1 இராஜாக்கள் 9:10-28

1 இராஜாக்கள் 9:10-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே, தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான். ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை. அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கி வருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான். ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான். பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான். கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர் பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான். சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும், பாலாத்தையும், வனாந்தர வெளியிலுள்ள தத்மோரையும், தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான். இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக்கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியருமான சகல ஜனத்திலும், அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சி வேலை செய்ய அடிமைப்படுத்திக் கொண்டான். இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுக்குப் பணிவிடைக்காரரும், பிரபுக்களும், சேர்வைக்காரரும், இரதவீரரும், குதிரைவீரருமாயிருந்தார்கள். ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள். பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான். சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தை முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டு, கர்த்தரின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபங்காட்டிவந்தான். ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான். அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான். அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

1 இராஜாக்கள் 9:10-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாலொமோன் யெகோவாவின் ஆலயம், அரச அரண்மனை ஆகிய இரண்டையும் கட்டிமுடிக்க இருபது வருடம் ஆனபின்பு, அவன் விரும்பிய அளவு கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், தங்கத்தையும் தீருவின் அரசனாகிய ஈராம் கொடுத்தபடியினால், சாலொமோன் கலிலேயா நாட்டில் இருபது பட்டணங்களை ஈராமுக்குக் கொடுத்தான். ஆனால் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்கு ஈராம் தீருவிலிருந்து போனபோது, அவற்றில் அவன் மகிழ்ச்சியடையவில்லை. அதனால் அவன் சாலொமோனைப் பார்த்து, “என் சகோதரனே இவை என்ன? நீ தந்திருக்கும் பட்டணங்கள் எப்படிப்பட்டவை?” என்று கேட்டான். அதை அவன், “காபூல் நாடு” என அழைத்தான். அந்தப் பட்டணங்கள் இன்றுவரை அந்தப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. ஈராம் சாலொமோன் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து நிறையுள்ள தங்கத்தை அனுப்பியிருந்தான். அரசன் சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், தன் சொந்த அரண்மனையையும், அதைத் தாங்கும் அடுக்குத் தளங்களையும், எருசலேம் மதிலையும், ஆத்சோர், மெகிதோ, கேசேர் ஆகிய பட்டணங்களையும் கட்டுவதற்கு நியமித்த கட்டாய வேலையின் விபரம் இதுவே: எகிப்திய அரசனான பார்வோன் படையெடுத்துப்போய் கேசேரைக் கைப்பற்றியிருந்தான். அதை எரித்து, அங்கிருந்த கானானிய குடிமக்களையும் கொலைசெய்தான். பின்பு சாலொமோனின் மனைவியான தன் மகளுக்குத் திருமணப் பரிசாக இதைக் கொடுத்தான். சாலொமோன் கேசேரைத் திருப்பிக் கட்டியதோடு, கீழ் பெத் ஓரோனையும், தன் நிலப்பகுதியிலுள்ள பாலைவனத்தில் பாலாத், தத்மோர் ஆகிய பட்டணங்களையும், அவனுடைய களஞ்சியப் பட்டணங்களையும், தனது தேர்களுக்கும் குதிரைகளுக்குமான பட்டணங்களையும் கட்டினான். அவன் எருசலேமிலும், லெபனோனிலும், தான் அரசாண்ட பிரதேசம் முழுவதிலும் தான் கட்ட ஆசைப்பட்டவற்றைக் கட்டினான். நாட்டில் இஸ்ரயேலர் அல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோர் இன்னும் மீதியாயிருந்தார்கள். இவர்கள் அந்நாட்டில் இஸ்ரயேலர்களால் அழிக்கமுடியாமல் விடப்பட்டிருந்தவர்களின் சந்ததிகள். இன்றுவரை உள்ளபடி அவர்களை சாலொமோன் தனது அடிமைவேலை செய்வதற்குக் கட்டாயமாய்ச் சேர்த்துக்கொண்டான். ஆனால் சாலொமோன் இஸ்ரயேலர் எவரையும் அடிமைகளாக்கவில்லை. அவர்கள் அவனுடைய இராணுவவீரர்களாயும், அவனுடைய அரசியல் அதிகாரிகளாகவும், அவனுடைய அலுவலகர்களாகவும், அவனுடைய தலைவர்களாகவும், அவனுடைய தேர்களுக்கும், தேரோட்டிகளுக்கும், தளபதிகளாகவும் இருந்தார்கள். இவர்கள் சாலொமோனுடைய வேலைத் திட்டங்களுக்குப் பொறுப்பாய் இருந்த தலைமை அதிகாரிகளாகவும் இருந்தனர். இவர்களில் ஐந்நூற்று ஐம்பது அதிகாரிகள் வேலைசெய்த மனிதர்களை மேற்பார்வை செய்தார்கள். பார்வோனின் மகள் தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் அவளுக்காகக் கட்டியிருந்த அரண்மனைக்கு வந்தபின்பு, அவன் அதற்கு தாங்கு தளங்களைக் கட்டினான். யெகோவாவுக்காகத் தான் கட்டிய பலிபீடத்தின்மேல் சாலொமோன் வருடத்தில் மூன்றுமுறை தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிட்டான். அவற்றோடு யெகோவாவுக்குமுன் தூபங்காட்டி, இவ்விதமாய் ஆலயக் கடமைகளையும் நிறைவேற்றினான். அத்துடன் ஏதோம் நாட்டில் செங்கடலின் கரையோரத்தில் ஏலாத்துக்குக் அருகில் உள்ள எசியோன் கேபேர் என்னும் இடத்தில் அரசன் சாலொமோன் கப்பல்களையும் கட்டினான். ஈராம் கடல் பயணத்தில் பழக்கப்பட்ட தனது வேலையாட்களை, சாலொமோனுடைய வேலையாட்களோடு கப்பற்படையில் சேர்ந்து வேலைசெய்வதற்காக அனுப்பினான். அவர்கள் ஓப்பீருக்குப் போய், நானூற்று இருபது தாலந்து நிறையுள்ள தங்கத்தை அரசனாகிய சாலொமோனுக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

