1 இராஜாக்கள் 19:11-13
1 இராஜாக்கள் 19:11-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக மலையின்மேல் நில் என்றார்; அப்பொழுது, இதோ, யெகோவா கடந்துபோனார்; யெகோவாவுக்கு முன்பாகப் மலைகளைப் பிளக்கிறதும் பாறைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டானது; ஆனாலும் அந்தக் காற்றிலே யெகோவா இருக்கவில்லை; காற்றுக்குப்பின்பு பூமி அதிர்ச்சி உண்டானது; பூமி அதிர்ச்சியிலும் யெகோவா இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப் பின்பு அக்கினி உண்டானது; அக்கினியிலும் யெகோவா இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்பு அமைதியான மெல்லிய சத்தம் உண்டானது. அதை எலியா கேட்டபோது, தன்னுடைய சால்வையால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, குகையின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே நீ என்ன செய்கிறாய் என்கிற சத்தம் அவனுக்கு உண்டானது.
1 இராஜாக்கள் 19:11-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்கு அவர், “இதோ, யெகோவா மலையைக் கடந்துபோகப் போகிறார். ஆகையால் நீ வெளியே போய் மலையின்மேல் யெகோவா முன்னிலையில் நில்” என்றார். அப்பொழுது பெரிதும் பலமான ஒரு காற்று யெகோவாவின் முன்பாக மலைகளைப் பெயர்த்து, பாறைகளை உடைத்துச் சிதறடித்தது. ஆனால் யெகோவா அந்தக் காற்றில் இருக்கவில்லை. காற்றின் பின் ஒரு பூமி அதிர்ச்சி உண்டானது. ஆனால் யெகோவா அந்த பூமி அதிர்ச்சியிலும் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சியின் பின்பு நெருப்பு உண்டானது. ஆனால் யெகோவா அந்த நெருப்பிலும் இருக்கவில்லை. நெருப்பு வந்தபின் மெல்லிய காற்றின் சத்தம் உண்டானது. எலியா அதைக் கேட்டபோது, தன் மேலுடையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே போய் குகை வாசலில் நின்றான். அப்பொழுது அவனிடம், “எலியாவே இங்கு என்ன செய்கிறாய்?” என்று ஒரு குரல் கேட்டது.
1 இராஜாக்கள் 19:11-13 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் எலியாவிடம், “எனக்கு முன்னால் மலையின் மேல் நில் அப்பொழுது நான் உன்னை கடந்து செல்வேன்” என்றார். பிறகு ஒரு பலமான காற்று அடித்தது. அது மலைகளை உடைப்பதுபோல் இருந்தது. ஆனால் அது கர்த்தர் அல்ல! பிறகு நில அதிர்ச்சி உண்டாயிற்று. அதுவும் கர்த்தர் அல்ல! அதற்குப்பின், நெருப்பு உருவானது. அதுவும் கர்த்தர் அல்ல. நெருப்புக்குப்பின், அமைதியான மென்மையான சத்தம் வந்தது. எலியா அந்தச் சத்தத்தைக் கேட்டதும் தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டான். குகையின் வாசலுக்கு வந்து நின்றான். பிறகு அந்தச் சத்தம் அவனிடம், “எலியா, ஏன் இங்கிருக்கிறாய்?” என்று கேட்டது.
1 இராஜாக்கள் 19:11-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று. அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.