1 இராஜாக்கள் 19:14-21
1 இராஜாக்கள் 19:14-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு, சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான். ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான். அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவு கொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான். அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.
1 இராஜாக்கள் 19:14-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவன் அதற்கு மறுமொழியாக, “நான் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்தி வைராக்கியமுள்ளவனாக இருந்தேன். இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையைப் புறக்கணித்து, உமது பலிபீடங்களையும் உடைத்து, உமது இறைவாக்கினரையும் வாளினால் கொன்றுபோட்டார்கள். நான் மட்டுமே மீதியாயிருக்கிறேன். இப்போது என்னையுங்கூட கொல்வதற்கு முயற்சி செய்கிறார்கள்” என்று சொன்னான். அப்பொழுது யெகோவா அவனிடம், “நீ வந்த வழியாய்த் திரும்பி தமஸ்குவின் பாலைவனத்திற்குப் போ. நீ அங்கு போய்ச்சேர்ந்ததும் ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம்பண்ணு. அதோடுகூட இஸ்ரயேல் அரசனாக நிம்சியின் மகன் யெகூவையும் அபிஷேகம்பண்ணு. ஆபேல் மெகொலா ஊரைச்சேர்ந்த சாப்பாத்தின் மகன் எலிசாவை உனக்குப்பின் வரப்போகும் இறைவாக்கினனாகவும் அபிஷேகம்பண்ணு. ஆசகேலின் வாளுக்குத் தப்பி ஓடுபவனை யெகூ கொல்வான். யெகூவின் வாளுக்குத் தப்பியவனை, எலிசா கொன்றுபோடுவான். இருந்தாலும் பாகாலுக்கு முன் முழங்கால்களை முடக்காத, தங்கள் வாய்களினால் அவனை முத்தமிடாத ஏழாயிரம்பேரை இன்னும் இஸ்ரயேலில் ஒதுக்கி வைத்திருக்கிறேன்” என்றார். அப்படியே எலியா அங்கிருந்துபோய் சாப்பாத்தின் மகன் எலிசாவைக் கண்டான். அவன் பன்னிரண்டு ஜோடி எருதுகளைப் பூட்டிய கலப்பையினால் உழுது கொண்டிருந்தான். பன்னிரண்டாவது ஜோடியை அவன் தானே ஓட்டிக்கொண்டிருந்தான். எலியா அவனுக்குக் கிட்டப்போய் தன் மேலுடையை அவன்மேல் எறிந்தான். அப்பொழுது எலிசா எருதுகளை விட்டுவிட்டு எலியாவின் பின்னாலே ஓடிப்போய், “என் தகப்பனிடமும் தாயிடமும் விடைபெற்று வர அனுமதிக்கவேண்டும். அதன்பின் உம்முடன் வருகிறேன்” என்றான். அதற்கு எலியா, “நீ திரும்பிப்போ. நான் உனக்கு என்ன செய்தேன் என்பதைக் கவனத்தில்கொள்” என்றான். எனவே எலிசா அவனைவிட்டுத் திரும்பிப்போனான். அவன் தனது ஏர் மாடுகளைப் பிடித்து, அவைகளைக் கொன்று, கலப்பையை எரித்து அந்த இறைச்சியைச் சமைத்து அதை மற்றவர்களுக்குக் கொடுத்தான். அவர்கள் சாப்பிட்டார்கள். அதன்பின் எலியாவைப் பின்தொடர்ந்து போய் அவனுக்கு உதவிகளைச் செய்தான்.
1 இராஜாக்கள் 19:14-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய யெகோவாவுக்காக மிகவும் பக்திவைராக்கியமாக இருந்தேன்; இஸ்ரவேல் மக்கள் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன்; என்னுடைய உயிரையும் எடுக்கத் தேடுகிறார்கள் என்றான். அப்பொழுது யெகோவா அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாக வனாந்திரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, பின்பு நிம்சியின் மகனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, ஆபேல் மெகொலா ஊரானான சாப்பாத்தின் மகனாகிய எலிசாவை உன்னுடைய இடத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்செய். சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான். ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தம்செய்யாமலிருக்கிற வாய்களையும் உடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். அப்படியே அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்களைப்பூட்டி உழுத சாப்பாத்தின் மகனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் 12 ஆம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடம்வரை போய், அவன்மேல் தன்னுடைய சால்வையைப் போட்டான். அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பின்னே ஓடி: நான் என்னுடைய தகப்பனையும் என்னுடைய தாயையும் முத்தம்செய்ய உத்திரவு கொடும், அதற்குப்பின்பு உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான். அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரங்களால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து மக்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிறகு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்னேசென்று அவனுக்கு பணிவிடைசெய்தான்.
1 இராஜாக்கள் 19:14-21 பரிசுத்த பைபிள் (TAERV)
எலியாவோ, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என்னால் முடிந்தவரை உமக்கு எப்போதும் சேவை செய்து வருகிறேன். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது உடன்படிக்கையில் இருந்து நழுவி மீறிவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை உடைத்தனர். அவர்கள் உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். நான் மட்டுமே ஒரே தீர்க்கதரிசியாக உயிரோடு இருக்கிறேன். இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்” என்றான். கர்த்தர், “சாலைக்குப் போ, அது தமஸ்குவிற்கு போகும். அங்குப்போய் ஆசகேலை சீரியாவின் ராஜாவாக அபிஷேகம் செய், பிறகு, இஸ்ரவேலின் ராஜாவாக நிம்சியின் குமாரனான யெகூவை அபிஷேகம் செய். பிறகு, ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் குமாரன் எலிசாவை உனது இடத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் செய். ஆசகேல் பல தீயவர்களைக் கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை யெகூ கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை எலிசா கொன்றுவிடுவான். எலியா, நீ மட்டும் இஸ்ரவேலில் உண்மையானவன் என்றில்லை. இன்னும் பலர் இருக்கிறார்கள். நான் 7,000 பேரின் உயிரை மீதியாக வைப்பேன். 7,000 இஸ்ரவேலர் பாகாலை வணங்காதவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் பாகாலின் விக்கிரகத்தை முத்தமிடுவதில்லை” என்றார். எலியா அந்த இடத்தை விட்டுப்போய் சாப்பாத்தின் குமாரனான எலிசாவைக் கண்டு பிடித்தான். எலிசா 12 ஏக்கர் நிலத்தை உழுதுக்கொண்டிருந்தான். எலியா போகும்போது அவன் உழவை முடிக்கிற நிலையில் இருந்தான். பிறகு எலியா அவனிடம் சென்று, அவன் மீது தன் போர்வையை எறிந்தான். உடனே அவன் தன் மாடுகளை விட்டு, விட்டு எலியாவின் பின்னால் போனான். எலிசா, “நான் என் தந்தையிடமும் தாயிடமும் முத்தமிட்டு விடைபெற்று வரட்டுமா?” எனக் கேட்டான். எலியாவோ, “நல்லது போ, என்னால் அதைத் தடுக்க முடியாது” என்றான். எலிசா தன் குடும்பத்துடன் சிறப்பான உணவை உண்டான். எலிசா தன் பசுக்களைக் கொன்றான். நுகத்தடியை ஒடித்து விறகாக்கினான். பிறகு இறைச்சியை சமைத்து அனைவருக்கும் உண்ண உணவளித்தான். பின்னர் அவன் எலியாவிற்குப் பின்னால் போய் அவனுக்கு சேவைசெய்தான்.