1 இராஜாக்கள் 9:10-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சாலொமோன் யெகோவாவுடைய ஆலயமும் ராஜ அரண்மனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற 20 ஆம் வருடம் முடிவிலே, தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாருமரங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள 20 பட்டணங்களைக் கொடுத்தான். ஈராம் தனக்கு சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளின்மேல் அவன் பிரியப்படவில்லை. அதனாலே அவன்: என்னுடைய சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்த நாள்வரை சொல்லி வருகிறபடி காபூல் நாடு என்று பெயரிட்டான். ஈராம் ராஜாவிற்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான். பிடித்த கூலியில்லா வேலையாட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் யெகோவாவுடைய ஆலயத்தையும், தன்னுடைய அரண்மனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான். கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர் பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியர்களைக் கொன்றுபோட்டு, அதை சாலொமோனின் மனைவியாகிய தன்னுடைய மகளுக்கு சீதனமாகக் கொடுத்திருந்தான். சாலொமோன் அந்தக் கேசேர் பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும், பாலாத்தையும், வனாந்திரத்திலுள்ள தாமாரையும், தனக்கு இருக்கிற எல்லாவற்றையும் சேமித்துவைக்கும் எல்லாப் பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர்கள் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாட்சி செய்த தேசமெங்கும் தனக்கு விருப்பமானதையெல்லாம் கட்டினான். இஸ்ரவேல் மக்கள் அழிக்காமல் மீதியாக விட்டிருந்த இஸ்ரவேல் மக்களல்லாத எமோரியர்கள், ஏத்தியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுமான எல்லா மக்களிலும், அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீதியாக இருந்த எல்லா மக்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்த நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, கூலியில்லாமல் வேலைசெய்ய அடிமைப்படுத்திக்கொண்டான். இஸ்ரவேல் மக்களில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தவீரர்களும், அவனுக்குப் பணிவிடைக்காரர்களும், பிரபுக்களும், படைத்தலைவர்களும், இரதவீரர்களும், குதிரைவீரர்களுமாக இருந்தார்கள். 550 பேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிப்பதற்குத் தலைமையான விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள். பார்வோனின் மகள், தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன்னுடைய மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோ பட்டணத்தைக் கட்டினான். சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டி முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் ஒரு வருடத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, யெகோவாவின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபம் காட்டிவந்தான். ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் செங்கடலின் கரையிலே ஏலாத்திற்கு அருகிலுள்ள எசியோன் கேபேரிலே கப்பல்களைச் செய்தான். அந்தக் கப்பல்களில், கடல் பயணத்தில் பழகின கப்பலாட்களாகிய தன்னுடைய வேலைக்காரர்களை ஈராம் சாலொமோனுடைய வேலைக்காரர்களோடு அனுப்பினான். அவர்கள் ஓப்பீருக்குப்போய், அந்த இடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடம் கொண்டுவந்தார்கள்.

