1 இராஜாக்கள் 7:13-51
1 இராஜாக்கள் 7:13-51 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான். இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்; இவன் சகலவித வெண்கல வேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான். இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூண் பதினெட்டுமுழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவு பன்னிரண்டு முழ நூலளவுமாயிருந்தது. அந்தத் தூண்களுடைய தலைப்பில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது. தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் எவ்வேழாக இருந்தது. தூண்களைப் பண்ணின விதமாவது: தலைப்பின் மேலுள்ள கும்பங்களை மூடும்படிக்கு, கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின்மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதளம்பழங்களைச் செய்வித்தான். மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய தலைப்பின் மேலுள்ள கும்பங்கள் லீலிபுஷ்பங்களின் வேலையும், நாலுமுழ உயரமுமாயிருந்தது. இரண்டு தூண்களின்மேலுமுள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் விம்மிய இருநூறு மாதளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்ற கும்பத்திலும் அப்படியே இருந்தது. அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான். தூண்களுடைய சிகரத்தில் லீலிபுஷ்பவேலை செய்யப்பட்டிருந்தது; இவ்விதமாய்த் தூண்களின் வேலை முடிந்தது. வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்; சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒருவிளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது. அந்தக் கடல்தொட்டியைச் சுற்றி விளிம்புக்குக் கீழே அதைச் சுற்றிலும் மொக்குகள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து பத்தாகச் செய்யப்பட்டிருந்தது; வார்க்கப்பட்ட அந்த மொக்குகளின் வரிசைகள் இரண்டும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தது. அது பன்னிரண்டு ரிஷபங்களின் மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி ரிஷபங்களின் மேலாகவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது. அதின் கனம் நாலுவிரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம் போலும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும். பத்து வெண்கல ஆதாரங்களையும் செய்தான்; ஒவ்வொரு ஆதாரம் நாலுமுழ நீளமும், நாலுமுழ அகலமும், மூன்றுமுழ உயரமுமாயிருந்தது. அந்த ஆதாரங்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்குச் சவுக்கைகள் உண்டாயிருந்தது; சவுக்கைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது. சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்தச் சவுக்கைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலாக ஒரு திரணையும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள ஜலதாரைகளும் அதனோடே இருந்தது. ஒவ்வொரு ஆதாரத்திற்கு நாலு வெண்கல உருளைகளும், வெண்கலத் தட்டுகளும், அதின் நாலு கோடிகளுக்கு அச்சுகளும் இருந்தது; கொப்பரையின் கீழிருக்க, அந்தக் கொம்மைகள் ஒவ்வொன்றும் வார்ப்பு வேலையாக ஜலதாரைகளுக்கு நேராயிருந்தது. திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரை முழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் விருத்தமாயிராமல் சதுரமாயிருந்தது. அந்த நாலுஉருளைகள் சவுக்கைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் ஆதாரத்திலும் இருந்தது; ஒவ்வொரு உருளை ஒன்றரை முழ உயரமாயிருந்தது. உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்பு