1 இராஜாக்கள் 11:14-43
1 இராஜாக்கள் 11:14-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின் யெகோவா ஏதோமியரின் அரச பரம்பரையிலிருந்து, ஏதோமியனான ஆதாத்தை சாலொமோனுக்கு எதிரான பகைவனாக எழுப்பினார். முன்பு ஏதோமியருடன் தாவீது போரிட்டபோது படைத்தலைவனான யோவாப் தங்களில் இறந்தவர்களை அடக்கம்பண்ணப் போயிருந்தான். அவன் அந்நேரம் ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் வெட்டிக்கொன்றான். யோவாப்பும் எல்லா இஸ்ரயேலரும் ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் கொன்று முடியுமட்டும் ஆறு மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால் ஆதாத் இன்னும் ஒரு சிறுவனாகவே இருந்தான். அவன் தன் தகப்பனுக்குப் பணிசெய்த சில ஏதோமிய அதிகாரிகளோடு சேர்ந்து எகிப்திற்குத் தப்பி ஓடினான். அவர்கள் மீதியானிலிருந்து புறப்பட்டு பாரானுக்குப் போனார்கள். பின்பு பாரானிலிருந்து சில மனிதரையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு எகிப்திய அரசனான பார்வோனிடம் எகிப்திற்குப் போனார்கள். எகிப்திய அரசனான பார்வோன் ஆதாத்துக்கு ஒரு வீட்டையும், நிலத்தையும், உணவையும் கொடுத்தான். ஆதாத்துக்கு பார்வோனின் கண்களில் தயவு கிடைத்ததால் தன் சொந்த மனைவியான அரசி தாப்பெனேஸின் சகோதரியை ஆதாத்துக்குத் திருமணம் செய்துகொடுத்தான். தாப்பெனேஸின் சகோதரி அவனுக்கு கேனுபாத் என்ற ஒரு மகனைப் பெற்றாள். அவனை தாப்பெனேஸ், அரச அரண்மனையில் வைத்து வளர்த்தாள். அங்கு கேனுபாத் பார்வோனின் சொந்தப் பிள்ளைகளுடன் வாழ்ந்தான். ஆதாத் எகிப்தில் இருந்தபோது தாவீது அவன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான் என்றும், அவன் படைத்தலைவனான யோவாப்பும் இறந்துபோனான் என்றும் கேள்விப்பட்டான். அப்போது அவன் பார்வோனிடம் போய், “நான் என்னுடைய சொந்த நாட்டுக்குப் போக என்னை விட்டுவிடும்” என்று கேட்டான். அதற்குப் பார்வோன், “நீ உன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போவதற்கு இங்கே உனக்கு என்ன குறை இருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு ஆதாத், “ஒரு குறையுமில்லை. ஆனால் என்னைப் போக அனுமதியும்” என்றான். இறைவன், சோபாவின் அரசனாகிய ஆதாதேசர் என்னும் தன் எஜமானிடமிருந்து தப்பி ஓடிய எலியாதாவின் மகனான ரேசோனை, சாலொமோனுக்கு மற்றொரு பகைவனாக எழுப்பினார். தாவீது சேபாவின் படைகளை அழித்தபோது, இவன் தன்னுடன் சில கலகக்காரரைச் சேர்த்துக்கொண்டு அவர்களுக்குத் தலைவனானான். அந்தக் கலகக்காரர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கு குடியமர்ந்து, அதைத் தங்களுடைய அதிகாரத்திற்குட்படுத்தினார்கள். சாலொமோன் உயிரோடிருந்த காலம் முழுவதும் ஆதாத்துடைய கலகத்துடன்கூட ரேசோனும் இஸ்ரயேலருக்கு எதிரியாக இருந்தான். அப்படியே ரேசோன் சீரியாவில் ஆட்சிசெய்து இஸ்ரயேலருக்கு எதிரியாக இருந்தான். அத்துடன் நேபாத்தின் மகன் யெரொபெயாம் சாலொமோன் அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான். சாலொமோனின் அலுவலர்களில் ஒருவனான இவன் சேரேதாவைச் சேர்ந்த எப்பிராயீமிய கோத்திரத்தான். இவனுடைய தாய் செரூகாள் என்னும் பெயருள்ள ஒரு விதவை. அவன் அரசனுக்கெதிராய் கலகம் செய்த விதமாவது: சாலொமோன் அரண்மனைத் தளங்களைக் கட்டி, தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்தின் மதிலில் இருந்த இடைவெளிகளையும் நிரப்பினான். இத்தருணத்தில் யெரொபெயாம் ஒரு மதிப்புள்ள மனிதனாக காணப்பட்டான். அந்த வாலிபன் தன் வேலைகளை எவ்வளவு கவனமாகச் செய்கிறான் என்பதை