1 பேதுரு 4:1-4
1 பேதுரு 4:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனவே, கிறிஸ்து தமது மாம்சத்தில் துன்பத்தை அனுபவித்ததினால், நீங்களும் அதேவிதமான மனநிலை உடையவர்களாய் இருங்கள். ஏனெனில், மாம்சத்தில் துன்பப்படுகிறவர்கள் பாவத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார்கள். அதன் பிரதிபலனாகவே, அவர்கள் பூமியில் தொடர்ந்து தாங்கள் வாழும் வாழ்க்கையை, மாம்சத்தில் எழும் தீய ஆசைகளுக்காக வாழ்வதில்லை. இறைவனுடைய சித்தத்தைச் செய்வதற்காகவே, அவர்கள் வாழ்வார்கள். கடந்த காலத்தில் போதிய அளவு நேரத்தை இறைவனை அறியாத மக்கள் செய்யும் செயல்களில் ஈடுபட்டுக் கழித்தீர்களே! காமவேறிகளிலும், பேராசைகளிலும், மதுவெறியிலும், கேளிக்கைகளிலும், மதுபான விருந்துகளிலும், அருவருப்பான விக்கிரக வழிபாட்டிலும் வாழ்ந்தீர்கள். ஆனால் உங்கள் பழைய நண்பர்களோ, நீங்கள் இப்பொழுது தொடர்ந்து அதேவிதமான ஊதாரித்தனம் நிறைந்த வாழ்க்கையில், அவர்களுடன் சேர்ந்து அமிழ்ந்து போகாதிருப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். அதனால் அவர்கள் உங்களைக்குறித்து அவதூறாய் பேசுகிறார்கள்.
1 பேதுரு 4:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள். ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான். கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம். அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
1 பேதுரு 4:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)
கிறிஸ்து தம் சரீரத்தில் இருக்கும்போது துன்புற்றார். கிறிஸ்துவையொத்த சிந்தனையை மேற்கொண்டு நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். சரீரத்தில் மரணமுறுகிற மனிதனோ பாவத்தினின்று நீங்குகிறான். தேவன் விரும்புகிறவற்றைச் செய்யும் மனிதர்கள் செய்ய விரும்புகிறவற்றை இனிமேலும் செய்யாமல் இருக்கவும் உங்கள் உலக வாழ்வின் மீதியான காலத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பாலுறவுப் பாவங்களில் ஈடுபடுதல், தீயவிருப்பங்கள், குடிப்பழக்கம், மது அருந்தும் விருந்துகள், தடைசெய்யப்பட்ட உருவ வழிபாடு ஆகிய நம்பிக்கை அற்றோர் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்வதில் ஏற்கெனவே உங்களின் பெரும்பாலான நேரத்தைச் செலவழித்துவிட்டீர்கள். இந்தக் குரூரமும் பாவமும் நிறைந்த வாழ்க்கை முறையில் நீங்கள் ஈடுபடாததை அந்த நம்பிக்கையற்றோர் விநோதமாகக் கருதுகிறார்கள். உங்களைக் குறித்து மோசமான முறையில் பேசுகிறார்கள்.
1 பேதுரு 4:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான். சென்ற வாழ்நாட்காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர் இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.