வேலையாயிருந்தது. ஒவ்வொரு ஆதாரத்தினுடைய நாலு கோடிகளிலும், ஆதாரத்திலிருந்து புறப்படுகிற நாலு கொம்மைகள் இருந்தது. ஒவ்வொரு ஆதாரத்தின் தலைப்பிலும் அரைமுழ உயரமான சக்கராகாரமும், ஒவ்வொரு ஆதாரத்தினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் சவுக்கைகளும் இருந்தது. அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத்தக்கதாய்ச் செய்தான். இந்தப் பிரகாரமாக அந்தப் பத்து ஆதாரங்களையும் செய்தான்; அவைகளெல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரேவித கொத்து வேலையுமாயிருந்தது. பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரை நாற்பது குடம் பிடிக்கும்; நாலுமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து ஆதாரங்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது. ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குக்கு நேராக வைத்தான். பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான். அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப் பின்னல்களும், தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் பண்ணின இரண்டு வரிசை மாதளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதளம்பழங்களும், பத்து ஆதாரங்களும், ஆதாரங்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும், ஒரு கடல் தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டு ரிஷபங்களும், செப்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; கர்த்தரின் ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிமுட்டுகளும் சுத்தமான வெண்கலமாயிருந்தது. யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா இவைகளை வார்ப்பித்தான். இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை. பின்னும் கர்த்தருடைய ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்தப்பங்களை வைக்கும் பொன் மேஜையையும், சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடுங்கூட உண்டாக்கினான். பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகாபரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான முளைகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளையும் செய்தான். இவ்விதமாய் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
1 இராஜாக்கள் 7:13-51 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சாலொமோன் அரசன் தீருவுக்கு ஆளனுப்பி ஈராமை வரவழைத்தான். இவன் நப்தலி கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு விதவையின் மகன். இவனது தகப்பன் தீருவைச் சேர்ந்த ஒரு வெண்கல கைவினை கலைஞன். ஈராம் எல்லா விதமான வெண்கல வேலையையும் செய்யத்தக்க ஞானமும், அறிவும், கைத்திறனும் பெற்றவனாயிருந்தான். இவன் சாலொமோன் அரசனிடம் வந்து அவனுக்குக் குறிக்கப்பட்டிருந்த வேலை முழுவதையும் செய்தான். ஈராம் இரு வெண்கலத் தூண்களை வார்த்துச் செய்தான். இவை ஒவ்வொன்றும் பதினெட்டு முழ உயரமும், பன்னிரண்டு முழ சுற்றளவுமுள்ளதாயிருந்தன. ஒவ்வொரு தூணின் உச்சியில் வைப்பதற்கும், இரண்டு கும்பங்களை உருக்கிய வெண்கலத்தினால் செய்தான். அவை ஒவ்வொன்றும் ஐந்துமுழ உயரமுடையதாயிருந்தது. தூண்களின் உச்சியிலுள்ள கும்பங்களை, பின்னிய சங்கிலிகள் அலங்கரித்தன. ஒவ்வொரு கும்பத்திற்கும் ஏழு பின்னிய சங்கிலிகள் இருந்தன. தூண்களின் மேலுள்ள கும்பங்களை அலங்கரிப்பதற்கு ஒவ்வொரு வலையையும் சுற்றி, இரண்டு வரிசைகளில் மாதுளம் பழங்களைச் செய்தான். ஒவ்வொரு கும்பத்திற்கும் ஒரேவிதமாகவே