சாலொமோன் கவனித்தபோது, யோசேப்பு வீட்டாரின் எல்லா தொழிலாளர்களுக்கும் பொறுப்பாக அவனை வைத்தான். அந்நாட்களில் ஒரு நாள் யெரொபெயாம் எருசலேம் பட்டணத்துக்கு வெளியே போய்க்கொண்டிருந்தபோது, சீலோவைச் சேர்ந்த இறைவாக்கினனான அகியா ஒரு புதிய மேலுடையை உடுத்திக்கொண்டு வழியில் அவனைச் சந்தித்தான். இருவரும் பட்டணத்துக்கு வெளியே தனியாக நின்றனர். அகியா தன் புதிய மேலுடையை எடுத்து பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, யெரொபெயாமைப் பார்த்து, “இவற்றில் பத்து துண்டுகளை உனக்கென எடுத்துக்கொள். இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவது இதுவே: ‘சாலொமோனின் கையிலிருந்து ஆட்சியை பறித்து, அதில் பத்து கோத்திரங்களை உனக்குத் தரப்போகிறேன். எனது அடியவனாகிய தாவீதின் நிமித்தமாகவும், இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலிருந்தும் நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமின் நிமித்தமாகவும், ஒரு கோத்திரம் அவனுக்காக இருக்கும். நான் இதைச் செய்வேன். ஏனென்றால் அவன் என்னைக் கைவிட்டு சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும், மோவாபியரின் தெய்வமான கேமோசையும், அம்மோனியரின் தெய்வமான மில்கோமையும் வணங்கினான். அவன் என்னுடைய வழிகளில் நடக்கவுமில்லை; என் பார்வைக்குச் செம்மையானவற்றைச் செய்யவுமில்லை. சாலொமோனின் தகப்பனான தாவீது செய்ததுபோல என் விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவுமில்லை. “ ‘ஆனாலும் சாலொமோனின் கையிலிருந்து முழு ஆட்சியையும் எடுக்கமாட்டேன். நான் தெரிந்துகொண்டவனும், என் கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொண்டவனுமான என் அடியவன் தாவீதின் நிமித்தம், சாலொமோனின் வாழ்நாள் முழுவதும் அவனை அரசனாக வைத்திருக்கிறேன். தாவீதின் மகனின் கையிலிருந்து பத்து கோத்திரங்களை எடுத்து உனக்குத் தருவேன். என் பெயர் தங்கும்படி, நான் தெரிந்தெடுத்த பட்டணமான எருசலேமில் எனக்கு முன்பாக என் அடியவனான தாவீதுக்கு எப்பொழுதும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். ஆயினும் உன்னையோ நான் தெரிந்தெடுப்பேன். நீ உன் இருதய விருப்பப்படி எல்லோருக்கும் மேலாக அரசாள்வாய். இஸ்ரயேலுக்கு மேல் அரசனாய் இருப்பாய். அப்போது நான் உனக்குக் கட்டளையிடுவதெல்லாவற்றையும் நீ செய்து, என் வழிகளில் நடந்து, என் விதிமுறைகளையும் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் அடியானாகிய தாவீது செய்ததுபோல என் பார்வையில் சரியானதைச் செய்வாயானால், நான் உன்னோடுகூட இருப்பேன். தாவீதுக்கு நான் கட்டியது போல, நீடித்திருக்கும் ஒரு வம்சத்தை உனக்கும் கட்டி இஸ்ரயேலை உனக்குத் தருவேன். இப்படிச் செய்வதனால் தாவீதின் வம்சத்தைத் தாழ்த்துவேன். ஆயினும் என்றென்றும் அல்ல’ என்று யெகோவா கூறுகிறார்” என அகியா சொன்னான். அதனால் சாலொமோன் யெரொபெயாமைக் கொலைசெய்ய முயற்சி செய்தான். ஆனால் அவன் சீஷாக் அரசனிடம் எகிப்திற்குத் தப்பி ஓடி, சாலொமோனின் மரணம்வரை அங்கே தங்கியிருந்தான். சாலொமோன் தன் ஆட்சிக்காலத்தில் செய்தவை அனைத்தும், அவன் காண்பித்த ஞானமும் சாலொமோனின் வரலாறுகளின் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. சாலொமோன் இஸ்ரயேல் முழுவதையும் நாற்பது வருடங்கள் எருசலேமிலிருந்து அரசாண்டான். இதன்பின் சாலொமோன் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, தன் தகப்பனான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ரெகொபெயாம் அவனுக்குப்பின் அரசனானான்.
