1 பேதுரு 4:6-19

1 பேதுரு 4:6-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதன் காரணமாகவே, இப்பொழுது இறந்துபோனவர்களுக்குங்கூட, அவர்கள் உயிரோடிருக்கையில் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டது. அதனால் அவர்களின் உடலைப் பொறுத்தவரையில், எல்லா மனிதருக்கும் ஏற்படுகிற நியாயத்தீர்ப்பின்படி அவர்கள் மரணம் அடைந்திருந்தாலும், ஆவியைப் பொறுத்தவரையில் அவர்கள் இறைவனுடைய சித்தப்படி இன்னும் வாழமுடியும். எல்லாக் காரியங்களுக்கும் முடிவு நெருங்கிவிட்டது. ஆகையால் நீங்கள் மன்றாடுவதற்கு ஏற்றவாறு மனத்தெளிவுடையவர்களாயும், தன்னடக்கமுடையவர்களாயும் இருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரில் ஒருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். ஏனெனில் அன்பு, அநேக பாவங்களை மூடுகிறது. முறுமுறுக்காமல் ஒருவரையொருவர் உபசரித்து நடவுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட வரத்தை உபயோகித்து, ஒருவருக்கொருவர் பணிசெய்யுங்கள். இவ்வாறு, வெவ்வேறு விதங்களில் வரும் இறைவனுடைய கிருபையை, உண்மையுடன் நிர்வகிக்கிறவர்களாக இருங்கள். பேசுகின்ற வரத்தையுடையவன், இறைவனுடைய சொந்த வார்த்தையைப் பேசுகிறேன் என்றே பேசவேண்டும். ஊழியம் செய்கிறவன் இறைவன் கொடுக்கும் பெலத்தின்படியே அதைச் செய்யவேண்டும். அப்பொழுது எல்லாக் காரியங்களிலும், இயேசுகிறிஸ்துவின் மூலமாக இறைவன் துதிக்கப்படுவார். அவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாயிருப்பதாக. ஆமென். பிரியமானவர்களே, நீங்கள் அனுபவிக்கும் துன்பங்களைக்குறித்து, ஏதோ விசித்திரமான ஒரு காரியம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டதென எண்ணி வியப்படைய வேண்டாம். கிறிஸ்துவினுடைய துன்பங்களில் நீங்களும் பங்குகொள்கிறீர்கள் என்று சந்தோஷப்படுங்கள். அப்பொழுது அவருடைய மகிமை வெளிப்படுகையில், நீங்கள் இன்னும் அதிக மகிழ்ச்சியடைவீர்கள். கிறிஸ்துவின் பெயருக்காக நீங்கள் அவமதிக்கப்பட்டால், நீங்கள் ஆசீர்வதிகப்பட்டவர்கள்; ஏனெனில் இறைவனின் ஆவியானவர் மகிமையுடன் உங்களில் தங்கி வாழ்கிறாரே. ஆதலால் நீங்கள் ஒரு கொலைகாரனாகவோ, திருடனாகவோ, வேறுவிதமான குற்றம் செய்தவனாகவோ அல்லது தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையிட்டவனாகவோ துன்பம் அனுபவிக்கக்கூடாது. ஆனால் கிறிஸ்துவைப் பின்பற்றும் காரணத்திற்காக நீங்கள் வேதனையை அனுபவித்தால், அதைக்குறித்து வெட்கமடைய வேண்டாம். அந்தப் பெயருடையவர்களாய் நீங்கள் இருப்பதைக்குறித்து இறைவனைத் துதியுங்கள். ஏனெனில், நியாயத்தீர்ப்பு தொடங்கும் காலம் வந்துவிட்டது. அது இறைவனுடைய குடும்பத்தினரிடமே முதலில் தொடங்கும்; நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் தொடங்குமானால், இறைவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்! வேதவசனத்தின்படி, “நீதியுள்ளவர்கள் இரட்சிக்கப்படுவது கஷ்டம் என்றால், இறை பக்தியற்றவர்களுக்கும், பாவிகளுக்குமான நிலை என்னவாகும்?” ஆகவே இறைவனுடைய திட்டத்தின்படி துன்பம் அனுபவிக்கிறவர்கள், உண்மையுள்ளவரான தங்களைப் படைத்த இறைவனிடம் தங்களை ஒப்புக்கொடுத்து, தொடர்ந்து நன்மை செய்யவேண்டும்.

