1 இராஜாக்கள் 17:2-6
1 இராஜாக்கள் 17:2-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின்பு யெகோவாவினுடைய வார்த்தை எலியாவுக்கு வந்தது. அவர் அவனிடம், “நீ இந்த இடத்தைவிட்டு கிழக்குப் பக்கம் திரும்பி, யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள கேரீத் பள்ளத்தாக்கில் ஒளிந்துகொள். நீ அந்த நீரோடையில் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவு கொடுக்கும்படி நான் காகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார். யெகோவா கூறியபடியே அவன் செய்தான். அவன் யோர்தானுக்குக் கிழக்குப் பக்கமாக இருந்த கேரீத் பள்ளத்தாக்கிற்குப் போய் அங்கே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்குக் காலையில் அப்பமும், இறைச்சியும் மாலையில் அப்பமும், இறைச்சியும் கொண்டுபோய்க் கொடுத்தன. அவன் நீரோடையிலிருந்து தண்ணீரைக் குடித்தான்.
1 இராஜாக்கள் 17:2-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு யெகோவாவுடைய வார்த்தை அவனுக்கு உண்டானது, அவர்: நீ இந்த இடத்தைவிட்டுக் கிழக்குத்திசையை நோக்கிப் போய், யோர்தான் நதிக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் ஒளிந்துகொள். அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உனக்கு உணவளிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் போய், யெகோவாவுடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராக இருக்கிற கேரீத் ஆற்றின் அருகில் தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு காலையில் அப்பமும் இறைச்சியும், மாலையில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
1 இராஜாக்கள் 17:2-6 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு கர்த்தர் எலியாவிடம், “இந்த இடத்தை விட்டு கீழ் நாடுகளுக்குப் போ. கேரீத் ஆற்றருகில் ஒளிந்துக்கொள். அது யோர்தான் ஆற்றிற்குக் கிழக்கே உள்ளது. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி. அங்கு காகங்கள் உனக்கு உணவு கொண்டுவரும்படி நான் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார். எனவே எலியா அங்கே போனான். கர்த்தருடைய கட்டளைபடியே கேரீத்தில் ஒளிந்திருந்தான். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் காகங்கள் இறைச்சியும் அப்பமும் கொண்டுவந்தன. ஆற்று தண்ணீரைக் குடித்தான்.
1 இராஜாக்கள் 17:2-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.