1 இராஜாக்கள் 22:1-53

1 இராஜாக்கள் 22:1-53 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது. மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும்போது, இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி, யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான். பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான். இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான். அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: “போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்றான். ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான். அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான். அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலது பக்கத்திலும் அவர் இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார். ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான். அதற்கு மிகாயா: நீ ஒளித்துக் கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் குமாரனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய், இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே வருமளவும், இவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான். அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான். பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள். இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான். சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பதிரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடே மாத்திரம் யுத்தம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான். ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனுக்கு நேராகச் சாய்ந்து வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான். இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள். ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள்பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து; நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான். அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்து போனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது. பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும், போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது. அப்படியே ராஜா இறந்தபின்பு, சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள். அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது. ஆகாபின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின தந்த அரமனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. ஆகாப் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய அகசியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான். யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள். அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான். யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணினயுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான். அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான். பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்துபோயின. அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை. யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைத் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து. பாகாலைச் சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினான்.

1 இராஜாக்கள் 22:1-53 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மூன்று வருடங்களாக சீரியாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையில் யுத்தம் இருக்கவில்லை. ஆனால் மூன்றாம் வருடத்தில் யூதாவின் அரசன் யோசபாத் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைக் காண்பதற்காகப் போனான். இஸ்ரயேலின் அரசன் தன் அதிகாரிகளைப் பார்த்து, “கீலேயாத்திலுள்ள ராமோத் எங்களுக்குரியது என்றும், அதைச் சீரியரிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் இன்னும் ஒன்றுமே செய்யாதிருக்கிறோம் என்றும் உங்களுக்குத் தெரியாதா?” என்றான். எனவே அவன் யோசபாத்திடம், “நீ கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராக யுத்தம் செய்வதற்கு என்னுடன் வருவாயா?” என்று கேட்டான். அதற்கு யோசபாத் இஸ்ரயேலின் அரசனிடம், “உம்மைப் போலவே நானும் ஆயத்தமாயிருக்கிறேன். என்னுடைய மக்கள் உம்முடைய மக்களைப் போலவும், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகளைப் போலவும் இருக்கின்றனர்” என்றான். ஆனால், மேலும் யோசபாத் இஸ்ரயேல் அரசனிடம்: “முதலில் யெகோவாவின் ஆலோசனையைத் தேடுங்கள்” என்று சொன்னான். எனவே இஸ்ரயேலின் அரசன் இறைவாக்கினர்களான நானூறு மனிதரை ஒன்றுதிரட்டி அவர்களிடம், “நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்குப் போகலாமா? அல்லது வேண்டாமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நீர் போகலாம். யெகோவா அதை அரசனாகிய உமது கையில் கொடுப்பார்” என பதிலளித்தார்கள். ஆனால் யோசபாத், “நாம் விசாரிப்பதற்கு யெகோவாவின் இறைவாக்கினன் யாராவது இங்கே இல்லையா?” என்று கேட்டான். அதற்கு இஸ்ரயேலின் அரசன் ஆகாப் யோசபாத்திடம், “யெகோவாவிடம் விசாரிக்கும்படி இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் அவன் எப்போதும் என்னைப்பற்றி நன்மையாக அல்ல தீமையாகவே இறைவாக்கு சொல்லுவான். இம்லாவின் மகன் மிகாயாவே அவன்” என்றான். அப்பொழுது யோசபாத், “அரசனாகிய நீர் அவ்விதமாகக் கூறக்கூடாது” என்றான். எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் தனது அதிகாரிகளில் ஒருவனை அழைத்து, “இம்லாவின் மகன் மிகாயாவை உடனடியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான். இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச அங்கி அணிந்தவர்களாய் சமாரியாவின் வாசலில், சூடடிக்கும் களத்திலிருந்த அரியணையில் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்முன் எல்லா இறைவாக்கினரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா இரும்பினால் கொம்புகளைச் செய்து அவர்களைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: இந்த இரும்புக் கொம்புகளால் சீரியர் முழுவதுமாக அழியும்வரைக்கும் அவர்களைக் குத்திக் கொல்வீர்கள்” என்றான். மற்ற எல்லா இறைவாக்கினர்களும் அதையே வாக்காக உரைத்து, “கீலேயாத்திலுள்ள ராமோத்தை தாக்கி வெற்றிகொள்ளுங்கள். ஏனெனில் யெகோவா அதை அரசராகிய உமது கையில் தருவார்” என்றார்கள். மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம், “எல்லா இறைவாக்கினர்களும் ஒரேவிதமாகவே வாக்கு உரைத்து அரசனுக்கு வெற்றியையே அறிவிக்கிறார்கள். நீயும் அப்படியே பேசி அரசனுக்குச் சாதகமானதையே சொல்” என்றான். ஆனால் மிகாயா அவனிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் எனது இறைவன் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன் என்பதும் நிச்சயம்” என்றான். அவன் வந்து சேர்ந்தபோது ஆகாப் அரசன் அவனிடம், “மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்கு போகலாமா அல்லது வேண்டாமா?” என்று கேட்டான். மிகாயா அதற்குப் பதிலாக, “போய்த் தாக்கி வெற்றிபெறுங்கள்; யெகோவா அரசனாகிய உம்முடைய கையில் அதைக் கொடுப்பார்” என்றான். அரசன் அவனிடம், “யெகோவாவின் பெயரில் உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல வேண்டாமென எத்தனை தடவை உன்னை நான் ஆணையிட வைக்கவேண்டும்?” எனக் கேட்டான். அப்பொழுது மிகாயா, “இஸ்ரயேலர் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு சமாதானத்துடன் போகட்டும்’ என்று யெகோவா சொன்னார்” என்றான். அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யோசபாத் அரசனிடம், “அவன் எப்போதும் எனக்கு நன்மையானதையல்ல தீமையானதையே இறைவாக்காகச் சொல்வான் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்றான். தொடர்ந்து மிகாயா, “ஆகவே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா தமது அரியணையில் அமர்ந்திருப்பதையும், வலதுபக்கத்திலும் இடது பக்கத்திலும் வானத்தின் எல்லா சேனைகளும் அவரைச் சுற்றி நிற்பதையும் நான் கண்டேன். அப்பொழுது யெகோவா: அந்த சேனையிடம், ‘கீலேயாத்திலுள்ள ராமோத்தைத் தாக்குவதற்கும், அங்கே ஆகாப் சாகும்படி போவதற்கும் அவனைத் தூண்டிவிடுகிறவன் யார்?’ எனக் கேட்டார். “அதற்கு ஒரு ஆவி ஒருவிதமாகவும், இன்னொரு ஆவி இன்னொரு விதமாகவும் வித்தியாசமான யோசனை கூறின. கடைசியாக ஒரு ஆவி முன்னேவந்து யெகோவாவுக்கு முன்பாக நின்று, ‘நான் அவனைத் தூண்டுவேன்’ என்றது. “ ‘எதினால் நீ அதைச் செய்வாய்’ என்று யெகோவா அதைப் பார்த்துக் கேட்டார். “ ‘நான் போய் அவனுடைய எல்லா இறைவாக்கினர்களின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன்’ என்றது. “ ‘போய் அவ்வாறே செய், நீ அவனைத் தூண்டி வெற்றிபெறுவாய்’ என யெகோவா கூறினார். “அவ்வாறே இப்பொழுதும் யெகோவா உனது இறைவாக்கினர் எல்லாருடைய வாயிலும் பொய்யின் ஆவியை வைத்திருக்கிறார். யெகோவா உனக்குப் பேரழிவையே நியமித்திருக்கிறார்” என்றான். அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா முன்பாகப் போய் மிகாயாவின் முகத்தில் அறைந்தான். பின் அவனிடம், “யெகோவாவின் ஆவியானவர் என்னைவிட்டு உன்னுடன் பேச வரும்போது, எந்த வழியாக வந்தார்” என்றும் மிகாயாவைக் கேட்டான். அதற்கு மிகாயா, “நீ ஒளிப்பதற்கு ஒரு உள் அறையினுள் போகும்நாளில் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றான். அப்பொழுது