1 இராஜாக்கள் 12:26-32

1 இராஜாக்கள் 12:26-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும். இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள். அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தின் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து

1 இராஜாக்கள் 12:26-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெரொபெயாம் தனக்குள், “அரசாட்சி ஒருவேளை தாவீதின் சந்ததிக்கே திரும்பவும் போகக்கூடும். இந்த மக்கள் எருசலேமில் உள்ள யெகோவாவின் ஆலயத்துக்குப் பலி செலுத்துவதற்குப் போனால், அவர்கள் தங்கள் தலைவனான யூதாவின் அரசன் ரெகொபெயாமின் பக்கம் சாயக்கூடும். அவர்கள் என்னைக் கொலைசெய்து அவனிடமே திரும்புவார்கள்” என்று நினைத்தான். அரசன் இதைக்குறித்து ஆலோசனை பெற்றபின்பு இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தான். அவன் மக்களைப் பார்த்து, “நீங்கள் எருசலேமுக்கு வழிபடப்போவது உங்களுக்கு மிகவும் கஷ்டம். இஸ்ரயேலின் எகிப்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டுவந்த தெய்வங்கள் இங்கே இருக்கின்றன” என்று சொன்னான். அவன் ஒன்றைப் பெத்தேலிலும், மற்றதைத் தாணிலும் வைத்தான். இது பாவமாகியது. மக்கள் அதில் ஒன்றை வழிபடுவதற்குத் தாண்வரைக்கும் போனார்கள். யெரொபெயாம் மேட்டு இடங்களில் வழிபாட்டு இடங்களைக் கட்டி, எல்லாவித மனிதர்களிலுமிருந்து அவர்கள் லேவியர்கள் இல்லாதிருந்தபோதிலும் ஆசாரியர்களை நியமித்தான். யெரொபெயாம் எட்டாம் மாதம் பதினைந்தாம் நாளில் யூதாவில் நடக்கும் ஒரு பண்டிகையைப்போல தானும் ஒரு பண்டிகையை நியமித்து, பலிபீடத்தில் பலிகளைச் செலுத்தினான். இப்படி அவன் தான் பெத்தேலில் செய்த கன்றுக்குட்டிக்குப் பலியிட்டான். பெத்தேலில் தான் செய்த மேடைகளில் பூசாரிகளையும் நியமித்தான்.

1 இராஜாக்கள் 12:26-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெரொபெயாம்: இப்போது அரசாட்சி தாவீது குடும்பத்தாரின் பக்கமாகத் திரும்பும். இந்த மக்கள் எருசலேமிலுள்ள யெகோவாவுடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த மக்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்களுடைய எஜமானின் பக்கமாகத் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பக்கமாகப் போய்விடுவார்கள் என்று தன்னுடைய மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். ஆகையால் ராஜா யோசனைசெய்து, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, மக்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போவது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலர்களே, இதோ, இவைகளே உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த உங்கள் தெய்வங்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் வைத்தான். இந்தக் காரியம் பாவமாக மாறினது; மக்கள் இந்த கன்றுக்குட்டிக்காகத் தாண்வரை போவார்கள். அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் மகன்களாக இல்லாத மற்ற தாழ்ந்த மக்களை ஆசாரியர்களாக ஆக்கினான். யூதாவில் கொண்டாடப்படும் பண்டிகையைப்போலவே எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டாக்கின மேடைகளில் ஆசாரியர்களைப் பெத்தேலிலே நியமித்து

1 இராஜாக்கள் 12:26-32 பரிசுத்த பைபிள் (TAERV)

யெரொபெயாம் தனக்குள்ளேயே, “ஜனங்கள் எருசலேமில் தொடர்ந்து கர்த்தருடைய ஆலயத்திற்கு காணிக்கைகளை அளிக்கச் செல்வார்களேயானால், பின் அவர்கள் தாவீதின் குடும்பத்தால் ஆளப்படவேண்டும் என விரும்புவார்கள். அவர்கள் ரெகொபெயாமைப் பின்பற்றி, அவனை மீண்டும் ராஜாவாக்குவார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்” என எண்ணினான். எனவே அவன் தன்னைச் சார்ந்தவர்களோடு கலந்து யோசித்தான். அவன் இரண்டு தங்க கன்றுக்குட்டிகளைச் செய்தான். ஜனங்களிடம், “இனிமேல் நீங்கள் எருசலேம் போய் தொழுதுகொள்ள வேண்டாம். உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தெய்வங்கள் இவைகள் தான்” என்றான். பின்னர் பெத்தேலில் ஒரு கன்றுகுட்டியும், தாண் நகரில் ஒரு கன்றுக் குட்டியும் வைத்தான். ஜனங்கள் பெத்லேலுக்கும் தாணுக்கும் போய் கன்றுக்குட்டிகளின் உருவங்களை வழிபட்டனர். இது பெரிய பாவமானது. யெரொபெயாமும் உயர்ந்த மலையிடங்களில் ஆலயங்களைக் கட்டினான். அதற்கு ஆசாரியர்களாக இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தான். (அவன் லேவியர் கோத்திரத்திலிருந்து மட்டும் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை). ராஜா புதிய விடுமுறைநாளையும் உருவாக்கினான். இது பஸ்கா பண்டிகையைப்போன்று யூதாவில் விழாவாயிற்று. ஆனால் இது எட்டாவது மாதத்தில் 15வது நாள், முதல் மாதத்தின் 15வது நாள் இல்லை. அந்த காலத்தில் பெத்தேலில் பலிபீடத்தில் பலவித பலிகளைச் செய்தான். அப்பலிகள் அவனால் செய்யப்பட்ட காளைகளுக்கு உரியதாயிற்று. அங்கே பெத்தேல் நகரிலேயே ராஜா ஆசாரியர்களை தேர்ந்தெடுத்து தொழுகைக்கு ஏற்பாடு செய்தான்.