1 இராஜாக்கள் 13:1-34
1 இராஜாக்கள் 13:1-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, அந்தப் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி; அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோகும்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான். பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று. தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று. அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம்செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது. அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான். தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை. ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி, அவன் பெத்தேலுக்கு வந்த வழியாய்த் திரும்பாமல், வேறு வழியாய்ப் போய்விட்டான். கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால், அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி, தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான். அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான். அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன். ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான். அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான். அப்பொழுது அவன் இவனோடே திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான். அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால், அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி, அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக்கொடுத்தான். அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது. அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடந்த பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள். அவனை வழியிலிருந்து திரும்பப்பண்ணின தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் கர்த்தருடைய வாக்கை மீறின தேவனுடைய மனுஷன்தான், கர்த்தர் அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, கர்த்தர் அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனை முறித்துக் கொன்றுபோட்டது என்று சொல்லி, தன் குமாரரை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம்வைத்துக் கொடுத்தார்கள். அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவன் பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே கழுதையும் சிங்கமும் நிற்கிறதையும் கண்டான்; அந்தச் சிங்கம் பிரேதத்தைத் தின்னவுமில்லை, கழுதையை முறித்துப் போடவுமில்லை. அப்பொழுது கிழவனான அந்தத் தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷனின் பிரேதத்தை எடுத்து, அதைக் கழுதையின்மேல் வைத்து, அதற்காகத் துக்கங்கொண்டாடவும் அதை அடக்கம்பண்ணவும், அதைத் தன் பட்டணத்திற்குக் கொண்டுவந்து, அவன் பிரேதத்தைத் தன்னுடைய கல்லறையிலே வைத்தான். அவனுக்காக: ஐயோ, என் சகோதரனே என்று புலம்பி, துக்கங்கொண்டாடினார்கள். அவனை அடக்கம்பண்ணினபின்பு, அவன் தன் குமாரரை நோக்கி: நான் மரிக்கும்போது, தேவனுடைய மனுஷன் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்பண்ணி, அவன் எலும்புகளண்டையிலே என் எலும்புகளையும் வையுங்கள். அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் விரோதமாகக் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும் என்றான். இந்த நடபடிக்குப்பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன்மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள். யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று.
