1 பேதுரு 2:1-12
1 பேதுரு 2:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இப்படியிருக்க, தீமை எல்லாவற்றையும், ஏமாற்றும் எண்ணங்கள் எல்லாவற்றையும், வெளிவேஷத்தையும், பொறாமையையும், எல்லா விதமான அவதூறுப் பேச்சுக்களையும், உங்களைவிட்டு அகற்றுங்கள். புதிதாய் பிறந்த குழந்தைகளைப்போல், தூய்மையான ஆவிக்குரிய பாலில் தாகமாய் இருங்கள். அப்பொழுது அதன்மூலம் உங்கள் இரட்சிப்பில் வளர்ச்சியடைவீர்கள். ஏனெனில் கர்த்தர் நல்லவர் என்பதை நீங்கள் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறீர்கள். நீங்கள் மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவரும், அவரால் உயர்மதிப்புப் பெற்றவருமான உயிருள்ள கல்லாகிய இயேசுவிடமே வருகிறீர்கள். நீங்களும் உயிருள்ள கற்களைப்போல, ஒரு ஆவிக்குரிய ஆலயமாகக் கட்டப்படுகிறீர்கள். இதனால் நீங்கள் இறைவனுக்கு ஏற்ற ஆவிக்குரிய பலிகளை இயேசுகிறிஸ்துவின் மூலமாய் செலுத்தும், பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகிறீர்கள். ஏனெனில்: “இதோ, சீயோனிலே ஒரு கல்லை வைக்கிறேன். அது தெரிந்துகொள்ளப்பட்டதும் உயர் மதிப்புள்ளதுமான ஒரு மூலைக்கல். அவரைச் சார்ந்து இருக்கிறவன் ஒருபோதும் வெட்கத்திற்குள்ளாவது இல்லை” என்று வேதவசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசிக்கிற உங்களுக்கோ, இந்தக் கல் உயர்மதிப்புடையது. ஆனால் விசுவாசிக்காதவர்களுக்கோ, “கட்டிடம் கட்டுகிறவர்களால் புறக்கணிக்கப்பட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.” இது, “மனிதர்களை இடறச்செய்யும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையாகவும் இருக்கிறது.” அவர்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படியாததினாலேயே இடறுகிறார்கள். அப்படி இடறி விழுவதற்கென்றே அவர்கள் நியமிக்கப்பட்டும் இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ, இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான வெளிச்சத்திற்குள் அழைத்தவரின் மேன்மைகளை அறிவிக்கும்படி, தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாகவும், ஒரு மேன்மையான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த ஜனமாகவும், இறைவனுக்குரிய மக்களாகவும் இருக்கிறீர்கள். முன்பு நீங்கள் ஒரு மக்களாக மதிக்கப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனுடைய மக்களாய் இருக்கிறீர்கள்; முன்பு நீங்கள் இறைவனுடைய இரக்கத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் இப்பொழுதோ நீங்கள் அவருடைய இரக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள். பிரியமான நண்பர்களே, இந்த உலகத்தில் அந்நியரும் பிறநாட்டவருமாய் இருக்கிற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்கள் ஆத்துமாவுக்கு எதிராகப் போரிடுகின்றன. இறைவனை அறியாத மக்கள் மத்தியில் நீங்கள் நல்ல வாழ்க்கையை வாழுங்கள்; அப்பொழுது அவர்கள் உங்களைத் தீமை செய்கிறவர்கள் என்று குற்றம் சாட்டினாலும் அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில், இறைவனை மகிமைப்படுத்துவார்கள்.
