1 இராஜாக்கள் 19:1-4

1 இராஜாக்கள் 19:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் இறைவாக்கினர் யாவரையும் எப்படி வாளால் கொன்றான் என்பதையும் ஆகாப் யேசபேலுக்குச் சொன்னான். அப்பொழுது யேசபேல் எலியாவிடம் ஒரு ஆள் அனுப்பி, “நாளைக்கு இந்நேரம், நீ அவர்களுக்குச் செய்ததுபோல் உன் உயிருக்கும் நான் செய்யாவிட்டால், தெய்வங்கள் அதற்கு அதிகமாகவும் என்னைத் தண்டிக்கட்டும்” என்று சொல்லி அனுப்பினாள். எலியா பயந்து தன் உயிரைக் காப்பாற்றும்படி அங்கிருந்து தப்பி ஓடினான். யூதாவிலிருக்கும் பெயெர்செபாவுக்கு வந்தபோது தன் வேலைக்காரனை அங்கு நிறுத்திவைத்து, அவன் ஒரு நாள் பயணம்பண்ணி பாலைவனத்துக்குப் போனான். அவன் ஒரு சூரைச்செடியின் அடியில் உட்கார்ந்து, தான் சாகவேண்டுமென்று மன்றாடினான். அவன், “யெகோவாவே, நான் பட்ட பாடு போதும்; என்னுடைய உயிரை எடுத்துக்கொள்ளும். நான் என்னுடைய முற்பிதாக்களைப் பார்க்கிலும் சிறந்தவன் அல்ல” என்று சொன்னான்.

1 இராஜாக்கள் 19:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். அப்பொழுது யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய உயிருக்கும் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்த நேரத்தில் உன்னுடைய உயிருக்குச் செய்யாமற்போனால், தெய்வங்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள். அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்ற யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன்னுடைய வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான். அவன் வனாந்திரத்தில் ஒருநாள் பயணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று சொல்லி: போதும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என்னுடைய முன்னோர்களைவிட நல்லவன் இல்லை என்று சொல்லி

1 இராஜாக்கள் 19:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

எலியா செய்ததை எல்லாம் ஆகாப் ராஜா தன் மனைவி யேசபேலுக்கு கூறினான். அவன் எவ்வாறு அனைத்து தீர்க்கதரிசிகளையும் வாளால் கொன்றான் என்றும் கூறினான். எனவே அவள் எலியாவிடம் ஒரு தூதுவனை அனுப்பி, “நாளை இதே நேரத்திற்குள், நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போன்று உன்னைக்கொல்வேன். இல்லாவிட்டால் என்னைத் தெய்வங்கள் கொல்லட்டும்” என்று சொல்லச்செய்தாள். எலியா இதைக் கேட்டதும், பயந்தான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினான். தன்னோடு வேலைக்காரனையும் அழைத்துப்போனான். யூதாவிலுள்ள பெயெர்செபாவிற்குப் போய். அங்கே அவனை விட்டுவிட்டான். பிறகு நாள் முழுவதும் பாலைவனத்தில் அலைந்தான். ஒரு புதரின் அருகில் உட்கார்ந்தான். “இது போதும், கர்த்தாவே! என்னை மரிக்கவிடும். என் முற்பிதாக்களைவிட நான் நல்லவன் அல்ல” என்று வேண்டினான்.

1 இராஜாக்கள் 19:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள். அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான். அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்