1 சாமுவேல் 12:19-24
1 சாமுவேல் 12:19-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவர்கள் அனைவரும் சாமுயேலிடம், “நாங்கள் செய்த பாவங்கள் எல்லாவற்றுடனும் ஒரு அரசன் வேண்டுமென்று கேட்டு இந்தப் பாவத்தையும் சேர்த்துக்கொண்டோமே. ஆகையால் நாங்கள் சாகாதபடிக்கு உமது இறைவனாகிய யெகோவாவிடம் உமது அடியவர்களான எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்றார்கள். அப்பொழுது சாமுயேல் அவர்களிடம், “பயப்படவேண்டாம்; இந்தத் தீமையான செயல்களையெல்லாம் செய்திருக்கிறீர்கள். ஆகிலும் யெகோவாவைவிட்டு விலகாமல் உங்கள் முழு இருதயத்தோடும் அவருக்குப் பணிசெய்யுங்கள். பயனற்ற தெய்வச் சிலைகளுக்குப் பின்னால் திரும்பவும் செல்லவேண்டாம். அவை பயனற்றவையாகையால் உங்களுக்கு அவை எந்தவித நன்மை செய்யவோ, அல்லது உங்களை விடுதலையாக்கவோ மாட்டாது. யெகோவாவின் மகத்துவமான பெயருக்காக அவர் தன் மக்களைத் தள்ளிவிடமாட்டார். ஏனெனில் அவர் உங்களைத் தன் சொந்த மக்களாக்கிக்கொள்ள விருப்பம்கொண்டாரே. என்னைப் பொறுத்தமட்டில் நான் உங்களுக்காக மன்றாடத் தவறி யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம்செய்வது எனக்குத் தூரமாயிருக்கட்டும். எனவே நான் உங்களுக்கு நன்மையும், நீதியுமான வழியைக் கற்பிப்பேன். நீங்கள் யெகோவாவுக்கு பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவருக்குப் பணிசெய்யும்படி எவ்வளவு பெரிய செயல்களை அவர் உங்களுக்காகச் செய்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
1 சாமுவேல் 12:19-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடி உம்முடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் சேர்த்துக்கொண்டோம் என்று மக்கள் எல்லோரும் சொன்னார்கள். அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: பயப்படாதீர்கள்; நீங்கள் இந்தத் தீங்கையெல்லாம் செய்தீர்கள்; ஆனாலும் யெகோவாவை விட்டுப் பின்வாங்காமல் யெகோவாவை உங்கள் முழு இருதயத்தோடும் தொழுதுகொள்ளுங்கள். பயனற்றதும், விடுவிக்கமுடியாததுமாக இருக்கிற வெறுமையானவைகளைப் பின்பற்றும்படி திரும்பாதீர்கள்; அவைகள் வீணானவைகளே. யெகோவா உங்களைத் தம்முடைய மக்களாக்கிக்கொள்வதற்கு பிரியமானதால், யெகோவா தம்முடைய மேன்மையான நாமத்தினிமித்தம் தமது மக்களைக் கைவிடமாட்டார். நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்கிறவனாக இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருக்கட்டும்; நன்மையும் சரியானதுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். நீங்கள் எப்படியும் யெகோவாவுக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் தொழுதுகொள்ளக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
1 சாமுவேல் 12:19-24 பரிசுத்த பைபிள் (TAERV)
அனைத்து ஜனங்களும் சாமுவேலிடம், “உம்முடைய அடியார்களாகிய எங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபியுங்கள், நாங்கள் அழிந்துவிட விட்டு விடாதேயும்! நாங்கள் பலமுறை பாவம் செய்திருக்கிறோம். இப்போது ராஜாவைக் கேட்டு மேலும் பாவம் செய்து விட்டோம்” என்றனர். சாமுவேல் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இது உண்மை! நீங்கள் எல்லா தீமைகளையும் செய்தீர்கள். ஆனால் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்கள். முழு மனதோடு கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். விக்கிரகங்கள் வெறும் சிலைகளே அவைகள் உதவாது. அவற்றைத் தொழுதுகொள்ள வேண்டாம். விக்கிரகங்கள் உங்களுக்கு உதவாது! காப்பாற்றாது! அவைகள் ஒன்றுமில்லை. “ஆனால், கர்த்தர் தம் ஜனங்களைக் கைவிடமாட்டார். கர்த்தர் உங்களை தமது சொந்த ஜனங்களாக ஆக்கிக்கொள்ள விருப்பம் கொண்டார். எனவே, அவரது பெரிய பெயரினிமித்தம் தம் ஜனங்களை அவர் விட்டுவிடமாட்டார். என்னைப் பொறுத்த வரை உங்களுக்காக நான் ஜெபிப்பதை என்றும் நிறுத்தமாட்டேன். நிறுத்தினால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவனாவேன். நல்வாழ்க்கைக்கான சரியான வழியை போதித்துக்கொண்டே இருப்பேன். ஆனால், நீங்கள் கர்த்தரை கனம் பண்ண வேண்டும். முழு இருதயத்துடன் அவருக்கு சேவை செய்ய வேண்டும். அவர் செய்த அதிசயமான காரியங்களை மறவாதீர்கள்!
1 சாமுவேல் 12:19-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடிக்கு உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் கூட்டிக்கொண்டோம் என்று ஜனங்கள் எல்லாரும் சொன்னார்கள். அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள். விலகிப்போகாதிருங்கள்; மற்றபடி பிரயோஜனமற்றதும் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே. கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார். நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.