1 பேதுரு 3:1-12
1 பேதுரு 3:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மனைவிகளே, அவ்வாறே நீங்களும் உங்கள் சொந்த கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது வசனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்தாலும், வசனமில்லாமலே அவர்களின் மனைவியின் நடத்தையினால் ஒருவேளை ஆதாயப்படுத்தக்கூடும். தூய்மையும் பயபக்தியுமுள்ள உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் காணட்டும். உங்கள் அழகு, வெளி அலங்காரத்தில் தங்கியிருக்கக் கூடாது. தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலையுயர்ந்த உடைகளை உடுத்துதல் ஆகிய வெளியான அலங்காரத்தினாலல்ல. அது உங்கள் உள்ளத்தின் அழகாகவே இருக்கவேண்டும். சாந்தமும் அமைதியும் உள்ள ஆவியே, அழிந்துபோகாத அழகைக் கொடுக்கிறது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது. ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய், முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அலங்கரித்தார்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கணவர்களிடம் பணிவுடன் நடந்தார்கள். அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாய் இருப்பீர்கள். கணவர்களே, அதுபோலவே உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துகொள்ளுதலோடு, அக்கறையுடன் வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாயும் இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருப்பதனால், அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாட்டுகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது. இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் ஒருமனப்பட்டிருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதரரைப்போல் அன்பு காட்டுகிறவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மையுடையவர்களாய் இருங்கள். தீமைக்குப் பதிலாக தீமை செய்யவேண்டாம்; ஏளனத்திற்கு பதிலாக ஏளனம் செய்யவேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கிறதாவது: “வாழ்வை நேசித்து, நல்ல நாட்களைக் காணவிரும்புகிறவன் எவனோ, அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி, தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுகளிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும். அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்யவேண்டும்; சமாதானத்தைத் தேடி, அதை நாடிச்செல்ல வேண்டும். ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கவனமாய் கேட்கின்றன. ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கிறவர்களுக்கு எதிராய் இருக்கிறது.”
1 பேதுரு 3:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல், அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது. இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து, தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும், கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும். கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.”
1 பேதுரு 3:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
அவ்வாறே மனைவியராகிய நீங்கள், உங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய போதனைகளை உங்களில் சிலரது கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கூட, எப்பேச்சுமில்லாமல் தம் நடத்தையின் மூலம் அவர்களின் மனைவிமார்கள் அவர்களை வலியுறுத்தவேண்டும். உங்கள் பரிசுத்த மரியாதைக்குரிய நடத்தையை அவர்கள் காண்பார்கள். கூந்தல், பொன் ஆபரணங்கள் மற்றும் ஆடை வகைகள் ஆகிய புற அழகுகளால் ஆனதாக உங்கள் அழகு இருக்கக் கூடாது. உள்மனதினுடையதும் இதயத்தினுடையதுமான அமைதியும் மென்மையுமான அழகாக உங்கள் அழகு இருக்கவேண்டும். அந்த அழகு ஒரு நாளும் அழியாது. இது தேவனுடைய பார்வையில் மிகவும் விலை உயர்ந்ததாகும், பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து தேவனின் நம்பிக்கைக்கொண்ட பரிசுத்த பெண்கள் அவ்வாறே வாழ்ந்தனர். இவ்வாறாகவே அவர்கள் தங்களை அழகுபடுத்திக்கொண்டனர். அவர்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். நான் சாராளைப் போன்ற பெண்களைக் குறித்துக் கூறுகிறேன். அவள் தனது கணவனாகிய ஆபிரகாமுக்குக் கீழ்ப்படிந்தாள். அவனை எஜமானென்று அழைத்தாள். நீங்கள் சரியானவற்றைச் செய்து எதைப்பற்றியும் அஞ்சாதவர்களாய் வாழ்ந்தால் சாராளின் உண்மையான மக்களாய் இருப்பீர்கள். அவ்வாறே கணவன்மாராகிய நீங்களும் உங்கள் மனைவியரோடு திருமண வாழ்வு பற்றிய புரிந்துகொள்ளுதலின்படி வாழவேண்டும். நீங்கள் உங்கள் மனைவியரை மதிக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களைக் காட்டிலும் எளியவர்கள். அதே சமயத்தில் உங்களுக்கு வாழ்வளித்த தேவனுடைய கிருபையில் அவர்களும் கூட்டு வாரிசுதாரர்கள் ஆவார்கள். உங்கள் பிரார்த்தனைக்கு எந்தக் தொந்தரவும் நேராமல் இருக்க இவற்றைச் செய்யுங்கள். எனவே நீங்கள் யாவரும் ஒன்றிணைந்து அமைதியாக வாழவேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். ஒருவரையொருவர் சகோதரரைப்போல நேசியுங்கள். இரக்கமுள்ளவர்களாகவும், அருளுடையவர்களாகவும் இருங்கள். உங்களுக்கு ஒருவன் தீமை செய்துவிட்டதால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் அவனுக்குத் தீமை செய்யாதீர்கள். உங்களை ஒருவன் அவமானப்படுத்தினால், பதிலுக்கு நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். ஆனால் அவனை ஆசீர்வதிக்கும்படியாக தேவனை வேண்டுங்கள். நீங்கள் ஆசியைப் பெற அழைக்கப்பட்டீர்கள் என்பதால் இதைச் செய்யுங்கள் வேதவாக்கிம் கூறுகிறது: “வாழ்க்கையை நேசிக்கவும் நல்ல நாட்களை அனுபவிக்கவும் விரும்புகிற மனிதன் தீயவற்றைப் பேசுவதை நிறுத்தல் வேண்டும். அவன் தீமை செய்வதை விட்டு நன்மை செய்ய வேண்டும். அவன் அமைதியை நாடி, அதைப் பெற முயலவேண்டும். கர்த்தர் நல்ல மனிதரைக் காண்கிறார். அவர்களுடைய பிரார்த்தனைகளைக் கேட்கிறார். ஆனால் தீமைசெய்யும் மனிதருக்குக் கர்த்தர் எதிரானவர்.”
1 பேதுரு 3:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள். அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள். மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனவுருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப்பின்தொடரக்கடவன். கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.