1 இராஜாக்கள் 11:26-43

1 இராஜாக்கள் 11:26-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை. அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது, யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரியசமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான். அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில், அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு, யெரொபெயாமை நோக்கி: பத்துத்துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன். ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும். அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன். ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன். ஆனாலும் ராஜ்யபாரத்தை அவன் குமாரன் கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன். என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன். நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன். இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான். அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான். சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம். சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 11:26-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அத்துடன் நேபாத்தின் மகன் யெரொபெயாம் சாலொமோன் அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான். சாலொமோனின் அலுவலர்களில் ஒருவனான இவன் சேரேதாவைச் சேர்ந்த எப்பிராயீமிய கோத்திரத்தான். இவனுடைய தாய் செரூகாள் என்னும் பெயருள்ள ஒரு விதவை. அவன் அரசனுக்கெதிராய் கலகம் செய்த விதமாவது: சாலொமோன் அரண்மனைத் தளங்களைக் கட்டி, தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்தின் மதிலில் இருந்த இடைவெளிகளையும் நிரப்பினான். இத்தருணத்தில் யெரொபெயாம் ஒரு மதிப்புள்ள மனிதனாக காணப்பட்டான். அந்த வாலிபன் தன் வேலைகளை எவ்வளவு கவனமாகச் செய்கிறான் என்பதை சாலொமோன் கவனித்தபோது, யோசேப்பு வீட்டாரின் எல்லா தொழிலாளர்களுக்கும் பொறுப்பாக அவனை வைத்தான். அந்நாட்களில் ஒரு நாள் யெரொபெயாம் எருசலேம் பட்டணத்துக்கு வெளியே போய்க்கொண்டிருந்தபோது, சீலோவைச் சேர்ந்த இறைவாக்கினனான அகியா ஒரு புதிய மேலுடையை உடுத்திக்கொண்டு வழியில் அவனைச் சந்தித்தான். இருவரும் பட்டணத்துக்கு வெளியே தனியாக நின்றனர். அகியா தன் புதிய மேலுடையை எடுத்து பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, யெரொபெயாமைப் பார்த்து, “இவற்றில் பத்து துண்டுகளை உனக்கென எடுத்துக்கொள். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவது இதுவே: ‘சாலொமோனின் கையிலிருந்து ஆட்சியை பறித்து, அதில் பத்து கோத்திரங்களை உனக்குத் தரப்போகிறேன். எனது அடியவனாகிய தாவீதின் நிமித்தமாகவும், இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலிருந்தும் நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமின் நிமித்தமாகவும், ஒரு கோத்திரம் அவனுக்காக இருக்கும். நான் இதைச் செய்வேன். ஏனென்றால் அவன் என்னைக் கைவிட்டு சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும், மோவாபியரின் தெய்வமான கேமோசையும், அம்மோனியரின் தெய்வமான மில்கோமையும் வணங்கினான். அவன் என்னுடைய வழிகளில் நடக்கவுமில்லை; என் பார்வைக்குச் செம்மையானவற்றைச் செய்யவுமில்லை. சாலொமோனின் தகப்பனான தாவீது செய்ததுபோல என் விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவுமில்லை. “ ‘ஆனாலும் சாலொமோனின் கையிலிருந்து முழு ஆட்சியையும் எடுக்கமாட்டேன். நான் தெரிந்துகொண்டவனும், என் கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொண்டவனுமான என் அடியவன் தாவீதின் நிமித்தம், சாலொமோனின் வாழ்நாள் முழுவதும் அவனை அரசனாக வைத்திருக்கிறேன். தாவீதின் மகனின் கையிலிருந்து பத்து கோத்திரங்களை எடுத்து உனக்குத் தருவேன். என் பெயர் தங்கும்படி, நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமில் எனக்கு முன்பாக என் அடியவனான தாவீதுக்கு எப்பொழுதும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். ஆயினும் உன்னையோ நான் தெரிந்தெடுப்பேன். நீ உன் இருதய விருப்பப்படி எல்லோருக்கும் மேலாக அரசாள்வாய். இஸ்ரயேலுக்கு மேல் அரசனாய் இருப்பாய். அப்போது நான் உனக்குக் கட்டளையிடுவதெல்லாவற்றையும் நீ செய்து, என் வழிகளில் நடந்து, என் விதிமுறைகளையும் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் அடியானாகிய தாவீது செய்ததுபோல என் பார்வையில் சரியானதைச் செய்வாயானால், நான் உன்னோடுகூட இருப்பேன். தாவீதுக்கு நான் கட்டியது போல, நீடித்திருக்கும் ஒரு வம்சத்தை உனக்கும் கட்டி இஸ்ரயேலை உனக்குத் தருவேன். இப்படிச் செய்வதனால் தாவீதின் வம்சத்தைத் தாழ்த்துவேன். ஆயினும் என்றென்றும் அல்ல’ என்று யெகோவா கூறுகிறார்” என அகியா சொன்னான். அதனால் சாலொமோன் யெரொபெயாமைக் கொலைசெய்ய முயற்சி செய்தான். ஆனால் அவன் சீஷாக் அரசனிடம் எகிப்திற்குத் தப்பி ஓடி, சாலொமோனின் மரணம்வரை அங்கே தங்கியிருந்தான். சாலொமோன் தன் ஆட்சிக்காலத்தில் செய்தவை அனைத்தும், அவன் காண்பித்த ஞானமும் சாலொமோனின் வரலாறுகளின் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. சாலொமோன் இஸ்ரயேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் எருசலேமிலிருந்து அரசாண்டான். இதன்பின் சாலொமோன் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பனான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ரெகொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான்.

