1 யோவான் 4:13-19
1 யோவான் 4:13-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
1 யோவான் 4:13-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவன் தமது ஆவியானவரை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் இறைவனில் வாழுகிறோம் என்றும், அவர் நம்மில் வாழுகிறார் என்றும்: நாம் அறிகிறோம். பிதா, தமது மகனை உலகத்தின் இரட்சகராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம்; அதற்கு நாங்கள் சாட்சியாகவும் இருக்கிறோம். யாராவது இயேசுவை இறைவனுடைய மகன் என்று ஏற்றுக்கொண்டால், இறைவன் அவனில் வாழ்கிறார்; அவனும் இறைவனில் வாழ்கின்றான். இவ்வாறு இறைவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பை, நாம் அறிந்தும் இருக்கிறோம். அதை நாம் நம்பியும் இருக்கிறோம். இறைவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் வாழ்கிறவன், இறைவனில் வாழ்கிறான், இறைவனும் அவனில் வாழ்கிறார். இவ்விதமாய், அன்பு நமக்குள் முழுநிறைவாய் வளர்கிறது. இதனால், நாம் நியாயத்தீர்ப்பு நாளில் மனவுறுதியுடையவர்களாய் இருப்போம். ஏனெனில், இந்த உலகத்தில் நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம். இப்படிப்பட்ட அன்பு இருக்கையில் பயத்திற்கு இடமில்லை. ஏனெனில், முழுநிறைவான அன்பு பயத்தை விரட்டிவிடும். ஆனால், பயம் தண்டனைத் தீர்ப்புடன் சம்பந்தப்படுகிறது. எனவே பயப்படுகிறவன் அன்பில் முழுநிறைவு பெற்றவனல்ல என்று காட்டுகிறது. முதலில், அவர் நம்மில் அன்பாய் இருந்ததினாலேயே, நாமும் அவரில் அன்பாயிருக்கிறோம்.
1 யோவான் 4:13-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர் தம்முடைய ஆவியானவரை நமக்குக் கொடுத்ததினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் பார்த்து சாட்சியிடுகிறோம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைசெய்கிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். நியாயத்தீர்ப்புநாளிலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இந்த உலகத்தில் இருக்கிறோம். அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தை வெளியே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் இல்லை. அவர் முதலாவது நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்பு செலுத்துகிறோம்.
1 யோவான் 4:13-19 பரிசுத்த பைபிள் (TAERV)
நாம் தேவனிலும் தேவன் நம்மிலும் வாழ்வதை அறிந்திருக்கிறோம். தேவன் நமக்கு அவரது ஆவியானவரைக் கொடுத்ததால் நாம் இதனை அறிகிறோம். தேவன் குமாரனை இவ்வுலகின் மீட்பராக அனுப்பினார் என்பதை நாம் கண்டிருக்கிறோம். இப்போது மக்களுக்கு அதையே நாம் கூறுகிறோம். ஒரு மனிதன், “இயேசு தேவனின் குமாரன் என்பதை நம்புகிறேன்” என்று சொன்னால் அப்போது தேவன் அம்மனிதனில் வாழ்கிறார். அம்மனிதனும் தேவனில் வாழ்கிறான். தேவன் நமக்காகக் கொண்டுள்ள அன்பை அதனால் அறிகிறோம். அந்த அன்பை நாம் நம்புகிறோம். தேவன் அன்பாக இருக்கிறார். அன்பில் வாழ்கிற மனிதன் தேவனில் வாழ்கிறான். தேவனும் அம்மனிதனில் வாழ்கிறார். தேவனின் அன்பு நம்மில் முழுமையடைந்தால், தேவன் நம்மை நியாயந்தீர்க்கும் நாளில் நாம் அச்சமின்றி இருக்க முடியும். இவ்வுலகில் நாம் அவரைப்போல இருப்பதால், நாம் அச்சமில்லாமல் இருப்போம். தேவனின் அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே அச்சம் இருக்காது. ஏன்? தேவனின் முழுமையான அன்பு அச்சத்தை அகற்றுகிறது. தேவன் தரும் தண்டனையே ஒருவனை அச்சுறுத்துகிறது. எனவே அச்சமுள்ள மனிதனிடம் தேவனின் அன்பு முழுமை பெறவில்லை. முதலில் தேவன் நம்மை நேசித்ததால், நாம் நேசிக்கிறோம்.