1 இராஜாக்கள் 13:1-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெரொபெயாம் காணிக்கை செலுத்துவதற்காக பலிபீடத்தின் அண்டையில் நிற்கையில், யெகோவாவின் வார்த்தையின்படி யூதாவிலிருந்து பெத்தேலுக்கு ஒரு இறைவனின் மனிதன் வந்தான். அவன் யெகோவாவின் வார்த்தைப்படி, “பலிபீடமே, பலிபீடமே, யெகோவா சொல்வது இதுவே: தாவீதின் சந்ததியில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான். இந்த மேடையில் பலிசெலுத்தும் பூசாரிகளை அவன் உன்மேல் பலியிடுவான். உன்மேல் மனித எலும்புகள் எரிக்கப்படும் என்று யெகோவா கூறுகிறார்” என்று பலிபீடத்துக்கு எதிராகச் சத்தமிட்டுச் சொன்னான். அதே நாளில் இறைவனுடைய மனிதன் ஒரு அடையாளத்தைக் கொடுத்தான். “யெகோவா அறிவிக்கும் அடையாளம் இதுவே: இந்தப் பலிபீடம் இரண்டாகப் பிளக்கப்பட்டு அதன் சாம்பல் நிலத்தில் கொட்டுண்டுபோகும்” என்றான். இறைவனுடைய மனிதன் பெத்தேலிலிருந்த பலிபீடத்தைச் சபித்ததை அரசன் யெரொபெயாம் கேட்டபோது பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, “அவனைப் பிடியுங்கள்” என்றான். ஆனால் அந்த மனிதனுக்கு எதிராக நீட்டப்பட்ட அவனுடைய கை திரும்ப எடுக்க முடியாதபடி மரத்துப்போயிற்று. அதேவேளையில் யெகோவாவின் வார்த்தையால் இறைவனின் மனிதன்மூலம் கொடுத்த அடையாளத்தின்படி பலிபீடமும் பிளந்து சாம்பல் கொட்டப்பட்டது. அப்பொழுது அரசன் இறைவனுடைய மனிதனிடம், “உம்முடைய இறைவனாகிய யெகோவாவிடம் எனக்காகப் பரிந்துபேசி, என் கை திரும்பவும் முன்போல வரவேண்டும் என்று வேண்டுதல் செய்யும்” என்றான். எனவே இறைவனின் மனிதன் யெகோவாவிடம் பரிந்து மன்றாடியதால் அரசனுடைய கை முன் இருந்ததுபோல் திரும்பி வந்தது. அரசன் இறைவனுடைய மனிதனைப் பார்த்து, “நீர் என்னுடைய அரண்மனைக்கு வந்து சாப்பிடும். நான் உமக்கு ஒரு அன்பளிப்பைக் கொடுப்பேன்” என்றான். ஆனால் இறைவனுடைய மனிதன் அரசனிடம், “நீர் உமது உடைமைகளில் பாதியைத் தருவதாக இருந்தாலும் உம்மோடு நான் வரமாட்டேன். சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ மாட்டேன். ஏனெனில் நீ சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ வேண்டாம். ‘அத்துடன் நீ வந்த வழியாய் திரும்பிப் போகவும் வேண்டாம்’ என யெகோவா எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று கூறினான். அவ்வாறே பெத்தேலுக்குத் தான் வந்த வழியால் திரும்பாமல், வேறு வழியால் அவன் போனான். அப்பொழுது பெத்தேலில் முதியவனான ஒரு இறைவாக்கினன் இருந்தான். அவனுடைய மகன்கள் அவனிடம் வந்து, இறைவனுடைய மனிதன் அன்று அங்கு செய்த யாவற்றையும் சொன்னார்கள். அத்துடன் அரசனுக்கு அவன் என்ன சொன்னான் என்பதையும் சொன்னார்கள். அவர்களுடைய தகப்பன் அவர்களிடம், “அவன் எந்த வழியாகப் போனான்” என்று கேட்டான். அதற்கு யூதாவிலிருந்து வந்தவனான இறைவாக்கினன் போன வழியை அவனுடைய மகன்கள் அவனுக்குக் காட்டினார்கள். அப்பொழுது அவன் தன் மகன்களிடம், “எனக்காகக் கழுதையின்மேல் சேணம் கட்டுங்கள்” என்றான். அவர்கள் சேணம் கட்டியபோது அவன் அதில் ஏறி, இறைவனுடைய மனிதனைப் பின்தொடர்ந்து போனான். இறைவனுடைய மனிதன் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் இருப்பதைக் கண்டு, “யூதாவிலிருந்து வந்த இறைவனுடைய மனிதன் நீர்தானா” என்று கேட்டான். அதற்கு அவன், “நான்தான்,” என்று பதில் சொன்னான். அந்த இறைவாக்கினன் அவனிடம், “என்னுடன் வீட்டிற்கு வந்து சாப்பிடும்” என்றான். அதற்கு இறைவனுடைய மனிதன் அவனிடம், “நான் திரும்பி