1 சாமுவேல் 1:10-18
1 சாமுவேல் 1:10-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள். அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து, அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள். அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
1 சாமுவேல் 1:10-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது அன்னாள் மனங்கசந்து மிகவும் அழுது, யெகோவாவிடம் மன்றாடினாள். அவள் யெகோவாவிடம், “சேனைகளின் யெகோவாவே, உம்முடைய அடியாளின் அவலத்தைப் பார்த்து என்னை நினைவுகூர்ந்து, உமது அடியாளை மறவாமல் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பீரானால், நான் அவன் வாழ்நாள் முழுவதும் அவனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். சவரக்கத்தி ஒருபோதும் அவன் தலையில் படாது” என்று ஒரு நேர்த்திக்கடன் செய்தாள். அவள் அவ்வாறு யெகோவாவிடம் மன்றாடும்போது, ஏலி அவள் வாயைக் கவனித்தான். அன்னாள் தன் உள்ளத்தில் மன்றாடிக்கொண்டிருந்தாள். அதனால் அவள் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. ஆனால் அவளுடைய சத்தம் கேட்கவில்லை. அதனால் அவள் மதுபோதையில் இருக்கிறாள் என ஏலி நினைத்தான். அப்பொழுது ஏலி அவளிடம், “நீ எவ்வளவு காலத்துக்கு மது குடிப்பதை விடாதிருப்பாய்? உன் குடிப்பழக்கத்தை விட்டுவிடு” என்றான். அதற்கு அன்னாள், “இல்லை ஐயா, நானோ கவலை நிறைந்த மனதையுடைய பெண். நான் திராட்சை இரசமோ, மதுவோ குடிக்கவில்லை. நான் யெகோவாவுக்குமுன் என் துயரத்தைச் சொல்லி அழுகிறேன். உம்முடைய அடியாளை கெட்ட நடத்தையுள்ள பெண் என எண்ணவேண்டாம். நான் மிகுந்த துயரத்தினாலும் கவலையினாலும் மன்றாடுகிறேன்” என்றாள். அப்பொழுது ஏலி அவளிடம், “நீ சமாதானத்தோடே போ. இஸ்ரயேலின் இறைவனிடம் நீ கேட்டுக்கொண்டதை அவர் உனக்குத் தருவாராக” என்றான். அதற்கு அவள், “உமது அடியாளுக்கு உமது கண்களில் தயவு கிடைப்பதாக” என்றாள். அன்னாள் அவ்விடமிருந்து போய் சிறிது உணவு சாப்பிட்டாள். அதன்பின் அவள் முகம் துக்கமுகமாக இருக்கவில்லை.
1 சாமுவேல் 1:10-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள். அவள் யெகோவாவுக்கு முன்பாக அதிகநேரம் விண்ணப்பம்செய்கிறபோது, ஏலி அவளுடைய வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். அன்னாள் தன்னுடைய இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மட்டும் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கவில்லை; ஆகவே, அவள் குடிவெறியில் இருக்கிறாள் என்று ஏலி நினைத்து, அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் குடிவெறியில் இருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் யெகோவாவுக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன். உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள். அதற்கு ஏலி சமாதானத்துடன் போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கட்டும் என்றாள்; பின்பு அந்த பெண் புறப்பட்டுப்போய் சாப்பிட்டாள்; அதன்பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை.
1 சாமுவேல் 1:10-18 பரிசுத்த பைபிள் (TAERV)
அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள், அவள் தேவனிடம் ஒரு விசேஷ வாக்குறுதியைக் கொடுத்தாள். அவள், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நான் எவ்வளவு துக்கத்தில் இருக்கிறேன் என்பதைப் பாரும். என்னை நினைவு கூறும்! என்னை மறவாதேயும். நீர் எனக்கு ஒரு குமாரனைத் தந்தால், நான் அவனை உமக்கே தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் திராட்சை ரசமோ அல்லது வெறிகொள்ளத்தக்கவைகளை அருந்தாமலும் இருப்பான். எவரும் அவனது தலை மயிரை வெட்டாமல் இருப்பார்கள்” என்று வேண்டிக்கொண்டாள். இவ்வாறு அன்னாள் நீண்ட நேரம் கர்த்தரிடம் ஜெபிக்கும்பொழுது அவளது வாயையே ஏலி கவனித்துக்கொண்டிருந்தான். அன்னாள் தன் இருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தாள். அவளது உதடுகள் அசைந்தன, ஆனால் அவள் உரக்க எதையும் சொல்லவில்லை. எனவே ஏலி, அன்னாளைக் குடித்திருப்பவளாக எண்ணினான். ஏலி அன்னாளிடம், “நீ அதிகப்படியாகக் குடித்திருக்கின்றாய்! இது குடியை விடவேண்டிய நேரம்” என்றான். அதற்கு அன்னாள், “ஐயா, நான் திராட்சை ரசமோ அல்லது மதுவையோ குடிக்கவில்லை. நான் ஆழமான துயரத்தில் இருக்கிறேன். நான் எனது துன்பங்களையெல்லாம் கர்த்தரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். மோசமான பெண் என்று என்னை எண்ணவேண்டாம். நான் நீண்ட நேரமாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அநேக தொல்லைகள் உள்ளன. மற்றும் நான் மிகவும் துக்கத்தில் இருக்கிறேன்” என்றாள். ஏலி அவளிடம், “சமாதானத்துடனே போ. இஸ்ரவேலரின் தேவன் நீ கேட்டதையெல்லாம் உனக்குத் தருவாராக” என்றான். அன்னாள், “உம்முடைய அடியாளுக்கு உம் கண்களில் இரக்கத்தைக் காணட்டும்” என்றாள். பிறகு அவள் அங்கிருந்து போய் உணவருந்தினாள். அதற்குப்பின் அவள் துக்கமாயிருக்கவில்லை.