக்கவில்லை. அவர்கள் கத்தி, வாள், ஈட்டிகளை செய்துவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள். பெலிஸ்தர் மட்டுமே தங்கள் ஆயுதங்களைக் கூர்படுத்த அறிந்திருந்தனர். இஸ்ரவேலர் தங்கள் கடப்பாரை, மண் வெட்டி, முக்கூருள்ள வேலாயுதங்கள், கோடரி, தாற்றுக்கோல் போன்றவற்றை கூர்மையாக்க பெலிஸ்தரிடம் சென்றனர். பெலிஸ்தர்களின் கொல்லர்கள் கடப்பாரை, மண்வெட்டியை கூர்மைப்படுத்த 1/3, 1/6 சேக்கல் வெள்ளியை வசூலித்தனர். எனவே, போரிடும் நாளில் சவுலோடு சென்ற இஸ்ரவேலர்களின் கையில் வாளோ அல்லது கேடயமோ எதுவும் இல்லை. சவுலிடமும் அவன் குமாரன் யோனத்தானிடமும் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன. ஒரு பெலிஸ்தர் சேனை மிக்மாசியிலிருந்து போகிற மலைப்பாதை மட்டும் காத்துக் கொண்டிருந்தது.
1 சாமுவேல் 13:16-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள். கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டு வந்தார்கள்; ஒரு படை ஒப்ரா வழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப்போயிற்று. வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று. எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துகொள்ள வேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை. இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது. கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது. யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது. பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.