1 இராஜாக்கள் 18:41-46

1 இராஜாக்கள் 18:41-46 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான். ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான். அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்கு முன் ஓடினான்.

1 இராஜாக்கள் 18:41-46 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எலியா ஆகாபிடம், “நீர் திரும்பிப்போய் சாப்பிட்டு, குடியும். மழை இரைச்சல் கேட்கிறது” என்றான். அப்படியே ஆகாப் உண்ணவும் குடிக்கவும் போனான். ஆனால் எலியா கர்மேலின் உச்சிக்கு ஏறி தன் முழங்கால்களுக்கிடையில் தன் முகத்தை வைத்துக்கொண்டு நிலம் வரை குனிந்தான். அவன் தன் வேலையாளிடம், “நீ போய் கடல் பக்கமாய் பார்” என்றான். அவன் போய்ப் பார்த்தான். “அங்கு ஒன்றும் இல்லை” என்று வந்து சொன்னான். அதற்கு எலியா, “திரும்பப் போ” என்று ஏழுமுறை அவ்வாறே சொன்னான். ஏழாம்முறை அந்த வேலையாள், “ஒரு மனிதனின் கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் கடலிலிருந்து எழும்புகிறது” என்று சொன்னான். அப்பொழுது எலியா அவனைப் பார்த்து, “ஆகாபிடம் போய், ‘மழை உன்னை தடைசெய்யுமுன் தேரைப் பூட்டிக்கொண்டு கீழே போய்விடு’ என்று சொல்” என்றான். அதற்கிடையில் வானம் மேகங்களினால் கருத்து, காற்று எழும்பி, பெருமழை வேகமாகப் பெய்தது. ஆகாப் தேரில் ஏறி யெஸ்ரயேலுக்கு விரைந்து போனான். அப்போது யெகோவாவின் வல்லமை எலியாவின்மேல் வந்ததினால் அவன் தன் மேலாடையைப் பட்டியில் சொருகிக்கொண்டு ஆகாபுக்கு முன்பாக யெஸ்ரயேல் வரைக்கும் ஓடிப்போனான்.

1 இராஜாக்கள் 18:41-46 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், சாப்பிட்டு குடியும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான். ஆகாப் சாப்பிட்டு குடிக்கப்போனான்; பின்பு எலியா கர்மேல் மலையிலுள்ள சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன்னுடைய முகம் தன்னுடைய முழங்காலில் படும்படிக்குனிந்து, தன்னுடைய ஊழியக்காரனை நோக்கி: நீ போய் சமுத்திரத்தை நோக்கிப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுமுறை போய்ப் பார் என்றான். ஏழாவது முறை இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனிதனுடைய உள்ளங்கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடி இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான். அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் இருண்டு பெருமழை உண்டானது; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். யெகோவாவுடைய கை எலியாவின்மேல் இருந்ததால், அவன் தன்னுடைய அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வரும்வரை ஆகாபுக்கு முன்னே ஓடினான்.

1 இராஜாக்கள் 18:41-46 பரிசுத்த பைபிள் (TAERV)

எலியா ஆகாப் ராஜாவிடம், “போ, உணவு உண்ணும். மழை வரப்போகிறது” என்றான். எனவே ஆகாப் உணவு உண்ணப்போனான். பிறகு, எலியா கர்மேல் மலையின் உச்சியில் ஏறி, குனிந்து தலையை முழங்கால்களுக்கு இடையில் வைத்து, தன் வேலைக்காரனிடம், “கடலைப்பார்” என்றான். வேலைக்காரனும் சென்று கடலைப் பார்த்தான். திரும்பி வந்து, “எதையும் காணவில்லை” என்றான். எலியா அவனை மீண்டும் பார்க்கச்சொன்னான். இவ்வாறு ஏழு முறை சொல்ல, ஏழாவது முறை வேலைக்காரன், “மனிதக் கை அளவில் சிறு மேகம் கடலிலிருந்து எழும்பி வருவதைப் பார்த்தேன்” என்றான். எலியா அவனிடம், “ஆகாப் ராஜாவிடம் போய்ச் சொல். உடனே இரதத்தில் ஏறி வீட்டிற்குப் போகச் சொல். இல்லாவிடில் மழைத்தடுத்துவிடும்” என்றான். சிறிது நேரத்தில், வானத்தில் கருமேகங்கள் கவிந்தன. காற்று வீசியது, பெருமழை பெய்தது. ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். கர்த்தருடைய வல்லமை எலியாவிடம் வர, தன் ஆடையை இறுக்கக் கட்டிக்கொண்டு ராஜாவுக்கு முன்னால் யெஸ்ரயேல் வழி முழுவதும் ஓடினான்.