1 பேதுரு 2:11-24

1 பேதுரு 2:11-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமான நண்பர்களே, இந்த உலகத்தில் அந்நியரும் பிறநாட்டவருமாய் இருக்கிற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்கள் ஆத்துமாவுக்கு எதிராகப் போரிடுகின்றன. இறைவனை அறியாத மக்கள் மத்தியில் நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழுங்கள்; அப்பொழுது அவர்கள் உங்களைத் தீமை செய்கிறவர்கள் என்று குற்றம் சாட்டினாலும் அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில், இறைவனை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தர்நிமித்தம் மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிற எல்லா அதிகாரங்களுக்கும் பணிந்து நடவுங்கள்: மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி, அல்லது தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கும்படியும், நன்மை செய்கிறவர்களைப் பாராட்டும்படியும் அரசனால் அனுப்பப்படுகிற ஆளுநரானாலும் சரி, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். ஏனெனில் நன்மை செய்வதினாலே, நீங்கள் மூடரின் அறிவீனப் பேச்சை அடக்கவேண்டும் என்பது இறைவனுடைய சித்தமாய் இருக்கிறது. சுதந்திரமுடைய மனிதராய் வாழுங்கள்; ஆனால் உங்கள் சுதந்திரத்தை தீமையை மூடும் ஒரு போர்வையாகப் பயன்படுத்தாதீர்கள்; இறைவனின் ஊழியராக வாழுங்கள். எல்லோருக்கும் ஏற்ற மதிப்பைக்கொடுத்து நடவுங்கள்; விசுவாசிகளான சகோதரரில் அன்பாய் இருங்கள். இறைவனுக்குப் பயந்து வாழுங்கள். அரசரைக் கனம்பண்ணுங்கள். அடிமைகளே, உங்கள் எஜமான்களுக்குரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். நல்லவர்களுக்கும் தயவுள்ளவர்களுக்கும் மாத்திரமல்ல, கடுமையானவர்களுக்கும் அடங்கி நடவுங்கள். ஏனெனில், ஒருவன் அநியாயத்தினால் வரும் கஷ்டங்களின் வேதனையை இறைவனை மனதில் கொண்டவனாய் சகித்தால், அது பாராட்டுக்குரியது. ஆனால் நீங்கள் தவறு செய்வதற்காக சிட்சிக்கப்படுகிறபோது அதைச் சகித்தால், அதனால் உங்களுக்கு என்ன பாராட்டு ஏற்படமுடியும்? ஆனால் நீங்கள் நன்மை செய்வதற்காக வேதனை அனுபவிக்கிறபோது, அதைச் சகித்துக்கொண்டால், அது இறைவனுக்கு முன்பாக பாராட்டுக்கு உரியதாய் இருக்கும். இதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். ஏனெனில் கிறிஸ்து உங்களுக்காக பாடுகளை அனுபவித்து, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நடக்கவேண்டுமென்று, உங்களுக்கான ஒரு முன்மாதிரியை விட்டுச்சென்றுள்ளார். “அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. அவருடைய வாயில் வஞ்சனை காணப்படவும் இல்லை.” அவர்கள் அவரை ஏளனம் செய்தபோதும், அவர் பழிவாங்கவில்லை; அவர் வேதனைகளை அனுபவித்தபோது, அவர் பயமுறுத்தவில்லை. அவரோ நீதியாய் நியாயத்தீர்ப்புச் செய்கிற இறைவனுக்கே தம்மை ஒப்புக்கொடுத்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு வாழும்படி, அவர்தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின்மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் சுகமடைந்திருக்கிறீர்கள்.”

1 பேதுரு 2:11-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி, யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள். எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள். வேலைக்காரர்களே, அதிக பயத்தோடு உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும்மட்டும் இல்லை, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். ஏனென்றால், ஒருவன் அநியாயமாகப் பாடுகள்படும்போது தேவனை நினைத்துக்கொண்டே உபத்திரவங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்குப் பிரியமாக இருக்கும். நீங்கள் குற்றம் செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால், அதினால் என்ன நன்மை உண்டு? ஆனால், நீங்கள் நன்மைசெய்து பாடுகள்படும்போது பொறுமையோடு சகித்துக்கொண்டால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும். இதற்காகத்தான் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; ஏனென்றால், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுகள்பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு முன்மாதிரியை வைத்துப்போனார். அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை; அவர் தூஷிக்கப்படும்போது பதிலுக்குத் தூஷிக்காமலும், பாடுகள்பட்டபோது திரும்ப பயமுறுத்தாமலும், நியாயமாக நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்கு தம்மையே ஒப்புவித்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கத்தக்கதாக, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