இஸ்ரயேலின் அரசனான ஆகாப், “மிகாயாவைப் பிடித்து நகர ஆளுநனான ஆமோனிடமும், அரசனின் மகனான யோவாஸினிடமும் கொண்டுபோய், அவர்களிடம், ‘அரசன் கூறுவது இதுவே: நான் பாதுகாப்பாக திரும்பி வரும்வரையும் இவனைச் சிறையில் போடுங்கள். அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறொன்றையும் கொடுக்கக்கூடாது’ ” என்று கூறினான். அதற்கு மிகாயா, “நீ பாதுகாப்பாகத் திரும்பி வந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை” என்று சொல்லி, “மக்களே, நீங்கள் எல்லோரும் எனது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்!” என்றும் சொன்னான். எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போனார்கள். இஸ்ரயேலின் அரசன் யோசபாத்திடம், “நான் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்கு வருகிறேன். நீர் உமது அரச அங்கியை உடுத்திக்கொள்ளும்” என்றான். அப்படியே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்குப் போனான். இப்பொழுது சீரிய அரசனோ தனது முப்பத்தி இரண்டு தேர்ப்படைத் தளபதிகளிடம், “நீங்கள் இஸ்ரயேலின் அரசனைத் தவிர சிறியவனோ, பெரியவனோ வேறு யாருடனும் சண்டையிட வேண்டாம்” எனக் கட்டளையிட்டிருந்தான். தேர்ப்படை தளபதிகள் யோசபாத்தைக் கண்டபோது, “நிச்சயமாக இவன்தான் இஸ்ரயேலின் அரசன்” என்று நினைத்து அவனைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் கூக்குரலிட்டபோது, தேர்ப்படைத் தளபதிகள் அவன் இஸ்ரயேலின் அரசன் ஆகாப் அல்ல என்பதைக் கண்டபோது, அவனைப் பின்தொடர்வதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால் ஒருவன் தனது வில்லை உருவி குறிபார்க்காமல் எய்தபோது, இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் கவசத்தின் இடைவெளி வழியாகப் பாய்ந்து அவனைத் தாக்கியது. அப்பொழுது அரசன் தன் தேரோட்டியிடம், “தேரைத் திருப்பிக்கொண்டு என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ. நான் காயப்பட்டு விட்டேன்” என்றான். அந்த நாள்முழுவதும் கடும் போர் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. சீரியருக்கு எதிர் புறமாக அரசனுடைய தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் அரசனைச் சாய்த்து வைத்திருந்தார்கள். அவனுடைய காயங்களிலிருந்து இரத்தம் ஓடி தேரின் அடித்தளங்களெல்லாம் வழிந்தது. அந்த நாளின் சாயங்காலமே அவன் இறந்தான். சூரியன் அஸ்தமிக்கும்பொழுது, “ஒவ்வொருவனும் தன்தன் பட்டணத்துக்கும் ஒவ்வொருவனும் தன்தன் நாட்டுக்கும் திரும்பிப்போங்கள்” என்றொரு சத்தம் படைகளிடையே எங்கும் பரவியது. அப்படியே அரசன் இறந்து சமாரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டான். அவர்கள் அவனை அங்கே அடக்கம்பண்ணினார்கள். அவர்கள் அந்தத் தேரை சமாரியாவிலுள்ள குளத்தில் கழுவினார்கள். வேசிகள் அதில் குளிப்பார்கள். யெகோவாவின் வார்த்தை அறிவித்திருந்தபடி நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கின. ஆகாபின் ஆட்சிக் காலத்திலுள்ள மற்ற நிகழ்வுகளும், செயல்களும், அவன் தந்தத்தைப் பதித்துக் கட்டிய மாளிகையைப் பற்றியும், அவன் திரும்பக்கட்டிய பட்டணங்களைப் பற்றியும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. ஆகாப் தன் முற்பிதாக்களோடு இளைப்பாறினான். அவன் மகன் அகசியா அவன் இடத்தில் அவனுக்குபின் அரசனானான். இஸ்ரயேல் அரசனாக ஆகாப் பதவி ஏற்ற நான்காம் வருடத்தில் யூதாவில் ஆசாவின் மகன் யோசபாத் அரசனானான். யோசபாத் அரசனானபோது அவனுக்கு முப்பத்தைந்து வயதாயிருந்தது. அவன் எருசலேமில் இருபத்தைந்து வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சில்கியின் மகள் அசுபாள் என்பவள். அவன் தனது தகப்பன் ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான். அவற்றைவிட்டு அவன் விலகவில்லை. அவன் யெகோவாவின் பார்வையில் சரியானவற்றைச் செய்தான். ஆனால் உயர்ந்த மேடைகளோ அகற்றப்படவில்லை. மக்கள் தொடர்ந்து அந்த மேடைகளில் பலிகளைச் செலுத்தியும், தூபங்காட்டியும் வந்தனர். அதோடு யோசபாத் இஸ்ரயேல் அரசனுடன் சமாதானமாயுமிருந்தான். யோசபாத்தின் ஆட்சியைப்பற்றிய மற்ற நிகழ்வுகளும், அவனுடைய சாதனைகளும், போர்த்திறமைகளும் யூதாவின் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. தன் தகப்பன் ஆசாவின் ஆட்சிக் காலத்துக்குப் பின் இன்னமும் மீதியாயிருந்த கோவில்களில், வேசித்தனத்திற்கு தங்களைக் கொடுத்த ஆண் விபசாரக்காரரை நாட்டிலிருந்து அகற்றிவிட்டான். அந்தக் காலத்தில் ஏதோமில் ஒரு அரசனும் இருக்கவில்லை. ஒரு பிரதிநிதியே அரசாண்டு வந்தான். யோசபாத் தங்கம் கொண்டுவருவதற்கு ஓப்பீருக்குச் செல்ல தர்ஷீசின் கப்பல்களைக் கட்டுவித்தான். ஆயினும் அக்கப்பல்கள் ஒருபோதும் பயணம் செய்யவில்லை. எசியோன் கேபேரில் அவை சேதமடைந்து விட்டன. அந்த வேளையில் ஆகாபின் மகன் அகசியா