உன்னுடன் போகவும், இவ்விடத்தில் உன்னுடன் அப்பம் சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் முடியாது. ஏனென்றால் நீ அங்கே அப்பம் சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ வேண்டாம். ‘நீ போன வழியில் திரும்பி வரவுங்கூடாது’ என்று யெகோவாவினால் கட்டளைப் பெற்றிருக்கிறேன்” என்றான். அப்பொழுது அந்த முதியவனான இறைவாக்கினன் அவனிடம், “நானும் உம்மைப் போல ஒரு இறைவாக்கினன்தான். யெகோவாவின் வார்த்தைப்படி ஒரு தேவதூதன் வந்து, ‘அவன் அப்பம் சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் உன்னுடைய வீட்டுக்கு அவனைத் திரும்ப கூட்டிக்கொண்டு வா’ என்று சொன்னார்” என்று கூறினான். இப்படி அவன் பொய்யையே கூறினான். எனவே இறைவனுடைய மனிதன் அவனுடன் திரும்பிப்போய் அவனுடைய வீட்டில் சாப்பிட்டு குடித்தான். அவர்கள் சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்தபோது, அவனைத் திரும்பக் கூட்டிக்கொண்டுவந்த அந்த வயதான இறைவாக்கினனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அவன் யூதாவிலிருந்து வந்த இறைவனின் மனிதனைப் பார்த்து, “நீ உன்னுடைய இறைவனாகிய யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்து, உன் இறைவனாகிய யெகோவா உனக்குத் தந்த கட்டளையையும் கைக்கொள்ளவில்லை. அவர் உன்னைச் சாப்பிடவோ, குடிக்கவோ வேண்டாம் என்று தடுத்த இடத்துக்கு நீ திரும்பிவந்து அப்பத்தைச் சாப்பிட்டுக் தண்ணீரைக் குடித்தாய். ஆகையினால் உன்னுடைய பிரேதம் உன் முற்பிதாக்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட மாட்டாது என்று யெகோவா கூறுகிறார்” என்றான். இறைவனுடைய மனிதன் சாப்பிட்டுக் குடித்த பின்பு, அவனைத் திரும்ப அழைத்துவந்த இறைவாக்கினன் அவனுக்காக அவன் கழுதையின்மேல் சேணம் கட்டிக்கொடுத்தான். அவன் தன் வழியே போனபோது ஒரு சிங்கம் அவனை வழியில் கொன்றுபோட்டது. அவனுடைய உடல் வழியருகே எறியப்பட்டுக் கிடந்தது. கழுதையும், சிங்கமும் அதன் அருகே நின்றன. அந்த வழியால் போன சிலர் அங்கே உடல் எறியப்பட்டுக் கிடப்பதையும், அதனருகே சிங்கம் நின்றதையும் கண்டு, வயது முதிர்ந்த இறைவாக்கினன் வசித்த பட்டணத்திற்குப் போய் அதை அறிவித்தார்கள். அவனுடைய பயணத்திலிருந்து அவனைத் திரும்பக் கூட்டிக்கொண்டுவந்த இறைவாக்கினன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன், “இவனே யெகோவாவினுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்த யெகோவாவினுடைய மனிதன். யெகோவா தமது வார்த்தையால் அவனை எச்சரித்தபடியே, அவனைச் சிங்கத்திடம் ஒப்புக்கொடுத்தார். அது அவனைக் கிழித்துக் கொன்றது” என்றான். அந்த இறைவாக்கினன் தன் மகன்களிடம், “கழுதையின்மேல் சேணம் கட்டுங்கள்” என்றான். அவர்கள் அப்படியே செய்தார்கள். அவன் போய் தெருவில் உடல் எறியப்பட்டுக் கிடப்பதையும், சிங்கமும், கழுதையும் அதனருகே நிற்பதையும் கண்டான். சிங்கம் உடலை தின்னவுமில்லை. கழுதையை தாக்கவுமில்லை. அந்த இறைவாக்கினன் இறைவனின் மனிதனுடைய உடலை எடுத்து, தன் கழுதையின்மேல் வைத்து, அவனுக்காகத் துக்கிக்கவும், அவனை அடக்கம்பண்ணவும், தன்னுடைய சொந்தப் பட்டணத்துக்குக் கொண்டுவந்தான். அந்த உடலைத் தன் சொந்தக் கல்லறையில் வைத்தான். அவர்கள், “ஐயோ! என் சகோதரனே” என்று கூறி அவனுக்காகத் துக்கப்பட்டார்கள். அவனை அடக்கம் செய்தபின்பு, அவன் தன் மகன்களைப் பார்த்து, “நான் இறக்கும்போது, இறைவனுடைய மனிதனாகிய இவன் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் என்னையும் அடக்கம்பண்ணுங்கள். அவன் எலும்புகளின் பக்கத்திலேயே என் எலும்புகளையும் வையுங்கள். ஏனெனில் பெத்தேலிலுள்ள பலிபீடத்திற்கு விரோதமாகவும், சமாரிய பட்டணங்களில் உயர்ந்த இடங்களிலுள்ள