1 இராஜாக்கள் 21:17-29
1 இராஜாக்கள் 21:17-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது திஸ்பியனாகிய எலியாவுக்கு யெகோவாவினுடைய வார்த்தை வந்தது. “சமாரியாவில் அரசாளுகிற இஸ்ரயேலின் அரசன் ஆகாபைச் சந்திக்கப் போ. அவன் இப்போது நாபோத்தினுடைய திராட்சைத் தோட்டத்தைத் தன் உரிமையாக்கிக்கொள்ளும்படி அங்கு போயிருக்கிறான். அவனிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கூறுவது இதுவே: நீ ஒரு மனிதனைக் கொலைசெய்து, அவனுடைய சொத்தை அபகரிக்கவில்லையா?’ என்று அவனிடம் கேள். மேலும் நீ அவனிடம், ‘யெகோவா கூறுவது இதுவே: நாபோத்தின் இரத்தத்தை நாய்கள் நக்கின அதே இடத்திலே உன் இரத்தத்தையும் நாய்கள் நக்கும்; ஆம் உன் இரத்தத்தையும் நாய்கள் நக்கும்’ ” என்றான். அப்பொழுது ஆகாப் எலியாவிடம், “என் பகைவனே என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?” என்றான். எலியா அதற்குப் பதிலாக, “யெகோவாவின் பார்வையில் தீமைசெய்யும்படி நீ உன்னை விற்றுப்போட்டபடியினால், நான் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன். நான் உன்மீது பெரும் அழிவைக் கொண்டுவரப் போகிறேன். உன் சந்ததிகளை நான் அழித்துவிடுவேன். அடிமையோ, விடுதலையானவனோ இஸ்ரயேலில் ஆகாபுக்குச் சொந்தமான ஒரு ஆணும் உயிருடன் மீதியாக இருக்காதபடி அழித்துவிடுவேன். நீ எனக்குக் கோபமூட்டி முழு இஸ்ரயேல் மக்களையும் பாவம் செய்யப்பண்ணியபடியால், நான் உன் குடும்பத்தை நேபாத்தின் மகன் யெரொபெயாமின் குடும்பத்தைப்போலவும், அகியாவின் மகன் பாஷாவின் குடும்பத்தைப்போலவும் மாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார். “மேலும் யேசபேலைக் குறித்து யெகோவா, ‘யெஸ்ரயேலின் பட்டண மதிலின் அருகே அவளை நாய்கள் தின்னும்’ என்று சொல்கிறார். “பட்டணத்திற்குள் இறக்கிற ஆகாபின் குடும்பத்தினரை நாய்கள் தின்னும் என்றும் பட்டணத்திற்கு வெளியே இறக்கிறவர்களை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றும் கூறுகிறார்” என்றான். தன் மனைவியாகிய யேசபேலினால் தூண்டப்பட்டு, யெகோவாவுக்குமுன் தீமைசெய்ய தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப் போல் வேறு யாரும் இருந்ததில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திய எமோரியரைப்போலவே, அவனும் விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் கீழ்த்தரமாக நடந்தான். ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, துக்கவுடையை உடுத்திக்கொண்டு உபவாசித்தான். அத்துடன் அவன் மனமுடைந்தவனாய் துக்கவுடையில் படுத்தும் நடந்தும் திரிந்தான். அப்போது திஸ்பியனாகிய எலியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. “எனக்கு முன்பாக ஆகாப் எவ்வளவாகத் தன்னைத் தாழ்த்தியிருக்கிறான் என்று கண்டாயா? அவன் தன்னைத் தாழ்த்தினபடியால், நான் இந்தப் பேரழிவை அவனுடைய வாழ்நாட்களில் கொண்டுவரமாட்டேன். ஆயினும், அவனுடைய மகனின் நாட்களில், அவன் குடும்பத்தின்மேல் அந்த பேரழிவைக் கொண்டுவருவேன்” என்றார்.
