1 சாமுவேல் 12:1-25
1 சாமுவேல் 12:1-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவந்தேன். இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம்பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள். அப்புறம் சாமுவேல் ஜனங்களை நோக்கி: மோசேயையும், ஆரோனையும், ஏற்படுத்தினவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே . இப்பொழுதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள். யாக்கோபு எகிப்திலே போயிருக்கும்போது, உங்கள் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள். அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள். ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்போதும் எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி இரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள். அப்பொழுது கர்த்தர் யெருபாகாலையும், பேதானையும், யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்தார். அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். இப்பொழுதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள். நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும். இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள். இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும்படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து; சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடிக்கு உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் கூட்டிக்கொண்டோம் என்று ஜனங்கள் எல்லாரும் சொன்னார்கள். அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள். விலகிப்போகாதிருங்கள்; மற்றபடி பிரயோஜனமற்றதும் இரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே. கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார். நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.
1 சாமுவேல் 12:1-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது சாமுயேல் இஸ்ரயேல் மக்களனைவரிடமும், “நீங்கள் எனக்குச் சொன்னவற்றையெல்லாம் கேட்டு உங்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்தினேன். இப்பொழுது உங்களுக்குத் தலைவனாக ஒரு அரசன் இருக்கிறான். என்னைப் பொறுத்தமட்டில் நான் நரைத்த கிழவன். என் மகன்கள் உங்களோடு இருக்கிறார்கள். நான் எனது வாலிபகாலம் தொடங்கி இன்றுவரை உங்களுக்குத் தலைவனாக இருந்தேன். இதோ நான் உங்கள்முன் நிற்கிறேன். யெகோவாவுக்கு முன்பாகவும், அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு முன்பாகவும் எனக்கெதிராகச் சாட்சி சொல்லுங்கள். நான் யாருடைய மாட்டை எடுத்திருக்கிறேன்? யாருடைய கழுதையை எடுத்திருக்கிறேன்? யாரை நான் ஏமாற்றியிருக்கிறேன்? யாரை நான் ஒடுக்கியிருக்கிறேன்? யாரிடமாவது இலஞ்சம் வாங்கி, பிழையைக் கண்டும் காணாததுபோல நான் இருந்ததுண்டா? இவற்றில் எதையாவது நான் செய்திருந்தால் அதைச் சரிசெய்துகொள்வேன்” என்றான். அதற்கு அவர்கள், “நீர் எங்களை ஏமாற்றவுமில்லை, ஒடுக்கவுமில்லை, நீர் ஒருவனுடைய கையிலிருந்து எதையும் வாங்கிக்கொள்ளவும் இல்லை” என்றார்கள். அப்பொழுது சாமுயேல் அவர்களிடம், “என்னிடம் நீங்கள் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்பதற்கு யெகோவா உங்களுக்கு எதிரான சாட்சியாயிருக்கிறார். அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், இன்று அதற்குச் சாட்சியாயிருக்கிறார்” என்றான். அதற்கு அவர்கள், “அவரே சாட்சி” என்றார்கள். மறுபடியும் சாமுயேல் மக்களிடம், “மோசேயையும், ஆரோனையும் நியமித்து, உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர் யெகோவாவே. இப்பொழுது இங்கே வந்து நில்லுங்கள். ஏனெனில் யெகோவா உங்களுக்கும், உங்கள் தந்தையர்களுக்கும் செய்த எல்லா நேர்மையான செயல்களையும் பற்றி அவர் முன்னிலையில் உங்களுக்கு நேர்முகமாய் எடுத்துச் சொல்லப்போகிறேன். “யாக்கோபு எகிப்திற்குள் வந்தபின், உங்கள் முற்பிதாக்கள் யெகோவாவிடம் உதவிகேட்டு அழுதார்கள். அப்பொழுது யெகோவா மோசேயையும், ஆரோனையும் அனுப்பி அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து, இந்த