1 பேதுரு 4:6-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும். நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்? “நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்? ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.

1 பேதுரு 4:6-19 பரிசுத்த பைபிள் (TAERV)

இக்காரணங்களுக்காக இப்போது இறந்துவிட்ட விசுவாசிகளுக்கும் நற்செய்தியானது போதிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் உலக வாழ்க்கையின்போது மோசமான வகையில் மனிதர்களால் நியாயம் தீர்க்கப்பட்டாலும், ஆவியால் தேவன் முன்னிலையில் அவர்கள் வாழ்ந்தார்கள். எல்லாம் முடிகிற காலம் நெருங்குகிறது. எனவே உங்கள் மனங்களைத் தெளிவுடையதாக வைத்திருங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்ய அது உதவும். அன்பு எத்தனையோ பாவங்களை மூடி விடுவதால் ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது இதுவே ஆகும். குற்றம் சாட்டாமல் உங்கள் வீடுகளை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து வரங்களைப் பெற்றுக்கொண்டீர்கள். பல வகையான வழிகளில் தேவன் தம் இரக்கத்தை உங்களுக்குக் காட்டியுள்ளார். தேவனுடைய வரங்களைப் பயன்படுத்தும் பொறுப்புக்கு உரியவர்களான பணியாட்களைப் போல நீங்கள் இருக்கிறீர்கள். எனவே நல்ல பணியாட்களாக இருந்து தேவனுடைய வரங்களை ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்குப் பயன்படுத்துங்கள். பேசுகிற மனிதன் தேவனிடமிருந்து வார்த்தைகளைக் கொண்டு வருவதுபோல பேசவேண்டும். சேவை செய்யும் மனிதன் தேவன் தரும் வல்லமையோடு சேவை புரிதல் வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவன் எல்லாவற்றிலும் மகிமையுறும்படி நீங்கள், இக்காரியங்களைச் செய்ய வேண்டும். எனது நண்பர்களே, நீங்கள் தற்சமயம் அனுபவிக்கிற வருத்தங்களையும் இன்னல்களையும் கண்டு ஆச்சரியப்படாதீர்கள். இவை உங்கள் விசுவாசத்தை சோதிப்பன. ஏதோ விசித்திரமான செயல் உங்களுக்கு நிகழ்வதாக நினைக்காதீர்கள். கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்களும் பங்கெடுத்துக்கொள்வதால், நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். இதன் மூலம் கிறிஸ்து தம் மகிமையைக் காட்டும்போது நீங்கள் மகிழ்ச்சி அடைந்து, சந்தோஷத்தால் மனம் நிறைவீர்கள். நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதால், மக்கள் உங்களைப் பற்றிப் தீயன கூறும்போது, நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். தேவனுடைய மகிமைமிக்க ஆவியானவர் உங்களோடிருப்பதால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். உங்களில் யாரும் கொலைக்காரர்களாகவோ, திருடர்களாகவோ, அடுத்தவர்களின் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவோ, இக்காரியங்களுக்கான தண்டனையை அனுபவிக்கிறவர்களாகவோ இருக்கக் கூடாது. ஒருவன் கிறிஸ்துவுக்காகத் துன்புறுவதற்காக வெட்கப்படக்கூடாது. அப்பெயருக்காக நீங்கள் தேவனை வாழ்த்தவேண்டும். நியாயந்தீர்க்கப்படுதல் ஆரம்பமாகும் காலம் இது. தேவனுடைய குடும்பத்தில் அந்நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகும். நியாயத்தீர்ப்பு நம்மிடத்தில் ஆரம்பித்தால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாத மக்களுக்கு என்ன நிகழும்? “ஒரு நல்ல மனிதனே இரட்சிக்கப்படுவது மிகவும் கடுமையானது என்றால், தேவனுக்கு எதிரானவனும், பாவத்தால் நிரம்பியவனுமான மனிதனுக்கு என்ன நேரிடக்கூடும்?” தேவனுடைய விருப்பப்படி துன்புறுகிற மக்கள் தங்கள் ஆன்மாக்களை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தேவன் அவற்றை உண்டாக்கினார், எனவே அவர்கள் அவரை நம்பலாம். ஆகையால் அவர்கள் தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும்.

1 பேதுரு 4:6-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடையய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.