1 இராஜாக்கள் 11:26-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனிதனாகிய நேபாத்தின் மகன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் அதிகாரியும் ராஜாவிற்கு எதிரியாக எழும்பினான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பெயருள்ள ஒரு விதவை. அவன் ராஜாவிற்கு எதிரியாக எழும்பிய காரணம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன்னுடைய தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுதுபார்த்தபோது, யெரொபெயாம் என்பவன் பலசாலியாக இருந்தான்; அவன் திறமையுள்ள வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தார்களின் காரியத்தையெல்லாம் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான். அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதிய சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியில் தனியாக இருக்கும்போது, அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதிய சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு, யெரொபெயாமை நோக்கி: பத்துத்துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்ஜியபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன். ஆனாலும் என்னுடைய ஊழியனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்திற்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும். அவர்கள் என்னைவிட்டு, சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியர்களின் தேவனாகிய காமோசையும், அம்மோன் மக்களின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவனுடைய தகப்பனாகிய தாவீதைப்போல என்னுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யவும், என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என்னுடைய வழிகளில் நடக்காமல்போனதால் அப்படிச் செய்வேன். ஆனாலும் அரசாட்சி முழுவதையும் நான் அவனுடைய கையிலிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என்னுடைய கற்பனைகளையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என்னுடைய ஊழியனாகிய தாவீதிற்காக, அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன். ஆனாலும் ராஜ்ஜியபாரத்தை அவனுடைய மகனுடைய கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன். என்னுடைய நாமம் வெளிப்படும்படி, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே எனக்கு முன்பாக என்னுடைய ஊழியனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். நீ உன்னுடைய மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன். நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என்னுடைய வழிகளில் நடந்து, என்னுடைய ஊழியனாகிய தாவீது செய்ததுபோல, என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய கற்பனைகளையும் கைக்கொள்ளும்படி என்னுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்தால், நான் உன்னோடு இருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலர்களை உனக்குத் தருவேன். இப்படி நான் இந்தக் காரியத்திற்காக தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; இருந்தாலும் எல்லா நாளும் அப்படி இருக்காது என்று சொன்னான். அதற்காக சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயற்சி செய்தான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்கு சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடம் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையும்வரை எகிப்தில் இருந்தான். சாலொமோனின் மற்றக் காரியங்களும், அவன் செய்த அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலர்களையெல்லாம் அரசாட்சி செய்த நாட்கள் 40 வருடங்கள். சாலொமோன் தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்து, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ரெகொபெயாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 11:26-43 பரிசுத்த பைபிள் (TAERV)