செய்தான். முன்மண்டபத்தின் தூண்களின் உச்சியிலிருந்த கும்பங்கள், நான்கு முழ உயரத்தில் லில்லிப்பூ வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இரு தூண்களின் மேலுள்ள கும்பங்களுக்கு அடுத்துள்ள வலைப்பின்னலுக்கு கிண்ணம்போன்ற வடிவத்திற்குமேல், இருநூறு மாதுளம் பழங்கள் வரிசையாக சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தத் தூண்களையும் ஆலயத்தின் முன்மண்டபத்தில் நிறுத்தினான். தெற்கிலிருந்த தூணுக்கு யாகீன் என்றும், வடக்கிலிருந்த தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான். இவற்றின் உச்சியிலிருந்த கும்பங்கள் லில்லிப்பூ வடிவில் இருந்தன. இவ்விதம் தூண்களின் வேலை முடிவுற்றது. இதன்பின் ஈராம் உலோகத்தினால் வார்க்கப்பட்ட ஒரு பெரிய தொட்டியைச் செய்தான். அது வட்ட வடிவமானதும், ஒரு விளிம்பிலிருந்து மறு விளிம்புவரை பத்து முழமாயும், ஐந்துமுழ உயரமுள்ளதுமாயிருந்தது. அதன் சுற்றளவோ முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது. விளிம்புக்குக் கீழே ஒரு முழத்திற்கு பத்தாக உலோகத்தாலான சுரைக்காய் வடிவங்கள் சுற்றிலும் இருந்தன. அந்த சுரைக்காய்கள் இரண்டு வரிசைகளில் தொட்டியுடன் சேர்த்து வார்ப்பிக்கப்பட்டிருந்தன. வெண்கலத் தொட்டி பன்னிரண்டு எருதுகளின்மேல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று கிழக்கு நோக்கியும், மூன்று மேற்கு நோக்கியும், மூன்று வடக்கு நோக்கியும், மூன்று தெற்கு நோக்கியும் பார்த்துக் கொண்டிருந்தன. அவைகளுக்குமேல் வெண்கலத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. எருதுகளின் பின்பக்கம் தொட்டியின் மையத்தை நோக்கியிருந்தன. தொட்டியின் கனம் நான்கு விரல் அளவு தடிப்புடையது. அதன் விளிம்பு ஒரு கிண்ணத்தின் விளிம்பு போலவும், விரிந்த லில்லி பூவைப்போலவும் இருந்தது. அது கிட்டத்தட்ட 40,000 லிட்டர் தண்ணீர் கொள்ளத்தக்கதாக இருந்தது. மேலும் அவன் வெண்கலத்தால் பத்து உருளக்கூடிய தாங்கிகளைச் செய்தான். அவை ஒவ்வொன்றும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்றுமுழ உயரமுமுள்ளதாயும் இருந்தன. தாங்கிகள் இவ்வாறே செய்யப்பட்டிருந்தன. அவற்றின் சட்டங்களில் பக்கத்துண்டுகள் இணைக்கப்பட்டிருந்தன. இந்தச் செங்குத்தான சட்டங்களுக்கு இடையிலுள்ள பகுதியில் சிங்கங்கள், எருதுகள், கேருபீன்கள் முதலிய உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சிங்கங்களுக்கும், எருதுகளுக்கும் மேலும் கீழும் வேலைப்பாடுகளுள்ள அடித்துச் செய்யப்பட்ட மலர் வளையங்கள் இருந்தன. இந்த ஒவ்வொரு தாங்கிக்கும் நான்கு வெண்கல சக்கரங்களும், அவற்றுடன் சேர்ந்த அச்சுகளும் இருந்தன. ஒவ்வொரு தாங்கியிலும் நான்கு ஆதாரங்களின் மேலும் ஒவ்வொரு தொட்டியிருந்தது. அந்த ஆதாரங்களில் ஒவ்வொரு பக்கத்திலும் மலர் வளையங்கள் வார்க்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு தாங்கியின் உட்புறத்திலும் வட்டமான துளை இருந்தது. இந்தத் துவாரத்தின் விளிம்பில் ஒருமுழ சட்டம் இருந்தது. அதன் பக்கங்கள் ஒன்றரைமுழ உயரமாக துவாரத்தின் மேலிருந்து தளத்தின் அடிவரை இருந்தது. அந்தத் துவாரத்தின் ஓரத்தைச் சுற்றிலும் செதுக்கப்பட்ட வேலைப்பாடு இருந்தது. தாங்கிகளின் பக்கத்துண்டுகள் வட்டமாக இல்லாமல் சதுரமாய் இருந்தன. பக்கத்துண்டுகளின் கீழேயே நான்கு சக்கரங்களும் இருந்தன. சக்கரங்களின் அச்சாணிகள் தாங்கியுடன் பொருத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு சக்கரங்களின் விட்டமும் ஒன்றரை முழம் இருந்தது. அந்தச் சக்கரங்கள் தேரின் சக்கரங்களைப்போல் செய்யப்பட்டிருந்தன. சக்கரங்களின் அச்சாணிகள், விளிம்புகள், ஆரக்கால்கள், நடுக்குடம் உட்பட