1 இராஜாக்கள் 9:1-9

1 இராஜாக்கள் 9:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு, கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார். கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும். நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில், நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் இருப்பார்கள். அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு: கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டு. வேறே தேவர்களைப் பற்றிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

1 இராஜாக்கள் 9:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், அரச அரண்மனையையும் மற்றும் அவன் செய்யவேண்டுமென்று மனதில் விரும்பிய எல்லாவற்றையும் செய்துமுடித்தான். அப்பொழுது, முன்பு கிபியோனில் தோன்றியதுபோல யெகோவா இரண்டாம் முறையும் சாலொமோனுக்குத் தோன்றினார். யெகோவா அவனிடம் சொன்னதாவது: “நீ எனக்கு முன்பாகச் செய்த மன்றாட்டையும், விண்ணப்பத்தையும் கேட்டேன். என் பெயர் என்றைக்கும் நிலைக்கும்படியாக நீ கட்டிய இந்த ஆலயத்தை நான் பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன். என் கண்களும், என் இருதயமும் எப்பொழுதும் அங்கேயிருக்கும். “நீயோ உனது தகப்பன் தாவீது செய்ததுபோல் உத்தமத்தோடும், நேர்மையோடும் எனக்கு முன்பாக நடந்து, நான் கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்து, எனது விதிமுறைகளையும் சட்டங்களையும் கைக்கொள்வாயானால், நான் உனது தகப்பன் தாவீதிடம், ‘இஸ்ரயேலின் அரியணையில் உட்கார உனது மகன்களில் ஒருவனாவது ஒருபோதும் இல்லாமல் போகமாட்டான்,’ என்று வாக்குப்பண்ணியபடியே, இஸ்ரயேலில் உனது அரச அரியணையை என்றைக்கும் நிலைநிறுத்துவேன். “ஆனால் நீங்களோ உங்கள் சந்ததிகளோ, என்னைவிட்டுத் திரும்பி நான் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளாமல், வேறே தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளை வழிபடும்படி விலகிப்போனால், நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்த நாட்டிலிருந்து அவர்களை அகற்றிவிடுவேன். நான் என் பெயருக்கென்று பரிசுத்தமாக்கிய இந்த ஆலயத்தையும் புறக்கணித்து விடுவேன். அப்பொழுது இஸ்ரயேலர் எல்லா மக்கள் கூட்டங்கள் மத்தியிலும் ஒரு பழிச்சொல்லாகவும், கேலிப்பொருளாகவும் இருப்பார்கள். இந்த ஆலயம் அழிவின் குவியலாக மாறும். இதைக் கடந்து போகிறவர்கள் இதைக்கண்டு திகைத்து, கேலிபண்ணி, ‘இந்த நாட்டுக்கும் இந்த ஆலயத்துக்கும் யெகோவா ஏன் இப்படி செய்தார்?’ என்பார்கள். அப்பொழுது மக்கள், ‘எகிப்திலிருந்து அவர்களுடைய முற்பிதாக்களை மீட்டுக் கொண்டுவந்த அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டார்கள். அவர்கள் வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றை வழிபட்டு, அவற்றிற்குப் பணிசெய்தார்கள். இதனால்தான் யெகோவா அவர்கள்மீது இந்த பேரழிவைக் கொண்டுவந்தார்’ என்பார்கள்.”