யோசபாத்திடம், “என் வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும்” என்றான். ஆனால் யோசபாத் அதை மறுத்துவிட்டான். அதன்பின் யோசபாத் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, அவர்களுடன் தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய மகன் யெகோராம் அவனுடைய இடத்தில் அரசனானான். யூதாவில் யோசபாத் அரசாண்ட பதினேழாம் வருடத்திலேயே ஆகாபுடைய மகன் அகசியா சமாரியாவில் இஸ்ரயேலருக்கு அரசனானான். அவன் இஸ்ரயேலரை இரண்டு வருடங்கள் அரசாண்டான். அவன் தன் தகப்பனின் வழிகளிலும், தாயின் வழிகளிலும் இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழிகளிலும் நடந்தபடியினால் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். அவன் தன் தகப்பன் செய்ததுபோல பாகாலை வழிபட்டு, பணிசெய்து இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குக் கோபமூட்டினான்.

1 இராஜாக்கள் 22:1-53 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சீரியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் மூன்று வருடங்கள் யுத்தமில்லாமல் இருந்தது. மூன்றாம் வருடத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவிடம் போயிருக்கும்போது, இஸ்ரவேலின் ராஜா தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி, யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்ய என்னோடு கூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய மக்கள் உம்முடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான். பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவாவுடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப்போகலாமா, போக வேண்டாமா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிவதற்கு இவர்களைத் தவிர யெகோவாவுடைய தீர்க்கதரிசி வேறே யாராவது இங்கே இல்லையா என்று கேட்டான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: யெகோவாவிடம் விசாரித்து அறிவதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா அதிகாரிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் மகனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான். இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் வாசலுக்கு முன்பாக இருக்கும் திறந்த வெளியிலே ராஜஉடை அணிந்துகொண்டவர்களாக, அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; எல்லாத் தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களைத் தள்ளி அழித்துப்போடுவீர் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். எல்லாத் தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் நீர் போம், உமக்கு வாய்க்கும்; யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் எல்லாம் ராஜாவிற்கு நன்மையாக இருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான். அதற்கு மிகாயா: யெகோவா என்னிடம் சொல்வதையே சொல்லுவேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். அவன் ராஜாவிடம் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப் போகலாமா, போகவேண்டாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் போம், உமக்கு வாய்க்கும்; யெகோவா அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்; என்றான். ராஜா அவனைப் பார்த்து: நீ யெகோவாவுடைய நாமத்தில் உண்மையைத்தவிர வேறொன்றையும் என்னிடம் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைமுறை உன்னை ஆணையிடச் செய்யவேண்டும் என்று சொன்னான். அப்பொழுது மிகாயா: இஸ்ரவேலர்கள் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது யெகோவா: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடு சொல்லவில்லையா என்றான். அப்பொழுது மிகாயா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும்; யெகோவா தம்முடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவரின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். அப்பொழுது யெகோவா: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படி, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, யெகோவாவுக்கு முன்பாக நின்று; நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. எதினால் என்று யெகோவா அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லோரின் வாயிலும் பொய்யின் ஆவியாக இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கச்செய்வாய்; போய் அப்படிச் செய் என்றார். ஆதலால் யெகோவா பொய்யின் ஆவியை உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லோருடைய வாயிலும் கட்டளையிட்டார்; யெகோவா உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். அப்பொழுது கேனானாவின் மகனாகிய சிதேக்கியா அருகில் வந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, யெகோவாவுடைய