நேபாத்தின் குமாரனான யெரோபெயாம் சாலொமோனின் ஊழியக்காரன். இவன் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவன் சேரேதா ஊரினன். இவன் தாயின் பெயர் செரூகாள். இவனது தந்தை மரித்துப்போனான். இவனும் சாலொமோனுக்கு எதிராக எழும்பினான். யெரோபெயாம் சாலொமோனுக்கு எதிராக எழும்பிய கதை இதுதான். சாலொமோன் தாவீது நகரத்தில் மில்லோவும் சுவரும் கட்டினான். யெரோபெயாம் உறுதிமிக்கவன். இவன் நல்ல வேலைக்காரன் என்பதைச் சாலொமோன் அறிந்துக்கொண்டான். யோசேப்பின் கோத்திரத்திலிருந்த வேலைக்காரர்கள் அனைவருக்கும் இவனைத் தலைவனாக்கினான். ஒருநாள் யெரோபெயாம் எருசலேமிற்கு வெளியே பயணம் போனான். சாலையில் அகியா எனும் சீலோனியனான தீர்க்கதரிசியை சந்தித்தான். அகியா புதிய அங்கியை அணிந்திருந்தான். இருவரும் தனியாக இருந்தார்கள். அகியா தனது புதிய அங்கியை எடுத்து 12 துண்டுகளாகக் கிழித்தான். பின் அவன் யெரோபெயாமை நோக்கி, “உனக்காக இதில் 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘நான் சாலொமோனிடமிருந்து அரசை விலக்குவேன்’ என்று கூறியிருக்கிறார். ‘நான் உனக்குப் பத்து கோத்திரங்களைத் தருவேன். தாவீதின் குடும்பம் ஒரே ஒரு கோத்திரத்தைமட்டும் ஆளும்படி செய்வேன். நான் இதனை தாவீதிற்காகவும் எருசலேமிற்காகவும் செய்கிறேன். நான் எருசலேமை அனைத்து இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தேன், சாலொமோன் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டதால் அவனிடமிருந்து ராஜ்ஜியத்தை எடுக்கப்போகிறேன். அவன் சீதோனின் பொய் தெய்வமான அஸ்தரோத்தையும், மோவாபியரின் பொய்த் தெய்வமான காமோசையும், அம்மோன் ஜனங்களின் பொய்த் தெய்வமான மில்கோமையும் தொழுதுகொண்டு வருகிறான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று வாழவில்லை. அவன் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்படியவில்லை. அவன் நல்ல வழிகளில் இருந்து விலகிவிட்டான். எனவே நான் சாலொமோனின் குடும்பத்திலிருந்து அரசை விலக்குவேன். ஆனால் நான் சாலொமோனை அவனது கடைசி காலம் மட்டும் ராஜாவாக இருக்க அனுமதிப்பேன். நான் இதனை தாவீதிற்காகச் செய்கிறேன். தாவீது என் எல்லா கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்ததால் அவனைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் நான் சாலொமோனின் மகனிடமிருந்து அரசை விலக்குவேன். நான் உன்னை, பத்து கோத்திரங்களை ஆட்சி செய்ய வைப்பேன். நீ இஸ்ரவேல் முழுவதையும் ஆள்வாய். நான் சாலொமோனின் குமாரனை ஒரு கோத்திரத்தை மட்டும் ஆளவிடுவேன். இதன் மூலம் தாவீதின் சந்ததியார் தொடர்ந்து எருசலேமில் ஆள்வதாக இருக்கும். நான் எருசலேமை எனக்காகத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் உன்னை, உனக்கு விருப்பமான அனைத்தையும் ஆளும்படி வைப்பேன். இஸ்ரவேல் முழுவதையும் நீ ஆளுவாய். நீ என்னைப் பின்பற்றி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் உன்னை இவ்வாறு ஆக்குவேன். நீ தாவீதைப்போன்று சட்டங்களையும், கட்டளைகளையும் மீறாமல் நடந்துக்கொண்டால், நான் உன்னோடு இருப்பேன். நான் உனது குடும்பத்தையும் தாவீதின் குடும்பத்தைப்போன்று அரச குடும்பமாகச் செய்வேன். நான் உனக்கு இஸ்ரவேலைத் தருவேன். நான் சாலொமோனின் தவறுகளுக்காக தாவீதின் ஜனங்களைத் தண்டிக்கப்போகிறேன். ஆனால் அவர்களை என்றென்றைக்கும் தண்டிக்கமாட்டேன்’” என்றான். சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயன்றான். ஆனால் அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவன் சீஷாக் ராஜாவை சந்தித்தான். அவன் சாலொமோன் மரிக்கும்வரை அங்கேயே இருந்தான். சாலொமோன் தனது ஆட்சிக்காலத்தில் மிக உயர்ந்த அறிவுள்ள செயல்களைச் செய்தான். அவை அனைத்தும் சாலொமோனின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இவன் எருசலேமிலிருந்துகொண்டு இஸ்ரவேல் முழுவதையும் 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான். பின் சாலொமோன் மரித்ததும், தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் அடக்கம் செய்யப்பட்ட இடம் தாவீதின் நகரமாகும். பிறகு சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம் ராஜாவானான்.