வழிபாட்டிடங்கள் எல்லாவற்றுக்கும் விரோதமாகவும் அவன் யெகோவாவின் வார்த்தையை அறிவித்த செய்தி நிச்சயமாக நிறைவேறும்” என்றான். அதன்பின்பும் யெரொபெயாம் தன் தீயவழிகளை மாற்றிக்கொள்ளவில்லை. இன்னும் ஒருமுறை எல்லாவித மனிதர்களிலுமிருந்து வழிபாட்டு மேடைகளுக்குப் பூசாரிகளை நியமித்தான். பூசாரியாக வரவிரும்பும் எவனையும், வழிபாட்டு மேடைகளில் வேலைசெய்வதற்காக அர்ப்பணித்தான். இவையே யெரொபெயாமின் குடும்பத்தின் பாவம். அது அவர்களுடைய வீழ்ச்சிக்கும், அவர்கள் பூமியிலிருந்து முற்றிலும் அழிந்துபோகவும் காரணமாக அமைந்தது.
1 இராஜாக்கள் 13:1-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெரொபெயாம் தூபம் காட்ட பலிபீடத்தின் அருகில் நிற்கும்போது, இதோ, தேவனுடைய மனிதன் ஒருவன் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனிதர்களின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் யெகோவா சொல்கிறார் என்று யெகோவாவுடைய வார்த்தையைக் கூறி; அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்த பலிபீடம் வெடித்து, அதின்மேல் உள்ள சாம்பல் கொட்டப்பட்டுப்போகும்; யெகோவா சொன்னதற்கு இதுவே அடையாளம் என்றான். பெத்தேலில் இருக்கிற அந்த பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனிதன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன்னுடைய கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாக நீட்டின கை தன்னிடமாக மடக்கமுடியாதபடி மரத்துப்போனது. தேவனுடைய மனிதன் யெகோவாவுடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டப்பட்டுப்போனது. அப்பொழுது ராஜா, தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என்னுடைய கை முன்போல இருக்கும்படி எனக்காக விண்ணப்பம் செய்யவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனிதன் யெகோவாவுடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம்செய்தான், ராஜாவின் கை முன்னே இருந்தபடியே சரியானது. அப்பொழுது ராஜா தேவனுடைய மனிதனை நோக்கி: நீ என்னோடு வீட்டிற்கு வந்து இளைப்பாறு; உனக்கு பரிசு தருவேன் என்றான். தேவனுடைய மனிதன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதியைக் கொடுத்தாலும், நான் உம்மோடு வருவதும் இல்லை, இந்த இடத்தில் அப்பம் சாப்பிடுவதும் இல்லை, தண்ணீர் குடிப்பதும் இல்லை. ஏனென்றால் நீ அப்பம் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும், போனவழியாகத் திரும்பாலும் இரு என்று யெகோவா தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி, அவன் பெத்தேலுக்கு வந்த வழியாகத் திரும்பாமல், வேறு வழியாகப் போய்விட்டான். வயது முதிர்ந்த ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவனுடைய மகன்கள் வந்து தேவனுடைய மனிதன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லா செய்கைகளையும், அவன் ராஜாவோடு சொன்ன வார்த்தைகளையும் தங்களுடைய தகப்பனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவர்களுடைய தகப்பன்: அவன் எந்த வழியாகப் போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் போனவழி எதுவென்று அவனுடைய மகன்கள் பார்த்திருந்தபடியால், அவன் தன்னுடைய மகன்களிடம்: கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுத்தபின்பு, அவன் அதின்மேல் ஏறி, தேவனுடைய மனிதனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான். அப்பொழுது அவனை நோக்கி: என்னோடு வீட்டுக்கு வந்து அப்பம் சாப்பிடும் என்றான். அதற்கு அவன்: நான் உம்மோடு திரும்பவும், உம்மோடு உள்ளே வரவுமாட்டேன்; இந்த இடத்திலே உம்மோடு