1 பேதுரு 3:5-22
1 பேதுரு 3:5-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய், முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அலங்கரித்தார்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கணவர்களிடம் பணிவுடன் நடந்தார்கள். அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாய் இருப்பீர்கள். கணவர்களே, அதுபோலவே உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துகொள்ளுதலோடு, அக்கறையுடன் வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாயும் இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருப்பதனால், அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாட்டுகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது. இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் ஒருமனப்பட்டிருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதரரைப்போல் அன்பு காட்டுகிறவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மையுடையவர்களாய் இருங்கள். தீமைக்குப் பதிலாக தீமை செய்யவேண்டாம்; ஏளனத்திற்கு பதிலாக ஏளனம் செய்யவேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கிறதாவது: “வாழ்வை நேசித்து, நல்ல நாட்களைக் காணவிரும்புகிறவன் எவனோ, அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி, தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுகளிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும். அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்யவேண்டும்; சமாதானத்தைத் தேடி, அதை நாடிச்செல்ல வேண்டும். ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கவனமாய் கேட்கின்றன. ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கிறவர்களுக்கு எதிராய் இருக்கிறது.” நீங்கள் நன்மைசெய்ய ஆவலுள்ளவர்களாய் இருந்தால், யார் உங்களுக்குத் தீமை செய்வான்? ஆனால் நீங்கள் நீதியானதைச் செய்வதனால் துன்பத்தை அனுபவித்தாலும், நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எனவே, “அவர்களுடைய பயமுறுத்துதலுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; கலக்கமடையவும் வேண்டாம்.” ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை கர்த்தராக ஏற்று, அவரை கனம்பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் பதில்சொல்வதற்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள்; ஆனால் தயவுடனும் மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்லவேண்டும். நீங்கள் நல்மனசாட்சி உடையவர்களாயும் இருக்கவேண்டும்; அப்பொழுது கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் நல்ல நடத்தைக்கு எதிராக, தீய எண்ணத்துடன் பேசுகிறவர்கள், தங்கள் அவதூறுப் பேச்சைக்குறித்து வெட்கமடைவார்கள். தீமை செய்து துன்பப்படுவதைப் பார்க்கிலும், இறைவனுக்கு சித்தமானால் நன்மை செய்து துன்பப்படுவதே சிறந்தது. ஏனெனில், கிறிஸ்து பாவங்களுக்காக ஒரே முறையாக இறந்தார். உங்களை இறைவனிடம் கொண்டுவரும்படியாக, நீதிமானான அவர், நீதியற்றவர்களுக்காக இறந்தார். அவரது உடல் கொல்லப்பட்டது, ஆனால் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய், சிறையில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தார். அந்த ஆவிகளே வெகுகாலத்திற்கு முன்பு, நோவா பேழை செய்துகொண்டிருந்த நாட்களில், இறைவன் பொறுமையோடு இருந்தும் கீழ்ப்படியாதவைகள். அந்தப் பேழையில், எல்லாமாக எட்டுப் பேராகிய சிலரே தண்ணீரின் வழியாகக் காப்பாற்றப்பட்டார்கள். அதற்கு ஒப்பான இந்த திருமுழுக்கு உடலில் அழுக்கை நீக்குவதற்கு அல்ல, அது இறைவனைப் பற்றும் தெளிவான மனசாட்சியுடன் இருப்போம் என செய்துகொள்ளும் வாக்குறுதியாகும். இந்த திருமுழுக்கு இப்பொழுது இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினாலே, உங்களை இரட்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது. கிறிஸ்து பரலோகத்திற்குப் போய், இறைவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார். இறைத்தூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்கு அடங்கியிருக்கின்றன.
1 பேதுரு 3:5-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து, தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும். கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.” நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? நீதிக்காக நீங்கள் பாடுகள்பட்டால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து; கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள். தீமைசெய்து பாடுகள் அனுபவிப்பதைவிட, தேவனுக்கு விருப்பமானால், நன்மைசெய்து பாடுகள் அனுபவிப்பதே மேன்மையாக இருக்கும். ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார். அந்த ஆவிகள், நோவா கப்பலைக் கட்டின நாட்களிலே, தேவன் அதிக பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்; அந்தக் கப்பலிலே எட்டு நபர்கள்மட்டுமே பிரவேசித்து தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
1 பேதுரு 3:5-22 பரிசுத்த பைபிள் (TAERV)
பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து தேவனின் நம்பிக்கைக்கொண்ட பரிசுத்த பெண்கள் அவ்வாறே வாழ்ந்தனர். இவ்வாறாகவே அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொண்டனர். அவர்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். நான் சாராளைப் போன்ற பெண்களைக் குறித்துக் கூறுகிறேன். அவள் தனது கணவனாகிய ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்தாள். அவனை எஜமானென்று அழைத்தாள். நீங்கள் சரியானவற்றைச் செய்து எதைப்பற்றியும் அஞ்சாதவர்களாய் வாழ்ந்தால் சாராளின் உண்மையான மக்களாய் இருப்பீர்கள். அவ்வாறே கணவன்மாராகிய நீங்களும் உங்கள் மனைவியரோடு திருமண வாழ்வு பற்றிய புரிந்துகொள்ளுதலின்படி வாழவேண்டும். நீங்கள் உங்கள் மனைவியரை மதிக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களைக் காட்டிலும் எளியவர்கள். அதே சமயத்தில் உங்களுக்கு வாழ்வளித்த தேவனுடைய கிருபையில் அவர்களும் கூட்டு வாரிசுதாரர்கள் ஆவார்கள். உங்கள் பிரார்த்தனைக்கு எந்தக் தொந்தரவும் நேராமல் இருக்க இவற்றைச் செய்யுங்கள். எனவே நீங்கள் யாவரும் ஒன்றிணைந்து அமைதியாக வாழவேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். ஒருவரையொருவர் சகோதரரைப்போல நேசியுங்கள். இரக்கமுள்ளவர்களாகவும், அருளுடையவர்களாகவும் இருங்கள். உங்களுக்கு ஒருவன் தீமை செய்துவிட்டதால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவனுக்குத் தீமை செய்யாதீர்கள். உங்களை ஒருவன் அவமானப்படுத்தினால், பதிலுக்கு நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். ஆனால் அவனை ஆசீர்வதிக்கும்படியாக தேவனை வேண்டுங்கள். நீங்கள் ஆசியைப் பெற அழைக்கப்பட்டீர்கள் என்பதால் இதைச் செய்யுங்கள் வேதவாக்கிம் கூறுகிறது: “வாழ்க்கையை நேசிக்கவும் நல்ல நாட்களை அனுபவிக்கவும் விரும்புகிற மனிதன் தீயவற்றைப் பேசுவதை நிறுத்தல் வேண்டும். அவன் தீமை செய்வதை விட்டு நன்மை செய்ய வேண்டும். அவன் அமைதியை நாடி, அதைப் பெற முயலவேண்டும். கர்த்தர் நல்ல மனிதரைக் காண்கிறார். அவர்களுடைய பிரார்த்தனைகளைக் கேட்கிறார். ஆனால் தீமைசெய்யும் மனிதருக்குக் கர்த்தர் எதிரானவர்.” எப்போதும் நன்மை செய்யவே நீங்கள் முயன்றுகொண்டிருந்தால் ஒருவனும் உங்களைத் துன்புறுத்த முடியாது. ஆனால் சரியானதைச் செய்கையில் நீங்கள் துன்பம் அடைந்தால் கூட, உங்களுக்கு நல்லதே ஆகும். “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள். கவலை கொள்ளாதீர்கள்.” ஆனால் உங்கள் இதயங்களில் கர்த்தராகிய கிறிஸ்துவை பரிசுத்தம் பண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையைப் பற்றி விளக்கிக் கூறும்படியாகக் கேட்போருக்குப் பதில் கூறுவதற்கு எப்போதும் தயாராக இருங்கள். ஆனால் அவர்களுக்கு மரியாதையோடும் மென்மையாகவும் பதில் கூறுங்கள். உங்கள் மனசாட்சியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது கிறிஸ்துவைப் பின்பற்றும் உங்கள் நடத்தையைக் குறை கூறிப் பேசுகின்ற மக்கள் வெட்கமடைவார்கள். கிறிஸ்துவில் நீங்கள் வாழும் நல்வாழ்க்கைக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். அவர்கள் உங்களுக்கெதிராகப் பேசியவற்றிற்காக வெட்கமடைவார்கள். தவறு செய்வதைக் காட்டிலும், தேவனுடைய விருப்பம் இதுதான் எனில் நன்மை செய்வதற்காகத் துன்புறுவது நல்லது. ஏனெனில் ஒட்டுமொத்தமாக நம் பாவங்களுக்காக கிறிஸ்துவும் மரித்தார். குற்றம் நிறைந்த மனிதர்களுக்காக பாவமேயில்லாத அவர் இறந்தார். இதன்மூலம் உங்களை தேவனிடம் வழிகாட்டினார். இயற்கையான மனித வாழ்வில் அவர் மரணமடைய நேரிட்டது. ஆனால் உயர்ந்த ஆன்மீக நிலையில் அவர் மீண்டும் எழுப்பப்பட்டார். சிறைச்சாலைகளில் உள்ள ஆவிகளுக்கு, இந்த ஆவி நிலையிலேயே சென்று அறிவித்தார். நோவாவின் காலத்தில் அந்த ஆவிகள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தன. நோவா பேழையை அமைக்கும்போது தேவன் அவற்றிற்காகப் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார். மிகச் சில மக்களாகிய எட்டுப் பேர் மட்டுமே பேழையில் காப்பாற்றப்பட்டார்கள். தண்ணீரினால் இம்மக்கள் மீட்கப்பட்டார்கள். இன்று நீங்கள் இரட்சிக்கப்படுகின்ற ஞானஸ்நானத்திற்கு அந்தத் தண்ணீர் ஒப்பானது. ஞானஸ்நானம் சரீரத்திலிருந்து அழுக்கை விலக்குவதில்லை. ஆனால் தேவனிடம் தூய உள்ளத்தை வேண்டுவதே ஞானஸ்நானம். இயேசு கிறிஸ்து மரணத்தினின்று எழுப்பப்பட்டதால் இவை அனைத்தும் நடக்கின்றன. இப்போது இயேசு பரலோகத்திற்குப் போய்விட்டார். அவர் தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். அவர் தேவதூதர்களையும், அதிகாரங்களையும், ஆற்றல் வாய்ந்தோரையும் ஆளுகிறார்.
1 பேதுரு 3:5-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள். அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள். மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனவுருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து; கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடைவர்களாயிருங்கள். தீமைசெய்து பாடனுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடனுபவிப்பதே மேன்மையாயிருக்கும். ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க்காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.