1 இராஜாக்கள் 8:22-40

1 இராஜாக்கள் 8:22-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் சாலொமோன், இஸ்ரயேலின் சபையார் எல்லோருக்கும் முன்பாக, யெகோவாவின் பலிபீடத்தின் முன்நின்று வானத்தை நோக்கித் தன் கைகளை விரித்தான். அவன் சொன்னதாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உம்மைப்போல் இறைவன் இல்லை. உமது வழியில் முழுமனதோடு தொடர்ந்து நடக்கிற உமது அடியவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையின்படி செயலாற்றுகிறவர் நீரே. உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினீர். உமது வாயினால் நீர் வாக்குப்பண்ணியதை உமது கையினால் இன்று இருப்பதுபோல் நிறைவேற்றினீர். “இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே! உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ளும். நீர் அவரிடம், ‘நீ செய்ததுபோலவே உன் மகன்களும் எனக்கு முன்பாக உண்மையாக நடக்கும்படி தாங்கள் செய்வதெல்லாவற்றிலும் கவனமாயிருந்தால், இஸ்ரயேலின் அரியணையில் எனக்கு முன்பாக இருப்பதற்கு உனக்கு ஒரு மகன் இல்லாமல் போவதில்லை’ என்று சொன்னீரே. இப்பொழுதும் இஸ்ரயேலின் இறைவனே, உமது அடியானாகிய எனது தகப்பன் தாவீதுக்கு நீர் வாக்குப்பண்ணிய வார்த்தைகளை நிறைவேற்றும். “ஆனாலும் உண்மையாகவே இறைவன் பூமியில் வாழ்வாரோ? வானங்களும் வானாதி வானங்களும் உம்மை உள்ளடக்க முடியாதே. அப்படியிருக்க நான் கட்டிய இந்த ஆலயம் எம்மாத்திரம்! ஆயினும் என் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியவனாகிய என் மன்றாட்டையும், இரக்கத்திற்கான வேண்டுதலையும் கவனித்துக் கேளும். இன்று உமது அடியவன் உமது சமுகத்தில் மன்றாடும் கதறுதலையும் விண்ணப்பத்தையும் கேட்பீராக. ‘என் பெயர் விளங்குமென்று,’ நீர் சொன்ன இடமான இந்த ஆலயத்தை, உமது கண்கள் இரவும் பகலும் நோக்குவதாக. அப்பொழுது உமது அடியவன் இந்த இடத்தை நோக்கி வேண்டிக்கொள்ளும் மன்றாட்டை நீர் கேட்பீர். இந்த இடத்தை நோக்கி உமது அடியவனும், உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரும் மன்றாடும்போது, எங்களுடைய விண்ணப்பத்தைக் கேளும். உம்முடைய உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேளும்; நீர் கேட்கும்போது மன்னியும். “ஒரு மனிதன் தன் அயலானுக்கு தவறு செய்திருக்கையில், அவன் ஆணையிடும்படி கேட்கப்பட்டால், அவன் வந்து இந்த ஆலயத்தில் உமது பலிபீடத்தின்முன் ஆணையிட்டால், அப்பொழுது நீர் வானத்திலிருந்து கேட்டு நியாயம் செய்யும். குற்றம் செய்தவனுக்கு அவன் செய்ததற்கேற்ற தண்டனையை அவன் தலைமேல் வரப்பண்ணி, உமது அடியவருக்கு இடையில் நியாயம் செய்யும். குற்றமற்றவனை குற்றமற்றவன் என்று அவனுடைய குற்றமின்மையை நிலைநாட்டும். “உமது மக்களாகிய இஸ்ரயேலர், உமக்கு எதிராக பாவம் செய்ததினால், பகைவர்களால் தோற்கடிக்கப்படலாம். அப்பொழுது அவர்கள் மனந்திரும்பி உமது பெயரை அறிக்கையிட்டு, இந்த ஆலயத்தில் உம்மிடம் மன்றாடி, விண்ணப்பம் செய்யும்போது, பரலோகத்திலிருந்து கேட்டு உமது மக்களாகிய இஸ்ரயேலின் பாவத்தை மன்னியும். நீர் அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிற்குத் திரும்பவும் அவர்களைக் கொண்டுவாரும். “உமக்கெதிராக உமது மக்கள் பாவம் செய்ததினால், வானங்கள் அடைக்கப்பட்டு, மழை இல்லாமல் போகும்போது, நீர் அவர்களைத் துன்புறுத்தியதால், இந்த இடத்தை நோக்கி அவர்கள் மன்றாடுவார்கள். அவ்வாறு அவர்கள் உமது பெயரை அறிக்கையிட்டு, தங்கள் பாவத்தைவிட்டு மனந்திரும்பி வேண்டும்போது, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உமது அடியவர்களும், உமது மக்களுமான இஸ்ரயேலரின் பாவத்தை மன்னியும். அவர்கள் வாழ்வதற்கு சரியான வழியைக் கற்பியும். நீர் உமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டில் மழையை அனுப்பும். “நாட்டில் பஞ்சம் அல்லது கொள்ளைநோய் வருகிறபோதும், தாவர நோய், பூஞ்சணம், வெட்டுக்கிளி, தத்துவெட்டி வருகின்றபோதும், அல்லது பகைவர் அவர்களுடைய பட்டணங்களில் ஏதாவது ஒன்றை முற்றுகையிடும்போதோ, எந்தவித பேராபத்துகளோ, வியாதியோ வரும்போதும், அப்பொழுது உமது மக்களாகிய இஸ்ரயேலர் எவராவது தன்தன் மனதின் துன்பங்களை உணர்ந்தவர்களாய் இந்த ஆலயத்தை நோக்கித் தங்கள் கைகளை விரித்து மன்றாட்டையோ, விண்ணப்பத்தையோ செய்தால், உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேட்டு மன்னியும். நீர் ஒவ்வொருவருடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியால், அவனவன் செய்த செயல்களுக்குமேற்ப அவனவனுக்குச் செய்யும். எல்லா மனிதரின் இருதயங்களை அறிந்திருக்கிறவர் நீர் மட்டுமே. அதனால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்கள் வாழும் காலமெல்லாம் உமக்குப் பயந்து நடப்பார்கள்.