1 பேதுரு 2:11-24 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்பான நண்பர்களே, நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்கிற அந்நியர்கள் போலவும் புதிய விருந்தாளிகள் போலவும் இருக்கிறீர்கள். உங்கள் சரீரங்கள் செய்ய விழையும் தீய காரியங்களை விட்டு விலகுமாறு நான் உங்களைக் கேட்கிறேன். இவை உங்கள் ஆன்மாவுக்கு எதிராகப் போராடுகின்றன. தேவனிடம் நம்பிக்கையற்ற மக்கள் உங்களைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று இம்மக்கள் கூறக்கூடும். எனவே நல்வாழ்க்கை வாழுங்கள். அப்போது அவர்கள் உங்கள் நற்செய்கைகளைக் காண்பார்கள். அவர் வரும் நாளில் அவர்கள் தேவனுக்கு மகிமையைக் கொடுப்பார்கள். இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் ராஜாவுக்குக் கீழ்ப்படியுங்கள். ராஜாவால் அனுப்பப்பட்ட ஆளுநர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லவற்றைச் செய்பவர்களைப் புகழ்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள். எனவே புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசும் முட்டாள் மனிதர்களின் வாயை அடைக்கும் பொருட்டு நற்செயல்களைச் செய்யுங்கள். இதையே தேவன் விரும்புகிறார். சுதந்திரமான மனிதரைப்போன்று வாழுங்கள். தீயன செய்வதற்கு ஒரு காரணமாக உங்கள் விடுதலையைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்கு சேவை செய்பவர்களாகவே வாழுங்கள். எல்லாருக்கும் மரியாதை செலுத்துங்கள். தேவனுடைய குடும்பத்தில் எல்லா சகோதரர்களையும் சகோதரிகளையும் நேசியுங்கள். தேவனுக்கு அஞ்சுங்கள். ராஜாவை மதியுங்கள். அடிமைகளே, உங்கள் எஜமானர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இதை எல்லா மரியாதையோடும் செய்யுங்கள். நல்ல இரக்கமுள்ள எஜமானருக்குக் கீழ்ப்படியுங்கள். முரட்டுத்தனமான எஜமானருக்கும் கீழ்ப்படியுங்கள். ஒருவன் எந்தத் தவறும் செய்யாதபோதும் அவன் துன்பப்பட வேண்டியதிருக்கும். ஒருவன் தேவனை எண்ணிக்கொண்டே, துன்பத்தை அனுபவிப்பானாயின், அது தேவனை சந்தோஷப்படுத்தும். ஆனால் நீங்கள் செய்த தவறுக்காகத் தண்டிக்கப்பட்டால், அத் தண்டனையை அனுபவிப்பதற்காக உங்களைப் புகழவேண்டியிராது. ஆனால் நன்மை செய்வதற்காக நீங்கள் துன்புற்றால் அது தேவனுக்கு சந்தோஷம் தரும். அதைச் செய்வதற்காகவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பின்பற்றும்படியாக கிறிஸ்து ஓர் எடுத்துக்காட்டை உங்களுக்குத் தந்தார். அவர் செய்ததைப் போலவே நீங்களும் செய்யவேண்டும். கிறிஸ்து உங்களுக்காகத் துன்புற்றதால் நீங்கள் துன்பப்படும்போது பொறுமையாக இருக்கவேண்டும். “அவர் பாவமேதும் செய்யவில்லை. அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.” மக்கள் கிறிஸ்துவிடம் தீயவற்றைப் பேசினார்கள். ஆனால் அவர் அவர்களுக்கு எந்தத் தீய பதிலையும் தரவில்லை. கிறிஸ்து துன்புற்றார். ஆனால் அவர் மக்களுக்கு எதிராகப் பேசவில்லை. இல்லை! தேவன் தன்னைக் கவனித்துக்கொள்ளுமாறு கிறிஸ்து விட்டு விட்டார். தேவன் சரியான முறையில் நியாயந்தீர்க்கிறார். சிலுவையின் மேல் கிறிஸ்து தம் சரீரத்தில் நம் பாவங்களையும் சுமந்தார். நாம் பாவங்களுக்காக வாழ்வதை நிறுத்தி, நேர்மையாக வாழ்வதற்காக அவர் இதைச் செய்தார். அவரது காயங்களினால் நீங்கள் குணமாக்கப்பட்டீர்கள்.

1 பேதுரு 2:11-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி, புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள். வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும், சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.