1 இராஜாக்கள் 11:14-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா ஏதோமியனான ஆதாத் என்னும் ஒரு எதிரியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜ குடும்பத்தைச்சேர்ந்தவன். தாவீது ஏதோமில் இருக்கும்போது படைத்தலைவனாகிய யோவாப் ஏதோமிலுள்ள ஆண்மக்களையெல்லாம் கொன்று, இறந்தவர்களை அடக்கம்செய்யப் போனான். அவர்களையெல்லாம் கொன்றுபோடும்வரை, தானும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அங்கே ஆறுமாதங்கள் இருக்கும்போது, ஆதாதும் அவனோடு அவனுடைய தகப்பனுடைய வேலைக்காரர்கள் சில ஏதோமியர்களும் எகிப்திற்கு ஓடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாக இருந்தான். அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனிதர்களை எகிப்திற்குக் கூட்டிக்கொண்டு, பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடு கொடுத்து, இவனுக்கு உணவுக்கு ஏற்பாடுசெய்து, நிலத்தையும் கொடுத்தான். ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயவு கிடைத்ததால், அவனுடைய ராணியாகிய தாப்பெனேஸ் என்னும் தன்னுடைய மனைவியின் சகோதரியை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு மகனைப் பெற்றாள்; அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள்; அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய மகன்களுடன் இருந்தான். தாவீது தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என்னுடைய சொந்த நாட்டிற்குப்போக என்னை அனுப்பவேண்டும் என்றான். அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன்னுடைய சொந்தநாட்டிற்குப்போக விரும்புவதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறை இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறையும் இல்லை; இருந்தாலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான். எலியாதாவின் மகனாகிய ரேசோன் என்னும் வேறொரு எதிரியை தேவன் எழுப்பினார்; இவன் தன்னுடைய தலைவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவைவிட்டு ஓடிப்போய், தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்றுபோடும்போது, அவன் தன்னோடு சில மனிதர்களைச் சேர்த்துக்கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆட்சி செய்தார்கள். ஆதாத் தீங்கு செய்ததுமல்லாமல், ரேசோன் சாலொமோனுடைய நாட்களெல்லாம் இஸ்ரவேலர்களுக்கு எதிரியாகி, சீரியாவின்மேல் ராஜாவாக இருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான். சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனிதனாகிய நேபாத்தின் மகன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் அதிகாரியும் ராஜாவிற்கு எதிரியாக எழும்பினான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பெயருள்ள ஒரு விதவை. அவன் ராஜாவிற்கு எதிரியாக எழும்பிய காரணம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன்னுடைய தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுதுபார்த்தபோது, யெரொபெயாம் என்பவன் பலசாலியாக இருந்தான்; அவன் திறமையுள்ள வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தார்களின் காரியத்தையெல்லாம் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான். அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதிய சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியில் தனியாக இருக்கும்போது, அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதிய சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு, யெரொபெயாமை நோக்கி: பத்துத்துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்ஜியபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன். ஆனாலும் என்னுடைய ஊழியனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்திற்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும். அவர்கள் என்னைவிட்டு, சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியர்களின் தேவனாகிய காமோசையும், அம்மோன் மக்களின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவனுடைய தகப்பனாகிய தாவீதைப்போல