1 இராஜாக்கள் 8:22-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு சாலொமோன்: யெகோவாவுடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையார்கள் எல்லோருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்து: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு நிகரான தேவன் இல்லை; தங்களுடைய முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியார்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர். தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்த நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர். இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன்னுடைய மகன்களும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஆண்மகன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமல் போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும். இஸ்ரவேலின் தேவனே, என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று வெளிப்படுவதாக. தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? என்னுடைய தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் இன்று உமக்கு முன்பாக செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கவனத்தில் கொண்டருளும். உமது அடியேன் இந்த இடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் அங்கே இருக்கும் என்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. உமது அடியானும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய நீர் தங்குமிடத்திலே அதை கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. ஒருவன் தன் அருகில் உள்ளவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பு வந்தால், அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய செய்கையை அவனுடைய தலையின்மேல் சுமரச்செய்து, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத் தகுந்தபடி செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாக உமது அடியார்களை நியாயந்தீர்ப்பீராக. உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் எதிரிகளுக்கு முன்பாக தோற்றுப்போய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திற்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுடைய முன்னோர்களுக்கு நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பி வரச்செய்வீராக. அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் வானம் அடைபட்டு மழைபெய்யாமல் இருக்கும்போது, அவர்கள் இந்த இடத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, தங்களை தேவரீர் மனவருத்தப்படுத்தும்போது தங்களுடைய பாவங்களைவிட்டுத் திரும்பினால். பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியார்களும் உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது மக்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக. தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, விஷப்பனி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய எதிரிகள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றுக்கையிடும்போதும், ஏதாவது ஒரு வாதையோ வியாதியோ வரும்போதும், உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனிதனானாலும் தன்னுடைய இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்துச் செய்யும் எல்லா விண்ணப்பத்தையும், எல்லா வேண்டுதலையும், நீர் தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, தேவரீர் எங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படி தேவரீர் ஒருவரே எல்லா மனிதர்களின் இருதயத்தையும் அறிந்தவராக இருக்கிறபடியால், நீர் அவனவனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத் தகுந்தபடி செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.

1 இராஜாக்கள் 8:22-40 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்தின் முன்பு நின்றான். அனைவரும் அவனுக்கு முன்பு நின்றனர். அவன் தன் கைகளை விரித்து வானத்தை நோக்கி, “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப் போன்று வேறு ஒரு தேவன் இல்லை. நீர் உம்முடைய ஜனங்களிடம் அன்பாயிருந்ததால் அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டீர். அதனைக் காப்பாற்றினீர். உம்மைப் பின்பற்றுபவர்களிடம் கருணையோடும் உண்மையோடும் இருந்தீர். உமது சேவகனான என் தந்தை தாவீதிடம், ஒரு வாக்குறுதி தந்தீர். அதையும் காப்பாற்றினீர். உம்முடைய வாயாலேயே அந்த வாக்குறுதியைச் செய்தீர். அதை உண்மையாக்கிட உம்முடைய சொந்த பலத்தைப் பயன்படுத்தினீர். இப்போது, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தாவீதிற்குத் தந்த மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். நீர், ‘உன் குமாரர்கள் உன்னைப்போலவே