1 இராஜாக்கள் 9:10-28 பரிசுத்த பைபிள் (TAERV)

சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயின. அதற்குப் பின் சாலொமோன் ஈராமுக்கு கலிலேயாவில் 20 நகரங்களைக் கொடுத்தான். காரணம் அவன் ஆலயத்தையும் அரண்மனையும் கட்ட உதவி செய்தான். சாலொமோனுக்குத் தேவையான கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், தங்கத்தையும் கொடுத்து வந்தான். எனவே, தீரு என்னும் நகரில் இருந்து பயணப்பட்டு சாலொமோன் கொடுத்த நகரங்களை எல்லாம் ஈராம் பார்வையிட்டான். அப்போது அவன் திருப்தியடையவில்லை. ஈராம், “என் சகோதரனே, நீ எத்தகைய நகரங்களைக் கொடுத்திருக்கிறாய்?” என்று கேட்டான். ஈராம் மன்னன் அதற்கு காபூல் என்று பேரிட்டான். இப்பொழுது அது அவ்வாறே அழைக்கப்படுகிறது. ஈராம் 9,000 பவுண்டு தங்கத்தை ஆலயம் கட்ட சாலொமோனுக்கு அனுப்பியிருக்கிறான். சாலொமோன் ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட அடிமைகளை கட்டாயப்படுத்தினான். மேலும் அவர்களைப் பயன்படுத்தி பலவற்றைக் கட்டினான். அவன் மில்லோவைக் கட்டினான். எருசலேம் நகரைச் சுற்றி ஒரு சுவரையும் பின்னர் ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான். முன்பு, எகிப்து மன்னன் கேசேரைச் சண்டையிட்டு எரித்துவிட்டான். அங்கு வாழ்ந்த கானானியரையும் கொன்றான். சாலொமோன் பார்வோன் மன்னனின் குமாரத்தியையும் மணந்துக்கொண்டான். எனவே திருமணப் பரிசாக இந்நகரத்தைச் சாலொமோன் பெற்றுக்கொண்டான். சாலொமோன் அந்நகரை மீண்டும் கட்டினான். அவன் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டி முடித்தான். மேலும் பாலாத், பாலைவனத்தில் உள்ள தத்மோரயும், தன் தானியங்களைச் சேகரித்து வைத்த நகரங்களையும் தன் இரதங்கள் மற்றும் குதிரைகளை வைத்திருக்கும் நகரங்களையும் அவன் கட்டினான். அவன் எருசலேம், லீபனோன் மற்றும் அவனது ஆட்சிக்குட்பட்ட இடங்கள் அனைத்திலும் தான் விரும்பியவற்றையெல்லாம் கட்டினான். அந்நாட்டில் இஸ்ரவேலர் அல்லாதாரும் வாழ்ந்தனர். அவர்கள் எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோராகும். இஸ்ரவேலர்களால் சிலர்களை அழிக்க முடியவில்லை. ஆனால் சாலொமோன் அவர்களை அடிமைகள்போல வேலைசெய்ய கட்டாயப்படுத்தினான், அவர்கள் இன்றும் அடிமைகளாக இருக்கின்றனர். சாலொமோன் இஸ்ரவேலர்களை அடிமையாக்கவில்லை. இஸ்ரவேலர்கள் வீரர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், தலைவர்களாகவும் இரத ஏவலர்களாகவும் இருந்தனர். சாலொமோனின் திட்டக்குழுவில் 550 மேற்பார்வையாளர்கள் இருந்தனர். இவர்கள் வேலைக்காரர்களின் எஜமானர்கள். பார்வோன் மன்னனின் குமாரத்தி தாவீது நகரத்திலிருந்து சாலொமோன் புதிதாகக் கட்டிய அரண்மனைக்கு வந்தாள். பிறகு சாலொமோன் மில்லோவைக் கட்டிமுடித்தான். ஒவ்வொரு ஆண்டும் மூன்றுமுறை சாலொமோன் பலிபீடத்தில் சர்வாங்க தகன பலிகளையும், சமாதான பலிகளையும் செலுத்தினான். இது சாலொமோனால் கர்த்தருக்காகக் கட்டப்பட்ட பலிபீடம். அவன் கர்த்தருக்கு முன் நறுமணப் பொருட்களை எரித்தான். ஆலயத்திற்குத் தேவையான பொருட்களையும் கொடுத்துவந்தான். சாலொமோன் ராஜா ஏசியோன் கேபேரிலே கப்பங்களைச் செய்வித்தான். அந்நகரம் ஏலோத்துக்கு அருகில் செங்கடலின் கரையில் ஏதோம் நாட்டில் இருந்தது. ஈராம் ராஜாவின் ஆட்களில் சிலருக்குக் கடல் பற்றி அறிவு அதிகமாக இருந்தது. அவர்களை அவன் சாலொமோனிடம் அனுப்பி கப்பற்படையில் பணிபுரியச் செய்தான். சாலொமோனின் கப்பல்கள் ஒப்பீருக்குப் போனது. அங்கிருந்து 31,500 பவுண்டு தங்கத்தைக் கொண்டுவந்தது.