1 சாமுவேல் 10:5-13

1 சாமுவேல் 10:5-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“அதன்பின் பெலிஸ்தியரின் இராணுவ தடைமுகாம் அமைந்துள்ள இறைவனின் மலையான கிபியாவுக்குப் போவாய். இவ்வாறு நீ அந்த பட்டணத்துக்கு அருகே வந்தவுடன் இறைவாக்கினரின் ஊர்வலம் ஒன்றை மேடையிலிருந்து இறங்கிவரும்போது சந்திப்பாய். அவர்களின் முன்பாக வீணை, தம்புரா, புல்லாங்குழல், யாழ் ஆகிய வாத்தியங்கள் இசைக்கப்படும். அவர்கள் இறைவாக்கு சொல்லிக்கொண்டு வருவார்கள். அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் வல்லமையுடன் உன்மேல் இறங்குவார். அப்பொழுது நீயும் அவர்களுடன் இறைவாக்கு உரைப்பாய். நீ ஒரு வித்தியாசமான மனிதனாய் மாறிவிடுவாய். இந்த அடையாளங்களெல்லாம் நிறைவேறும்போது, நீ உன் கைக்குக் கிடைத்தது எதையும் செய். ஏனெனில் இறைவன் உன்னோடிருக்கிறார். “நீ எனக்கு முன்னே கில்காலுக்குப்போ. தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிடுவதற்கு நான் நிச்சயமாக அங்கு வருவேன். நான் வந்து நீ செய்யவேண்டியவற்றை உனக்குச் சொல்லும்வரை ஏழு நாட்கள் எனக்காகக் காத்திரு” என்றான். சவுல் சாமுயேலிடமிருந்து புறப்படும் நேரத்தில் இறைவன் அவன் இருதயத்தை மாற்றினார். அன்றே இந்த அடையாளங்களெல்லாம் நிறைவேற்றப்பட்டன. அவர்கள் கிபியாவுக்கு வந்தபோது இறைவாக்கினரின் ஊர்வலம் ஒன்று அவனைச் சந்தித்தது. இறைவனின் ஆவியானவர் அவன்மேல் வல்லமையுடன் இறங்கினார். அவனும் அவர்களுடன் சேர்ந்து இறைவாக்கு உரைத்தான். சவுலை முன்பே அறிந்தவர்கள் அவன் இறைவாக்கினருடன் இறைவாக்கு சொல்வதைக் கண்டபோது அவர்கள், “கீஷின் மகனுக்கு நேர்ந்தது என்ன? சவுலும் இறைவாக்கினரில் ஒருவனா?” என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவ்விடத்தில் வாழ்ந்த ஒருவன், “இவர்களது தகப்பன் யார்?” என்று கேட்டான். எனவே, “சவுலும் இறைவாக்கினரின் கூட்டத்தில் ஒருவனா?” என்று கேட்கும் பழமொழி உருவாயிற்று. சவுல் இறைவாக்கு சொல்லி முடித்தபின் மேடைக்குப் போனான்.

1 சாமுவேல் 10:5-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு பெலிஸ்தர்களின் முகாம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் வரும்போது, மேடையிலிருந்து இறங்கி வருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தைச் சந்திப்பாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும், மேளமும், நாகசுரமும், சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். அப்பொழுது யெகோவாவுடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடு தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனிதனாவாய். இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, நேரத்திற்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடு இருக்கிறார். நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படி, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்கும்வரை, ஏழு நாட்கள் காத்திரு என்றான். அவன் சாமுவேலைவிட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறு இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நடந்தது. அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கியதால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான். அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லோரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்கிறதைப் பார்த்தபோது: கீசின் மகனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டார்கள். அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியானது. அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.

1 சாமுவேல் 10:5-13 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு நீ கிபியாத் எலோகிமுக்குப் போவாய். அங்கே பெலிஸ்தரின் கோட்டை உண்டு. நீ நகரத்துக்குள் போகும்போது தீர்க்கதரிசிகளின் கூட்டம் ஒன்று வெளியே வரும். அவர்கள் ஆராதனை ஸ்தலத்திலிருந்து வருவார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். அவர்கள் சுரமண்டலமும், தம்புரும், புல்லாங்குழலும், இரட்டை வால் யாழும் இசைப்பார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு உன் மீது இறங்குவார். நீயும் அவர்களோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லி வேறு மனிதன் ஆவாய். இவை ஆனதும், தேவன் உன்னோடு இருப்பதால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி செய்ய ஆரம்பி. “நீ எனக்கு முன்னால் கில்காலுக்கு இறங்கிப்போ. நான் பிறகு அங்கு வருவேன். நான் சர்வாங்க தகன பலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்துவேன். ஆனால் நீ 7 நாட்கள் காத்திருக்க வேண்டும். பிறகு நீ செய்ய வேண்டியவற்றைப்பற்றி நான் சொல்வேன்” என்றார். சவுல் சாமுவேலை விட்டு போனபோது, தேவன் சவுலின் வாழ்க்கையை மாற்றினார். அந்த நாளில் இந்த அடையாளங்கள் எல்லாம் நடந்து முடிந்தன. சவுலும் அவனது வேலைக்காரனும் கிபியாத் எலோகிம் மலைக்குச் சென்றனர். அங்கே, அவன் தீர்க்கதரிசிகளின் குழுவை சந்தித்தான். தேவனுடைய ஆவியானவர் மிகுந்த வல்லமையோடு சவுலின் மேல் இறங்கினார். அவனும், தீர்க்கதரிசிகளுடன் தீர்க்கதரிசனம் சொன்னான். அவனை முன்பே அறிந்திருந்தவர்கள் அவன் தீர்க்கதரிசிகளோடு சேர்ந்து தீர்க்கதரிசனம் சொல்வதைக் கண்டனர். அவர்கள், “கீஸின் குமாரனுக்கு என்ன ஆயிற்று? சவுலும் ஒரு தீர்க்கதரிசியா?” என்று பேசிக்கொண்டனர். கிபியாத் ஏலோமில் வாழும் ஒருவன் “ஆமாம்! அவன்தான் அவர்களின் தலைவன்” என்றான். அதனால் “சவுலும் தீர்க்கதரிசிகளுள் ஒருவனோ?” என்பது மிகவும் புகழ் வாய்ந்தப் பழமொழி ஆனது. சவுல் தீர்க்கதரிசனம் சொல்லி முடித்த பின், தன் வீட்டிற்கு அருகிலுள்ள தொழுதுகொள்ளுகிற இடத்திற்கு வந்தான்.

1 சாமுவேல் 10:5-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கி வருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும், மேளமும், நாகசுரமும், சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய், இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார். நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழு நாள் காத்திரு என்றான். அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது. அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான். அதற்குமுன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று. அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான்.