எனக்குக் கவனமாகக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் அவ்வாறு செய்தால் பிறகு எப்பொழுதும் உன் குடும்பத்தில் உள்ளவர்களே இஸ்ரவேல் ஜனங்களை ஆள்வார்கள்’ என்று சொன்னீர். இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தந்தைக்களித்த வாக்குறுதியைக் காப்பாற்றும்படி மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். “ஆனால், தேவனே உண்மையில் நீர் இந்தப் பூமியில் எங்களோடு வாழ்கின்றீரா? வானங்களும், வானாதி வானங்களும் உமக்குப் போதாதே. என்னால் கட்டப்பட்ட இந்த ஆலயம் எம்மாத்திரம்? ஆனால் என் ஜெபங்களையும் வேண்டுகோள்களையும் தயவுசெய்து கேளும். நான் உமது ஊழியன், நீர் எனது தேவனாகிய கர்த்தர், இன்று என் ஜெபத்தைக் கேட்டருளும். முன்பு நீர், ‘அங்கே நான் மகிமைப்படுத்தப்படுவேன்’ என்றீர். இவ்வாலயத்தை இரவும் பகலும் கவனித்துக்கொள்ளும். இந்த ஆலயத்தில் நான் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும் கர்த்தாவே, நானும் இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே உம்மிடம் திரும்பி ஜெபிக்கிறோம். தயவு செய்து அந்த ஜெபங்களைக் கேளும்! நீர் பரலோகத்தில் இருப்பதை அறிவோம். அங்கிருந்து எங்கள் ஜெபங்களைக் கேட்டு எங்களை மன்னியும். “எவனாவது ஒருவன் இன்னொருவனுக்குத் தப்பு செய்தால், அவன் இங்கே பலிபீடத்திற்குக் கொண்டு வரப்படுவான். அவன் குற்றவாளியாக இல்லாமல் இருந்தால், ஒரு சத்தியம் செய்துக்கொள்வான். தான் ஒன்றும் அறியாதவன் என்று அவன் வாக்குறுதி செய்யவேண்டும். பரலேகத்திலிருந்து கவனித்து நியாயம் வழங்கவேண்டும். அவன் குற்றவாளியானால், தயவு செய்து அதை எங்களுக்கு உணர்த்தும். அவன் ஒன்றும் அறியாத அப்பாவியாக இருந்தால், அவன் குற்றமற்றவன் என்பதை உணர்த்தியருளும். “சில நேரங்களில் உமது இஸ்ரவேல் ஜனங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்யலாம், அவர்களின் பகைவர்கள் அவர்களைத் தோற்கடிக்கலாம். பிறகு அவர்கள் உம்மைத் துதிப்பார்கள், இந்த ஆலயத்தில் வந்து ஜெபம் செய்வார்கள். தயவு செய்து பரலோகத்திலிருந்து அவற்றைக் கேளும். அவர்களை மன்னித்து நமது நாட்டைப் பெற்றுக்கொள்ளும்படி உதவும், நீர் இந்த நாட்டை அவர்களின் முற்பிதாக்களுக்கு தந்துள்ளீர். “சில வேளைகளில் இவர்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்வதினால், நீர் மழையை நிறுத்திவிடுகிறீர். பிறகு அவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஜெபித்து உம்மைத் துதித்து உமது பேரையும் புகழையும் பாடுவார்கள். நீர் துன்புறுத்த, அவர்கள் தமது பாவங்களுக்காக வருந்துவார்கள். தயவு செய்து பரலோகத்திலிருந்து அவர்களின் ஜெபத்தைக் கேளும். பிறகு எங்களது பாவங்களை மன்னியும். ஜனங்களுக்கு சரியான வழிகளை கற்பியும். கர்த்தாவே, உமது ஜனங்களுக்கு வாரிசுரிமையாகக் கொடுத்த மண்ணுக்கு மழையை அனுப்பிவையும். “இந்த பூமி வறண்டு போகலாம், உணவுப் பொருட்கள் விளையாமல் போகலாம், அல்லது ஜனங்களிடம் பெருநோய் பரவலாம் அல்லது பயிர்கள் புழுப் பூச்சிகளால் அழிக்கப்படலாம் அல்லது பகைவர்களால் ஜனங்கள் தம் நகரங்களில் தாக்கப்படலாம் அல்லது ஜனங்களுக்கு நோய் வரலாம். இவற்றில் ஏதாவது ஒன்று ஏற்பட்டு, ஜனங்களில் ஒவ்வொருவனும் மனம்மாற விரும்பி, ஆலயத்தை நோக்கித் தன் கைகளை ஏறெடுத்து ஜெபம் செய்தால், தயவு செய்து கவனியும். நீர் உமக்குரிய இடமாகிய பரலோகத்தில் இருந்தாலும் கவனியும். அவர்களை மன்னித்து உதவிசெய்யும். உமக்கு மட்டுமே மனிதர்கள் உண்மையாக நினைப்பது தெரியும். எனவே, ஒவ்வொருவரையும் அவரவர் செய்கிறபடி நடத்தும். எங்கள் முற்பிதாக்களுக்காக நீர் கொடுத்த இந்நாட்டில் நாங்கள் வாழும்வரை உமக்கு பயந்துநடப்போம்.

1 இராஜாக்கள் 8:22-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர். தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும். இஸ்ரவேலின் தேவனே, என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று விளங்குவதாக. தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும். உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ்செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால், அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாய் உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக. உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்துக்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்கு நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பி வரப்பண்ணுவீராக. அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால் வானம் அடைபட்டு மழைபெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால், பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக. தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.