ஆவி எந்த வழியாக என்னைவிட்டு உன்னோடு பேசும்படி வந்தது என்றான். அதற்கு மிகாயா: நீ ஒளிந்துகொள்ள உள் அறையிலே பதுங்கும் அந்த நாளிலே அதைக் காண்பாய் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்தின் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் மகனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய், இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடு வரும்வரை, இவனுக்கு கொஞ்சம் அப்பத்தையும் கொஞ்சம் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான். அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடு திரும்பி வருகிறது உண்டானால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை என்று சொல்லி; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள் என்றான். பின்பு இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள். இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் நுழைவேன்; நீரோ ராஜஉடை அணிந்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் நுழைந்தான். சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவர்களையும் நோக்கி: நீங்கள் சிறியவர்களோடும் பெரியவர்களோடும் யுத்தம்செய்யாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடுமாத்திரம் யுத்தம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான். எனவே, இரதங்களின் தலைவர்கள் யோசபாத்தைக் காணும்போது, இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்செய்ய அவனுக்கு நேராக வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான். இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர்கள் கண்டு அவனைவிட்டு விலகிப்போனார்கள். ஒருவன் தெரியாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன்னுடைய ரத ஓட்டியைப் பார்த்து; நீ திருப்பி என்னை இராணுவத்திற்கு மறுபுறம் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான். அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியர்களுக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது. பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் அறிவிக்கப்பட்டது. அப்படியே ராஜா இறந்தபின்பு சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவை சமாரியாவில் அடக்கம்செய்தார்கள். அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது யெகோவா சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கினது. ஆகாபின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின அரண்மனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. ஆகாப் மரணமடைந்து முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டபின்பு, அவனுடைய மகனாகிய அகசியா அவனுடைய இடத்தில் ராஜாவானான். ஆசாவின் மகனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அரசாட்சி செய்த நான்காம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான். யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாக இருந்து, இருபத்தைந்து வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; சில்கியின் மகளாகிய அவனுடைய தாயின்பெயர் அசுபாள். அவன் தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதைவிட்டு விலகாமல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் மேடைகள் இடிக்கப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தார்கள். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடு சமாதானமாக இருந்தான். யோசபாத்தின் மற்ற செயல்பாடுகளும், அவன் காட்டிய வல்லமையும், அவன் செய்த யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. தன்னுடைய தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாக விட்டிருந்த ஆண் விபசாரக்காரர்களையும் அவனுடைய தேசத்திலிருந்து அற்றுப்போகச்செய்தான். அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான். பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன் கேபேரிலே உடைந்துபோனது. அப்பொழுது ஆகாபின் மகனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை. யோசபாத் மரணமடைந்து, தாவீதின் நகரத்தில் தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான். ஆகாபின் மகனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருடத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்து, யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பன் வழியிலும், தன்னுடைய தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த நேபாத்தின் மகன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து, பாகாலை வணங்கி, அதைப் பணிந்துகொண்டு, தன்னுடைய தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமூட்டினான்.