இடத்தில் குடியிருக்கச் செய்தார். “ஆனால் அவர்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவை மறந்தார்கள். ஆகவே அவர் அவர்களை ஆத்சோரின் படைத் தலைவனாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தியரின் கையிலும், அவர்களுக்கு எதிராகப் போரிட்ட மோவாப் அரசன் கையிலும் விற்றுப்போட்டார். அவர்கள் யெகோவாவிடம், ‘நாங்கள் பாவம்செய்தோம். யெகோவாவை கைவிட்டு பாகால்களுக்கும், அஸ்தரோத் தெய்வங்களுக்கும் பணிசெய்தோம். இப்பொழுது எங்கள் பகைவரிடமிருந்து எங்களை விடுதலையாக்கும். நாங்கள் உமக்கு பணிசெய்வோம்’ என்று அழுதார்கள். அப்பொழுது யெகோவா யெருபாகாலையும், பெதானையும், யெப்தாவையும், சாமுயேலையும் அனுப்பி, எல்லாப் பக்கங்களிலுமிருந்த பகைவர்களுடைய கைகளிலிருந்தும் உங்களை விடுவித்தார். அதன்பின் நீங்கள் பாதுகாப்பாய் வாழ்ந்து வந்தீர்கள். “பின்பு அம்மோனியரின் அரசனான நாகாஸ், உங்களை எதிர்த்து யுத்தமிட வந்தான். அப்போது உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு அரசனாக இருந்துங்கூட நீங்கள் என்னிடம், ‘எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்’ என்றீர்கள். ஆகையால் இப்பொழுது நீங்கள் கேட்டபடியே நீங்கள் தெரிந்துகொண்ட அரசன் இங்கே இருக்கிறார். உங்களுக்கு மேலாக யெகோவா ஏற்படுத்தியிருக்கிற அரசனைப் பாருங்கள். நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை வழிபட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை எதிர்த்துக் கலகம் பண்ணாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது. நீங்களும் உங்களை ஆளும் அரசனும் உங்கள் இறைவனாகிய யெகோவாவை பின்பற்றுவீர்களானால் அது உங்களுக்கு நலமாயிருக்கும். ஆனால் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கட்டளைகளை எதிர்த்துக் கலகம் பண்ணினால், உங்கள் முற்பிதாக்களுக்கு விரோதமாக அவருடைய கை இருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும். “இப்பொழுதும் யெகோவா உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யப்போகும் பெரிய செயலை நின்று பாருங்கள். இப்போது கோதுமை அறுவடை காலமல்லவா? மழை பெய்யாத இக்காலத்தில் இடிமுழக்கத்தையும், மழையையும் அனுப்பும்படி நான் யெகோவாவிடம் மன்றாடுவேன். நீங்கள் உங்களுக்கென ஒரு அரசன் வேண்டுமென்று கேட்டதால் யெகோவாவின் பார்வையில் நீங்கள் எப்படியான தீமையான செயலைச் செய்தீர்கள் என்பதை உணர்ந்துகொள்வீர்கள்” என்றான். அப்படியே சாமுயேல் யெகோவாவிடம் மன்றாடினான். அன்றைய தினமே முழக்கத்தையும், மழையையும் யெகோவா அனுப்பினார். இதைக் கண்ட மக்களனைவரும் யெகோவாவுக்கும், சாமுயேலுக்கும் முன்பாக பிரமித்து நின்றார்கள். அவர்கள் அனைவரும் சாமுயேலிடம், “நாங்கள் செய்த பாவங்கள் எல்லாவற்றுடனும் ஒரு அரசன் வேண்டுமென்று கேட்டு இந்தப் பாவத்தையும் சேர்த்துக்கொண்டோமே. ஆகையால் நாங்கள் சாகாதபடிக்கு உமது இறைவனாகிய யெகோவாவிடம் உமது அடியவர்களான எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்றார்கள். அப்பொழுது சாமுயேல் அவர்களிடம், “பயப்படவேண்டாம்; இந்தத் தீமையான செயல்களையெல்லாம் செய்திருக்கிறீர்கள். ஆகிலும் யெகோவாவைவிட்டு விலகாமல் உங்கள் முழு இருதயத்தோடும் அவருக்குப் பணிசெய்யுங்கள். பயனற்ற தெய்வச் சிலைகளுக்குப் பின்னால் திரும்பவும் செல்லவேண்டாம். அவை பயனற்றவையாகையால் உங்களுக்கு அவை எந்தவித நன்மை செய்யவோ, அல்லது உங்களை விடுதலையாக்கவோ மாட்டாது. யெகோவாவின் மகத்துவமான பெயருக்காக அவர் தன் மக்களைத் தள்ளிவிடமாட்டார். ஏனெனில் அவர் உங்களைத் தன் சொந்த மக்களாக்கிக்கொள்ள விருப்பம்கொண்டாரே. என்னைப் பொறுத்தமட்டில் நான் உங்களுக்காக மன்றாடத் தவறி யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவம்செய்வது எனக்குத் தூரமாயிருக்கட்டும். எனவே நான் உங்களுக்கு நன்மையும், நீதியுமான வழியைக் கற்பிப்பேன். நீங்கள் யெகோவாவுக்கு பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவருக்குப் பணிசெய்யும்படி எவ்வளவு பெரிய செயல்களை அவர் உங்களுக்காகச் செய்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்படியிருந்தும் இன்னும் தொடர்ந்து தீமையைச் செய்வீர்களானால், நீங்களும் உங்கள் அரசனும் அழிந்துபோவீர்கள்” என்றான்.
