1 இராஜாக்கள் 21:1-16

1 இராஜாக்கள் 21:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது. ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான். நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான். இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய்த் தன் வீட்டிற்கு வந்து, போஜனம் பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம் பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு, அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க் கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப் பதிலாக வேறே திராட்சத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான். அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள். அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள். அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள். அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள். அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள். அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து, பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள். நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப் போனான் என்றாள். நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான்.

1 இராஜாக்கள் 21:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சில நாட்களுக்குபின் யெஸ்ரயேல் ஊரைச்சேர்ந்த நாபோத்துக்கு உரிமையான திராட்சைத் தோட்டத்திற்கு தொடர்பாக ஒரு சம்பவம் நடந்தது. அந்த திராட்சைத் தோட்டம் யெஸ்ரயேலில் சமாரிய அரசனாகிய ஆகாபின் அரண்மனைக்கு அருகே இருந்தது. ஆகாப் நாபோத்தைப் பார்த்து, “உனது திராட்சைத் தோட்டம் என் அரண்மனைக்குப் பக்கத்தில் இருப்பதால் அதை எனக்கு கீரைத்தோட்டம் போடுவதற்காகத் கொடு. அதற்குப் பதிலாக அதைக்காட்டிலும் திறமையான ஒரு திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருகிறேன் அல்லது நீ விரும்பினால் அதற்கான பணத்தை உனக்குத் தருகிறேன்” என்றான். ஆனால் நாபோத்தோ, “என் முற்பிதாக்களுடைய உரிமைச்சொத்தை நான் உமக்கு விற்றுப்போடாதபடி யெகோவா என்னைத் தடைசெய்வாராக” என்றான். யெஸ்ரயேலனாகிய நாபோத், “முற்பிதாக்களின் உரிமைச் சொத்தைத் தரமாட்டேன்” என்று சொன்னதினால், ஆகாப் ஆத்திரம் கொண்டவனாய்த் தன் வீட்டுக்குப் போனான். அவன் யாருடனும் பேசாமல் படுக்கையில் படுத்துக்கொண்டு சாப்பிடுவதற்கும் மறுத்துவிட்டான். அப்பொழுது அவனுடைய மனைவி யேசபேல் உள்ளே வந்து, “ஏன் யாருடனும் பேசாமல் இருக்கிறீர்? ஏன் சாப்பிடாமல் ஆழ்ந்த துயரத்துடன் இருக்கிறீர்?” என்று கேட்டாள். ஆகாப் அவளைப் பார்த்து, “நான் யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத்திடம், ‘உன்னுடைய திராட்சைத் தோட்டத்தை பணத்திற்கு எனக்கு விற்று விடு. அல்லது அதற்குப் பதிலாக நீ விரும்பினால் இன்னொரு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்’ என்று கேட்டுப் பார்த்தேன். அவன் அதற்கு, ‘நான் என்னுடைய திராட்சைத் தோட்டத்தைத் தரமாட்டேன்’ என்று கூறி விட்டான்” என்றான். அதற்கு அவன் மனைவி யேசபேல், “நீர் இஸ்ரயேலின் அரசனல்லவா? இப்படித்தான் நடந்துகொள்வதா? எழுந்து சாப்பிடும், சந்தோஷமாயிரும். யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நான் உமக்கு எடுத்துத்தருவேன்” என்றாள். அப்பொழுது அவள் ஆகாபின் பெயரில் கடிதங்கள் எழுதி அவனுடைய முத்திரையைப் போட்டு, நாபோத்தின் பட்டணத்தில் அவனுடன் வாழ்ந்தவர்களான உயர்குடி மக்களுக்கு அவற்றை அனுப்பினாள். அவள் எழுதிய கடிதத்தில், “உபவாசத்துக்கென்று ஒருநாளை அறிவித்து மக்களின் நடுவில் முக்கியமான ஒரு இடத்தில் நாபோத்தை அமர்த்துங்கள். அவனுக்கு எதிரில் இரண்டு அயோக்கியர்களை அமரவையுங்கள். நாபோத் இறைவனையும், அரசனையும் சபித்தான் என்று அவ்விருவரையும் சாட்சி சொல்லவையுங்கள். பின்பு, நகரத்துக்கு வெளியே கொண்டுபோய் அவனைக் கல்லெறிந்து கொல்லுங்கள்” என்று எழுதியிருந்தாள். நாபோத் வாழ்ந்த பட்டணத்தில் இருந்த மூப்பர்களும், பெரியோர்களும், யேசபேல் அவர்களுக்கு எழுதிய கடிதங்களில் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படியே செய்தார்கள். அவர்கள் உபவாசத்துக்கென்று மக்களை ஒன்றுகூட்டி, மக்களின் நடுவில் ஒரு முக்கிய இடத்தில் நாபோத்தை நிறுத்தினார்கள். அப்பொழுது இரண்டு அயோக்கியர்கள் வந்து நாபோத்துக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். அவர்கள், “நாபோத் இறைவனையும் அரசனையும் சபித்தான்” என்று சொல்லி மக்களுக்கு முன்பாக அவனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கொண்டுவந்தார்கள். அதன்படி அவனை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய், கல்லெறிந்து கொன்றார்கள். பின்பு அவர்கள் யேசபேலுக்கு, “நாபோத் கல்லெறியப்பட்டு இறந்துபோனான்” என்று செய்தி அனுப்பினார்கள். நாபோத் கல்லெறியப்பட்டு இறந்தான் என யேசபேல் கேள்விப்பட்ட உடனே அவள் ஆகாபிடம், “நீர் எழுந்துபோய், யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத் உமக்கு விற்க மறுத்த திராட்சைத் தோட்டத்தை உமக்குச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும். அவன் உயிரோடில்லை. அவன் இறந்துபோனான்” என்றாள். நாபோத் இறந்துவிட்டான் என்று ஆகாப் கேள்விப்பட்டபோது, அவன் எழுந்து யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை தன் உரிமையாக்கிக் கொள்வதற்காகப் போனான்.