எல்லாம் வார்ப்பித்த உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு தாங்கியிலும் நான்கு பிடிகள் இருந்தன. தாங்கியின் மூலைகளிலிருந்து நான்கு பிடிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு தாங்கியின் மேல்பாகத்திலும் அரைமுழ ஆழமுள்ள வட்ட வடிவமான வளையம் இருந்தது. பக்கத்தூண்களும், ஆதாரங்களும் தாங்கியின் மேல்பாகத்துடன் ஒன்றுசேர்த்து இணைக்கப்பட்டிருந்தன. அவன் ஆதாரங்களிலும், பக்கத்துண்டுகளிலும், கிடைத்த இடங்களிலெல்லாம் கேருபீன்களையும், சிங்கங்களையும், பேரீச்ச மரங்களையும் செதுக்கி அவற்றைச் சுற்றி மலர் வளையங்களையும் அமைத்தான். இவ்விதமாக பத்து தாங்கிகளையும் ஒரே அச்சில் செய்தான். அவை உருவத்திலும் அளவிலும் ஒரே மாதிரியாக இருந்தன. இதன்பின்பு ஈராம், பத்து வெண்கலத் தொட்டிகளைச் செய்து ஒவ்வொரு தாங்கியிலும் ஒவ்வொரு தொட்டியாக வைத்தான். ஒவ்வொரு தொட்டியும் நான்கு முழ விட்டமும், நாற்பது குடம் தண்ணீர் கொள்ளக்கூடியதுமாக இருந்தன. இவற்றில் ஐந்து தாங்கிகளை தெற்குப் பக்கத்திலும், ஐந்து தாங்கிகளை வடக்குப் பக்கத்திலும் வைத்தான். அந்தப் பெரிய தொட்டியை தெற்குப் பக்கத்தில் ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் வைத்தான். அத்துடன் அவன் பானைகளையும், நீண்ட பிடியுள்ள கரண்டிகளையும், தெளிக்கும் கிண்ணங்களையும் செய்தான். இவ்வாறு ஈராம் சாலொமோன் அரசனிடமிருந்து பொறுப்பெடுத்த, யெகோவாவின் ஆலய வேலைகளைச் செய்துமுடித்தான்: இரண்டு தூண்கள்; தூண்களின் உச்சியில் இரண்டு கிண்ண வடிவமான கும்பங்கள், தூண்களின் உச்சியில் இருந்த இரண்டு கும்பங்களையும் அலங்கரிப்பதற்கு இரண்டு வரிசை பின்னல் வேலைகள்; தூண்களின் உச்சியில் இருக்கும் இரண்டு கிண்ண வடிவங்களான கும்பங்களை அலங்கரிக்க இரண்டு பின்னல் வேலைகளுக்கு நானூறு மாதுளம் பழங்கள்; பத்து தொட்டிகளும் அவற்றைத் தாங்கும் பத்து உருளும் தாங்கிகளும், பெரிய தொட்டி, அதன் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகள்; பானைகள், நீண்ட பிடியுள்ள கரண்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள். அரசன் சாலொமோனுக்காகவும் யெகோவாவின் ஆலயத்துக்காகவும் இப்பொருட்கள் எல்லாவற்றையும் ஈராம் என்பவன் செய்யப்பட்ட பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தினால் செய்துமுடித்தான். இவை எல்லாவற்றையும் அரசன் சுக்கோத்துக்கும், சரேத்தாவுக்கும் இடையிலுள்ள யோர்தானின் சமபூமியில் களிமண் அச்சுகளில் வார்ப்பித்தான். வெண்கலப் பொருட்கள் மிகவும் அதிகமாய் இருந்ததால் இவற்றையெல்லாம் சாலொமோன் நிறுக்காமல் விட்டான். அந்த வெண்கலத்தின் எடை எவ்வளவு என தீர்மானிக்கப்படவில்லை. அத்துடன் இன்னும் யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொருட்களை சாலொமோன் செய்தான். அவையாவன: தங்க பலிபீடம், இறைசமுகத்து அப்பங்களை வைப்பதற்கான தங்க மேஜை, பரிசுத்த இடத்தின் முன்பகுதியில் வலப்பக்கத்தில் ஐந்தும், இடப்பக்கத்தில் ஐந்துமாக வைப்பதற்குச் சுத்தத் தங்கத்தினாலான விளக்குத் தாங்கிகள், தங்கத்தினாலான பூ வேலைப்பாடுகள், அகல்விளக்குகள், இடுக்கிகள். சுத்தத் தங்கத்தினாலான கிண்ணங்கள், திரிவெட்டிகள், தெளிக்கும் கிண்ணங்கள், அகப்பைகள், தூப கலசங்கள் ஆகியவற்றையும் மகா பரிசுத்த இடமான உட்புற அறையின் கதவுகளின் தங்க முளைகளையும், ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் கதவுகளுக்கான தங்க முளைகளையும் செய்தான். யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் அரசன் செய்த எல்லா வேலைகளும் செய்துமுடிக்கப்பட்டன. பின்பு சாலொமோன் தன் தகப்பன் தாவீது அர்ப்பணித்த பொருட்களான வெள்ளியையும், தங்கத்தையும், எல்லா பொருட்களையும் கொண்டுவந்தான். அவற்றை யெகோவாவின் ஆலயத்தின் களஞ்சியத்துக்குள் கொண்டுபோய் வைத்தான்.