1 இராஜாக்கள் 9:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும் ராஜ அரண்மனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு, யெகோவா கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாவது முறையும் அவனுக்குத் தரிசனமானார். யெகோவா அவனை நோக்கி: நீ என்னுடைய சமுகத்தில் செய்த உன்னுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என்னுடைய நாமம் என்றைக்கும் வெளிப்படும்படி, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என்னுடைய கண்களும், இருதயமும் எப்பொழுதும் அங்கே இருக்கும். நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என்னுடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளும்படி, என்னுடைய சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாக உன்னுடைய தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடந்தால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் ஆண்மகன் உனக்கு இல்லாமல் போவதில்லை என்று உன்னுடைய தகப்பனாகிய தாவீதோடு நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன்னுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன். நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்னே வைத்த என்னுடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவைகளைப் பணிந்துகொண்டால், நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடி அழித்துப்போட்டு, என்னுடைய நாமம் வெளிப்பட நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என்னுடைய பார்வையைவிட்டு அகற்றுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் என்கிற பெயர் எல்லா மக்கள் மத்தியிலும் பழமொழியாகவும் நகைப்பாகவும் இருப்பார்கள். அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள்: தங்கள் முன்னோர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த தங்களுடைய தேவனாகிய யெகோவாவை விட்டு வேறு தெய்வங்களைப் பற்றிக்கொண்டு, அவர்களை வணங்கி தொழுதபடியால், யெகோவா இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரச்செய்தார் என்று சொல்லுவார்கள் என்றார்.

1 இராஜாக்கள் 9:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

இவ்வாறு சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடித்தான். அவன் கட்ட விரும்பியவற்றையெல்லாம் கட்டிமுடித்தான். பிறகு கர்த்தர் மீண்டும் அவன் முன் கிபியோனில் தோன்றியதுபோல தோன்றினார். கர்த்தர் அவனிடம், “நான் உன் ஜெபத்தைக் கேட்டேன். நீ கேட்டவற்றையும் அறிந்தேன். நீ இந்த ஆலயத்தைக் கட்டினாய். நான் இதனைப் பரிசுத்த இடமாக்கினேன். எனவே நான் அங்கே என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவேன். எப்பொழுதும் அதைக் கவனித்து அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பேன். உன் தந்தையைப் போலவே நீயும் எனக்கு ஊழியம் செய்யவேண்டும். அவன் நல்லவனாகவும் உண்மையானவனாகவும் இருந்தான். நீ என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து எனது கட்டளைகளைச் செய்து முடிக்கவேண்டும். நீ இவ்வாறு செய்து வந்தால், இஸ்ரவேலரின் ராஜா உன் குடும்பத்தவனாகவே இருப்பான். இந்த வாக்குறுதியைத்தான் உனது தந்தையான தாவீதிற்குக் கொடுத்திருக்கிறேன். நான் அவனிடம், ‘இஸ்ரவேல் உன் சந்ததியிலிருந்தே எப்பொழுதும் ஆளப்படும்’ என்று கூறியிருக்கிறேன். “ஆனால் நீயோ அல்லது உன் பிள்ளைகளோ என்னைப் பின்பற்றாமல், நான் உனக்குத் தந்த சட்டங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாமல், அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்வீர்களேயானால், நான் உங்களுக்குத் தந்த இந்த நாட்டைவிட்டு வெளியேற்றுவேன். மற்ற எல்லா தேசங்களின் ஜனங்களும் இஸ்ரவேலர்களை எண்ணி நகைக்கக்கூடாது. நான் ஆலயத்தைப் பரிசுத்தமாக்கினேன். இந்த இடத்தில் ஜனங்கள் என்னை மகிமைப்படுத்தலாம். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாவிட்டால் உங்களை விலக்குவேன். இந்த ஆலயம் அழிக்கப்படும். இதைப் பார்க்கிறவர்கள் வியப்பார்கள். ‘இந்த நாட்டையும் ஆலயத்தையும் ஏன் கர்த்தர் இவ்வாறு செய்தார்?’ என்பார்கள். மற்றவர்களோ, ‘அவர்கள் தமது தேவனாகிய கர்த்தரை விட்டு விலகினார்கள். அதனால் இவ்வாறு ஆயிற்று. அவர்களது முற்பிதாக்களை அவர் எகிப்திலிருந்து மீட்டார். ஆனால் அவர்களோ அந்நிய தெய்வங்களை நாடினார்கள். அதனால் கர்த்தர் அவர்களுக்கு இது போன்ற தீமைகளைச் செய்தார்’ என்பார்கள்” என்றார்.