1 இராஜாக்கள் 19:5-9

1 இராஜாக்கள் 19:5-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான். கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான். அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான். அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.

1 இராஜாக்கள் 19:5-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் அவன் அந்தச் சூரைச்செடியின்கீழ் படுத்து உறங்கினான். அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றான். எலியா சுற்றிப் பார்த்தபோது நெருப்புத் தணலின்மேல் சுடப்பட்ட அப்பத்தையும், ஒரு ஜாடி தண்ணீரையும் அவன் தலைமாட்டில் கண்டான். அவன் சாப்பிட்டு, குடித்துத் திரும்பவும் படுத்துவிட்டான். அப்போது யெகோவாவின் தூதன் இரண்டாம் தரமும் வந்து அவனைத் தட்டியெழுப்பி, “எழுந்து சாப்பிடு. ஏனென்றால் நீ போகவேண்டிய பயணம் மிகவும் தூரமானது” என்றான். அப்படியே அவன் எழுந்து சாப்பிட்டு, குடித்தான். அந்த உணவினால் பெலனடைந்தவனாய், இறைவனுடைய மலையான ஓரேப் மலையை அடையும் வரை இரவும் பகலும் நாற்பது நாட்கள் பயணம் பண்ணினான். அங்கே ஒரு குகைக்குள் போய் அந்த இரவைக் கழித்தான்.

1 இராஜாக்கள் 19:5-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஒரு சூரைச்செடியின்கீழேப் படுத்துத் தூங்கினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி: எழுந்து சாப்பிடு என்றான். அவன் விழித்துப் பார்த்தபோது, இதோ, நெருப்பில் சுடப்பட்ட அப்பமும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவனுடைய தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், சாப்பிட்டுக் குடித்துத் திரும்பவும் படுத்துக்கொண்டான். யெகோவாவுடைய தூதன் திரும்ப இரண்டாவதுமுறையும் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்து சாப்பிடு; நீ போகவேண்டிய பயணம் வெகுதூரம் என்றான். அப்பொழுது அவன் எழுந்து சாப்பிட்டுக் குடித்து, அந்த உணவின் பெலத்தினால் 40 நாட்கள் இரவும் பகலும் ஓரேப் என்னும் தேவனுடைய மலைவரையும் நடந்துபோனான். அங்கே அவன் ஒரு குகைக்குள் போய்த் தங்கினான்; இதோ, யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்றார்.

1 இராஜாக்கள் 19:5-9 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு அவன் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினான். ஒரு தேவதூதன் வந்து அவனைத் தொட்டான். “எழுந்திரு, சாப்பிடு!” என்றான். எலியா தன்னருகில் தழலில் சுடப்பட்ட அடையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருப்பதைப் பார்த்தான். அவன் உண்டு குடித்து திரும்பத் தூங்கப்போனான். மீண்டும் தேவதூதன் வந்து, “எழுந்திரு! சாப்பிடு! இல்லாவிட்டால், நீண்ட பயணம் செய்யமுடியாது” என்றான். எனவே எலியா எழுந்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தான். 40 நாட்கள் இரவும் பகலும் நடப்பதற்கான பெலத்தை அது கொடுத்தது. அவன் தேவனுடைய மலையான ஓரேப்புக்குச் சென்றான். அங்கு ஒரு குகையில் இரவில் தங்கினான். அப்போது கர்த்தர், “இங்கே ஏன் இருக்கிறாய்?” என்று எலியாவிடம் பேசினார்.