1 இராஜாக்கள் 7:13-51 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான். இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு விதவையின் மகன்; இவனுடைய தகப்பன் தீரு நகரத்தைச் சேர்ந்த வெண்கல கைவினை கலைஞர்; இவன் சகலவித வெண்கல வேலையையும் செய்யத்தக்க யுக்தியும், புத்தியும், அறிவும் உள்ளவனாக இருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடம் வந்து, அவனுடைய வேலையையெல்லாம் செய்தான். இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூணும் 27 அடி உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 18 அடி நூலளவுமாக இருந்தது. அந்தத் தூண்களுடைய உச்சியில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் 7.6 அடி உயரமாக இருந்தது. தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் ஏழு ஏழாக இருந்தது. தூண்களைச்செய்த விதம்: உச்சியில் உள்ள கும்பங்களை மூடுவதற்காக, கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின்மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதுளம்பழங்களைச் செய்தான். மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய உச்சியில் உள்ள கும்பங்கள் லீலிபுஷ்பங்களின் வேலையும், 6 அடி உயரமுமாக இருந்தது. இரண்டு தூண்களின்மேலே உள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகில் இருந்த இடத்தில் இருநூறு மாதுளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது. அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான். தூண்களுடைய சிகரத்தில் லீலிமலர்களைப்போல வேலை செய்யப்பட்டிருந்தது; இவ்விதமாகத் தூண்களின் வேலை முடிந்தது. வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வட்டவடிவில் கட்டினான்; சுற்றிலும் அதினுடைய ஒருவிளிம்பு துவங்கி மறுவிளிம்புவரை, அகலம் 15 அடி, உயரம் 7.6 அடி, சுற்றளவு 45 அடி நூலளவுமாக இருந்தது. அந்தக் கடல்தொட்டியைச் சுற்றி விளிம்புக்குக் கீழே அதைச் சுற்றிலும் மொக்குகள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து பத்தாகச் செய்யப்பட்டிருந்தது; வார்க்கப்பட்ட அந்த மொக்குகளின் வரிசைகள் இரண்டும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தது. அது பன்னிரண்டு காளைகளின் மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி காளைகளின் மேலாகவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது. அதின் கனம் நான்கு விரலளவும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிமலர் போலவும் இருந்தது; அது 2,000 குடம் தண்ணீர் பிடிக்கும். 10 வெண்கல கால்களையும் செய்தான்; ஒவ்வொரு காலும் 6 அடி நீளமும், 6 அடி அகலமும், 4.6 அடி உயரமுமாக இருந்தது. அந்த கால்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்கு பலகைகள் உண்டாக்கப்பட்டிருந்தது; பலகைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது. சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்த பலகைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலேயும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள வாய்க்கால்களும் அதனோடு இருந்தது. ஒவ்வொரு கால்களுக்கும் நான்கு வெண்கல உருளைகளும், வெண்கலத் தட்டுகளும், அதின் நான்கு முனைகளுக்கு அச்சுகளும் இருந்தது; கொப்பரையின் கீழிருக்க, அந்த அச்சுகள் ஒவ்வொன்றும் வார்ப்பு வேலையாக வாய்க்கால்களுக்கு நேராக இருந்தது. அதின் வாய் மேலே 1.6 அடி