1 பேதுரு 1:10-16
1 பேதுரு 1:10-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள். தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள். அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள். ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள். நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருங்கள். உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள். ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கிறதே.
1 பேதுரு 1:10-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உங்களுக்கு உண்டான கிருபையைப்பற்றித் தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைப்பற்றிக் கருத்தாகத் தேடி ஆராய்ந்து பார்த்தார்கள்; தங்களுக்குள் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவிற்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப்பின்பு வரும் மகிமைகளையும் முன்னமே அறிவித்தபோது, இந்தக் காலத்தைக் குறித்தார் என்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் என்ன என்பதையும் ஆராய்ந்தார்கள். தங்களுக்காக இல்லை, நமக்காகவே இவைகளைத் தெரிவித்தார்கள் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினவர்கள் மூலமாக இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுவருகிறது; இவைகளைத் தெரிந்துகொள்ள தேவதூதர்களும் ஆசையாக இருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் உங்களுடைய மனதை ஆயத்தப்படுத்தி, தெளிவான புத்தி உள்ளவர்களாக இருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள். நீங்கள் முன்பே உங்களுடைய அறியாமையினாலே, உங்களுக்குள் இருந்த இச்சைகளின்படி இனி நடக்காமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருக்கிறதுபோல, நீங்களும் உங்களுடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள். நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
1 பேதுரு 1:10-16 பரிசுத்த பைபிள் (TAERV)
உங்களுக்குக் காட்டப்பட வேண்டிய கிருபையைப்பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன தீர்க்கதரிசிகள் கவனமாக ஆராய்ந்து இந்த இரட்சிப்பைப் பற்றி அறிய முயன்றிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் ஆவியானவர் அத்தீர்க்கதரிசிகளிடம் இருந்தார். கிறிஸ்துவுக்கு நேர இருக்கிற துன்பங்களைப் பற்றியும் அதைத் தொடர்ந்து வரப்போகும் மகிமையைப் பற்றியும் அந்த ஆவியானவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அந்த ஆவியானவர் எதைக் குறித்து பேசுகிறார் என்று அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள். அச்சம்பவங்கள் நடக்கும் நேரம் மற்றும் சூழ்நிலை பற்றி அறிய தீர்க்கதரிசிகள் முயன்றார்கள். அவர்கள் செய்த பணி அவர்களுக்குரியதல்லவென்று அந்தத் தீர்க்கதரிசிகளுக்கு உணர்த்தப்பட்டது. தீர்க்கதரிசிகள் உங்களுக்காகப் பணியாற்றினார்கள். இவ்விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசியபொழுது அவர்கள் உங்களுக்கு சேவை செய்துகொண்டிருந்தனர். நற்செய்தியை உங்களுக்குப் போதித்த மனிதர்களே அச்செய்திகளையும் உங்களுக்குக் கூறியிருக்கிறார்கள். பரலோகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் உதவியால் அவர்கள் அதை உங்களுக்குக் கூறினார்கள். தேவ தூதர்களும் அறிந்துகொள்ள விரும்புகின்ற காரியங்கள் உங்களுக்கு அறிவிக்கப்பட்டன. எனவே உங்கள் மனங்களை சேவைக்கு ஆயத்தப்படுத்தி, தன்னடக்கத்தோடிருங்கள். இயேசு கிறிஸ்து தோன்றும்போது உங்களுக்கு வாய்க்கப் போகிற கிருபையின் பரிசின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். கடந்த காலத்தில் இந்தக் காரியங்களை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே நீங்கள் விரும்பிய தீயசெயல்களைச் செய்து வந்தீர்கள். ஆனால் இப்போது கீழ்ப்படிகிற தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்கள். எனவே ஏற்கெனவே நீங்கள் கொண்டிருந்த தீய ஆசைகளுக்கு ஏற்ப வாழ்வதை நிறுத்துங்கள். உங்களை அழைத்த தேவன் பரிசுத்தமானவர். ஆதலால் நீங்களும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் பரிசுத்தமானவர்களாக இருங்கள். வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “நான் பரிசுத்தராக இருப்பதால், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.”
1 பேதுரு 1:10-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்; தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள். நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.