1 இராஜாக்கள் 22:1-53 பரிசுத்த பைபிள் (TAERV)

அடுத்த இரு ஆண்டுகளில், இஸ்ரவேலுக்கும் சீரியாவுக்கும் சமாதானம் நிலவியது. மூன்றாம் ஆண்டில், யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைப் பார்க்கப் போனான். அப்போது, ஆகாப் அதிகாரிகளிடம், “சீரியாவின் ராஜா கீலேயாத்திலுள்ள ராமோத்தை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டான். அதைத் திரும்பப்பெற ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை? அது நமக்குச் சொந்தமாக வேண்டும்” என்றான். எனவே யோசபாத்திடம், “நீ என்னோடு சேர்ந்து ராமோத்துக்காகப் போரிட வருகிறாயா?” என்று கேட்டான். அதற்கு அவன், “சரி, உன்னோடு சேர்ந்துகொள்கிறேன். எனது படை வீரர்களும் குதிரைகளும் உன் படையோடு சேர்ந்துகொள்ளத் தயார். ஆனால் முதலில் கர்த்தரிடம் இதுபற்றி ஆலோசனை கேட்போம்” என்றான். எனவே ஆகாப் தீர்க்கதரிசிகளைக் கூட்டினான். அவர்கள் 400 பேர். அவர்களிடம், “நான் ராமோத்துக்காக சீரிய படையோடு போரிடப் போகலாமா? அல்லது காத்திருக்கலாமா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள் “இப்போது போய் போர் செய்யும். கர்த்தர் வெற்றிப்பெறச் செய்வார்” என்றார்கள். யோசாபாத், “வேறு யாராவது தீர்க்கதரிசிகள் உண்டா? அவரிடமும், தேவனுடைய விருப்பத்தைக் கேட்போமே” என்றான். அதற்கு ஆகாப், “மற்றொரு தீர்க்கதரிசி இருக்கிறார். அவர் மூலம் கர்த்தருடைய ஆலோசனைகளைப் பெறலாம். அவரது பெயர் இம்லாவின் குமாரனான மிகாயா. எனக்கு எதிராகவே அவன் பேசுவதால் அவனை வெறுக்கிறேன். எப்போதும் எனக்கு விருப்பம் இல்லாததையே அவன் கூறுவான்” என்றான். யோசாபாத், “நீ அவ்வாறு சொல்லக்கூடாது!” என்றான். எனவே, ஆகாப் ஒரு அதிகாரியை அனுப்பி மிகாயாவை அழைத்து வரச்சொன்னான். அப்போது இரு ராஜாக்களும் அரச உடையோடு சிங்காசனத்தில் இருந்தனர். இது சமாரியா அருகில் உள்ள நியாய மன்றம். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு முன் நின்றுகொண்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் பெயர் சிதேக்கியா, இவன் கேனானாவின் குமாரன். அவன் இரும்பு கொம்புகளைச் செய்து, “இதனை நீங்கள் பயன்படுத்தி போரிடுங்கள். உங்களால் வெற்றிபெற முடியுமென்று கர்த்தர் சொன்னார்” என்று கூறினான். மற்றவர்களும் இதனை ஒப்புக்கொண்டனர். “இப்பொழுதே, உங்கள் படை புறப்படவேண்டும். அது ராமோத்தில் சீரிய படையோடு போரிடும். கர்த்தர் வெற்றிபெறச்செய்வார்” என்றனர். இது நடைபெறும்போது, அதிகாரி மிகாயாவைக் கண்டுபிடித்து, “எல்லா தீர்க்கதரிசிகளும் இப்போது போருக்குப்போக வேண்டும் என்கின்றனர். நீயும், அவ்வாறே சொல்” என்றான். ஆனால் அவன், “முடியாது! கர்த்தர் சொல்லச் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன்!” என்றான். பிறகு அவன் ராஜாவிடம் வந்து நின்றான். ராஜாவும், “நானும் யோசபாத்தும் சேரலாமா? சீரிய மன்னனோடு சண்டையிட ராமோத்துக்குப் போகலாமா?” என்று கேட்டான். அதற்கு மிகாயா, “சரி, நீ இப்போதே போய் சண்டையிடு, கர்த்தர் வெற்றிபெறச் செய்வார்” என்றான். ஆனால் ஆகாப், “கர்த்தருடைய அதிகாரத்தால் நீ பேசிக்கொண்டிருக்கவில்லை. நீ உன் சொந்த வார்த்தைகளைப் பேசுகிறாய். எனவே உண்மையைச் சொல்! எத்தனைமுறை நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன்? கர்த்தர் சொல்கிறதை எனக்குச் சொல்!” என்றான். அதற்கு மிகாயா, “என்ன நடக்கும் என்பதை நான் பார்க்கமுடியும். இஸ்ரவேல் படைகள் சிதறியுள்ளன. மேய்ப்பன் இல்லாத ஆடுகள்போல உள்ளன. எனவே கர்த்தர், ‘இவர்களுக்கு