உயர்ந்திருந்தது; அதின் வாய் 1.6 அடி தட்டையுமாக, அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் பலகைகள் வட்டமாயிராமல் சதுரமாக இருந்தது. அந்த நான்கு உருளைகள் பலகைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் கால்களிலும் இருந்தது; ஒவ்வொரு உருளை 2.3 அடி உயரமாக இருந்தது. உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலையைப் போலவே இருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்பு வேலையாக இருந்தது. ஒவ்வொரு காலுடைய நான்கு முனைகளிலும், காலிலிருந்து புறப்படுகிற நான்கு கைப்பிடிகள் இருந்தது. ஒவ்வொரு கால்களின் தலைப்பகுதியிலும் 3/4 அடி உயரமான வட்டவடிவ கட்டும், ஒவ்வொரு காலினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் பலகைகளும் இருந்தது. அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் பலகைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பனை மரங்களுடைய சித்திர வேலைகளை செய்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், வாய்க்கால்களிலும் இருக்கும் இடங்களுக்குத் தகுந்தபடி செய்தான். இப்படியாக அந்தப் 10 கால்களையும் செய்தான்; அவைகளெல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரேவித கொத்து வேலையுமாக இருந்தது. 10 வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரையும் 40 குடம் பிடிக்கும்; 6 அடி அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் 10 கால்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது. 5 கால்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், 5 கால்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குநோக்கி வைத்தான். பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாக ஈராம் யெகோவாவுடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான். அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப் பின்னல்களும், தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் செய்த இரண்டு வரிசை மாதுளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னல்களுக்கும் 400 மாதுளம்பழங்களும், 10 கால்களும், கால்களின்மேல் வைத்த 10 கொப்பரைகளும், ஒரு கடல் தொட்டியும், கடல் தொட்டியின் கீழிருக்கிற 12 காளைகளும், செம்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; யெகோவாவின் ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிப்பொருட்களும் சுத்தமான வெண்கலமாக இருந்தது. யோர்தான் நதிக்கு அடுத்த சமமான பூமியிலே, சுக்கோத்திற்கும் சர்தானுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா இவைகளை வார்த்தான். இந்தச் சகல பணிப்பொருட்களின் வெண்கலம் மிகவும் ஏராளமாக இருந்ததால், சாலொமோன் அவைகளை எடை பார்க்கவில்லை; அதினுடைய எடை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை. பின்னும் யெகோவாவுடைய ஆலயத்திற்குத் தேவையான பணிப்பொருட்களையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்து அப்பங்களை வைக்கும் பொன் மேஜையையும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடும் உண்டாக்கினான். பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகாபரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான மொட்டுகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான மொட்டுகளையும் செய்தான். இப்படியாக ராஜாவாகிய சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்திற்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்செய்யும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் கொண்டுவந்து, யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
