1 இராஜாக்கள் 7:1-8

1 இராஜாக்கள் 7:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனாலும் சாலொமோன் அரண்மனைக் கட்டிடங்களைக் கட்டிமுடிக்க பதின்மூன்று வருடங்கள் சென்றன. அவன் லெபனோன் வனமாளிகையையும் கட்டினான். மிகவும் பெரிதான மண்டபம் நூறுமுழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது. உள் கூரையின் கேதுருமர உத்திரங்களை நான்கு வரிசையில் அமைந்திருந்த கேதுரு மரத்தாலான தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன. தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுரு மரத்தால் கூரை செய்யப்பட்டிருந்தது. ஒரு வரிசைக்கு பதினைந்து உத்திரங்களாக நாற்பத்தைந்து உத்திரங்கள் இருந்தன. அதன் ஜன்னல்கள் உயரத்தில் ஒவ்வொரு தொகுப்பிலும் மூன்றாக ஒன்றுக்கொன்று எதிர்ப்புறமாக அமைக்கப்பட்டிருந்தன. எல்லா நுழைவு வாசல்களும் சதுர சட்டங்கள் உடையதாய் இருந்தன. அவை முன்பகுதியில் மூன்று மூன்றாக இருந்தன. அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன. தூண்களினால் ஒரு மண்டபத்தையும் அமைத்தான். அது ஐம்பதுமுழ நீளமும், முப்பதுமுழ அகலமும் உள்ளதாய் இருந்தது. அதன் முன்பக்கத்தில் ஒரு வாசலின் மண்டபமும், அதற்குமுன் தூண்களும் நீண்டு நிற்கும் கூரையும் இருந்தன. இதைவிட சாலொமோன் தான் நீதி வழங்குவதற்கென நீதிமண்டபம் எனப்படும் ஒரு அரியணை மண்டபத்தையும் அமைத்தான். அதை தளத்திலிருந்து உட்கூரைவரை கேதுரு மரப்பலகைகளினால் மூடினான். அவன் தான் வாழப்போகும் அரண்மனையையும் அதே மாதிரியாகவே அதற்குப் பின்புறமாக தூரத்திலே அமைத்தான். சாலொமோன் இதேவிதமான அரண்மனையை தனது மனைவியான பார்வோனின் மகளுக்கும் கட்டினான்.

1 இராஜாக்கள் 7:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சாலொமோன் தன்னுடைய அரண்மனை முழுவதையும் கட்டிமுடிக்க 13 வருடங்கள் சென்றது. அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது 900 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது; அதைக் கேதுரு மரத்தாலான உத்திரங்கள் கட்டப்பட்ட கேதுருமரத்தூண்களின் நான்கு வரிசைகளின்மேல் கட்டினான். ஒவ்வொரு வரிசைக்கும் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் கூரை வேயப்பட்டிருந்தது. மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது. எல்லா ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் சதுரமாக இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது. 75 அடி நீளமும் 45 அடி அகலமுமான மண்டபத்தையும், தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராக இருந்தது. தான் இருந்து நியாயம் தீர்ப்பதற்கு நியாயாசனம் போடப்பட்டிருக்கும் ஒரு நியாய விசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒரு பக்கம் துவங்கி மறுபக்கம்வரை கேதுரு பலகைகளால் தரையை மூடினான். அவன் தங்கும் அவனுடைய அரண்மனை மண்டபத்திற்குள்ளே அதே மாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் திருமணம் செய்த பார்வோனின் மகளுக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டினான்.

1 இராஜாக்கள் 7:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

சாலொமோன் ராஜா தனக்கென ஒரு அரண்மனையும் கட்டிமுடித்தான். இவ்வேலை முடிய 13 ஆண்டுகள் ஆயின. “லீபனோன் காடு” என்ற கட்டிடத்தையும் கட்டினான். இது 150 அடி நீளமும், 75 அடி அகலமும் 45 அடி உயரமும் கொண்டது. கேதுரு மரத்தூண்கள் நான்கு வரிசைகளில் அமைக்கப்பட்டன. அதன் மேல் கேதுருமர உத்திரங்களையும் அமைத்தான். உத்திரங்களின் மேல் கேதுரு மரச்சட்டங்களைப் பாவினர். ஒவ்வொரு தூணுக்கும் 15 சட்டங்கள் இருந்தன. அங்கே மொத்தம் 45 சட்டங்கள் இருந்தன. சுவர்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வரிசையாக ஜன்னல்கள் இருந்தன. மூன்று வரிசை ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது. ஒவ்வொன்றின் முடிவிலும் மூன்று கதவுகள் இருந்தன. அவற்றின் சட்டங்கள் சதுரமாயிருந்தன. சாலொமோன் 75 அடி நீளமும், 45 அடி அகலமும்கொண்ட “தூண்” ஒன்றைக் கட்டினான். எதிரே தூண்களையும் நிறுத்தினான். சாலொமோன் நியாயம் தீர்க்கிறதற்கு, “நியாய விசாரணை மண்டபத்தையும்” கட்டினான். அம்மண்டபம் தரையிலிருந்து கூரைவரை கேதுருமரங்களால் அமைக்கப்பட்டிருந்தன. நியாய விசாரனை மண்டபத்திற்குள்தான் சாலொமோன் வசித்து வந்தான். அவன் குடியிருந்த அரண்மனைக்குள்ளும் இதுபோல் ஒரு மண்டப வீடு இருந்தது. நியாய விசாரணை மண்டபம் அமைக்கப்பட்ட விதத்திலேயே இவ்வீடும் கட்டப்பட்டது. எகிப்து ராஜாவின் குமாரத்தியான, தன் மனைவிக்கும் இதே போல ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்தான்.

1 இராஜாக்கள் 7:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது. அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறுமுழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான். ஒவ்வொரு வரிசைக்குப் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் மச்சுப்பாவியிருந்தது. மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது. ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எல்லாம் சதுரமாயிருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது. ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும், தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராயிருந்தது. தான் இருந்து நியாயம் தீர்க்கிறதற்கு நியாயாசனம் போட்டிருக்கும் ஒரு நியாய விசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒரு பக்கம் துவக்கி மறுபக்கமட்டும் கேதுருப் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான். அவன் வாசம்பண்ணும் அவனுடைய அரமனை மண்டபத்திற்குள்ளே அதேமாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் விவாகம்பண்ணின பார்வோனின் குமாரத்திக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டுவித்தான்.