நான் அப்பம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன். ஏனென்றால் நீ அப்பம் சாப்பிடாமலும், அங்கே தண்ணீர் குடிக்காமலும், நீ போன வழியாகத் திரும்பிவராமலும் இரு என்று யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான். அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன்னுடைய வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் யெகோவாவுடைய வார்த்தையாக என்னோடு சொன்னான் என்று அவனிடம் பொய் சொன்னான். அப்பொழுது அவன் இவனோடு திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடித்தான். அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக் கொண்டுவந்த தீர்க்கதரிசிக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானதால், அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் யெகோவாவுடைய வார்த்தையை மீறி, அப்பம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின இடத்திற்கு நீ திரும்பிப் போய், அப்பம் சாப்பிட்டுத் தண்ணீர் குடித்ததால், உன்னுடைய சடலம் உன்னுடைய பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். அவன் சாப்பிட்டுக் குடித்து முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக் கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக்கொடுத்தான். அவன் போனபிறகு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவனுடைய சடலம் வழியில் கிடந்தது; கழுதை அதின் அருகில் நின்றது; சிங்கமும் சடலத்தின் அருகில் நின்றது. அந்த வழியே கடந்துவருகிற மனிதர்கள், வழியிலே கிடந்த சடலத்தையும், சடலத்தின் அருகில் நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள். அவனை வழியிலிருந்து திரும்பச்செய்த தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் யெகோவாவுடைய வாக்கை மீறிய தேவனுடைய மனிதன் தான், யெகோவா அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, யெகோவா அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனைத் தாக்கிக் கொன்றுபோட்டது என்று சொல்லி, தன் மகன்களை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம் வைத்துக் கொடுத்தார்கள். அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவனுடைய சடலத்தையும், சடலத்தின் அருகில் கழுதையும் சிங்கமும் நிற்பதையும் கண்டான்; அந்தச் சிங்கம் சடலத்தை சாப்பிடவும் இல்லை, கழுதையை தாக்கவும் இல்லை. அப்பொழுது வயது முதிர்ந்த அந்தத் தீர்க்கதரிசி தேவனுடைய மனிதனின் சடலத்தை எடுத்து, அதைக் கழுதையின்மேல் வைத்து, அதற்காகத் துக்கம் கொண்டாடவும் அதை அடக்கம் செய்யவும், அதைத் தன்னுடைய பட்டணத்திற்குக் கொண்டுவந்து, அவனுடைய சடலத்தைத் தன்னுடைய கல்லறையில் வைத்தான். அவனுக்காக: ஐயோ, என்னுடைய சகோதரனே என்று புலம்பி, துக்கம்கொண்டாடினார்கள். அவனை அடக்கம்செய்த பின்பு, அவன் தன்னுடைய மகன்களை நோக்கி: நான் மரணமடையும்போது, தேவனுடைய மனிதன் அடக்கம்செய்யப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்செய்து, அவனுடைய எலும்புகளின் அருகில் என்னுடைய எலும்புகளையும் வையுங்கள். அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய எல்லாக் கோவில்களுக்கும் விரோதமாகக் கூறிய யெகோவாவுடைய வார்த்தை நிச்சயமாக நிறைவேறும் என்றான். இதற்குப்பின்பு, யெரொபெயாம் தன்னுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் மக்களில் தாழ்ந்தவர்களை மேடைகளின் ஆசாரியர்களாக்கினான்; எவன்மேல் அவனுக்கு விருப்பம் இருந்ததோ அவனைப் பிரதிஷ்டை செய்தான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியர்களானார்கள். யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அவர்களை நீக்கி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமானது.