1 சாமுவேல் 12:1-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர்கள் அனைவரையும் பார்த்து: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொல்லைக்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். இப்போதும் இதோ, ராஜா உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவருகிறார்; நானோ முதிர்வயதானவனும் நரைத்தவனுமானேன்; என்னுடைய மகன்கள் உங்களோடிருப்பார்கள்; நான் என்னுடைய சிறுவயதுமுதல் இந்த நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவந்தேன். இதோ, நான் இருக்கிறேன்; யெகோவாவுக்கு முன்பாகவும் அவர் அபிஷேகம்செய்து வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயம்செய்தேன்? யாருக்கு தீங்கு செய்தேன்? யார் கையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு குருடனாக இருந்தேன்? சொல்லுங்கள்; அப்படி இருக்குமானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயம் செய்யவும் இல்லை; எங்களுக்கு தீங்கு செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். அதற்கு அவன்: நீங்கள் என்னுடைய கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் யெகோவா உங்களுக்கு எதிராகச் சாட்சியாக இருக்கிறார்; அவர் அபிஷேகம்செய்தவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள். அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: மோசே, ஆரோனை, ஏற்படுத்தியவரும், உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் யெகோவாவே. இப்பொழுதும் யெகோவா உங்களுக்கும் உங்களுடைய முற்பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான செய்கைகளைக்குறித்தும், நான் யெகோவாவுக்கு முன்பாக உங்களோடு நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள். யாக்கோபு எகிப்திற்கு போயிருக்கும்போது, உங்கள் முன்னோர்கள் யெகோவாவைப் பார்த்து முறையிட்டார்கள், அப்பொழுது யெகோவா மோசேயையும், ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த இடத்திலே குடியிருக்கச்செய்தார்கள். அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் படைத்தலைவனாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தர்களின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்தார்கள். ஆகையால் அவர்கள் யெகோவாவைப் பார்த்து முறையிட்டு: நாங்கள் யெகோவாவை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் வழிபட்டதினாலே, பாவம்செய்தோம்; இப்போதும் எங்கள் எதிரிகளின் கைக்கு எங்களை மீட்டுவிடும்; இனி உம்மை வழிபடுவோம் என்றார்கள். அப்பொழுது யெகோவா யெருபாகாலையும், பேதானையும், யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிச் சுற்றிலும் இருந்த உங்கள் எதிரிகளின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்தார். அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாக வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய யெகோவாவே உங்களுக்கு ராஜாவாக இருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். இப்பொழுதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, யெகோவா உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். நீங்கள் யெகோவாவுடைய வாக்குக்கு விரோதமாகக் கலகம்செய்யாமல் யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு பணிவிடைசெய்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பீர்கள். நீங்கள் யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், யெகோவாவுடைய வாக்குக்கு எதிராக கலகம் செய்தால், யெகோவாவுடைய கை உங்கள் முன்னோர்களுக்கு எதிராக இருந்ததுபோல உங்களுக்கும் எதிராக இருக்கும். இப்பொழுது யெகோவா உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள். இன்று கோதுமை அறுவடையின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதால், யெகோவாவின் பார்வைக்குச் செய்த உங்களுடைய தீங்கு பெரியதென்று நீங்கள் பார்த்து உணரும்படி, நான் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்வேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அன்றையதினமே யெகோவா இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து; சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடி உம்முடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் சேர்த்துக்கொண்டோம் என்று மக்கள் எல்லோரும் சொன்னார்கள். அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: பயப்படாதீர்கள்; நீங்கள் இந்தத் தீங்கையெல்லாம் செய்தீர்கள்; ஆனாலும் யெகோவாவை விட்டுப் பின்வாங்காமல் யெகோவாவை உங்கள் முழு இருதயத்தோடும் தொழுதுகொள்ளுங்கள். பயனற்றதும், விடுவிக்கமுடியாததுமாக இருக்கிற வெறுமையானவைகளைப் பின்பற்றும்படி திரும்பாதீர்கள்; அவைகள் வீணானவைகளே. யெகோவா உங்களைத் தம்முடைய மக்களாக்கிக்கொள்வதற்கு பிரியமானதால், யெகோவா தம்முடைய மேன்மையான நாமத்தினிமித்தம் தமது மக்களைக் கைவிடமாட்டார். நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்கிறவனாக இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருக்கட்டும்; நன்மையும் சரியானதுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். நீங்கள் எப்படியும் யெகோவாவுக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் தொழுதுகொள்ளக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் இன்னும் தீங்கையே செய்தால், நீங்களும் உங்கள் ராஜாவும் அழிந்துபோவீர்கள் என்றான்.