1 இராஜாக்கள் 7:13-51 பரிசுத்த பைபிள் (TAERV)
சாலொமோன் ராஜா தீருவில் உள்ள ஈராமுக்கு ஒரு செய்தி அனுப்பினான். அவனை எருசலேமுக்கு வரவழைத்தான். ஈராமின் தாய் இஸ்ரவேல் குடும்பத்தில் உள்ள நப்தலியின் கோத்திரத்தைச் சேர்ந்தவள் ஆவாள். அவளது மரித்துப்போன தந்தை தீருவை சேர்ந்தவர். ஈராம் வெண்கலப் பொருட்களைச் செய்பவன். அவன் திறமையும் அனுபவமும் வாய்ந்தவன். எனவே அவனை அழைத்து, வெண்கல வேலைகளுக்கும் பொறுப்பாளி ஆக்கினான். அவன் வெண்கலத்தால் செய்யவேண்டியவற்றைச் செய்து முடித்தான். ஈராம் இரண்டு வெண்கல தூண்களைச் செய்தான். ஒவ்வொன்றும் 27 அடி உயரமும் 18 அடி சுற்றளவும் கொண்டது. இது 3 அங்குல கனமும் உள்ளே வெற்றிடமாகவும் இருந்தது. ஈராமும் 7 1/2 அடி உயரமுள்ள இரண்டு கும்பங்களைத் தூண்களின் உச்சியில் வைக்கச்செய்தான். பிறகு அவன் கும்பங்களை மூட வலை போன்ற இரு பின்னல்களைச் செய்தான். பின்னர் அவன் இரு வரிசைகளில் வெண்கல மாதுளம் பழங்களைச் செய்தான். இவற்றை தூண்களின் உச்சியில் வலைகளுக்கு முன் வைத்தான். தூண்களின் உச்சியில் இருந்த 7 1/2 அடி கும்பங்கள் பூவைப்போன்றும், கிண்ணம் போன்ற வடிவில் உள்ள வலைகளுக்கு மேலும் அமைக்கப்பட்டன. கும்பங்களைச் சுற்றிலும் வரிசைக்கு 20 உருண்டைகளாக தொங்கவிட்டான். ஈராம் இந்த இரு வெண்கலத்தூண்களையும் ஆலய வாசல் மண்டபத்தில் நிறுவினான். வாசலின் உட்புறத்தில் ஒன்றும் தென்புறத்தில் ஒன்றுமாகத் தூண்கள் நிறுத்தப்பட்டன. தெற்குத் தூண் யாகீன் என்றும் வடக்குத் தூண் போவாஸ் என்றும் பெயர் பெற்றன. தூண்களுக்கு மேல் மலர் வடிவ கும்பங்கள் வைக்கப்பட்டதும் தூண்களின் வேலை முடிந்தது. வெண்கலத்தாலேயே வட்டவடிவில் ஒரு தொட்டியை ஈராம் அமைத்தான். அவர்கள், அதை “கடல்” என்று அழைத்தார்கள். இதன் சுற்றளவு 51 அடிகள், குறுக்களவு 17 அடியாகவும், ஆழம் 7 1/2 அடியாகவும் இருந்தன. தொட்டியைச் சுற்றிலும் விளிம்பில் தகடு பொருத்தப்பட்டது. இதற்கு அடியில் இரு வரிசைகளில் வெண்கலப் பொருட்கள் வார்க்கப்பட்டன. இவை தொட்டியோடு சேர்த்து பொருத்தப்பட்டன. இது 12 வெண்கல காளைகளின் மேல் வைக்கப்பட்டது. அக்காளைகளின் பின்புறங்கள், தொட்டிகளுக்கு உள்ளே மறைந்து காணப்பட்டன. மூன்று காளைகள் வடக்கிலும், மூன்று காளைகள் தெற்கிலும், மூன்று காளைகள் மேற்கிலும், மூன்று காளைகள் கிழக்கிலும் பார்த்தவண்ணம் இருந்தன. தொட்டியின் பக்கங்கள் 4 அங்குல கனம்கொண்டவை. தொட்டியின் விளிம்பானது கிண்ணத்தின் விளிம்பைப் போலவும், பூவின் இதழ்களைப் போலவும் இருந்தன. இதன் கொள்ளளவு 11,000 காலன்களாகும். பிறகு பத்து வெண்கல வண்டிகளையும் ஈராம் செய்தான். ஒவ்வொன்றும் 6 அடி நீளமும், 6 அடி அகலமும், 4 1/2 அடி உயரமும் கொண்டவை, இவை சதுர சட்டங்களால் ஆன சவுக்கையால் செய்யப்பட்டிருந்தன. சவுக்கைகளிலும் சட்டங்களிலும் வெண்கலத்தால் சிங்கங்கள், காளைகள், கேருபீன்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலேயும் கீழேயும் சிங்கங்கள் மற்றும் காளைகளின் உருவங்களோடு வெண்கலத்தால் பூ வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு வண்டியிலும் வெண்கலத்தால் சக்கரங்களும் அச்சுகளும் அமைக்கப்பட்டன. நான்கு மூலைகளிலும் உதவியாக கிண்ணங்கள் வைக்கப்பட்டன. அவற்றில் வெண்கல பூ வேலைப்பாடுகளும், இருந்தன. கிண்ணங்களின் உச்சியில் சட்டம் அமைக்கப்பட்டன. அவை 18 அங்குலம் கிண்ணத்தின் விளிம்பிலிருந்து உயர்ந்திருந்தது. அதன் திறப்பு 27 அங்குல விட்டத்தில் அமைந்திருந்தது. சட்டத்தில் வெண்கல வேலைபாடுகள் இருந்தன. அது வட்டமாக இல்லாமல் சதுரமாக இருந்தது. சட்டத்திற்கு