1 இராஜாக்கள் 13:1-34 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர், யூதாவிலுள்ள தேவமனிதனைப் பெத்தேலுக்கு போகும்படி கட்டளையிட்டார். அவன் அங்கே போனபோது யெரொபெயாம் பலிபீடத்தின் முன்னால் நறுமண வாசனைப் பொருட்களைச் செலுத்திக்கொண்டிருந்தான். பலிபீடத்திற்கு எதிராகப் பேசுமாறு கர்த்தர் அந்த தேவமனிதனுக்குக் கட்டளையிட்டார். அவனும், “பலிபீடமே, கர்த்தர் உன்னிடம் கூறுகிறார், ‘தாவீதின் குடும்பத்தில் யோசியா என்பவன் இருக்கிறான். இந்த ஆசாரியர்களெல்லாம் இப்போது பொய்த் தெய்வங்களை தொழுது வருகின்றனர். எனவே பலிபீடமே, யோசியா என்பவன் உன்மேல் தூபம் காட்டுகிற மேடையின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான். அந்த ஆசாரியர்கள் நறுமணப் பொருட்களைப் போட்டு எரிக்கின்றனர். ஆனால் யோசியாவோ மனித எலும்புகளைப் போட்டு எரிப்பான். பிறகு மீண்டும் உன்னைப் பயன்படுத்த முடியாது!’” என்றான். இவையெல்லாம் நிகழும் என்பதற்கான சான்றையும் அந்த தேவமனிதன் காட்டினான். அவன், “இதுதான் கர்த்தர் என்னிடம் சொன்ன அத்தாட்சியாகும். கர்த்தர், ‘இந்த பலிபீடம் வெடித்து இதிலுள்ள சாம்பல் தரையிலேவிழும்’ என்று சொன்னார்” என்றான். ராஜாவாகிய யெரொபெயாம் பெத்தேலின் பலிபீடத்தைப்பற்றி தேவமனிதனிடமிருந்து செய்தியைக் கேட்டான். அவன் தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டி, “அவனை பிடியுங்கள்!” என்றான். ஆனால் நீட்டிய அந்தக் கை, மடக்க முடியாத அளவிற்கு முடங்கிப்போனது. பலிபீடமும், தூள் தூளாகச் சிதறி உடைந்துபோனது. அதன் சாம்பல் தரையில் சிந்தியது. தேவமனிதன் சொன்னது தேவனிடமிருந்து வந்தது என்பதற்கு இதுவே சாட்சியாயிற்று. அப்போது ராஜா அந்தத் தேவமனிதனிடம், “எனக்காக உன் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய். எனது கையை குணமாக்கும்படி கர்த்தரைக் கேள்” என்றான். தேவமனிதனும் அவ்வாறே ஜெபிக்க அவனது கை முன்பு போலாயிற்று. ராஜாவும் தேவமனிதனிடம், “என்னோடு என் வீட்டிற்கு வா. என்னோடு உணவருந்து. உனக்குப் பரிசளிப்பேன்” என்றான். ஆனால் தேவமனிதனோ ராஜாவிடம், “உனது ஆட்சியில் பாதியைக் கொடுத்தாலும், என்னால் உன்னோடு வரமுடியாது, இந்த இடத்தில் என்னால் எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. எதையும் உண்ணவோ அல்லது குடிக்கவோ கூடாது என எனக்கு கர்த்தர் கட்டளையிட்டார். நான் இங்கு வந்த பாதைவழியே பயணம் செய்யக்கூடாது என்றும் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்” என்றான். எனவே அவன் வேறு பாதை வழியாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தான். பெத்தேலில் ஒரு முதிய தீர்க்கதரிசி இருந்தான். அவனது குமாரர்கள் அவனிடம் வந்து தேவமனிதன் பெத்தேலில் செய்ததைச் சொன்னார்கள், ராஜாவிடம் சொன்னதையும் சொன்னார்கள். அதற்கு அந்த முதிய தீர்க்கதரிசி, “அவன் எந்தச் சாலை வழியாகத் திரும்பிப் போனான்?” என்று கேட்டான். அவர்களும் அந்தச் சாலையைச் சுட்டிக்காட்டினார்கள். அவன் தனது கோவேறு கழுதைக்குச் சேணத்தை கட்டுமாறு வேண்டினான். அவனது பிள்ளைகளும் அவ்வாறே செய்தனர். அவனும் அக்கழுதையின் மீது ஏறிப்போனான். முதிய தீர்க்கதரிசி அந்தத் தேவமனிதனைப் பின் தொடர்ந்து போனான். தேவமனிதன் கர்வாலி மரத்தின் கீழ் இருப்பதை அவன் கண்டான், “யூதாவிலிருந்து வந்தத் தேவமனிதன் நீதானா?” என்று கேட்டான். அந்த தேவமனிதன், “ஆமாம், நான்தான்” என்றான் முதிய தீர்க்கதரிசி “என்னோடு வீட்டிற்கு வந்து உணவருந்துங்கள்” என்று வேண்டினான். ஆனால் அந்தத் தேவமனிதன், “என்னால் உங்களோடு வீட்டிற்கு