1 பேதுரு 2:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால், எல்லாத் தீயகுணங்களையும், எல்லாவிதமான கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், எல்லாவிதமான புறம்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள். மனிதர்களால் தள்ளப்பட்டதாக இருந்தும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடம் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவியானவருக்குரிய மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாக தேவனுக்குப் பிரியமான ஆவியானவருக்குரிய பலிகளைச் செலுத்துவதற்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். அப்படியே: “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையுயர்ந்ததுமாக இருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருக்கிறவன் வெட்கப்படுவது இல்லை” என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. ஆகவே, விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையுயர்ந்தது; கீழ்ப்படியாமல் இருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுகிறதற்கான கல்லும், விழுகிறதற்கான கன்மலையும் ஆனது;” அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்து இடறுகிறார்கள்; அதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்களோ, உங்களை அந்தகாரமான இருளில் இருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளியிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட வம்சமாகவும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான மக்களாகவும் இருக்கிறீர்கள். முன்பே நீங்கள் தேவனுடைய மக்களாக இருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை, இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள். பிரியமானவர்களே, அந்நியர்களும் அலைகிறவர்களுமாக இருக்கிற நீங்கள் ஆத்துமாவிற்கு எதிராகப் போர்செய்கிற சரீர இச்சைகளைவிட்டு விலகி, யூதரல்லாதோர் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று எதிராகப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, அதினாலே, தேவன் வரும்நாளிலே அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்குள்ளே நல்லநடக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
1 பேதுரு 2:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் விலகி இருங்கள். பொய் கூறாதீர்கள். போலியாக இருக்காதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். மக்களைக் குறித்துத் தீயன கூறாதீர்கள். இவற்றையெல்லாம் உங்கள் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்துங்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல இருங்கள். உங்களை ஆவியில் வளர்க்கும் பரிசுத்த பாலைப் போன்ற வேதவசனங்கள் மேல் பசியுடையவர்களாக இருங்கள். அதைப் பருகுவதால் நீங்கள் வளர்ந்து காப்பாற்றப்படுவீர்கள். கர்த்தரின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே ருசித்துள்ளீர்கள். கர்த்தர் இயேசு ஜீவனுள்ள “தலைக் கல்லாக” இருக்கிறார். உலக மக்களால் ஒதுக்கப்பட்ட கல்லாக அவர் இருந்தார். ஆனால் தேவன் தேர்ந்தெடுத்த கல் அவர் தான். தேவனிடம் அவர் விலை மதிப்புள்ளவராக இருக்கிறார். எனவே அவரிடம் வாருங்கள். நீங்களும் ஜீவனுள்ள கற்களைப் போன்றிருக்கிறீர்கள். ஓர் ஆன்மீக ஆலயத்தைக் கட்ட உங்களை தேவன் பயன்படுத்துகிறார். நீங்கள் இயேசு கிறிஸ்து வழியாக தேவன் ஏற்கத்தக்க ஆவிக்குரிய பலிகளைக் கொடுக்கும் பரிசுத்த ஆசாரியராக வேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் அப்பலிகளைக் கொடுங்கள். வேதவாக்கியம் சொல்கிறது, “பாருங்கள், நான் ஒரு விலையுயர்ந்த கல்லைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அக்கல்லை சீயோன் என்னுமிடத்தில் வைத்தேன். அவரை நம்புகிற மனிதன் எப்போதும் வெட்கமுறுவதில்லை.” நம்புகிற மக்களுக்கு அவர் கௌரவத்துக்குரியதாகிறார். ஆனால் நம்பிக்கையற்ற மக்களுக்கோ, அவர் கட்டுபவர்கள், “வேண்டாமென்று தள்ளிய கல்லாகிறது. ஆனால் அக்கல்லே மிக முக்கியமான கல்லாயிற்று” என்பதற்கேற்ப இருக்கிறார். நம்பிக்கையற்ற மக்களுக்கோ, அவர், “மக்களை இடறச் செய்யும் கல்லாவார். மக்களை விழவைக்கும் கல்லாவார்” என்பதற்கேற்ப இருக்கிறார். தேவனுடைய செய்திக்குக் கீழ்ப்படியாததால் மக்கள் இடறுகிறார்கள். அம்மக்களுக்கு தேவன் திட்டமிட்டிருப்பது இதுவே. ஆனால் நீங்களோ தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நீங்கள் ராஜாவின் ஆசாரியர். நீங்கள் ஒரு பரிசுத்த தேசம். நீங்கள் தேவனுக்குச் சொந்தமான மக்கள். தேவன் தாம் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் சொல்வதற்காக உங்களைத் தேர்ந்தெடுத்தார். அவரது அற்புதமான ஒளிக்கு இருளிலிருந்து அவர் உங்களை வரவழைத்தார். ஒரு காலத்தில் நீங்கள் தேவனுடைய மனிதர்களாக இருக்கவில்லை. ஆனால் இப்போது தேவனுடைய மக்களாக இருக்கிறீர்கள். ஒரு காலத்தில் தேவனுடைய இரக்கத்தை நீங்கள் பெறவில்லை. ஆனால் இப்போது நீங்கள் தேவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுள்ளீர்கள். அன்பான நண்பர்களே, நீங்கள் இந்த சமூகத்தில் வாழ்கிற அந்நியர்கள் போலவும் புதிய விருந்தாளிகள் போலவும் இருக்கிறீர்கள். உங்கள் சரீரங்கள் செய்ய விழையும் தீய காரியங்களை விட்டு விலகுமாறு நான் உங்களைக் கேட்கிறேன். இவை உங்கள் ஆன்மாவுக்கு எதிராகப் போராடுகின்றன. தேவனிடம் நம்பிக்கையற்ற மக்கள் உங்களைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று இம்மக்கள் கூறக்கூடும். எனவே நல்வாழ்க்கை வாழுங்கள். அப்போது அவர்கள் உங்கள் நற்செய்கைகளைக் காண்பார்கள். அவர் வரும் நாளில் அவர்கள் தேவனுக்கு மகிமையைக் கொடுப்பார்கள்.
1 பேதுரு 2:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால், சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள். பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி, புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.