அடியில் நான்கு சிறு சக்கரங்கள் இருந்தன. அவற்றின் விட்டம் 27 அங்குலமாக இருந்தது. இரு சக்கரங்களையும் இணைக்கும் அச்சுத் தண்டு வண்டியோடு இணைக்கப்பட்டது. இச்சக்கரங்கள் தேர்ச் சக்கரங்களைப் போன்றிருந்தன. சக்கரங்கள், அச்சுத் தண்டு, பட்டை, வட்டங்கள், கம்பிகள் எல்லாம் வெண்கலத்தால் ஆனவை. ஒவ்வொரு வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு தாங்கிகள் இருந்தன. அவை அனைத்தும் வண்டியோடு ஒன்றாக இணைக்கப்பட்டன. ஒவ்வொரு வண்டியின் தலைப்பிலும் வெண்கலத்தால் ஆன விளிம்பு இருந்தது. அவை வண்டியோடு ஒரே துண்டாக இணைக்கப்பட்டிருந்தது. வண்டியின் பக்கங்களில் வெண்கலத்தால் ஆன கேருபீன்களும், சிங்கங்களும், பேரீந்து மரங்களும் வைக்கப்பட்டிருந்தன. வண்டியில் எங்கெங்கே இடம் இருந்ததோ அங்கெல்லாம் இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தது. வண்டியின் சட்டங்களில் பூ வேலைப்பாடுகளும் அமைக்கப்பட்டன. ஈராம் பத்து வண்டிகளை செய்தான். எல்லாம் ஒரே மாதிரியாக வெண்கலத்தால். வார்க்கப்ட்டிருந்தன. ஈராம் பத்து கிண்ணங்களையும் செய்தான். ஒவ்வொரு வண்டியிலும் ஒவ்வொரு கிண்ணங்கள் வைக்கப்பட்டது. ஒவ்வொரு கிண்ணமும் 6 அடி குறுக்களவு உள்ளது. ஒவ்வொன்றும் 230 காலன் கொள்ளளவு கொண்டது. ஆலயத்தின் தென்புறத்தில் ஐந்து வண்டிகளையும், வடபுறத்தில் ஐந்து வண்டிகளையும் நிறுத்திவைத்தான். ஆலயத்தின் தென்கிழக்கு முனையில் பெரிய தண்ணீர்த்தொட்டியை வைத்தான். இதோடு கொப்பரை, சாம்பல் எடுக்கும் கரண்டி, கலங்கள் போன்றவற்றையும் ஈராம் செய்தான். சாலொமோன் ராஜா விரும்பியவற்றையெல்லாம் ஈராம் செய்துகொடுத்தான். அவன் கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்தப் பொருட்களின் பட்டியல் கீழேத் தரப்பட்டுள்ளது. 2 தூண்கள், 2 தூண்களுக்கு மேல் வைக்கத்தக்க கிண்ணவடிவ கும்பங்கள், 2 கும்பங்களை மூடும் வலைப்பின்னல்கள், 400 மாதுளம்பழங்கள். இவை கும்பங்களை மூடும் ஒவ்வொரு வலைபின்னலோடும் இரண்டு வரிசையாக தொங்கவிடப்பட்டன. 10 வண்டிகள் அதன் மேல் 10 கொப்பரைகள், 1 கடல் தொட்டி, அதன் கீழ் 12 காளைகள், செப்புச் சட்டிகள், சாம்பல் கரண்டிகள், கலங்கள். இவை அனைத்தும் சுத்தமான வெண்கலத்தால் ஆனவை. ராஜா சாலொமோன் விரும்பிய விதத்திலேயே இவை அனைத்தையும ஈராம் செய்தான். இவை அனைத்துமே பரிசுத்த வெண்கலத்தால் ஆனவை. சாலொமோன் இவ்வெண்கலத்தை எடை போடவில்லை. இவை எடைக்கு அதிகமாகவே இருந்தன. எனவே வெண்கலத்தின் மொத்த எடையை யாரும் அறிந்திருக்கவில்லை. யோர்தான் நதிக்கரையில் சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவில் களிமண் தரையில் இவற்றைச் செய்யுமாறு ராஜா கட்டளையிட்டான். தரையில் அச்சுகளைப் பதித்து, அவற்றில் வெண்கலத்தை உருக்கி ஊற்றி இவற்றை அவர்கள் செய்தார்கள். சாலொமோன் ஆலயத்திற்குத் தங்கத்தால் பல பொருட்களைச் செய்ய கட்டளையிட்டான். அவை கீழ்வருவன: பொன்னாலான பலிபீடம், பொன்னாலான மேஜை, (தேவனுக்குச் செலுத்தும் விசேஷ அப்பங்களை வைக்க உதவும்,) விளக்குத்தண்டுகள், (மகா பரிசுத்தமான இடத்தில் தென்பக்கம் ஐந்தும் வடபக்கம் ஐந்தும் வைத்தனர்.) பொன் பூக்கள், விளக்குகள், கத்தரிகள், கிண்ணங்கள், வெட்டுக்கத்திகள், கலங்கள், கலயங்கள், தூபகலசங்கள், ஆலய வாசல் கதவுகள். இவ்வாறு கர்த்தருடைய ஆலயத்திற்குத் தேவையான பொருட்களை சாலொமோன் செய்து முடித்தான். பிறகு தனது தந்தை தாவீது சேர்த்து வைத்திருந்தப் பொருட்களையெல்லாம் ஆலயத்துக்காக ஒன்றாகச் சேர்த்தான். இவை அனைத்தையும் ஆலயத்திற்குள் கொண்டுவந்தான். வெள்ளி, பொன் முதலியவற்றையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பொக்கிஷத்தில் சேர்த்துவைத்தான்.