என்னுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யவும், என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என்னுடைய வழிகளில் நடக்காமல்போனதால் அப்படிச் செய்வேன். ஆனாலும் அரசாட்சி முழுவதையும் நான் அவனுடைய கையிலிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என்னுடைய கற்பனைகளையும் என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என்னுடைய ஊழியனாகிய தாவீதிற்காக, அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன். ஆனாலும் ராஜ்ஜியபாரத்தை அவனுடைய மகனுடைய கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன். என்னுடைய நாமம் வெளிப்படும்படி, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே எனக்கு முன்பாக என்னுடைய ஊழியனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். நீ உன்னுடைய மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன். நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என்னுடைய வழிகளில் நடந்து, என்னுடைய ஊழியனாகிய தாவீது செய்ததுபோல, என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய கற்பனைகளையும் கைக்கொள்ளும்படி என்னுடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்தால், நான் உன்னோடு இருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலர்களை உனக்குத் தருவேன். இப்படி நான் இந்தக் காரியத்திற்காக தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; இருந்தாலும் எல்லா நாளும் அப்படி இருக்காது என்று சொன்னான். அதற்காக சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயற்சி செய்தான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்கு சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடம் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையும்வரை எகிப்தில் இருந்தான். சாலொமோனின் மற்றக் காரியங்களும், அவன் செய்த அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலர்களையெல்லாம் அரசாட்சி செய்த நாட்கள் 40 வருடங்கள். சாலொமோன் தன்னுடைய முன்னோர்களோடு மரணமடைந்து, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ரெகொபெயாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
1 இராஜாக்கள் 11:14-43 பரிசுத்த பைபிள் (TAERV)
அதே காலத்தில், ஏதோமியனாகிய ஆதாத்தை சாலொமோனின் பகைவனாக கர்த்தர் உருவாக்கினார். அவன் ஏதோம் ராஜாவின் குடும்பத்தைச் சார்ந்தவன். இப்பகைமை இவ்வாறுதான் வளர்ந்தது. முன்பு தாவீது ஏதோமைத் தோற்கடித்தான். தாவீதின் படையில் யோவாப் தளபதியாக இருந்தான். அவன் மரித்தவர்களைப் புதைப்பதற்காக ஏதோமுக்குச் சென்றான். யோவாப் அப்போது அங்கே உயிரோடு இருந்தவர்களையும் கொன்றுபோட்டான். யோவாபும் மற்ற இஸ்ரவேலர்களும் ஏதோமில் 6 மாதங்கள் இருந்தனர். அப்போது அங்கிருந்த அனைத்து ஆண்களையும் கொன்றுவந்தனர். ஆனால் அப்போது ஆதாத் சிறுவனாக இருந்தான். அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவனுடைய தந்தையின் வேலைக்காரர்களும் அவனோடு போனார்கள். அவர்கள் மீதியானை விட்டு பாரானுக்குச் சென்றனர். பாரானில் மேலும் சிலர் சேர்ந்துகொண்டார்கள். பின் அனைவரும் எகிப்துக்குப் போய் பார்வோன் மன்னனிடம் உதவி கேட்டனர். மன்னன் அவனுக்கு ஒரு வீடும், கொஞ்ச நிலமும் கொடுத்தான். இன்னும் பல உதவிகளையும் உணவும் கொடுத்து வந்தான். பார்வோன் ஆதாத்தை மிகவும் விரும்பி, திருமணமும் செய்துவைத்தான். அவள் பார்வோனின் மனைவியின் தங்கைஆவாள். அவன் மனைவியோ தாப்பெனேஸ் என்னும் அரசகுமாரி. ஆதாத்துக்கு கேனுபாத் என்னும் குமாரன் பிறந்தான். தாப்பெனேஸ் அவனைத் தன் குழந்தைகளோடு அரண்மனையில் வளரவிட்டாள். தாவீது, மரித்துப்போனதை ஆதாத் எகிப்தில் அறிந்தான். யோவாப் தளபதியும், மரித்துப்போனதை அறிந்துக்கொண்டான். எனவே அவன் பார்வோனிடம், “நான் என் சொந்த நாட்டுக்குப் போக அனுமதியுங்கள்” என்றான். ஆனால் பார்வேன், “உனக்குத் தேவையான அனைத்தையும் இங்கே உனக்குத் கொடுத்திருக்கிறேன்! அவ்வாறிருக்க ஏன் உன் நாட்டிற்குப் போக விரும்புகிறாய்?” என்று கேட்டான். ஆனால் ஆதாத்தோ, “தயவுசெய்து, என்னைப் போக அனுமதியுங்கள்” என்றான். சாலொமோனுக்கு