தலைவன் இல்லை. எனவே சண்டைக்குப் போகாமல் வீட்டிற்குப் போகவேண்டும்’ என்று சொல்கிறார்” என்றான். ஆகாப் யோசபாத்திடம், “நான் சொன்னதைப் பார்! இவன் எப்போதும் எனக்குப் பிடிக்காததையே கூறுவான்” என்றான். ஆனால் மிகாயா தொடர்ந்து கர்த்தருக்காகப் பேசினான். “கவனி, இது கர்த்தர் கூறுவது! கர்த்தர் பரலோகத்தில் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். பரலோகத்தில் உள்ள அனைத்து தேவதூதர்களும் கர்த்தருடைய பக்கத்தில் வலதுபுறமும், இடதுபுறமும் நின்றுகொண்டிருக்கின்றனர். கர்த்தர், ‘உங்களில் யாரேனும் ராஜா ஆகாபிடம் ஒரு தந்திரம் செய்வீர்களா? அவன் ராமோத்தில் இருக்கும் சீரியாவின் படையை எதிர்த்து சண்டையிட வேண்டுமென நான் விரும்புகிறேன். பின்னர் அவன் கொல்லப்படுவான்’ என்று சொன்னார். என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்து தூதர்கள் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை. இறுதியில் ஒரு ஆவி வெளியே வந்து கர்த்தருக்கு முன் நின்றுக் கொண்டு சொன்னது. ‘நான் தந்திரம் செய்வேன்!’ கர்த்தர், ‘எவ்வாறு செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் தீர்க்கதரிசிகளைக் குழப்பி பொய் சொல்லுமாறு செய்வேன். அவர்கள் பேசுவதெல்லாம் பொய்’ என்றது. உடனே அவர், ‘போய் ஆகாபை ஏமாற்று. நீ வெற்றிபெறுவாய்’ என்றார்” என்றான். மிகாயா இவ்வாறு தன் கதையைச் சொல்லி முடித்தான். பிறகு அவன், “இது தான் இங்கு நடந்தது. இவ்வாறு பொய் சொல்லுமாறு கர்த்தர்தான் தீர்க்கதரிசிகளை மாற்றினார். உனக்குத் தீமை வருவதை கர்த்தரே விரும்புகிறார்” என்றான். பிறகு சிதேக்கியா மிகாயாவிடம் வந்து முகத்தில் அடித்தான். அவன் “கர்த்தருடைய சக்தி என்னை விட்டுவிலகி எந்த வழியாய் உன்னிடம் வந்தது?” என்று கேட்டான். அதற்கு மிகாயா, “விரைவில் துன்பம் வரும். அப்போது, நீ சிறிய அறையில் ஒளிந்துக்கொள்வாய். அப்போது நான் சொல்வது உண்மையென்று உனக்குத் தெரியும்!” என்றான். மிகாயாவைக் கைது செய்யும்படி ஆகாப், அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டான். ஆகாப் ராஜா, “இவனைக் கைது செய்து நகர ஆளுநரான ஆமோனிடத்திலும் பிறகு இளவரசனான யோவாசிடமும் அழைத்துக் கொண்டு போங்கள். நான் சமாதானத்தோடு வரும்வரை இவனைச் சிறையில் அவர்களிடம் அடைக்கச்சொல். அதுவரை அப்பமும், தண்ணீரும் கொடுங்கள்” என்றான். அதற்கு மிகாயா, “நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் போர் முடிந்து உயிரோடு திரும்பி வந்தால் கர்த்தர் என் மூலமாக பேசவில்லை” என்று சத்தமாகச் சொன்னான். பிறகு ஆகாபும் யோசபாத்தும் ராமோத்திற்கு ஆராமோடு சண்டையிடப் போனார்கள். அவ்விடம் கீலேயாத்தில் உள்ளது. ஆகாப் யோசபாத்திடம், “நாம் போருக்குத் தயாராக்குவோம். நான் ராஜா என்று தோன்றாதபடி சாதாரண ஆடைகளையும் நீ அரச உடைகளையும் அணிந்துக்கொள்” என்றான். அவ்வாறே சாதாரண உடையில் சண்டையிட்டான். சீரியா ராஜாவுக்கு 32 இரதப்படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களிடம் இஸ்ரவேல் ராஜாவைக் கண்டுபிடிக்குமாறு கட்டளையிட்டான். ராஜாவைக் கொன்றுவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டான். போரின்போது, அவர்கள் யோசபாத்தைக் கண்டு இஸ்ரவேலின் ராஜா என்று எண்ணித் தாக்கினர். அவன் சத்தமிட்டான். ஆனால், அவன் அரசனில்லை என்பதை அறிந்துகொல்லாமல் விட்டுவிட்டனர். ஆனால் ஒருவன் குறிவைக்காமல் ஒரு அம்பை எய்தான். எனினும், அது ஆகாப் மீதுபட்டு கவசம் மூடாத உடலில் நுழைந்தது. அவன் இரத ஓட்டியிடம், “ஒரு அம்பு