1 பேதுரு 2:11-17

1 பேதுரு 2:11-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமான நண்பர்களே, இந்த உலகத்தில் அந்நியரும் பிறநாட்டவருமாய் இருக்கிற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்கள் ஆத்துமாவுக்கு எதிராகப் போரிடுகின்றன. இறைவனை அறியாத மக்கள் மத்தியில் நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழுங்கள்; அப்பொழுது அவர்கள் உங்களைத் தீமை செய்கிறவர்கள் என்று குற்றம் சாட்டினாலும் அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில், இறைவனை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தர்நிமித்தம் மனிதரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிற எல்லா அதிகாரங்களுக்கும் பணிந்து நடவுங்கள்: மிக மேலான அதிகாரத்திலுள்ள அரசரானாலும் சரி, அல்லது தீமை செய்கிறவர்களைத் தண்டிக்கும்படியும், நன்மை செய்கிறவர்களைப் பாராட்டும்படியும் அரசனால் அனுப்பப்படுகிற ஆளுநரானாலும் சரி, அவர்களுக்குப் பணிந்து நடவுங்கள். ஏனெனில் நன்மை செய்வதினாலே, நீங்கள் மூடரின் அறிவீனப் பேச்சை அடக்கவேண்டும் என்பது இறைவனுடைய சித்தமாய் இருக்கிறது. சுதந்திரமுடைய மனிதராய் வாழுங்கள்; ஆனால் உங்கள் சுதந்திரத்தை தீமையை மூடும் ஒரு போர்வையாகப் பயன்படுத்தாதீர்கள்; இறைவனின் ஊழியராக வாழுங்கள். எல்லோருக்கும் ஏற்ற மதிப்பைக்கொடுத்து நடவுங்கள்; விசுவாசிகளான சகோதரரில் அன்பாய் இருங்கள். இறைவனுக்குப் பயந்து வாழுங்கள். அரசரைக் கனம்பண்ணுங்கள்.

1 பேதுரு 2:11-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி, யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். நீங்கள் மனிதர்களுடைய கட்டளைகள் எல்லாவற்றிற்கும் கர்த்தருக்காக கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவாக இருந்தாலும், தீமைசெய்கிறவர்களுக்கு தண்டனையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் கொடுக்க ராஜாவால் அனுப்பப்பட்ட அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீனமான மனிதர்களுடைய வார்த்தைகளை அடக்குவது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தும் உங்களுடைய சுதந்திரம் தீயகுணத்தை மூடுகிறதாக இல்லாமல், தேவனுக்கு அடிமைகளாக இருங்கள். எல்லோரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரர்களிடம் அன்பாக இருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.

1 பேதுரு 2:11-17 பரிசுத்த பைபிள் (TAERV)

அன்பான நண்பர்களே, நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்கிற அந்நியர்கள் போலவும் புதிய விருந்தாளிகள் போலவும் இருக்கிறீர்கள். உங்கள் சரீரங்கள் செய்ய விழையும் தீய காரியங்களை விட்டு விலகுமாறு நான் உங்களைக் கேட்கிறேன். இவை உங்கள் ஆன்மாவுக்கு எதிராகப் போராடுகின்றன. தேவனிடம் நம்பிக்கையற்ற மக்கள் உங்களைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று இம்மக்கள் கூறக்கூடும். எனவே நல்வாழ்க்கை வாழுங்கள். அப்போது அவர்கள் உங்கள் நற்செய்கைகளைக் காண்பார்கள். அவர் வரும் நாளில் அவர்கள் தேவனுக்கு மகிமையைக் கொடுப்பார்கள். இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் ராஜாவுக்குக் கீழ்ப்படியுங்கள். ராஜாவால் அனுப்பப்பட்ட ஆளுநர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லவற்றைச் செய்பவர்களைப் புகழ்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள். எனவே புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசும் முட்டாள் மனிதர்களின் வாயை அடைக்கும் பொருட்டு நற்செயல்களைச் செய்யுங்கள். இதையே தேவன் விரும்புகிறார். சுதந்திரமான மனிதரைப்போன்று வாழுங்கள். தீயன செய்வதற்கு ஒரு காரணமாக உங்கள் விடுதலையைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் தேவனுக்கு சேவை செய்பவர்களாகவே வாழுங்கள். எல்லாருக்கும் மரியாதை செலுத்துங்கள். தேவனுடைய குடும்பத்தில் எல்லா சகோதரர்களையும் சகோதரிகளையும் நேசியுங்கள். தேவனுக்கு அஞ்சுங்கள். ராஜாவை மதியுங்கள்.

1 பேதுரு 2:11-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி, புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்