வரமுடியாது. இந்த இடத்தில் உங்களோடு உண்ணவோ குடிக்கவோ கூடாது. கர்த்தர் எனக்கு, ‘இந்த இடத்தில் எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. நீ சென்ற சாலையின் வழியே மீண்டும் செல்லக்கூடாது’ என்று கட்டளையிட்டுள்ளார்” என்றான். பிறகு முதிய தீர்க்கதரிசி, “நானும் உங்களைப் போன்று தீர்க்கதரிசிதான்” என்றான். மேலும் அவன் ஒரு பொய்ச் சொன்னான். அவன், “தேவதூதன் ஒருவன் கர்த்தரிடத்திலிருந்து வந்தான். அவன் உங்களை எனது வீட்டிற்கு அழைத்துப்போய் உண்ணவும் குடிக்கவும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான்” என்றான். எனவே தேவமனிதன் முதியவனோடு அவனது வீட்டிற்குப்போய் உண்டான். அவனோடு குடித்தான். அவர்கள் மேஜையின் முன்னால் உட்கார்ந்திருக்கும்போது, கர்த்தர் முதிய தீர்க்கதரிசியிடம் பேசினார். முதியவனும், அந்த தேவமனிதனிடம், “கர்த்தர் உனக்கிட்ட கட்டளையை மீறினாய்! அவருக்குக் கீழ்ப்படியவில்லை. இந்த இடத்தில் எதையும் உண்ணவோ அல்லது குடிக்கவோ கூடாது என்று கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். ஆனால் நீ திரும்பி வந்து உண்டு குடித்தாய். எனவே உனது பிணம் உன் குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்படாமல் போகும்” என்றான். தேவமனிதன் உணவருந்தி முடித்தான். முதிய தீர்க்கதரிசி பிறகு கழுதையில் அவனுக்காக சேணத்தை கட்டி அவன் போனான். அவன் பாதையில் பயணம் செய்யும்போது, ஒரு சிங்கம் வந்து அவனைக் கொன்றுபோட்டது. அவனது உடல் பாதையில் கிடக்க அருகில் சிங்கமும் கழுதையும் நின்றுகொண்டிருந்தன. சிலர் அவ்வழியாக வந்தனர். அவர்கள் பிணத்தையும் சிங்கத்தையும் கண்டு முதிய தீர்க்கதரிசியிடம் வந்து தாங்கள் கண்டதைக் கூறினார்கள். அவன்தான் தந்திரம் செய்து தீர்க்கதரிசியைத் திருப்பி அழைத்தவன். அவன் அனைத்தையும் கேட்டபின், “அந்தத் தேவமனிதன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே சிங்கத்தை அனுப்பி கொன்றுவிட்டார். இவ்வாறு செய்வேன் என்று கர்த்தர் ஏற்கெனவே கூறியிருக்கிறார்” என்றான். பிறகு அவன் தன் குமாரர்களிடம், “என் கழுதைக்கு சேணத்தைக் கட்டுங்கள்” என்றான். அவனது குமாரர்களும் அவ்வாறே செய்தனர். அவன் சாலைக்குப் போய் தீர்க்கதரிசியின் பிணத்தைப் பார்த்தான். கழுதையும் சிங்கமும் அப்பொழுதும் அங்கே நின்றுகொண்டிருந்தன. சிங்கம் அந்த உடலைத் தின்னவில்லை. கழுதையையும் எதுவும் செய்யவில்லை. முதிய தீர்க்கதரிசி அந்த பிணத்தை எடுத்து தனது கழுதையின் மீது வைத்தான். அதனை நகரத்திற்குக் கொண்டுவந்து அவனுக்காக அழுதான். அவனைத் தனது குடும்பக் கல்லறையிலேயே அடக்கம் செய்தான். பின் அவனுக்காக அழுது, “என் சகோதரரே, உங்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று புலம்பினான். எனவே அந்த முதிய தீர்க்கதரிசி சவ அடக்கத்தை முடித்த பின், தன் குமாரர்களிடம், “நான் மரித்த பின்னும், என்னை இதே கல்லறையில் அடக்கம் செய்யுங்கள். எனது எலும்புகளை இவனது எலும்புகளுக்கு அருகில் வையுங்கள். இவன் மூலமாக கர்த்தர் சொன்னதெல்லாம் உறுதியாக நிறைவேறும். கர்த்தர் இவன் மூலமாக பெத்தேலின் பலிபீடத்திற்கு எதிராகவும் சமாரியாவின் நகரங்களிலுள்ள பொய்த் தெய்வங்களுக்கு எதிராகவும் பேசினார்” என்றான். யெரொபெயாம் ராஜா மாறவில்லை. தொடர்ந்து தீமைகளைச் செய்துவந்தான். ஆசாரியர்களாக வெவ்வேறு கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தான். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு ஆராதனை செய்தனர். ஆசாரியராக யார் விரும்பினாலும் விரும்பியபடி அனுமதிக்கப்பட்டனர். இச்செயல்களே பெரும்பாவமாகி அவனது ஆட்சி அழிய காரணமாயிற்று.