எதிராக இன்னொரு பகைவனை உருவாக்கவும் தேவன் தாமே காரணமானார். அவன் பெயர் ரேசோன், இவன் எலியாதாவின் குமாரன். இவன் தன் எஜமானனிடமிருந்து ஓடிப் போனான். இவனது எஜமானன் சோபாவின் ராஜாவாகிய, ஆதாதேசர். தாவீது சோபாவைத் தோற்கடித்த பிறகு, ரேசோன் சில வீரர்களைச் சேர்ந்து அவர்களுக்கு தலைவன் ஆனான். அவன் தமஸ்குவுக்கு போய் அங்கே தங்கி இருந்தான். பின் அதன் ராஜா ஆனான். அதோடு ஆராமையும் ஆண்டான். அவன் இஸ்ரவேலர்களை வெறுத்து, தொடர்ந்து அவர்களுக்குப் பகைவனாக சாலொமோன் காலம்வரை இருந்தான். ஆதாத்தும் ரேசானும் இஸ்ரவேலுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். நேபாத்தின் குமாரனான யெரோபெயாம் சாலொமோனின் ஊழியக்காரன். இவன் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவன் சேரேதா ஊரினன். இவன் தாயின் பெயர் செரூகாள். இவனது தந்தை மரித்துப்போனான். இவனும் சாலொமோனுக்கு எதிராக எழும்பினான். யெரோபெயாம் சாலொமோனுக்கு எதிராக எழும்பிய கதை இதுதான். சாலொமோன் தாவீது நகரத்தில் மில்லோவும் சுவரும் கட்டினான். யெரோபெயாம் உறுதிமிக்கவன். இவன் நல்ல வேலைக்காரன் என்பதைச் சாலொமோன் அறிந்துக்கொண்டான். யோசேப்பின் கோத்திரத்திலிருந்த வேலைக்காரர்கள் அனைவருக்கும் இவனைத் தலைவனாக்கினான். ஒருநாள் யெரோபெயாம் எருசலேமிற்கு வெளியே பயணம் போனான். சாலையில் அகியா எனும் சீலோனியனான தீர்க்கதரிசியை சந்தித்தான். அகியா புதிய அங்கியை அணிந்திருந்தான். இருவரும் தனியாக இருந்தார்கள். அகியா தனது புதிய அங்கியை எடுத்து 12 துண்டுகளாகக் கிழித்தான். பின் அவன் யெரோபெயாமை நோக்கி, “உனக்காக இதில் 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘நான் சாலொமோனிடமிருந்து அரசை விலக்குவேன்’ என்று கூறியிருக்கிறார். ‘நான் உனக்குப் பத்து கோத்திரங்களைத் தருவேன். தாவீதின் குடும்பம் ஒரே ஒரு கோத்திரத்தைமட்டும் ஆளும்படி செய்வேன். நான் இதனை தாவீதிற்காகவும் எருசலேமிற்காகவும் செய்கிறேன். நான் எருசலேமை அனைத்து இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தேன், சாலொமோன் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டதால் அவனிடமிருந்து ராஜ்ஜியத்தை எடுக்கப்போகிறேன். அவன் சீதோனின் பொய் தெய்வமான அஸ்தரோத்தையும், மோவாபியரின் பொய்த் தெய்வமான காமோசையும், அம்மோன் ஜனங்களின் பொய்த் தெய்வமான மில்கோமையும் தொழுதுகொண்டு வருகிறான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று வாழவில்லை. அவன் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்படியவில்லை. அவன் நல்ல வழிகளில் இருந்து விலகிவிட்டான். எனவே நான் சாலொமோனின் குடும்பத்திலிருந்து அரசை விலக்குவேன். ஆனால் நான் சாலொமோனை அவனது கடைசி காலம் மட்டும் ராஜாவாக இருக்க அனுமதிப்பேன். நான் இதனை தாவீதிற்காகச் செய்கிறேன். தாவீது என் எல்லா கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்ததால் அவனைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் நான் சாலொமோனின் மகனிடமிருந்து அரசை விலக்குவேன். நான் உன்னை, பத்து கோத்திரங்களை ஆட்சி செய்ய வைப்பேன். நீ இஸ்ரவேல் முழுவதையும் ஆள்வாய். நான் சாலொமோனின் குமாரனை ஒரு கோத்திரத்தை மட்டும் ஆளவிடுவேன். இதன் மூலம் தாவீதின் சந்ததியார் தொடர்ந்து எருசலேமில் ஆள்வதாக இருக்கும். நான் எருசலேமை எனக்காகத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் உன்னை, உனக்கு விருப்பமான அனைத்தையும் ஆளும்படி வைப்பேன். இஸ்ரவேல் முழுவதையும் நீ ஆளுவாய். நீ என்னைப் பின்பற்றி என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் உன்னை இவ்வாறு ஆக்குவேன். நீ தாவீதைப்போன்று சட்டங்களையும், கட்டளைகளையும் மீறாமல் நடந்துக்கொண்டால், நான் உன்னோடு இருப்பேன். நான் உனது குடும்பத்தையும் தாவீதின் குடும்பத்தைப்போன்று அரச குடும்பமாகச் செய்வேன். நான் உனக்கு இஸ்ரவேலைத் தருவேன். நான் சாலொமோனின் தவறுகளுக்காக தாவீதின் ஜனங்களைத் தண்டிக்கப்போகிறேன். ஆனால் அவர்களை என்றென்றைக்கும் தண்டிக்கமாட்டேன்’” என்றான். சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயன்றான். ஆனால் அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவன் சீஷாக் ராஜாவை