1 இராஜாக்கள் 21:17-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டானது, அவர்: நீ எழுந்து, சமாரியாவில் இருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான். நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று யெகோவா சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார். அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என்னுடைய பகைவனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய். நான் உன்மேல் தீங்கு வரச்செய்து, உன்னுடைய சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாவது இல்லாதபடி இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் அழித்து, நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவம் செய்யச்செய்ததால், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சமமாக்குவேன் என்றார் என்று சொன்னான். யேசேபேலையும் குறித்துக் யெகோவா: நாய்கள் யேசபேலை யெஸ்ரெயேலின் மதில் அருகே தின்னும். ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் சாப்பிடும் என்றார். தன்னுடைய மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக துரத்திவிட்ட எமோரியர்கள் செய்தபடியெல்லாம், அவன் அருவருப்பான விக்கிரகங்களைப் பின்பற்றி, மிகவும் அருவருப்பாய் நடந்துகொண்டான். ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய சரீரத்தின்மேல் சணலாடையைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்செய்து, சணலாடையில் படுத்துத் தாழ்மையாக நடந்துகொண்டான். அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தியதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறதால், நான் அவனுடைய நாட்களில் அந்த அழிவை வரச்செய்யாமல், அவனுடைய மகனுடைய நாட்களில் அதை அவனுடைய வீட்டின்மேல் வரச்செய்வேன் என்றார்.
1 இராஜாக்கள் 21:17-29 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்போது திஸ்பியனாவின் தீர்க்கதரிசி எலியாவிடம் கர்த்தர், “ராஜாவிடம் போ, அவன் நாபோத்தின் வயலில் உள்ளான். சொந்தமாக்கப் போகிறான். அவனிடம், ‘ஆகாப்! நீ நாபோத்தைக் கொன்றாய், அவனது வயலை எடுக்கப்போகிறாய். நாபோத் மரித்த இடத்திலேயே நீயும் மரிப்பாய். நாபோத்தின் இரத்தத்தை நக்கிய நாய்கள் உனது இரத்தத்தையும் நக்கும்’ என்று நான் சொன்னதாகச் சொல்”! என்றார். எனவே எலியா ஆகாபிடம் சென்றான். ராஜாவோ அவனிடம், “என்னை மீண்டும் பார்க்கிறாய். எப்போதும் எனக்கு எதிராக இருக்கிறாய்” என்றான். அதற்கு எலியா, “ஆமாம், நீ எப்போதும் உன் வாழ்வில் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்கிறாய். எனவே கர்த்தர், ‘நான் உன்னை அழிப்பேன். உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழிப்பேன். உனது குடும்பமானது நேபாத்தின் குமாரனான ராஜா யெரொபெயாமின் குடும்பத்தைப்போன்று அழியும். பாஷாவின் குடும்பத்தைப்போல் அழியும். இந்த இரு குடும்பங்களும் முழுவதுமாக அழிந்துவிட்டன. நீ எனக்குக் கோபத்தைத் தந்ததால் நானும் அதுபோல் செய்வேன். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்யவும் காரணமானாய்’ என்றார். கர்த்தர் மேலும், ‘நாய்கள் யெஸ்ரயேல் நகரில் உன் மனைவியின் உடலை உண்ணும். உன் குடும்பத்திலுள்ள அனைவரும் செத்தபின் நாய்களால் உண்ணப்படுவார்கள். வயலில் மரிக்கும் யாவரும் பறவைகளால் உண்ணப்படுவார்கள்’ என்றார்” எனக்கூறினான். ஆகாபைப்போன்று இதுவரை எவரும் அதிகப் பாவங்களைச் செய்ததில்லை. அவனது பாவங்களுக்கு அவன் மனைவியும் ஒரு காரணமானாள். அவன் மரவிக்கிரகங்களை தொழுதுகொண்டு பாவம் செய்தான். எமோரியர்களின் பாவங்களைப் போன்றவை இவை. எனவே கர்த்தர் அந்த நாட்டைப் பறித்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார். எலியா சொல்லிமுடித்ததும் ஆகாப் வருந்தி, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். வருத்தத்துக்கான ஆடைகளை அணிந்து சாப்பிட மறுத்தான். அப்படியே தூங்கினான். கர்த்தர் எலியாவிடம், “நான் ஆகாப் திருந்திவிட்டதாக அறிகிறேன். எனவே, அவனுக்குத் துன்பம் தரமாட்டேன். ஆனால் அவனது மகனது வாழ் நாளில் துன்பங்களைத் தருவேன்” என்றார்.
1 இராஜாக்கள் 21:17-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான். நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய். நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து, நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான். யேசேபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரவேலின் மதில் அருகே தின்னும். ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் தின்னும் என்றார். தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னின்று துரத்திவிட்ட எமோரியர் செய்தபடியெல்லாம், அவன் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, மகா அருவருப்பாய் நடந்துகொண்டான். ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.