1 இராஜாக்கள் 15:1-6
1 இராஜாக்கள் 15:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நேபாத்தின் மகனான யெரொபெயாம் இஸ்ரயேலில் ஆட்சி செய்த பதினெட்டாம் வருடம் அபியா யூதாவின் அரசனானான். அவன் எருசலேமில் மூன்று வருடங்கள் ஆட்சிசெய்தான். அப்சலோமின் மகளான அவனுடைய தாயின் பெயர் மாக்காள். அவனுடைய தகப்பன் முன்பு செய்த எல்லாப் பாவங்களையும் இவனும் செய்தான். தன் முற்பிதாவாகிய தாவீது, தன் இறைவனாகிய யெகோவாவுக்கு முழுமனதோடு உண்மையாயிருந்ததுபோல, இவன் முழுமனதோடு உண்மையாய் இருக்கவில்லை. அப்படியிருந்தும் தாவீதின் இறைவனாகிய யெகோவா அவன் நிமித்தம் எருசலேமைப் பலப்படுத்தி, தாவீதுக்குப் பின் அரசாளுவதற்கு ஒரு மகனை எழுப்பி, எருசலேமில் அவனுக்கு ஒரு விளக்கைக் கொடுத்தார். ஏனெனில் தாவீது ஏத்தியனான உரியாவின் விஷயத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிலும் யெகோவாவின் பார்வைக்குச் சரியானவற்றைச் செய்து, தன் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் கட்டளைகளில் எதையும் செய்யத் தவறவில்லை. யெரொபெயாமுக்கும் ரெகொபெயாமுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தம் அபியாவின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
1 இராஜாக்கள் 15:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் 18 ஆம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி, மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள். தன்னுடைய தகப்பன் தன் காலத்திற்குமுன்பு செய்த எல்லாப் பாவங்களிலும் தானும் நடந்தான்; அவனுடைய இருதயம் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உத்தமமாக இருக்கவில்லை. ஆனாலும் தாவீதுக்காக அவனுடைய தேவனாகிய யெகோவா, அவனுக்குப் பிறகு அவனுடைய மகனை எழும்பச்செய்வதாலும், எருசலேமை நிலைநிறுத்துவதாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார். தாவீது ஏத்தியனான உரியாவின் காரியம் ஒன்றுதவிர யெகோவா தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் ஒன்றையும் விட்டுவிலகாமல், அவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான். ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
1 இராஜாக்கள் 15:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
நேபாத் என்பவனின் குமாரனான யெரொபெயாம் என்பவன் இஸ்ரவேலின் ராஜாவாக ஆண்டான். அவனது 18வது ஆட்சியாண்டில், அவனது குமாரன் அபியா யூதாவின் ராஜா ஆனான். அபியா எருசலேமிலிருந்து மூன்று ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் அப்சலோமின் குமாரத்தியான மாகாள். அவன் தன் தந்தையைப்போலவே அனைத்து பாவங்களையும் செய்தான். அபியா தன் தாத்தாவாகிய தாவீதைப்போன்று தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவனாக இல்லை. கர்த்தர் தாவீதை நேசித்தார். அதனால், கர்த்தர் அபியாவிற்கு எருசலேமின் ஆட்சியைக் கொடுத்தார். அவனுக்கு ஒரு குமாரனையும் எருசலேமிற்குப் பாதுகாப்பையும் தாவீதிற்காக கர்த்தர் கொடுத்தார். கர்த்தருக்குப் பிடித்த சரியான காரியங்களை மட்டுமே எப்பொழுதும் தாவீது செய்துவந்தான். அவன் எப்பொழுதும் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தான். அவன் ஒரே ஒருமுறைமட்டும் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. அது ஏத்தியனான உரியாவிற்கு செய்ததாகும். ரெகொபெயாமும் யெரொபெயாமும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
1 இராஜாக்கள் 15:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின் மேல் ராஜாவாகி, மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள். தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை. ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலைநிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார். தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்று தவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து வந்தான். ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.