சந்தித்தான். அவன் சாலொமோன் மரிக்கும்வரை அங்கேயே இருந்தான். சாலொமோன் தனது ஆட்சிக்காலத்தில் மிக உயர்ந்த அறிவுள்ள செயல்களைச் செய்தான். அவை அனைத்தும் சாலொமோனின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இவன் எருசலேமிலிருந்துகொண்டு இஸ்ரவேல் முழுவதையும் 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான். பின் சாலொமோன் மரித்ததும், தமது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் அடக்கம் செய்யப்பட்ட இடம் தாவீதின் நகரமாகும். பிறகு சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம் ராஜாவானான்.
1 இராஜாக்கள் 11:14-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன். தாவீது ஏதோமில் இருக்கும்போது படைத்தலைவனாகிய யோவாப் ஏதோமிலுள்ள ஆண்மக்களையெல்லாம் சங்கரித்து, வெட்டுண்டவர்களை அடக்கம்பண்ணப்போனான். அவர்களையெல்லாம் சங்கரிக்குமளவும், தானும் இஸ்ரவேல் அனைத்தும் அங்கே ஆறுமாதம் இருக்கும்போது, ஆதாதும் அவனோடேகூட அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில ஏதோமியரும் எகிப்திற்குப்போக ஓடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாயிருந்தான். அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குப் பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடு கொடுத்து, இவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி, நிலத்தையும் கொடுத்தான். ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயை கிடைத்தபடியினால், அவன் ராஜஸ்திரீயாகிய தாப்பெனேஸ் என்னும் தன் மனைவியின் சகோதரியை அவனுக்கு விவாகஞ்செய்துகொடுத்தான். தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள்; அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய குமாரருடன் இருந்தான். தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என் சுயதேசத்துக்குப் போக என்னை அனுப்பவேண்டும் என்றான். அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன் சுயதேசத்துக்குப்போக விரும்புகிறதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறைவு இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறைவும் இல்லை; ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான். எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய், தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்றுபோடுகையில், அவன் தன்னோடே சில மனுஷரைச் சேர்த்துக் கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆண்டார்கள். ஆதாத் பொல்லாப்புச் செய்ததுமல்லாமல், ரேசோன் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, சீரியாவின்மேல் ராஜாவாயிருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான். சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை. அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது, யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரியசமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான். அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில், அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு, யெரொபெயாமை நோக்கி: பத்துத்துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன். ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும். அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன். ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப்போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன். ஆனாலும் ராஜ்யபாரத்தை அவன் குமாரன் கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன். என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன். நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன். இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான். அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான். சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம். சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.