1 சாமுவேல் 12:1-25 பரிசுத்த பைபிள் (TAERV)
சாமுவேல் இஸ்ரவேலரிடம், “நீங்கள் என்னிடம் எதை எதிர்ப்பார்த்தீர்களோ அதனைச் செய்துவிட்டேன். உங்களுக்கு ஒரு ராஜாவை நியமித்திருக்கிறேன். இப்போது உங்களை வழி நடத்த ஒரு ராஜா இருக்கிறான். எனக்கு முதுமையும் நரையும் வந்துவிட்டது. ஆனால் என் குமாரர்கள் உங்களுடன் இருக்கிறார்கள். நான் சிறுவயது முதலே உங்களது தலைவனாக இருந்திருக்கிறேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை கர்த்தரிடமும், கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவிடமும் சொல்லவேண்டும். நான் ஏதாவது உங்கள் பசுவையோ, கழுதையையோ திருடியிருக்கிறேனா? யாரையாவது புண்படுத்தியோ, ஏமாற்றியோ இருக்கிறேனா? நான் பணத்தையோ பாதரட்சையை லஞ்சமாக பெற்றிருக்கிறேனா? அப்படி எதாவது செய்திருந்தால் நான் அதை சரி செய்துக் கொள்வேன்” என்றான். இஸ்ரவேலர்களோ, “இல்லை! நீங்கள் எங்களுக்கு எப்போதும் தீமை செய்யவில்லை. எங்களை ஏமாற்றவோ, எங்கள் பொருட்களை எந்தக் காலத்திலும் எடுத்துக் கொள்ளவோயில்லை!” என்றனர். சாமுவேல் அவர்களிடம், “கர்த்தரும், அரசரும் இன்று சாட்சிகளாக உள்ளனர். நீங்கள் சொன்னதை அவர்கள் கேட்கிறார்கள். என்னிடம் தவறில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்” என்றான். “ஆமாம்! கர்த்தரே சாட்சி!” என்று ஜனங்கள் சத்தமிட்டனர். பின் சாமுவேல் ஜனங்களிடம், “இங்கே நடந்ததை கர்த்தர் பார்த்திருக்கிறார். கர்த்தர் தாமே மோசேயையும், ஆரோனையும், தேர்ந்தெடுத்தவர். அவரே எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களை மீட்டுக்கொண்டவர். இப்போது அங்கே நில்லுங்கள். உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் கர்த்தர் செய்த நன்மைகளைப்பற்றிச் சொல்வேன். “யாக்கோபு எகிப்துக்குப் போனார். பின்னர் எகிப்தியர்கள் அவருடைய சந்ததிகளுக்கு வாழ்க்கையை கடின மாக்கித் துன்புறுத்தினார்கள். கர்த்தரிடம் உதவிக்காக அழுதார்கள். கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பினார். அவர்கள் உங்கள் முற்பிதாக்களை எகிப்திலிருந்துக் காப்பாற்றி இங்கே வாழும் பொருட்டு அழைத்து வந்தனர். “ஆனால் உங்கள் முற்பிதாக்கள் தமது தேவனாகிய கர்த்தரை மறந்துவிட்டனர். எனவே கர்த்தர் அவர்களை சிசெராவிடம் அடிமைகளாகுமாறு செய்தார். சிசெரா, ஆத்சோர் என்னும் இடத்தில் இருந்த படையின் சேனாதிபதி. பின்னர் கர்த்தர் அவர்களை பெலிஸ்தரின் கையிலும் மோவாப் ராஜாக்களிடமும் அடிமையாக்கினார். உங்கள் முற்பிதாக்களுக்கு எதிராக அவர்கள் எல்லோரும் சண்டையிட்டனர். ஆனால், உங்கள் முற்பிதாக்கள் கர்த்தரிடம் உதவி கேட்டு அழுதார்கள். அவர்கள், ‘நாங்கள் பாவம் செய்துவிட்டோம். கர்த்தரை விட்டு பொய்த் தெய்வங்களான பாலையும், (பாகாலையும்) அஸ்த்தரோத்தையும் சேவித்தோம். இப்போது எங்களைப் பகைவர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களுக்கு சேவை செய்கிறோம்’ என்றனர். “எனவே, கர்த்தர் எருபாகாலையும், (கிதியோன்) பேதானையும், யெப்தாவையும், சாமுவேலையும் அனுப்பினார். கர்த்தர் உங்களைச் சுற்றியுள்ள பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார். நீங்கள் பாதுகாப்பாயுள்ளீர்கள். ஆனால், நாகாஸ் ராஜா உங்களுக்கு எதிராகச் சண்டையிட வந்தான். நீங்கள், ‘இல்லை! எங்களை ஆள ஒரு ராஜா வேண்டும்!’ என்றீர்கள்! தேவனாகிய கர்த்தர் ஏற்கெனவே உங்கள் ராஜாவாக இருந்தார்! எனினும் நீங்கள் கேட்டீர்கள். இப்போது ஒரு ராஜாவைத் தோந்தெடுத்துள்ளீர்கள். கர்த்தர் அவரை உங்கள் ராஜாவாக்கினார். கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்க வேண்டும். நீங்கள் அவருக்கு சேவை செய்து அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். அவருக்கு எதிராகப் போராடக்கூடாது. நீங்களும் உங்கள் ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரை பின்பற்றவேண்டும். இவற்றைச் செய்தால் தேவன் உங்களைக் காப்பார். ஆனால், நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவரது கட்டளைகளுக்கு எதிராக போரிட்டால் பின் அவர் உங்களுக்கு எதிராவார். கர்த்தர் உங்களையும் உங்கள் ராஜாவையும் அழிப்பார்! “இப்பொழுது நீங்கள் அமைதலாயிருந்து கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன் செய்யப்போகும் பெரியக் காரியத்தைப் பாருங்கள். இப்போது கோதுமை அறுவடைக்காலம். நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். இடியையும் மழையையும் கேட்பேன். நீங்கள் ராஜா வேண்டுமென்று கேட்டது கர்த்தருக்கு விரோதமான காரியம் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான். எனவே, சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். அன்றே கர்த்தர் இடியையும் மழையையும் அனுப்பினார். ஜனங்கள் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தனர். அனைத்து ஜனங்களும் சாமுவேலிடம், “உம்முடைய அடியார்களாகிய எங்களுக்காக உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபியுங்கள், நாங்கள் அழிந்துவிட விட்டு விடாதேயும்! நாங்கள் பலமுறை பாவம் செய்திருக்கிறோம். இப்போது ராஜாவைக் கேட்டு மேலும் பாவம் செய்து விட்டோம்” என்றனர். சாமுவேல் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இது உண்மை! நீங்கள் எல்லா தீமைகளையும் செய்தீர்கள். ஆனால் கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்தாதீர்கள். முழு மனதோடு கர்த்தருக்கு சேவை செய்யுங்கள். விக்கிரகங்கள் வெறும் சிலைகளே அவைகள் உதவாது. அவற்றைத் தொழுதுகொள்ள வேண்டாம். விக்கிரகங்கள் உங்களுக்கு உதவாது! காப்பாற்றாது! அவைகள் ஒன்றுமில்லை. “ஆனால், கர்த்தர் தம் ஜனங்களைக் கைவிடமாட்டார். கர்த்தர் உங்களை தமது சொந்த ஜனங்களாக ஆக்கிக்கொள்ள விருப்பம் கொண்டார். எனவே, அவரது பெரிய பெயரினிமித்தம் தம் ஜனங்களை அவர் விட்டுவிடமாட்டார். என்னைப் பொறுத்த வரை உங்களுக்காக நான் ஜெபிப்பதை என்றும் நிறுத்தமாட்டேன். நிறுத்தினால், கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவனாவேன். நல்வாழ்க்கைக்கான சரியான வழியை போதித்துக்கொண்டே இருப்பேன். ஆனால், நீங்கள் கர்த்தரை கனம் பண்ண வேண்டும். முழு இருதயத்துடன் அவருக்கு சேவை செய்ய வேண்டும். அவர் செய்த அதிசயமான காரியங்களை மறவாதீர்கள்! நீங்கள் கடினப்பட்டு தீமை செய்தால், தேவன் உங்களையும் உங்கள் ராஜாவையும் அழுக்கை துடப்பத்தால் நீக்குவதுப்போல் எறிந்துவிடுவார்” என்றான்.