1 இராஜாக்கள் 21:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்திற்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரண்மனையின் அருகில் ஒரு திராட்சைத்தோட்டம் இருந்தது. ஆகாப் நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டம் என்னுடைய வீட்டிற்கு அருகில் இருப்பதால், அதைக் கீரைத்தோட்டமாக்கும்படி எனக்குக் கொடு, அதைவிட நல்ல திராட்சைத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான். நாபோத் ஆகாபை நோக்கி: நான் என்னுடைய முன்னோர்களின் சுதந்தரத்தை உமக்குத் தராதபடி யெகோவா என்னைக் காப்பாராக என்றான். இப்படி என்னுடைய முன்னோர்களின் சுதந்திரத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடு சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்கு வந்து, சாப்பிட்டாமல், தன்னுடைய கட்டிலின்மேல் படுத்து, தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனிடம் வந்து: நீர் சாப்பிடாதபடி, உம்முடைய மனம் சோர்வாக இருப்பது என்ன என்று அவனைக் கேட்டதற்கு, அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடு பேசி: உன்னுடைய திராட்சைத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாகக் கொடு; அல்லது உனக்கு பிடித்திருந்தால் அதற்குப் பதிலாக வேறு திராட்சைத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என்னுடைய திராட்சைத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான். அப்பொழுது அவனுடைய மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்கிறவர் அல்லவா? நீர் எழுந்து சாப்பிட்டு மனமகிழ்ச்சியாக இரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள். அவள் ஆகாபின் பெயரால் கடிதங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த கடிதங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடு குடியிருக்கிற மூப்பர்களிடத்திற்கும் பெரியோர்களிடத்திற்கும் அனுப்பினாள். அந்த கடிதங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி, நாபோத்தை மக்களின் முன்பாக நிறுத்தி, தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற வஞ்சகமான இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படி அவன் மீது கல்லெறியுங்கள் என்று எழுதினாள். அவன் பட்டணத்தில் குடியிருக்கிற மூப்பர்களும் பெரியோர்களுமாகிய அவன் பட்டணத்து மனிதர்கள், யேசபேல் தங்களுக்கு அனுப்பின கடிதங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள். அவர்கள் உபவாசம் என்று தெரியப்படுத்தி நாபோத்தை மக்களின் முன்னே நிறுத்தினார்கள். அப்பொழுது வஞ்சகமான இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று மக்களுக்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படி அவனைக் கல்லெறிந்து, பிறகு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியப்பட்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள். நாபோத் கல்லெறியப்பட்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாகக் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடு இல்லை, அவன் செத்துப்போனான் என்றாள். நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சைத்தோட்டத்தைச் சொந்தமாக எடுத்துக்கொள்ளும்படி எழுந்து போனான்.