என்னைத் தாக்கியுள்ளது! இரதத்தை களத்தைவிட்டு வெளியே கொண்டு செல்” என்றான். படைகள் தொடர்ந்து போரிட்டன. ராஜா தொலைவில் தங்கியிருந்தான். அதிலிருந்து சீரியாவின் படையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவனது இரத்தம் வடிந்து இரதத்தில் நிறைந்தது. அன்று மாலை, அவன் மரித்துப் போகவே, படையை நகருக்குத் திரும்புமாறு கட்டளையிட்டனர். இவ்வாறுதான் ஆகாப் மரித்துப்போனான். சிலர் அவனை சமாரியாவிற்கு எடுத்துப் போனார்கள். அங்கே அடக்கம் செய்தனர். அத்தேரை சமாரியாவிலுள்ள குளத்து தண்ணீரால் கழுவினார்கள். இரதத்தில் உள்ள இரத்தத்தை நாய்கள் நக்கின. அத்தண்ணீரை வேசி குமாரத்திகள் தம்மைச் சுத்தப்படுத்த பயன்படுத்தினார்கள். கர்த்தர் சொன்னபடியே அனைத்தும் நடந்தது. இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் ஆகாப் செய்த அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. அவன் தன் அரண்மனையைத் தந்தத்தால் அலங்கரித்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவன் உருவாக்கிய நகரைப்பற்றியும் அந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆகாப் மரித்து தனது முற்பிதாக்களோடு அடக்கம்பண்ணப்பட்டான். அவனுக்கு அடுத்து அவன் குமாரன் அகசியா, ராஜா ஆனான். இஸ்ரவேலின் ராஜாவாக ஆகாப் இருந்த நாலாவது ஆண்டில், யூதாவில் யோசபாத் ராஜாவானான். இவன் ஆசாவின் குமாரன். யோசபாத் ராஜாவாகும்போது அவனுக்கு 35 வயது. இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாய் அசுபாள். இவள் சில்கியின் குமாரத்தி. யோசபாத் நல்லவன். அவன் முன்னோர்களைப்போன்று இருந்தான். கர்த்தருடைய விருப்பப்படி கீழ்ப்படிந்து நடந்தான். ஆனால் பொய்தெய்வங்களை தொழுதுகொள்ள அமைக்கப்பட்ட மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் தொடாந்து அங்கு பலி செலுத்தி, நறுமணப் பொருட்களை எரித்துவந்தனர். யோசபாத் இஸ்ரவேல் ராஜாவோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொண்டான். இவன் தைரியமாகப் பல போர்களைச் செய்தான். இவன் செய்தது எல்லாம் யூதா ராஜாக்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. தன் நாட்டில் உள்ள முறைகெட்ட புணர்ச்சிக்காரர்களை தொழுகை இடங்களிலிருந்து விரட்டினான். அவர்கள், தன் தந்தை ஆசா ராஜாவாக இருந்தபோது இருந்தவர்கள். அப்போது, ஏதோமில் ராஜா இல்லை. ஆளுநரால் அது ஆளப்பட்டது. இவன் யூதா ராஜாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். இவன் கப்பல்களைச் செய்தான். பொன் வாங்க ஓப்பீருக்குச் செல்ல விரும்பினான். ஆனால் அவை போகமுடியாதபடி எசியோன் கேபேரிலே உடைந்து போயின. இஸ்ரவேலின் ராஜாவாகிய அகசியா யோசபாத்திடம், “என் ஆட்கள் உங்கள் ஆட்களோடு கப்பலில் போகட்டும்” என்றான். யோசபாத் ஒப்புக்கொள்ளவில்லை. யோசபாத் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பின் அவனது குமாரன் யோராம் ராஜா ஆனான். ஆகாபின் ராஜாவாகிய அகசியா இஸ்ரவேலுக்கு சமாரியாவில் ராஜா ஆனான். அப்போது யூதாவில் யோசபாத் 17ஆம் ஆண்டில் ஆண்டுகொண்டிருந்தான். அகசியா இரண்டு ஆண்டுகள் ஆண்டான். அகசியா கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தான். அவன் தந்தை ஆகாப் மற்றும் தாய் யேசபேலைப் போன்றும், நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் போன்றும் பாவம் செய்து வந்தான். இவர்கள் நாட்டு ஜனங்களையும் பாவத்திற்குட்படுத்தினர். அகசியா பாகால் தெய்வத்தை வழிபட்டான். இதனால் கர்த்தருக்கு கோபம் வந்தது. அவனது தந்தையிடம் போலவே அவனிடமும் கோபம்கொண்டார்.