1 இராஜாக்கள் 21:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)

சமாரியாவில் ஆகாப்பின் அரண்மனை இருந்தது. அதனருகில் ஒரு திராட்சை தோட்டமும் இருந்தது. அதன் உரிமையாளன் யெஸ்ரயேலியனாகிய நாபோத். ஒரு நாள் ராஜா அவனிடம், “உனது வயலை எனக்குக்கொடு. அதனைக் காய்கறி தோட்டமாக்க வேண்டும். இது என் அரண்மனைக்கருகில் உள்ளது. உனக்கு அந்த இடத்தில் வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன் அல்லது நீ விரும்பினால் பணம் தருவேன்” என்றான். அதற்கு நாபோத், “நான் தரமாட்டேன். இது என் குடும்பத்திற்கு உரியது” என்றான். எனவே ஆகாப் அரண்மனைக்குப்போய் நாபோத் மீது கோபம் கொண்டான். அவன் சொன்னதை ராஜா விரும்பவில்லை. நாபோத், “என் குடும்பத் தோட்டத்தைத் தரமாட்டேன்” எனக்கூறியது எரிச்சலைத் தந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு உண்ண மறுத்தான். ஆகாபின் மனைவி யேசபேல் அவனிடம், “ஏன் நீங்கள் குலைந்து போனீர்கள்? ஏன் நீங்கள் உண்ண மறுக்கிறீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “நான் நாபோத்திடம் திராட்சைத் தோட்டத்தைக் கேட்டேன். அதற்குரிய முழு விலையோ, அல்லது வேறு வயலோ தருவதாகச் சொன்னேன். ஆனால் அவன் மறுத்துவிட்டான்” என்றான். அவளோ, “நீங்கள் இஸ்ரவேலின் ராஜா! எழுந்திருங்கள். சாப்பிடுங்கள். நான் அந்த வயலை வாங்கித்தருவேன்” என்றாள். பிறகு அவள் சில கடிதங்களை எழுதி ராஜாவின் கையெழுத்திட்டு முத்திரையும் அடித்தாள். பின் அவற்றை மூப்பர்களிடமும் நாபோத்தைப்போன்று அதே பட்டணத்தில் இருந்த முக்கிய மனிதர்களிடமும் அனுப்பினாள். அக்கடிதத்தில், “நீங்கள் உபவாசம் பற்றி அறிவியுங்கள். பின் அனைவரையும் அழையுங்கள். அதில் நாபோத்தைப்பற்றி பேச வேண்டும். அவன் மீது பொய்க்குற்றம் சாட்ட இரண்டு ஏமாற்றுக்காரர்கள் வேண்டும். அவன் ராஜாவுக்கும் தேவனுக்கும் எதிராகப் பேசினான் என்று கூறவேண்டும். பின் அவனை ஊருக்கு வெளியே கல்லெறிந்த கொல்லவேண்டும்” என்று எழுதியிருந்தது. எனவே, மூப்பர்களும் முக்கியமானவர்களும் இக்கட்டளைக்கு அடிபணிந்தனர். தலைவர்கள் உண்ணாநோன்பு நாளை அறிவித்தனர். அன்று ஒரு கூட்டத்திற்கு அழைத்தனர். நாபோத்தைத் தனியாக நிறுத்தினர். பின் இரு ஏமாற்றுக்காரர்கள் ஜனங்களிடம் நாபோத் தேவனுக்கு எதிராகவும் ராஜாவுக்கு எதிராகவும் பேசினான் என்றனர். எனவே, அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றனர். அவர்கள் பிறகு யேசபேலுக்கு, “நாபோத் கொல்லப்பட்டான்” என்ற செய்தியை அனுப்பி வைத்தனர். அவள் இதனை அறிந்ததும் ஆகாபிடம், “நாபோத் மரித்துப்போனான். இப்போது உங்களுக்கு விருப்பமான தோட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். அவனும் அதனைச் சொந்தமாக்கிக் கொண்டான்.